விழா  எடுத்துப்பார்...  

                            

      

      அப்பாவின் மரணத்திற்குப் பிறகு `கல்கண்டு’ இதழை யார் பார்த்துக் கொள்வது, பதிப்பகத்தை யார் பார்த்துக் கொள்வது என்கிற கேள்வி எழுந்தது. அப்பாவின் தொழிலை ஏற்று நடத்தக்கூடிய பக்குவம் அப்போது எனக்கோ, லேனாவிற்கோ இல்லை.

   இருந்தும் கூட லேனாவிடம் `கல்கண்டு’ பொறுப்பும், பதிப்பகம் என்னிடமும் ஒப்படைக்கப்பட்டது. பதிப்பக தொழில் பார்க்காமல், வேறு தொழிலுக்கு போயிருந்தால் நாங்கள் இன்னும் கூட அதிகமாய் சம்பாதித்திருக்கலாம்.

   ஆனால், இதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் வேறு தொழிலில் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே! பதிப்பக பொறுப்பு ஏற்று 22 வருடங்களாகிறது. இதுவரை அதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.

   சிலபேர் விருதிற்காக மட்டுமே எழுதுவர். சிலர் விருதிற்காக மட்டுமே புத்தகங்களை பதிப்பிப்பர். ஆனால், எங்கள் நோக்கம் எப்போதுமே பாமர மக்களின் நலன்தான்!

   நல்ல விஷயங்களை எளிமையாய், சுவையாய் புரியும்படி வெளியிட்டு, சாதாரண மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

   அதற்காக விருதிற்கு நாங்கள் எதிரி என்று அர்த்தமல்ல. பலவித விருதுகள் எங்கள் நூல்களுக்கும் கிடைத்துள்ளன.

   ``டி.வி’, இண்டர்நெட் தாக்கத்தினாலும் கூட மணிமேகலைப் பிரசுரம் சோர்ந்து போய் விடவில்லை. ஏறக்குறைய ஒன்றேகால் நாளிற்கு ஒரு புத்தகம் வீதம் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

  இப்படி பல விஷயங்களை கூறி வாசகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவி.

      நடிகர் சரத்குமார்:

  திட்டமிட்டு செயல்படுத்தும் காரியங்கள் சில சமயம் நடக்காமல் போய்விடுவதுண்டு. சில காரியங்கள் தற்செயலாய் தீர்மானிக்கப்பட்டு பிரமாதமாய் முடிவதும் உண்டு.

  குவைத்தில் நடந்த நடிகர் சரத்குமாரின் நிகழ்ச்சி அதற்கு ஒரு உதாரணம்.

  மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக கண்காட்சிக்காக லண்டன், அமெரிக்க என்ரு பயணப்பட்டிருந்த அதன் அதிபர் ரவி தமிழ்வாணன் ஒரு நாள் எனக்கு போன் பண்ணி ``குவைத்தில் ஒரு நாள் இறங்கி சுற்றிப் பார்க்கணும். விசா எடுக்க முடியுமா?’’

  உடனே குவைத் இந்தியா எக்ஸேஞ்சின் மானேஜிங் டைரக்டரான ரெங்கசாமி அவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்து, அவர் வந்து, திடீர் நிகழ்ச்சியெல்லாம் வைத்தோம்.

   குவைத்திலிருந்து அவர் துபாய் செல்வதாக இருந்தது. அப்போது பேச்சுவாக்கில் நடிகர் சரத்குமார் துபாயில் இருக்கிறார் என்றார். உடன் மூளையில் ஒரு பொறி.

   அந்த சமயம் ப்ரண்ட்லைனர்ஸ் மூன்றாம் பாகம் தயாரித்துக் கொண்டிருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தால் என்ன என்று தோன்ற ``சரத்தை ஏற்பாடு செய்து தர முடியுமா?’’ என்று ரவி அவர்களிடம் கேட்டேன்.

        அவரும் சரத்குமாரிடம் என்னைப் பற்றி சொல்லி அறிமுகப்படுத்தினார். சரத்குமாரை எனக்கு முன்பின் அறிமுகமில்லை. எனது புத்தகங்கள், ப்ரண்ட்லைனர்ஸ்-ன் செயல்பாடுகளை ரவி சொல்ல, அவருக்கு ஒரு அபிப்ராயம் வந்திருக்க வேண்டும்.

    போனில் நான் அழைப்பு விடுக்க,``எந்த மாதிரி நிகழ்ச்சி நடத்தப் போகிறீர்கள்? கமர்சியல் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதில்லை என்பதை நான் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்’’ என்றார். ``இல்லை சார். நாங்கள் கமர்சியலாக எதுவும் செய்வதில்லை, நிகழ்ச்சி மூலம் சமூக சேவை மட்டுமே செய்கிறோம். உங்களது தேதி வேணும்’’என்றேன்.

    அவரும் சம்மதித்து மார்ச்சில் ஸ்விட்சர்லாந்து படப்பிடிப்புக்குப் போகிறேன். அப்போது வைத்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் அதற்குள் புத்தக வேலை முடியவில்லை.

    முடித்து அவரை அணுகலாம் என்று நினைத்தபோது கார்கில் யுத்தம் நடந்தது. அந்த சமயம் புத்தக வெளியீட்டு விழாவை கார்கில் யுத்த நிதிக்காக அமைத்துவிடலாம் என்று சரத்திடம் யோசனை தெரிவித்தேன்.

    அவரும் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு, சென்னையிலும் நிகழ்ச்சி முடிந்து குவைத் வர தேதி கொடுத்தார்.

    குவைத்தில் பலவித அமைப்புக்களும் கார்கில் நிதி திரட்டி இந்திய தூதுவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தன. அப்போது இந்திய தூதுவர்,``கார்கில் நிதிக்காக நிதி திரட்டும்போது, நிகழ்ச்சி செலவுகளை குறைக்கவேண்டும். கலைநிகழ்ச்சிக்காகவும் கலைஞர்களுக்காகவும் அதிகமாய் செலவு செய்தால் பிறகு மிச்சம் எதுவுமிருக்காது’’ என்றார்.

   ``சரத்குமார் பெரிய நடிகராயிற்றே-அவருக்கு பணம் தர வேணாமா?’’ என்றார்.

   ``இல்லை சார். எந்த வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் அவர் வருகிறார்’’ என்றதும் அவருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. எங்களுக்கும்தான்! சரத்குமார் பற்றி முன்பு அவ்வளவாக தெரியாததால், பணம் நேராக கேட்காவிட்டாலும், வேறு வழியில் நிறைய செலவு வைத்துவிடுவாரோ என்கிற தயக்கம் இருக்கவே செய்தது.

    அம்பாஸிடர், ``சரி, ப்ரண்ட்லைனர்ஸ்  மூலம் எவ்ளோ நிதி தர முடியும்?’’ என்றார். ``குறைந்தபட்சம் ஒரு லட்சரூபாய்’’ என்றோம். அதிலும் அவருக்கு இன்ப அதிர்ச்சி.

    கார்கில் நிதி பற்றி பேச வேண்டி அவர் கூட்டின மீட்டிங்கில் ப்ரண்ட்லைனர்ஸ் புத்தகம் மூலம் மோகன்தாஸ் ஒரு லட்சம் தருகிறேன் என்றிருக்கிறார். அதுபோல மற்றவர்களும் தரமுன் வரலாம்’’ என்றார். உடனே இந்திய தொழிலதிபர்களும், அசோசியேஷன்களும் போட்டிப்போட்டுக் கொண்டு தங்களது பங்கை லட்சக் கணக்கில் அறிவித்து, ஒரே நாளில் 50 லட்சம் ரூபாய் நிதி உறுதியாயிற்று.

   (நாங்கள் வாக்கு கொடுத்தது ஒரு லட்ச ரூபாய் தான். ஆனால் கொடுத்ததோ மூன்று லட்சத்து எட்டாயிரம் ரூபாய்.)

    சரத்குமார் எதிர்பார்த்தபடி இல்லவே இல்லை. ஒரு சினிமாக்காரருக்கு வேண்டாத பல குணங்களும் அவரிடம் உள்ளன.

    முகத்து நேராய் பேசுதல், சரியான திட்டமிடுதல், பிறர் பொருளுக்கு ஆசைபடாமை, எளிமை கஷ்டபடுபவர்களுக்கு உதவுதல், நாட்டுப்பற்று என்று அவரிடம் பாராட்டப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.

    முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும் கூட, அவர் எங்கள் மேல் நம்பிக்கை வைத்து அவரே டிக்கட் வாங்கி வந்தார். அந்தத் தொகையை இங்கு வந்துதான் திருப்பிக் கொடுத்தோம்.

   அவர் எந்தவித கண்டிஷனும் போடாமல் வெளியேயும் சரி, நிகழ்ச்சியிலும் சரி மிகவும் ஒத்துழைப்பு தந்தார். சினிமாவில் இருந்தும்கூட அவரிடம் எந்த கெட்ட பழக்கமும் இருப்பதாய் தெரியவில்லை.

   குவைத்தில் அவருக்காக சாப்பாடு, டிக்கட், ரூம் செலவு மட்டும்தான் எங்களுடையது. சில பேர் இருக்கிறார்கள். ஐஎஸ்டீ போன் பேசிப் பேசியே நம்மை போண்டியாக்கிவிடுவார்கள்.

   சரத்குமார் ஐஎஸ்டீ கால் நிறையவே பேசினார். ஆனால் அந்த பில்லை அவரே ஏற்றுக் கொண்டார். அதே மாதிரி பர்ச்சேஸ் பண்ணினதிற்கெல்லாம் அவரே பணம் செலுத்தினார்.

    கூலிங்கிளாஸ் வாங்கின வகையில், அவருக்காக நாங்கள் பத்தாயிரம் ரூபாய் செலுத்தியிருந்தோம். அது கனக்கில் விட்டுப் போயிற்று. ஆனால் அவர் திரும்பிப்போய் மூன்றாம்நாள் அவரது உறவினர் மூலம் அந்தத் தொகையை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார். ஆச்சர்யம்! இப்படியும் ஒரு சினிமாக்காரர்!

   கடைகளுக்கு அழைத்துப் போனபோது சென்ட்ரல் வீடியோ முஸ்தபா,``உங்களுக்கு செயின் வாங்கி தரேன். எந்த மாதிரி வேணும் சொல்லுங்கள்’’ என்க-``ஸாரி நான் நகை அணிவதில்லை, வேணாம்!’’ என்றார்.

   ``பரவாயில்லை உங்கள் மனைவிக்கு... கொடுங்கள்!’’

    ``என் மனைவியும் நகை விரும்புவதில்லை!’’ என்று சொல்லிவிட்டார்.

    சரத்குமாரின் அன்றைய நிகழ்ச்சி சூப்பர் ஹிட். குவைத் தமிழ் நிகழ்ச்சி வரலாற்றில் ரிகார்ட் ஏற்படுத்தி –இடமின்மையால் நூற்றுக்கணக்கானோர் திரும்பிப் போகும்படியாயிற்று.

   சரத்குமாருக்கு இருக்கும் ரசிகர்கள் வட்டத்தை அன்று புரிந்துக் கொள்ள முடிந்தது.

   குவைத்தில் நான்கு நாட்கள் சரத்குமார் இருந்தார். அப்படியும் கூட யாருக்கும் சலிக்கவில்லை. நண்பர் பெரியசாமி `` என் சொந்த செலவில் இன்னும் ஒரு வாரம் இருங்கள்!’’ என்று உருகின அளவிற்கு அவர் போகும்போது எல்லோரிடமும் சோகம் தட்டியது நிஜம்.

       நடிகர் ஜெயசங்கர்:

  சிவரஞ்சனி சிவாயும், நண்பர் சென்ட்ரல் வீடியோ முஸ்தபாவும் குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தப் போவதாகவும், அதில் கலந்துக் கொள்ள சிறப்பு விருந்தினர் யாரையாவது ஏற்பாடு செய்து தாருங்கள் என்றனர்.

   அப்போதுதான் நடிகர் ஜெய்சங்கரின் ஞாபகம் வந்தது. ஏற்கனவே வேறோரு நிகழ்ச்சிக்கு வேண்டி அவரை அணுகியிருந்தேன். ஜெய்யும் சம்மதித்திருந்தார்.

   இம்முறை தமிழ்புத்தாண்டு நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டுவிழா என்றதும் அவர் உடன் ஒப்புக் கொண்டு,``துணைக்கு என் மனைவியையும் அழைத்து வரலாமா?’’ என்றார்.

   ``இல்லை சார் இது கமர்சியல் நிகழ்ச்சியில்லை. செலவு எங்களால் தாங்கமுடியாது’’ என்க ``சரி...சரி அப்படின்னா வேணாம்!’’

   ``குவைத்திற்கு வருவதை  முன்னிட்டு குவைத்திலுள்ள் முக்கிய தமிழர்களை நான் கெளரவிக்க வேண்டும். முன்னனியில் இருக்கிற 10 பேர்களைச் சொல்லுங்கள்’’ என்றார்.

   ``அதெல்லாம் வேணாம் சார். நீங்கள் பொது மனிதர் யாரையாவது சிலரை மட்டும் கெளரவித்தால், அது நன்றாக இருக்காது. மற்றவர்கள் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள் என்றதும், ``நீங்கள் எனக்கு ஒன்று செய்யும்போது பதிலுக்கு நானும் ஏதாவது செய்ய வேண்டாமா-இந்த ஜெய் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவன் என்று காட்ட வேணாமா?’’ என்றார்.

  ஜெய்யிடம் தொடர்பு கொள்வதிலோ, கலந்து பேசுவதிலோ எந்தவித கஷ்டமும் இல்லை. நிகழ்ச்சிக்கான பப்ளிசிட்டி போஸ்டர்களை அவரே அங்கிருந்தே அடித்து அனுப்பிவிட்டார்.

   ஜெய்சங்கர் சிறப்புமலர் ஒன்று தயாரித்து எடுத்து வந்தவர், ``நான் மெர்ஸிஹோமிற்கு உதவ வேண்டும். இந்த புத்தகங்களை மக்களிடம் கொடுத்து, அவர்கள் தரும் தொகையை உண்டியலில் போடுங்கள். நான் ஒன்று சேர்ந்து உதவி பண்ணலாம்’’ என்றிருந்தார்.

   ஆனால் அவரது நேரம் சரியில்லை போலிருக்கிறது. ஏர்போர்டிலிருந்து அவர் வெளியே வரவே ஒரு மணி நேரமாயிற்று. என்னாயிற்று ஏன் ஆளை காணோம் என்று சந்தேகப்பட்டு விசாரித்தபோது-

   ``அவரால் நடக்க முடியாத அளவிற்கு டயர்டாக இருக்கிறார்’’என்கிற தகவல் வர-பிறகு வீல் சேரில் அமர்த்தினர்.

   அடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவர் மயக்கமாகி பேச்சு மூச்சில்லாமல்-மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. `கோமா’வில் இருந்த அவர் தீவிர சிகிச்சையாலும், ரசிகர்களின் பிரார்த்தனையாலும்  மறுபிறப்பு எடுத்துள்ளார்.

   அரசாங்க மருத்துவமனையில் அவரை பார்க்க எப்போதும் திரளான கூட்டம், நான்காம் நாள் அவர் கண்திறந்த போது, அவர் ஒப்புக் கொண்ட கேரள நிகழ்ச்சியும், இன்னும் முடியவில்லை என்று நினைத்து ``சீக்கிரம் `பெட்’ லிருந்து விடுபட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளணும்’’ என்று சொல்லிக் கொண்டேயிருந்தார்.

    அவருக்கு முன்பே உடல்நலம் சரியில்லாமல் `அப்பல்லோவில்’ அட்மிட்டாகி கொஞ்சம் சரியானதும் குவைத் கிளம்பினாராம். வீட்டினர் தடுத்துப்பார்த்தும் கேட்கலை. ``ஏற்கனவே கொடுத்த தேதியை மாற்றக்கூடாது. எக்காரணம் கொண்டும் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்யக்கூடாது’’ என்று கிளம்பி வந்தாராம்.

    மோசமான உடல் நிலையிலும் கூட, அவரது நல்ல எண்ணம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் வந்த இடத்தில் இப்படியாயிற்றே என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கவலை. என்ன செய்வது, எப்படி அவரை பத்திரமாய் ஊருக்கு அனுப்புவது என்பதில் குழப்பம்.

   முழுவதும் குணமாகாமல் அவரை  ஆஸ்பத்ரியும் ரிலீஸ் செய்யாது. விமானத்திலும் பயணத்திற்கு அனுமதிக்கமாட்டார்கள். இந்த நிலையில் இந்திய தூதரகத்திலும், சென்னையில் முதலமைச்சருக்கும் தகவல் கொடுத்து உதவி கோரப்பட்டது. ஜெய்யின் மகன் டாக்டர் விஜய் வந்தார்.

   ஜெய்சங்கரின் விருப்பபடி-அவர் ஆஸ்பத்ரியில் இருக்கும்போதே, நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவரது உடல் நலம்பெற பிராத்தனையும் செய்யப்பட்டது.

   அவர் பேச ஆரம்பித்ததும், ``திரும்ப நிகழ்ச்சி நடத்துங்கள். எனக்கு உதவினவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என்று வற்புறுத்தினார். அவரது திருப்திக்காக டாக்டரிடம் அனுமதி பெற்று, அவர் கிளம்பும் தினத்தில் ஜெய் பாராட்டுவிழா திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

   ஆனால், கடைசி நேரத்தில் மறுபடியும் அவரிடம் தளர்ச்சி, மறுபடியும் மயக்கம். எல்லோருக்கும் அதிர்ச்சியாயிற்று.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles