வாணி ஜெயராம் கோல்டன் நைட்
'ஒரு தேனருவிச் சாரல்'

Photo Gallery

Vani Jairam Golden NIteசென்னை நேரு உள் விளையாட்டரங்கம்...09-09-2007 ஞாயிறு மாலை, இசை ரசிகர்களின் படையெடுப்பால் திணறியது.

'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா' என்று தனது தேன் குரலால் தமிழகத்தையே மயங்க வைத்த தேசியப் பாடகி வாணி ஜெயராம், "லஷ்மன் ஸ்ருதி" இன்னிசைக் குழுவோடு இணைந்து வழங்கிய "வாணி ஜெயராம் கோல்டன் நைட்" இன்னிசைத் திருவிழா களைகட்டியது.

அலை அலையாய்த் திரண்ட ரசிகர்கள் அரங்கினுள் ஆர்வத்துடன் அமர்ந்திருக்க, மாலை 6.05 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.

Vani Jairam Golden NIteடி.வி.கே கல்ச்சுரல் அகடமி சார்பில் நடந்த இம்மாபெரும் இன்னிசை நிகழ்ச்சியை சின்னத்திரை செய்திவாசிப்பாளரும் திரைப்பட நடிகையுமான பாத்திமாபாபு தொகுத்து வழங்கினார். அவரது அற்புதமான வரவேற்புரையைத் தொடர்ந்து.. பலத்த கரகோஷத்துடன் மேடையேறினார் வாணி ஜெயராம். 'முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்' என்ற அழகான பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

'மண்ணுலகில் இன்று தேவன்' 'சந்திரபிறை பார்த்தேன்' 'நாதமென்னும் கோவிலிலே' 'முத்து முத்து தேரோட்டம்' 'பொங்கும் கடலோசை' என வாணி பொழிந்த நாதமழையில்...அரங்கில் இசை வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. ஒவ்வொரு பாடல் தொடங்குவதற்கு முன்பாகவும், இந்த இசைமேதையைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறிய பல அரிய கருத்துக்களை பாத்திமா பாபு சுவைபடத் தொகுத்த விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

'Vani Jairam Golden NIteஅந்த மானைப் பாருங்கள் அழகு' பாடலின் ஆண்குரலுக்கு பாட வந்த உன்னிமேனன் -' நான் பின்னணிப்பாடகராய் முதல்முதலாக "டூயட்" பாடியது உங்களுடன்தான். இந்த இன்னிசை நிகழ்ச்சியில் உங்களுடன் சேர்ந்து பாடுவது எனது பாக்கியம்' என்றவரிடம் அந்தப் பாடல் பதிவான ஜெமினி பாடல்பதிவுக்கூடத்தின் பெயர் உட்படச் சொல்லி தனது நினைவாற்றலை வாணி ஜெயராம் வெளிப்படுத்தினார்.

உன்னிமேனனுடன் இணைந்து 'வசந்தகால நதிகளிலே'.. 'ஹேய் ஐ லவ் யூ'..'நினைவாலே சிலை செய்து' பாடல்களைப் பாடி ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

Vani Jairam Golden NIte'நானா பாடுவது நானா'..'தேவாம்ருதம்'..'அன்பு மேகமே'..'மலைராணி'..'வா வா பக்கம் வா'..'கவிதை கேளுங்கள்'..'தங்கமணி' ஆகியபாடல்களை மனோ அவர்களுடன் இணைந்து பாடியபோது தென்றலுடன் தேனருவிச் சாரலில் நனைந்த சுகானுபவமாக அமைந்தது. தமிழகத்தின் வேலூர் நகரில் பிறந்த தமிழ்ப் பெண்ணான இவரது இயற்பெயர் 'கலைவாணி'. அந்த பெயர் எப்படி அமைந்தது..தமிழ்ப் பெண்ணான இவர் இந்தியில் முதலில் பாட நேர்ந்தது ஏன்...குரு யார்...திரையுலகில் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர், குடும்பப்பின்னணி,வாங்கிய தேசியவிருதுகள்,மாநிலவிருதுகள், நல்லியல்புகள்.. போன்ற விபரங்களை இடையிடையே தொகுப்பாளர் பாத்திமாபாபு அறிவித்தார். இந்த அறிவிப்பு www.lakshmansruthi.com இணையதளம், இவ்விழாவிற்காக நடத்தும் 'வாணி ஜெயராம் கோல்டன் நைட்' காண்டஸ்டில் கலந்து கொள்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்ததாக ரசிகர்களில் பலர் தெரிவித்தனர்.

Vani Jairam Golden NIte"பாரதி"திரைப்படத்தில்' நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே' பாடலைப் பாடிய பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா-வாணி ஜெயராம் அவர்களுடன் இணைந்து 'பாரதி கண்ணம்மா'..'ஒரே ஜீவன் ஒன்றே' பாடலைப் பாடினார். 'நாகின்'இந்தி திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஒரே ஜீவன் ஒன்றே' பாடலின் மெட்டிற்காகவே நடிகை ஸ்ரீபிரியா 'நீயா' திரைப்படம் தயாரித்தது பற்றி தொகுப்பாளர் கூற-' இப்பாடல் இடம் பெற்ற 'நீயா' திரைப்படத்தை என்னைக் கருவில் சுமந்தபடி பார்த்ததாக எனது தாயார் கூறுவார்.மேலும் அப்பாடலை அடிக்கடி விரும்பிக் கேட்ட என் தாயாருடன் கருவிலிருந்தபடி நானும் கேட்டதால்தான் எனக்கும் இசைமீது நாட்டம் வந்திருக்குமோ'...என்று ஹரீஷ் ராகவேந்திரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Vani Jairam Golden NIte'ஒரே நாள் உனை நான்'..'இலக்கணம் மாறுதோ' பாடல்களை ஸ்ரீநிவாஸுடன் இணைந்து பாடிய வாணி ஜெயராம், திப்புவுடன் இணைந்து 'மழைக்கால மேகம்'..'தேவி ஸ்ரீ தேவி'பாடல்களைப் பாடினார். இவர் பாடிய 'வா வா பக்கம் வா' போன்ற டிஸ்கோ பாடல்களுக்கு அரங்கின் பல பகுதிகளில் ரசிகர்கள் நடனமாடினர். 'ஏழு ஸ்வரங்களுக்குள்' மேகமே மேகமே' போன்ற பாடல்களைப் பாடியுள்ள இவர் சில சமயம் க்ளப் டான்ஸ், கேபரே டான்ஸ் காட்சிகளுக்கு பாடல்களைப் பாடுவது குத்துவிளக்கில் சிகரெட் பற்ற வைப்பதுபோன்ற உணர்வை ஏற்படுத்துவதாக கவிஞர் வைரமுத்து இவரைப்பற்றி எழுதியுள்ளதை நினைவுபடுத்திய தொகுப்பாளர் பாத்திமாபாபு, டி.வி.கே கல்ச்சுரல் அகடமியுடன் இந்த நிகழ்ச்சிக்காக இணைந்து ஆதரவளித்த முக்கிய நிறுவனங்களைப் பற்றி மேடையில் அறிவித்தார். இது போன்ற மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு விளம்பரதாரர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், அவர்களை நினைவுகூர்வதன் அவசியத்தையும் தொகுப்பாளர் அற்புதமாக எடுத்துரைத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் வந்திருந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா உட்பா நட்சத்திரப் பிரமுகர்களை லஷ்மன் ஸ்ருதி இன்னிசைக் குழு சார்பாகவும், விழா குழுவினர் சார்பாகவும் வரவேற்றார்.

Vani Jairam Golden NIteரசிகர்கள் வெகு ஆர்வமாக எதிர்பார்த்த 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' பாடலை வாணி ஜெயராம் பாட ஆரம்பிக்க - அந்த இனிய குரலில்... கவிஞர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத கருத்தாழமிக்க பாடல் வரிகளில்..ஒருங்கிணைப்பாளர் லஷ்மன் தலைமையில் 'லஷ்மன்ஸ்ருதி' இன்னிசைக்குழுவினர் வழங்கிய பின்னணி இசை சேர்ப்பில்..அரங்கமே மகுடிக்கு கட்டுண்ட நாகமாய் மயங்கியது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படத்திற்கே இடைவேளை தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு அந்த ஒரு இடைவேளை போதாமல் போகிறது. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் இறுதிவரை தங்கள் இருக்கையைவிட்டு எழாமல் இருந்தது, பழையபாடல்களுக்கு இன்றும் ரசிகர்களிடமிருக்கும் வரவேற்பை தெளிவுப்படுத்தியது.

வாணி ஜெயராம் தன் முதல் இந்தி திரைப்படம் "குட்டி"யிலிருந்து 'போலே ரே' பாடலைப் பாட, அரங்கில் அமர்ந்திருந்த நடுத்தர வயதைக் கடந்த வட இந்தியப் பெண்கள் பலர் தங்களை மறந்து உடன் பாடியது, இசைக்கு மொழியுடன் வயதும் கிடையாது என்பதை விளக்கியது. அடுத்து மனோவுடன் இணைந்து தேசிய விருது வாங்கித் தந்த 'சங்கராபரணம்' திரைப்படத்தின் "தொரகுணா" பாடலைப்பாடி ரசிகர்களின் பலத்த கைதட்டல்களைப் பெற்றார்.

Vani Jairam Golden NIte'முத்தமிழில் பாட வந்தேன்' பாடலுடன் தொடங்கி, நிறைவுப் பாடலான 'வாழிய செந்தமிழ் வாழியவே' வரை தொடர்ந்து 4 மணி 30 நிமிடத்திற்கு ஒரே இடத்தில் நின்றபடி பாடிய வாணிஜெயராமின் தொழில்பக்தியை ரசிகர்கள் மட்டுமின்றி உடன் பாடிய பின்னணிப் பாடகர்கள் மனோ, உன்னிமேனன், ஸ்ரீனிவாஸ், ஹரீஷ் ராகவேந்திரா, திப்பு போன்றோரும் பாராட்டினர்.

இன்னிசைவிழா இனிது நிறைவேற உறுதுணையாயிருந்த லஷ்மன் ஸ்ருதி ஒருங்கிணைப்பாளர் லஷ்மன் அவர்களுக்கும், லஷ்மன் ஸ்ருதி இன்னிசைக்குழு

கலைஞர்களுக்கும், பாடக, பாடகியருக்கும், மேற்பார்வையிட்ட இசையமைப்பாளர் சம்பத் செல்வன் அவர்களுக்கும், விழாவை நடத்திய டி.வி.கே கல்ச்சுரல் அகடமிக்கும், ஆதரவளித்த முக்கிய நிறுவனங்களுக்கும், தொகுப்பாளர் பாத்திமாபாபுவுக்கும் நன்றி தெரிவித்த வாணி ஜெயராம், தன்னுடன் பாடிய மனோ, உன்னிமேனன், ஸ்ரீநிவாஸ், ஹரீஷ் ராகவேந்திரா, திப்பு போன்றோரை வாழ்த்தி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Vani Jairam Golden NIteலஷ்மன் ஸ்ருதி ஒருங்கிணைப்பாளர் லஷ்மன் அவர்கள் மேடை அமைத்த கலைஞர்களுக்கும், இசைக் கலைஞர்களுக்கும், அரங்க நிர்வாகிகளுக்கும்,காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும், டி.வி.கே கல்ச்சுரல் அகடமியினருக்கும், ஆதரவளித்த நிறுவனங்களுக்கும் வாணி ஜெயராம், மனோ, உன்னிமேனன், ஸ்ரீநிவாஸ், ஹரீஷ் ராகவேந்திரா, திப்பு மற்றும் லஷ்மன் ஸ்ருதி பாடக பாடகியருக்கும் நன்றி தெரிவித்தார்.

Vani Jairam Golden NIteஇன்னிசை நிகழ்ச்சியின் நிறைவுப் பாடலான 'வாழிய செந்தமிழ் வாழியவே' பாடலை மற்ற பாடக பாடகியருடன் பாடி வாணி ஜெயராம் அவர்கள்விழாவை நிறைவு செய்ய, அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் ஒரு சேர எழுந்து நின்று பலத்த கரவோலியின் வாயிலாகத் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்தினர். விழா முடிந்த பின்னும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேடையிலிருந்த வாணி ஜெயராம் அவர்கள், ஆர்வமாகத் தன்னைச் சூழ்ந்த ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து நீண்ட நேரம் ஆகியும், வாணிஜெயராமின் தேன் குரலின் தித்திப்பு நமது செவிகளை ஆக்கிரமித்திருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

Photo Gallery

More Articles