வாணி ஜெயராம் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி

'குட்டி' படப்பாடல்களைக் கேட்ட பின்பு வாணி ஜெயராமின் குரல் மேல் எனக்கு ஒரு மோஹம் பிறந்து விட்டது என்றாலும், 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாட்டு காதில் விழுந்த பிறகு அந்த மோஹம் ஒரு தினுசுபித்தாகிப் போனது என்றுதான் சொல்ல வேண்டும்.

'தீர்க்க சுமங்கலி' எப்போது வெளியானது? 73? 74? காலில் கட்டுப் போட்டு ஐந்து வாரங்கள் என்னை டாக்டர் படுக்க வைத்துவிட்ட சமயம் அது; ஒரு நாளைக்கு பத்து தடவைகளாவது ரிகார்டரில் 'மல்லிகை' பாடலைப் போட்டு விட்டு கூடவே முனகிக் கொண்டிருப்பேன்.

வாணி ஜெயராம் மேல் ஸ்தாயியில் பாடினால், நான் கீழ் ஸ்தாயி.

அது என்ன குரல்?

எத்தனை பேருக்கு இப்படி ஒரு இனிமை அமைவது சாத்தியம்?

அதற்குப் பிறகு பத்திரிக்கைகளில் வாணி ஜெயராமின் படங்களை, அவரைப் பற்றின குறிப்புகளைப் பார்த்து படிக்க நேர்ந்து, 'உனக்கும் வாணி ஜெயராமுக்கும் சாயல் இருக்கிற மாதிரி தெரிகிறதே, உறவா, என்ன?'' என்று நிறையப் பேர்கள் கேட்டதும், சரி இவரை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று நான் நினைத்தது நிஜம்.

கொஞ்சமும் எதிர்பார்க்காத விதத்தில் திடும்மென்று அந்த சந்தர்ப்பம் வந்தது.

ஒரு பத்திரிகையின் ஆண்டு விழா; வாணி பிரார்த்தனை பாடல், நான் பேச்சாளர்களில் ஒருத்தி -

பத்திரிக்கை நிர்வாகி எங்களை அறிமுகம் செய்து வைத்தார். நம்பினால் நம்புங்கள் - இல்லாவிட்டால் விடுங்கள்.

சொல்லி வைத்த தினுசில் இரண்டு பேரும் ஒரே கணத்தில் ''நான் உங்கள் விசிறி'' என்றோம். தொடர்ந்து 'அடேடே! நான் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்களே! என்று வியந்தோம். அப்புறம் சுற்றி நிற்கும் கூட்டத்தையும் மறந்து சந்தோஷம் தாங்காமல் சிரித்தோம்.

மறுநாள் தன் வீட்டுக்கு காலைச் சிற்றுண்டி உண்ண வரும்படி எங்களை வாணி அழைத்தார்.

நீங்கள், வாருங்கள் என்ற பேச்சு வார்த்தை போய் நீ, வா என்ற ஸ்வாதீனம் வந்தது.

அப்போது ஆரம்பித்த நட்பு, கூடவே யாரோ நின்று அரல்டைட் போட்டு ஒட்டின மாதிரி ரொம்ப சீக்கிரம் வளர்ந்து இறுகிப் போனது.

பார்க்க சாது மாதிரி இருக்கும் வாணிக்கு ஒரு தடவையில் அப்படியே க்ரஹித்துக் கொள்ளும் - ப்ளாடிங் பேப்பர் போன்ற - அசாத்திய ஞாபகசக்தி - திறமை எக்கச்சக்கம்.

பாருங்களேன், அன்றொரு நாள் திரு.கே.வி. மஹாதேவனின் இசை அமைப்பில் பாடல் ரிகார்டிங்குக்குப் போயிருந்தபோது, சரி அரை நாள் இன்று நமக்கு அவுட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன், இந்த வாணி சரியாய் முக்கால் மணியில் பாட்டை கற்று, ரிகர்சல் பார்த்து, டேக் முடிந்து வெளியில் வந்துவிட்டார் என்றால் நம்ப முடிகிறதா?

திரு புக஧ழுந்தி ஹார்மோனியத்தோடு பாடிக் காட்ட, வாணி கூடவே பத்து நிமிஷங்கள் முனகிய பின் வாத்தியங்களோடு இரண்டு தரம் ஒத்திகை. அப்புறம் பைனல் டேக்.

ஒரு பல்லவி மூன்று சரணங்களைக் கற்று, பாடலையும் பதிவு செய்ய சரியாய் முக்கால் மணி என்றால் அது அசுர வேகம் இல்லாமல் வேறு என்ன?

இந்தண்டை அந்தண்டை நகராமல் உட்கார்ந்து நடந்தவைகளைப் பார்த்த எனக்கு என்னமோ நானே பாடி டேக் எடுத்துவிட்ட மாதிரி ஏக பெருமை.

வாணி அவர் வீட்டில், நிசப்தமான சூழ்நிலையில் ஹார்மோனியம் பின்னணியில் ஒலிக்க பஜன்களும், தும்ரியும் பாடுவதைக் கேட்பது ஒரு அலாதி அனுபவம்.

வாணியிடம் எனக்கு ரொம்ப பிடித்த சமாசாரம் அவருடைய எளிமையான குணம். ஒரு ஆடம்பரம்? ஒரு திமிர் பேச்சு? ஒரு பெருமைப் பீத்தல்? ம்ஹும்.. ஒன்றும் கிடையாது.

யாராவது பாடச் சொன்னால் கொஞ்சம்கூட தயங்காமல் உடனேயே வாணி பாடிக் காட்டி நான் பலமுறைகள் பார்த்துவிட்டேன்.

ஒருநாள் பேச்சுவாக்கில், ''கலைவாணி என்று உனக்கு எப்படி இத்தனை பொறுத்தமாய் பேர் வைத்தார்கள்'' என்றேன்.

வாணி ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தார். அப்புறம் சொன்னார் :

''இது வரைக்கும் நான் யார் கிட்டவும் இதைச் சொன்னதில்லை; ஏன்னா விளம்பரத்துக்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற மாதிரி சிலருக்குத் தோணலாம். ஆனா நா சொல்லப் போறது ஒரு சத்தியமான சம்பவம். நா எங்கப்பா அம்மாவுக்கு எட்டாவது பெண். நா பிறந்ததுலே அவாளுக்கு கொஞ்சம் வருத்தம்தான். இதைனால் பதினைஞ்சு நாள் வரைக்கும் புண்ணியாவசகம் செய்யாமல் பேர்கூட வைக்காம இருந்தாளாம். அப்போ வீட்டுக்கு வந்த ஜோஸியர் ஒருத்தர் என் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிச்சுட்டு ''பூர்வ ஜென்மத்திலே தேனும் பாலுமா பகவானுக்கு அபிஷேகம் பண்ண பலனோட உங்க பெண் பிறந்திருக்கா, இவ ஸரஸ்வதி அம்சம், இவளோட பெருமை உங்களுக்குப் பிற்காலத்துலே புரியும்''னு சொன்னாராம். அதுக்கப்புறம் தான் அம்மா எனக்கு ''கலைவாணி''னு பேர் வைச்சா..''

இன்றைக்கும் வாணியில் ஜாதகத்தில் அன்று ஜோஸியர் எழுதின குறிப்புகள் அப்படியே உள்ளன.

வாணி பேசப் பேச நான் திகைத்துத்தான் நின்றேன். எத்தனை உத்தமமான கணிப்பு? வாணி பூர்வ ஜென்மத்தில், அவர் இன்று மனமார வணங்கும் முருகனைக் குடம் குடமாய் பாலையும் தேனையும் கொட்டிக் கொட்டி தான் ஆராதிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கேயிருந்து வந்தது இப்படி ஒரு குரல்? இனிமை? இலவம் பஞ்சு மாதிரியான மென்மை?

வாணியின் மனசில் மிக உயர்ந்ததொரு ஸ்தானத்தை பற்றி இருப்பவர் அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தின வஸந்த் தேசாய்.

''பிரபலமான பாடல்கள் உன் துவக்கக் காலத்தில் உனக்கு எத்தனை கஷ்டங்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நீ என்றைக்கும் மறக்கக் கூடாது; முன்னணி பாடகியாக நீ மாறின பிறகு இந்தத் தொழிலுக்கு வரும் பாடகர்களுக்கு உன்னால் இயன்ற உதவியைச் செய்ய நீ முன் வர வேண்டும்'' என்று வஸந்த் தேசாய் வாணிக்கு கொடுத்த அறிவுரை.

''என்னென்னிக்கும் இந்த உபதேசத்தை மறக்காம, அடக்கத்தோட இருக்கணும்னு நா ஆசைப்படறதை முருகன்தான் நிறைவேத்திக் கொடுக்கணும்'' என்று கண் கலங்க வாணி என்னிடம் சொல்லும் போதெல்லாம் இது அனாவசியமான பயம் என்றே நான் நினைப்பேன்.

நான் அறிந்த வாணிக்கு இனிமேல் அகம்பாவமோ, தலைகனமோ வரும் என்று எனக்குத் தோன்றவில்லை. அவருடைய அன்பான குணமும், ப்ராக்டிகலான அனுசரணையுடன் கூடிய கணவர் ஜெயராமும் இருக்கும்வரை வாணி எதை நினைத்தும் கவலைப்பட தேவையே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

போன வாரம் சென்னைக்குச் சென்றிருந்த போது, ''இரண்டு நாள் வருகிறாய், அதில் ஊர்பட்ட வேலை... நிதானமாய் எப்போதுதான் வரப்போகிறாயோ?'' என்று ஆதங்கப்பட்ட வாணி அந்த இரண்டு நாளும் நான் எங்கு வெளியில் போனாலும் போகும், வரும் வழியில் இரண்டு நிமிஷங்களாவது அவர் வீட்டுக்கு வந்து போகும்படி சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ''அது சரி... போகிற ஜோரைப் பார்த்தால் இனிமேல் வீட்டில் சாப்பாட்டு அறையிலிருந்து ஹாலுக்குப் போகிற வழியில் கூட இரண்டு நிமிஷம் உன் வீட்டுக்கு வந்து போகும்படி சொல்வாய் போலிருக்கிறதே!'' என்றதும் என் சிரிப்பு வாணியையும் தொத்திக் கொண்டு விட்டது.

எந்த நட்பும் நிலைத்து நிற்க ம்யூசுவல் அட்மிரேஷன் அண்ட் அண்டர்ஸ்டாண்டிங் தேவை என்பது என் அபிப்பிராயம். வாணிக்கும் எனக்கும் நடுவில் இவை நிறையவே இருப்பதால் ஆயுசு பர்யந்தம் எங்கள் நட்பு இனிமையாய் நீடிக்கும் என்பதை நினைக்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.

More Articles