HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
36 மணிநேர உலக சாதனை நிகழ்ச்சி
- ஒரு கண்ணோட்டம்!
1994 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,18 தேதிகள்...எங்கள் இசைப் பயணத்தில் மகத்தான மறக்க முடியாத நாட்கள். ஆம்...அன்றுதான் 36 மணி நேர உலக சாதனை இசை நிகழ்ச்சியை, தேனாம்பேட்டை காமரஜர் அரங்கில் வெற்றிகரமாக நடத்தினோம். டிசம்பர் 17 ந் தேதி காலை 8.58 மணிக்குத் துவங்கி, டிசம்பர் 18.ந்தேதி இரவு 10.05மணிக்கு 36 மணி நேர சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்தோம்.'

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியினை பத்மஸ்ரீ டாக்டர் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் துவங்கி வைத்தார். 36 மணி நேர நிகழ்ச்சியை 12 பகுதிகளாகப் பிரித்திருந்தோம். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு அந்தந்த தலைப்பின் கீழ் உள்ள பாடல்கள் வழங்கப்பட்டன. கின்னஸ் உலக சாதனைக்கான விதிகளின் படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கின்னஸ் விதிப்படி ஒருமணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். அதன்படி மூன்றுமணி நேரத்திற்கு சேர்த்து 15 நிமிடமாக ஓய்வு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த 15 நிமிடங்களில் அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே வர நேரம் சரியாக இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனியே டிக்கெட் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியின் 12 பிரிவுகள் விவரம்:

1. பக்திப் பாடல்கள்.

2. எம்.ஜி.ஆர்.பாடல்கள்.

3. சிவாஜி பாடல்கள்.

4. ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்.

5. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்.

6. காதல் வெற்றி, காதல் தோல்வி பாடல்கள்.

7. கேலியும் கிண்டலும் பாடல்கள்.

8. உங்கள் விருப்பம்.

9. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி பாடல்கள்.

10. ரஜினிகாந்த் பாடல்கள்.

11. கமல்ஹாசன் பாடல்கள்.

12. இளையராஜா பாடல்கள்.

இவ்வாறு 12 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு காட்சிக்கும் டிக்கெட் தனித்தனியாகவும் , 12 காட்சிக்கு மொத்தமாகவும் மற்றும் ரசிகர்கள் விரும்பும் காட்சிக்கு மட்டும் என்றும் கொடுக்கப்பட்டது.

பக்திப் பாடல்கள்

முதல் காட்சி பக்திப் பாடல்கள் மட்டும் என்பதாலும் டிசம்பர் மாதம் ஐயப்பன்மார்கள் அதிகம் இருப்பார்கள் என்பதாலும், அரங்கத்தின் வாயிலில், வாழை மரத்தில் அம்பலம் கட்டி அதில் ஐயப்ப சுவாமி சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது.

சுமார் 30 பேர் கொண்ட குழு இந்த வாழை மர அம்பலத்தை 2 நாட்களில் கட்டிமுடித்தனர். திரு.கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் நிகழ்ச்சியை துவங்குவதற்கு முன் வாழை அம்பலத்தில் அமர்ந்திருக்கும் ஐயப்பனை பூஜை செய்து விட்டு அரங்கினுள் நுழைந்தார்.

9.20 மணிக்கு குத்து விளக்கேற்றி, 'பொய்யின்றி மெய்யோடு' பாடலைப்பாடி நிகழ்ச்சியை பலத்த ஆரவாரத்திற்கிடையே துவங்கி வைத்தார். அவருடன் கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ் அவர்களும் ஒரு பாடலைப் பாடி நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தார்.

கதாசிரியர் ராது அவர்கள் லஷ்மன் அவர்களுக்கு வெள்ளிக் கங்கணம் ஒன்றைக்கட்டி வாழ்த்தினார். பத்திப் பாடல்கள் நிகழ்ச்சியில் மூன்று மதத்தைச் சார்ந்த பாடல்களையும் பாடி மத ஒற்றுமையை வலுயுறுத்தினோம். பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியில், எங்களது இசைக் குழுவைச் சேர்ந்த ராஜேஷ் சர்மா என்ற வட இந்தியர் தமிழில் சுமார் 20 நிமிடம் வரக் கூடிய ஆத்தா கருமாரி என்ற பாடலைப் பாடி அனைவரையும் அதிசயக்க வைத்தார். இந்தப் பாடலின் போது அரங்கில் உள்ள பலருக்கு அம்மன் அருள் வந்து ஆடியது குறிப்பிடத்தக்கது. ஐயப்பன்மார்களுக்காக படிப் பாடல் பாடியது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

3 மணி நேரம் ரசிகர்கள் பக்திப் பாடல்களை பொறுமையோடு கேட்பார்களா என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே பக்திப் பாடல்கள் நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டது! நேரம் போனதே தெரியவில்லை. நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ராகவேந்திரா டிரேடர்ஸ் திரு. பரமசிவம் அவர்கள் இலவசமாக இனிப்பு வழங்கினார். வாழை அம்பலத்தை இலவசமாக அமைத்துக் கொடுத்தவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே செல்ல...

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள்

அடுத்த நிகழ்ச்சியான எம்.ஜி.ஆர். பாடல்கள் நிகழ்ச்சிக்கு நல்ல கூட்டம். சரியாக 11.55 மணிக்கு பக்திப் பாடல்கள் நிறைவடைய....நேரம் இல்லாத காரணத்தினால் எம்.ஜி.ஆர். பாடல்களை உடனே துவங்கிவிட்டோ ம். பகல்12.00 மணிமுதல் 3.00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிறையபேர் தங்கள் அலுவலகங்களில் இருந்து நேராக அரங்கம் வந்துவிட்டனர். பெண்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது அரங்கத்தில் உள்ள 1,800 இருக்கைகளும் நிரம்பி வழிந்தன. இந்த நிகழ்ச்சியில் பெசன்ட் நகர் நடராஜன் என்பவர் ரசிகர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கினார். ரசிகர்கள் திடீரென்று சில பாடல்களுக்கு அரங்கத்தினுள் கற்பூர ஆரத்தி எடுத்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மீதுள்ள தங்களது அபிமானத்தைக் காட்டினர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் மக்கள் நாயகன் ராமராஜன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். அவர் எங்களிடம் 'நான் மக்கள்திலகம் அவர்களின் தீவிர ரசிகன், அவர் பாடிய நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்ற பாடலைப் பாடவேண்டும்' என கேட்டார். நாங்கள் அந்தப் பாடலை ரிகர்சல் செய்யாது இருந்தபோதும், மேடையில் ஒரு சில விநாடிகளில் அந்தப் பாடலுக்கான நோட்சை கரெக்ட் செய்து வழங்கி அனைவரையும் கவர்ந்தோம். பாரதி என்ற

பாடகர் கார்ட்லெஸ் மைக் உபயோகித்து ரசிகர்களிடையே சென்று 'நான் ஆணையிட்டால்...' என்ற பாடலை எம்.ஜி.ஆர். போல் நடித்துப் பாடி பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

மேலே செல்ல...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடல்கள்

இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் ஐந்தே நிமிடங்களில் நிரம்பி வழிந்தது. டிக்கெட் கவுண்டரில் இருந்த நண்பர்கள் டிக்கெட் கொடுக்கத் திணறினர். புரசைவாக்கம் இதய வேந்தன் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக எங்களது இசைக் குழுவைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.

'எங்கே நிம்மதி' பாடலுக்கு அரங்கினை அமைதியாக்கி நிகழ்ச்சியில் ஒருவித ஈடுபாட்டை ரசிகர்களுக்கு கொண்டுவந்து பாடலை (ஒன்ஸ்மோர்) கேட்க வைத்தார் பாடகர் விஜய். இளைய திலகம் பிரபு அவர்கள் படப்பிடிப்பின் காரணமாகத் தான் வர இயலாததை முன்னரே தெரிவித்திருந்தார். எனினும், இந்த நிகழ்ச்சியின்போது தன்னுடைய வாழ்த்துத் தந்தியை அனுப்பிவைத்து எங்களைக் கௌரவித்தார்.

நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பாடல்கள் நிகழ்ச்சியினைப் பார்ப்பதற்காக தமிழகத்தின் தெற்கு கோடியான நாகர்கோவிலிலிருந்து உமாமகேஸ்வரன் என்ற ரசிகர் வந்திருந்தார். அவரது பெயரை மேடையில் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவரது பெயரை அறிவித்ததும்தான் தெரிந்தது, தமிழகம் முழுவதும் கோவை, மதுரை, காரைக்குடி, விழுப்புரம், நெல்லை, சேலம், தருமபுரி போன்ற பல்வேறு நகரங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்பது.

வசந்தமாளிகை படத்தில் வரும் 'யாருக்காக' பாடலின் போது ஒரு ரசிகர் சிவாஜியைப் போல் சால்வையை போட்டுக்கொண்டு ரசிகர்கள் மத்தியில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். 'சோதனைமேல் சோதனை' பாடலைப் பாடகர் சுந்தரேசன் பாடும்போது சிவாஜியாகவே மாறி வசனம்பேசி நடித்து கலக்கினார்.

மேலே செல்ல...

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள்

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திரைப்படத்திற்கு இசையமைக்கத் துவங்கி இரண்டாண்டுகள்தான் ஆகியிருந்தது. அதற்குள் ஒரு நிகழ்ச்சி முழுவதும் அவர் பாடல்களைப் பாட முடியுமா என்று ரசிகர்கள் கேட்டனர். இதே கேள்வியை இசைக் கலைஞர்கள் பலரும் கூட எங்களிடம் கேட்டனர். நாங்கள் இந்த நிகழ்ச்சிக்காகத் தனிப்பட்ட முறையில் 25 நாட்கள் கடுமையாக ஒத்திகை செய்து, 30 பாடல்களைத் தயார் செய்திருந்தோம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்த பாடல்கள் அத்தனையும் கம்ப்யூட்டர் முறையில் இசையமைக்கப்பட்டவை. பல நாட்கள் பல நவீன முறைகளைக் கையாண்டு அமைக்கப்படும் அவரது இசையை மேடையில் துல்லியமாக வழங்குவது மிகக் கடினம். ஆனால், நாங்கள் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு ரிகர்சல் செய்து, மேடையில் பாடி அசத்தினோம்.

ஏ.ஆர்.ரகுமான் பாடல்களுக்கு காலை 11.30 மணிக்கெல்லாம் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அரங்கம் முழுக்க 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கூட்டம்தான். மாலை நேத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கொடுப்பதற்கு டிக்கெட் இல்லாததால் 'ஹவுஸ்ஃபுல்' போர்டு போடப் பட்டது. இருந்தும் ரசிகர்கள் டிக்கெட்டுக்காக அலைந்துகொண்டிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் மேடையில் பேசும்போது, "இவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், என்னுடைய பாடல்கள் என்றாலே அது கம்ப்யூட்டர் முறையில் பண்ணியிருப்பாங்க... அதனால் வாசிக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் லஷ்மன் ஸ்ருதி குழுவினர் அதைச் சரியாக மிகவும் சிரமம் எடுத்து ரிகர்சல் செய்து வாசித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று கூறினார்.

எங்கள் இருவருக்கும் (ராம், லஷ்மன்) தன்னுடைய அன்பளிப்பாக இரண்டு தங்க மோதிரங்களை வழங்கிய அவர், "இங்கு வாசித்துக் கொண்டிருக்கிற எல்லா இசைக் கலைஞர்களுக்கும் மோதிரம் போடவேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், இரண்டுதான் கொண்டுவந்தேன். அடுத்தமுறை நிச்சயம் அனைவருக்கும் வழங்குகிறேன்" என்றார்.

ஏ.ஆர்.ரகுமான் அவர்களை வரவேற்று பாடகர் பார்த்திபன் பெரிய ரோஜா மாலை ஒன்றை அணிவித்தார். ஏ.ஆர்.ரகுமான் விடை பெற்றுச் செல்லும்போது எங்கள் குழுவில் ட்ரம்ஸ் வாசித்த நரசிம்மனை கைகுலுக்கி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னணிப் பாடகி 'கலைமாமணி' ஸ்வர்ண லதா அவர்கள் கலந்து கொண்டு 'முக்காப்லா' பாடலையும், பின்னணிப் பாடகர் சாகுல் அமீது அவர்கள் 'ஊர்வசி ஊர்வசி' பாடலையும் பாடினர், ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் உதவியாளர் நோல் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை ஜமால் அவர்கள் எங்கள் இருவருக்கும்(ராம்,லஷ்மன்) தங்க மோதிரங்களைப் பரிசளித்தார். அரங்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள் அனைவரும் ஒருவர் விடாமல் 'ஊர்வசி' பாடலை வாயசைத்துப் பாடிக்கொண்டிருந்தது அந்தப் பாடலின் வசீகரத்தை உணர்த்துவதாக இருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் நிகழ்ச்சியின் போது கிடைத்த வரவேற்பு இசைக் குழுவினருக்கு சோர்வே வராமல் செய்துவிட்டது. ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் நடைபேற்றுக் கொண்டிருக்கும்போது தொலைக் காட்சியில் யேசுதாஸ் அவர்கள் குத்து விளக்கேற்றி, பாடலைப் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்த தொகுப்பு ஒளிபரப்பப் பட்டது.

மேலே செல்ல...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்

சரியாக இரவு 9 மணிக்குத் துவங்கியது. தொலைக் காட்சியில் செய்தி கேட்டவர்கள் பலரும்நிகழ்ச்சிக்கு வந்துவிட, ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களோடு, முந்தைய நிகழ்ச்சியைப் பார்த்தவர்களும் தொடர்ந்து பார்க்கவேண்டும் என்று மீண்டும் க்யூவில் நிற்கவே காமராஜர் அரங்க டிக்கெட் கவுண்ட்டரில் இருந்து வெளியே அண்ணாசாலை வரை ரசிகர்கள் அலைமோதினர்.

எஸ்.பி.பி. பாடல்களுக்குப் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 9 மணிக்குமேல் பெண்கள் கூட்டம் அதிகமாக, அதுவும் குடும்பம் குடும்பமாக நிகழ்ச்சிக்கு வருகை தந்தது அதிசயக்க வைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என்று திரு. எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களை அழைக்கச் சென்றபோது, "எனக்கு படப்பிடிப்பு உள்ளது. அதனால், வர இயலாது. இசைத் துறையில் பிரபலமாக உள்ள நாங்கள் நடத்தவேண்டிய நிகழ்ச்சியை நீங்கள் நடத்துகிறீர்கள், அது குறித்து நான் மிகவும் பெருமை அடைகிறேன்" என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்காக வெளியிடப்பட்ட விழா மலருக்கு ரூ.3,000 க்கான காசோலையை உடனே கொடுத்தனுப்பி எங்களை கௌரவப்படுத்தினார். 'ஒரு பொன்மானை நான் காண', 'பனி விழும் மலர் வனம்', 'மன்றம் வந்த தென்றலுக்கு'...பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

மேலே செல்ல...

காதல் வெற்றி-காதல் தோல்வி பாடல்கள்!

நள்ளிரவு 12.00 மணிக்கு காமராஜர் அரங்கின் வெளியே திருவிழாக்கோலம். அந்தஅளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம். இந்நிகழ்ச்சியின் போது அரங்கினுள் நிற்பதற்கு கூட இடமில்லை.

தாடி வைத்தவர்கள் கூட்டம் கூட்டமாகக் கண்ணீரோடு நின்றிருந்தனர். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கம் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் வியர்த்துவிட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சகலகலா இயக்குநர் டி.ராஜேந்தர் அவர்கள் சரியாக நள்ளிரவு 1.35 மணிக்கு வருகை தந்தார். டி.ராஜேந்தர் அவர்கள் பேசும்போது...

"இந்த நிகழ்ச்சிக்கு உள்ளே வருவதற்கு சிரமமாகி விட்டது. அந்த அளவிற்கு கட்டுக்கடங்காத கூட்டம், அதுவும் இந்த நள்ளிரவு வேளையில்! நான் உள்ளே வரும்போது கதவிலே போடப்பட்டிருந்தது பூட்டு! பூட்டையும் தாண்டி கேட்டது லஷ்மன் ஸ்ருதியின் பாட்டு! சாவி வரும் வரை நின்று கொண்டிருந்தேன் கேட்டு! சாவி வராவிட்டால் வைத்திருப்பேன் வேட்டு! உள்ளே வந்தால் அரங்கில் காலியாக இல்லை சீட்டு! ஒவ்வொரு பாட்டுக்கும் உங்கள் கைத்தட்டலே ஓட்டு! யாரோ சதி செய்து என்னை உள்ளே வர விடாமல் தடுத்தார்கள். திரும்பிவிடலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், திரும்ப மனமில்லை, என் தம்பி லஷ்மன் நிகழ்த்துகிறான் சாதனை! அந்த சாதனையில் இது சாதாரண சோதனை! அதுவும் தமிழன் நிகழ்த்தும் சாதனை, உள்ளே சென்று அவர்களை வாழ்த்தவேண்டும் என்பது தான் எனது பிரார்த்தனை.

உள்ளே வந்து இந்த நள்ளிரவிலே உங்களைக்கண்டதுமே எனக்கு உற்சாகம் வந்துவிட்டது. எப்படியாவது, லஷ்மன் ஸ்ருதி குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி விடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது. இவர்கள் 36 மணிநேர சாதனையை நிகழ்த்தி கின்னஸ் சாதனையை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

இந்த நள்ளிரவு நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் வருமா என்று நினைத்து, கல்லூரி ஹாஸ்டல்களில் அதிக சுவரொட்டிகளை விளம்பரபடுத்தி இருந்தோம். இதனால், நள்ளிரவில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகமாகியது. அரங்கம் நிறைந்தது என்ற அறிவிப்போடு டிக்கெட் கவுண்ட்டர் மூடப்பட்டது.

ரசிகர்களைக் கட்டுப்படுத்த இரவு 12 மணிக்குமேல் விசேஷமாக ஒரு தடுப்பு வேலி அமைக்கப்பட்டு அதன் வழியாக அனுமதித்தோம். 36 மணிநேரம் நடை பெற்ற நிகழ்ச்சியில் எங்களால் மறக்க முடியாத 3 மணி நேரம் இது தான் என்பது இசைக்குழுவில் இருந்த பெரும்பாலானோரின் கருத்தாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியின் நிறைவில் உலகின் தலைசிறந்த ட்ரம்மர்களில் ஒருவரான சிவமணி 5 நிமிடம் தனியாவர்த்தனம் (சோலோ ஃபெர்பார்மென்ஸ்) வழங்கினார். எங்கள் இசைக் குழுவின் வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகித்துவரும் தொழிலதிபர் ஆர். மாரிமுத்து அவர்கள் பாடகர்கள் 5 பேருக்கு 3,000 ரூபாயும் இசைக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் 1,000 ரூபாயும் பரிசளிப்பதாக மேடையில் கூறியதும், ரசிகர்களின் கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

ட்ரான்ஸ் இந்தியா ரிசார்ட்ஸ் என்ற அவரது சொந்த நிறுவனத்தின் சார்பாக, அவரது செலவிலேயே இசைக்குழு உறுப்பினர்களை ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா அனுப்பி வைப்பதாகவும் அவர் அறிவித்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மேலே செல்ல...

கேலி கிண்டல் பாடல்கள்

இந்தப் பாடல் தொகுப்பின் நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்குவதற்கு ரசிகர்கள் நள்ளிரவில் 3 மணிக்குமேல் வரிசையாக நின்றது, அவர்கள் காட்டிய ஆர்வம், எம்.ஜி.ஆர். படம் வெளியாகும் தினம்போல் இருந்தது என்று நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய இயக்குனர் ஆர்.பாண்டியராஜன் அவர்கள் குறிப்பிட்டார். 3 மணிக்கு வரவேண்டிய பாண்டியராஜன் அவர்கள் 2.40 மணிக்கே வந்துவிட்டார். இரவு தூங்கி விடுவேனோ என்ற பயத்திலேயே வந்துவிட்டேன். என்னால் இப்படி ஒரு சாதனை நிகழ்ச்சியில் சிரமம் வரக்கூடாது என்று குறிப்பிட்டார்.

சினிமாக்காரர்கள் கூட பண்ணவேண்டும் என்று நினைக்காததை நினைத்து அதை நடத்திகொண்டிக்கும் இவர்கள் சாதனை வெற்றியடைய வாழ்த்துகிறேன். இவர்கள் திரைப்படத் துறையில் காலடி வைக்கவேண்டும். அவர்களை வரவேற்று திரைப்படத் துறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும், இந்த அதிகாலை வேளையில் ரசிகர்களை நாம் சுறுசுறுப்பாக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன், ஆனால், இங்கே ரசிகர்கள் காட்டும் சுறுசுறுப்பும், இசைக் குழுவினரின் சுறுசுறுப்பும் என்னை திகைக்க வைத்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் தலைப்பு கேலி கிண்டல் என்பதால் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் நடனமாடி கைத்தட்டி தங்களது உற்சாகத்தை தெரிவித்தார்கள். குடும்பத்தினரோடு வந்திருந்த குழந்தைகளும், பெண்களும்கூட நடனமாடியது எங்களது உற்சாகத்தை அதிகரிப்பதாக அமைந்தது.

கேலி கிண்டல் பாடல்களில் குழுவின் பாடகர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் கிண்டல் செய்துகொண்டு, ஜாலியாகப் பாடிக்கொண்டிருத்தது ரசிகர்களுக்கு சிறந்த பொழுது போக்காக அமைந்தது.

மேலே செல்ல...

உங்கள் விருப்பம்

ரசிகர்கள் அரங்கத்தின் உள்ளே நுழையும்போதே, அவர்கள் விரும்பும் பாடல்களைத் துண்டு சீட்டில் எழுதவைத்து ஒரு பெட்டியில் பெற்றுக் கொண்டோ ம். ரசிகர்களால் அதிகம் விரும்பிக் கேட்கப்பட்ட பாடல்கள் டி.ஆர். மகாலிங்கம் அவர்கள் பாடிய 'செந்தமிழ்த் தேன் மொழியாள்'! 'ஆட்டமா தேரோட்டமா', மற்றும் பாட்ஷா படத்தில் இடம்பெற்ற 'ஆட்டோ க்காரன் ஆட்டோ க்காரன்'.

நிகழ்ச்சியின் போது தன்னார்வ உதவியாளராக இருந்த நண்பர், பெட்டியை ரசிகர் ஒருவரிடம் நீட்டியபோது நான் பெட்டியில் போடமாட்டேன் ஒரு சாக்கு கோணி கொண்டுவாருங்கள் எள்றார். ஏன் என்று கேட்டதற்கு நான் பெட்டியில் சீட்டைப் போட்டால் அது லஷ்மன் அவர்கள் எடுக்கும் போது வராமல் போய்விடலாம். அதனால் நான் சாக்கு கோணியில் அமர்ந்து கொள்கிறேன் அவர் எடுக்கும்போது சாக்கு கோணியில் இருந்து வெளிப்பட்டு என் விருப்பப்பாடலை சொல்லி பாடச்சொல்வேன் என்றார். அந்த அளவுக்கு நிகழ்ச்சி சுவாரஸ்யமாக நடந்தது.

ரசிகர்கள் கேட்ட பாடல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டதும், அடுத்து நம்முடைய பாடல் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பாடல் இடம் பெற்றதும் கேட்ட ரசிகர் அவரது இருக்கையருகே எழுந்து நிற்பார். அவரது படம் உடனடியாக வீடியோவில் காட்டப்படும். இதில் வித்தியாசமாக வந்த சீட்டு அம்பத்தூர் கோபி என்பவர் தலைமையில் வந்திருந்த நண்பர்கள் எழுதிய 'காதல் தோல்வியுற்ற வாலிபர்கள் சங்கம்' என்ற சீட்டு.

காலை 5.00 மணிக்கு டாக்டர்கள் மூன்று பேர் இசைக்குழுவினரின் உடலைப் பரிசோதனை செய்து இளநீர், குளுக்கோஸ், எனர்ஜி டேப்ளட்ஸ் போன்றவற்றை கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க சரியாக காலை 6.05 மணிக்கே திரு. கங்கைஅமரன் அவர்கள் வந்துவிட்டார்.

15 நிமிடங்களுக்குமேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

"இந்த இசைக்குழுவினரின் 1600வது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன். நல்ல ஆர்வம் உள்ள இந்த இளைஞர்கள் 36 மணி நேர கின்னஸ் சாதனை மட்டுமல்லாமல் இசைஞானி இளையராஜா அவர்களைப் போல் இசைத்துறையில் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும், மெல்லிசைத் துறைக்காக அவர்கள் நிறைய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்"என்றார்.

இரவு முழுவதும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட்ட சிறப்பு விருந்தினர்களும் குறித்த நேரத்தில் வருகைதந்து கௌரவப் படுத்தியதைக் கண்டு பத்திரிகைத்துறை நண்பர்கள் உள்பட அனைவரும் வியந்து பாராட்டினர்.

மேலே செல்ல...

மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி பாடல்கள்

இசைக் குழுவினர்கள் மிகவும் சிரமப்பட்ட நேரம் என்று சொல்லலாம். நிகழ்ச்சி 9.00 மணிக்குத் துவங்கியது. இரண்டு,மூன்று பாடல்கள் சென்றதும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும், டி.கே.ராமமூர்த்தி அவர்களும் 9.15 க்கு அரங்கினுள் நுழைந்தார்கள். எங்கள் குழுவின் இசைக்கலைஞர்கள் 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சி நிறைவுற்றதும் சற்று களைப்புடன் இருந்தனர். மெல்லிசை மன்னர்கள் உள்ளே நுழைந்ததும் களைப்பு சோர்வு எல்லாம் பறந்து விட்டது. உடனே உற்சாகத்தில் சிறகடிக்கத் தொடங்கிவிட்டோம்.

எம்.எஸ்.வி. அவர்கள் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப் படுத்தினார். திரு. டி.கே. ராமமூர்த்தி அவர்கள் 'உன்னை ஒன்று கேட்பேன்' பாடலை வயலினில் வாசித்து மகிழ்வித்தார். "எங்களது பாடல்களைப் பாடி எங்களைப் பிரபலப்படுத்தும் இவர்கள் பிரபலமடைய வேண்டும், இவர்கள் சாதனை வெற்றியடைய வேண்டும்" என்று எம.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பாடகி மாலதி பாடிய 'கண்ணான பூமகளே' என்ற தண்ணீர் தண்ணீர் திரைப்படப் பாடல் பலத்த கைத்தட்டலைப் பெற்றது.

மேலே செல்ல...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடல்கள்

இந்த நிகழ்ச்சியின் போது ரசிகர்கள் செய்த கரகோஷமும் ஆரவாரமும் இது 2-வது நாள் நிகழ்ச்சி என்பதையே மறக்க வைத்து விட்டது. பாடல்கள் ஒவ்வொன்றும் அதிரடியாய் இருந்தது. 'பொதுவாக எம் மனசு தங்கம்' பாடல் ரசிகர்களை ஆடவைத்தது. 'வந்தேண்டா பால்காரன்' பாடலுக்கு ரசிகர்கள் மேடையில் இருந்த பாடகர்களை நோக்கி பூக்களைத் தூவினர், சிலர் காசுகளை வாரி இறைத்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது சூப்பர் ஸ்டார் ஊரில் இல்லாத காரணத்தால் தன்னுடைய உதவியாளர் கார்த்திக் மூலமாக வாழ்த்து தெரிவித்து மலர்ச்செண்டு ஒன்றை அனுப்பி வைத்தார். இந்த மலர்ச்செண்டு வந்ததும் நாங்கள் மிகுந்த உற்சாகமடைந்தோம். ரசிகர்கள் 'பாட்ஷா' பாடலை பாடச்சொல்லி ஒட்டு மொத்தமாக கோரிக்கை வைக்க உடனடியாக 'ஆட்டோக்காரன்' பாடல் பாடப்பட்டது. இந்தப் பாடலுக்கு அரங்கம் அதிர்ந்தது.

இந்தப் பாடல் மேடையில் பாடப்பட்டது குறித்து ஒரு சிறிய விளக்கம் அளிக்க விரும்புகிறேன் (லஷ்மன்). 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் இந்தப் பாடலைப் பாடச்சொல்லி 200 சீட்டுகளுக்கும் மேல் வந்தது. இந்தப் பாடலை நாங்கள் பயிற்சி எடுக்கவில்லை. மதியம் 'ரஜினி ஹிட்ஸ்' நிகழ்ச்சியில் ப்ராக்டீஸ் செய்து அளிக்கிறோம் என்று கூறியிருந்தேன்.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே கிடைத்த இடைவெளியில் இந்தப் பாடலை பயிற்சி செய்து மேடையில் வழங்கியது ரசிகர்களை ஆச்சிரியப்பட வைத்தது.

மேலே செல்ல...

நவரச நாயகன் கமல்ஹாசன் பாடல்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய கமல் நற்பணி மன்ற நிர்வாகி குணசீலன் அவர்கள் கமல்ஹாசன் அவர்கள் சார்பாக நேரில்வந்து வாழ்த்துச் செய்தியை கொடுத்து வாழ்த்தினார். 'வருது வருது விலகு விலகு'... பாடல் அரங்கத்தை ஆரவாரப்படுத்தியது. பாடகர் பார்த்திபன், முரளி இருவரும் தங்களது பாடல்களால் ரசிகர்களை மாறி மாறி உற்சாகப்படுத்தினார்கள்.

'நினைதாலே இனிக்கும்' படத்திலிருந்து 'இனிமை நிறைந்த உலகமிருக்கு' பாடலுக்கு இசைக் குழுவினருடன் சேர்ந்து நானும் நடனமாடினேன் (லஷ்மன்). பாடகர்கள், இசைக் குழுவினர், ரசிகர்கள்...எனஅனைவரும் நடனமாட அரங்கில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டோடியது.

மேலே செல்ல...

இசை ஞானி இளையராஜா பாடல்கள்

36 மணிநேர கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி எப்படி நிறைவடையப் போகிறது என்பதைப் பார்ப்பதற்காக கட்டுங்கடங்காத கூட்டம். அரங்கின் வெளியே பலத்த மழை கொட்டிய போதிலும் கூட்டம் அப்படியே நின்று கொண்டு இருந்தது.

பாடல்களின் வரிசையை தெரிவிக்கும் கம்ப்யூட்டரை இயக்கும் இன்ஜினியர்களும் சோர்வில்லாமல் சாதனையின் சிகரத்திற்குத் தங்களைத் தயாராக்கிக் கொண்டிருந்தனர். இசை ஞானி இளையராஜா அவர்கள் சரியாக 7.35 மணிக்கு அரங்கினுள் வந்துவிட்டார். அவருடன் அவருடைய சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் அவர்கள் வந்திருந்தார்.

இளையராஜா அவர்கள் உள்ளே வரும்போது '[பொன்னைப் போல ஆத்தா' என்ற பாடல் பாடப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தப் பாடலை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்த இளையராஜா அவர்களை வரவேற்று மேடையிலிருந்து இறங்கி இளையராஜா அவர்களின் இருக்கைக்கு சென்று அவரின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினேன் (லஷ்மன்).

நிகழ்ச்சியின் அடுத்த பாடலாக 'ராஜா கைய வெச்சா' என்ற பாடல் பாடப்பட்டது, அரைமணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்த இளையராஜா அவர்கள், 8.05 மணிக்கு மேடையேறி இசைக் கலைஞர்களுக்கு பாராட்டுக் கேடயத்தை வழங்கி வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் வெற்றிக்காக உறக்கம் மறந்து உழைத்த அனைத்து நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும் இளையராஜா அவர்களின் பொற்கரங்களால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நான் அணிவித்த மோதிரத்தை எனக்கே திரும்ப அணிவித்து வாழ்த்திய போது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் பேசும்போது "உலகில் இசை பொதுவானது, புனிதமானது, எல்லா ஜீவராசிகளையும் இசை மயக்கிவிடக்கூடியது. இசைக்கு ஜாதி, மொழி என்ற பேதம் கிடையாது. நம்மைச் சுற்றி எழுப்பப்படும் எல்லா ஒலிகளிலும், இசை உள்ளது. இசையை தொழிலாகக் கொண்டுள்ள பல பேர் இந்த சாதனையைப் பற்றி நினைக்காதபோது, இந்த மாணவர்கள் செய்யும் சாதனையை வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தேன். இவர்கள் மேன்மேலும், பல சாதனை புரியவேண்டும்" என்று வாழ்த்தினார்.

இளையராஜா அவர்கள் கலந்துகொண்ட நிறைவு விழாவில் எடுத்துக் கொண்ட நேரத்தைக் கணக்கிட்டு சாதனை நிகழ்ச்சி 10.05 மணிக்கு நிறைவடையும் என்று அறிவித்தோம்.

சரியாக 10.05 மணிக்கு சாதனை நிகழ்ச்சி நிறைவுற்றதும் இசைக் குழுவினர்கள், நண்பர்கள், பணியாளர்கள், ரசிகர்கள்... என அரங்கத்தில் உள்ள அனைவரும் நடனமாடித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த சாதனை நிகழ்ச்சி வெற்றியடைய உதவிய முக்கிய நண்பர்களுக்கும் இசைக் குழுவின் முக்கிய உறுப்பினர்களுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டது.

நிகழ்ச்சியைப் பார்த்து கின்னஸ் புத்தகத்தின் குறிப்புக்கு அனுப்ப சுங்க இலாகாவின் கலெக்டர் திரு.செந்தில்வேல், ஐ.ஆர்.எஸ் ஒப்புதல் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியைத் தொடர்ந்து 36 மணி நேரமும் பார்த்த 23 ரசிகர்களின் கையெழுத்து அடங்கிய புத்தகமும் கலெக்டர் அவர்களால் மேற்பார்வையிடப்பட்டது. 23 ரசிகர்களுக்கும் சிறப்பு நினைவுப் பரிசு மேடையில் வழங்கப்பட்டது.

தன்னுடைய கதைகளை நாடகமாக எழுதி அந்த நாடகங்களைத் தொடர்ந்து 36 மணி நேரம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தி இந்திய அளவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நாடக ஆசிரியர் ராது அவர்களின் மூல கருத்தை அடிப்படையாகக் கொண்டு 36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற உணர்வை எங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த உணர்வை எங்களுக்கு ஏற்படுத்திய திருவாளர் ராது அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

அன்புடன்
லஷ்மன் ஸ்ருதி

மேலே செல்ல...

To Read In English/ஆங்கிலத்தில் படிக்க

Back To Index