HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
இவர்கள் வித்தியாசமானவர்கள்

பிரபலமான திரைப்படப் பாடல்களைப் பொதுமேடைகளில் இசைத்துப் பாடி மக்களை மகிழ்விப்பது என்ற வழக்கம் 1950களில் தோன்றியது.

கர்நாடக இசை பிரபலமாகாத சிற்றூர்களிலும், சிறுநகரங்களிலும் கோயில் திருவிழாக்களின்போது மேடைபோட்டு திரைப்படங்களில் இடம்பெறாத மற்றும் இடம்பெற்ற பக்திப் பாடல்களை இசைக் கருவிகளின் துணையுடன் பாடும் மெல்லிசைக் குழுக்கள் தோன்றியது அந்தக் காலகட்டத்தில்தான்!

பின்னர், முதலில் இரண்டு அல்லது மூன்று பக்திப் பாடல்களை மட்டும் பாடிவிட்டு, பிரபலமான திரைப்படப் பாடல்களைத் தொடர்ந்து பாடிடும் வழக்கம் பரவலானது!

அந்த வகையில், சென்னை நகரை எடுத்துக் கொண்டால், 1950களின் பிற்பகுதியிலும், அறுபதுகளின் முற்பகுதியிலும் பிரபலமாக இருந்தது 'சாரங்கபாணி' என்பவரின் இசைக்குழுதான். பின்னர் வில்லியம்ஸ் இசைக்குழு, பாவலர் சகோதரர்கள் ஆகியோர் பிரபலமாக இருந்தனர். (பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர்தான் 'பாவலர் சகோதரர்கள்' என்ற பெயரில் ஆளுக்கொரு இசைக் கருவியை வாசித்துக் கொண்டு பாடியவர்கள். அவர்களில் இளையராஜா, பலமுறை 'தென்னாட்டு லதா' என்ற பெயரில் பெண் குரலில் பாடியதுமுண்டு!) அவர்களெல்லோருமே அனேகமாகக் கோயில் திருவிழாக்களில் பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கிப் பின்னர் திரைப்படப் பாடல்களை இசைத்தவர்கள்தான்.

அந்தக் காலகட்டத்தில் அதாவது 1970களில் பக்திப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் முழுக்க முழுக்க திரைப்படப் பாடல்களை மட்டுமே மேடைகளில் பாடிப் பிரபலமான முதல் குழு "காமேஷ் ராஜாமணி" மெல்லிசைக் குழுவினர். அக்குழுவினர் அனைவரும் ஒரே மாதிரி உடையணிந்து கழுத்தில் டை கட்டியிருப்பர். காமேஷ் நவநாகரிகமாக ஜிகனா ஆடைகளை அணிந்து பாடுவார். ராஜாமணி ஹார்மோனியம் வாசிப்பார். மேடை நிகழ்ச்சிகளில் சுழலும் 'டிஸ்கோ' விளக்குகளை அறிமுகப்படுத்தியதும் அக்குழுவினரே!

அந்தக் குழுவில் பாடிக் கொண்டிருந்த ஏ.வி. ரமணன் தனியாகப் பிரிந்து சொந்தமாக "மியூசியானோ" என்ற இசைக்குழுவைத் தொடங்கிப் பிரபலமானார். அவரது குழுவில் பாடிவந்த உமாவெங்கட்ராமனும் ரமணனும் காதலித்து மணந்தனர். பின்னர் உமாரமணன் ஏராளமான திரைப்படங்களிலும் பின்னணி பாடியிருக்கிறார்.

"மியூசியானோ" வைத் தொடர்ந்து 'சிவராஜ் ஆனந்த்' குழுவினர், ரகுராஜ்சக்ரவர்த்தி, கோவை முரளி, 'முரளீஸ் ஈஃபோனி', 'சாதகப் பறவைகள்', 'உதயராகம்', 'நவராக்ஸ்', 'சந்தோஷ்மெலடீஸ்', 'அபஸ்வரம் ராம்ஜி', 'லூயிஸ் பால்.....' இப்படி ஏராளமான மெல்லிசைக் குழுவினர் வெளிச்சத்திற்கு வந்தனர். மதுரையில் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் இணைந்து டி.வி.எஸ். ஆர்க்கெஸ்ட்ரா என்ற பெயரில் ஓர் இசைக்குழுவைத் தொடங்கி தென் மாவட்டகளில் பிரபலமாக விளங்கினர்.

1970-கள் மெல்லிசைக் குழுவினர்களின் 'பொற்காலம்' எனலாம். இவர்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த திரைப்பட இசையமைப்பாளர்களும், வாத்யக் குழுவினரைச் சேர்த்துக் கொண்டு, தாங்கள் இசையமைத்த பாடல்களையே மேடைகளில் 'லைவ்' ஆக வழங்கத் தொடங்கினர். அந்த வகையில் முதலாவது 'மெல்லிசை மன்னர்' எம்.ஸ். விஸ்வநாதனே! அவரைத் தொடர்ந்து சங்கர்-கணேஷ், தேவா, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரும் அத்தகைய மேடை நிகழ்ச்சிகளை நடத்தினர். நடத்திக் கொண்டும் வருகின்றனர்.

இத்தனை போட்டிகளுக்கிடையே 1987 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையருகே ஓர் இசைப் புயல் புதிதாகப் புறப்பட்டது. ஆம், அந்த ஆண்டுதான் கடற்கரைச் சாலையிலுள்ள 'சென்னை மாநிலக் கல்லூரி' மாணவரான லஷ்மன் ஸ்ருதி' என்ற பெயரில் ஓர் இசைக்குழுவை உருவாக்கினார். இத்தனைக்கும் லஷ்மன் பாடகரல்ல 'மிமிக்ரி' கலைஞர்தான்! தமது தாயின் மூலமாக இசையார்வத்தையும், ரசனையையும் வளர்த்துக் கொண்டவர். ராயபுரம் வண்ணாரப் பேட்டை பகுதிகளில் பள்ளியில் படிக்கும் வயதில் கோயில்களில் திருவிழா நாள்களில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சிகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் இவரும் இவரது சகோதரரான ராமுவும்!

தொடக்கக் காலத்தில் அவர் குழுவில், இசைக்கருவிகளை வாசித்தவர்களும், பாடகர்களும் கல்லூரி மாணவர்களே! 'வெள்ளை சீருடை அணிந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் மெல்லிசைப் பாடல் பாடுகிறார்கள் என்பதே அக்கால கட்டத்தில் புதுமையாகவும், அதுவே இவர்களுக்கு விளம்பரமாகவும் அமைந்தது.

லஷ்மன் அக்குழுவின் தலைவராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் செயல்பட்டதுடன், இசை நிகழ்ச்சிக்கு இடையிடையே 'மிமிக்ரி' செய்தும் வந்தார் கூடவே படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி, B.Sc., பட்டமும், M.A முதுகலைப் பட்டமும் பெற்று, சென்னை சட்டக்கல்லூரியிலும் பயின்றார். ஃபார்மசி டிப்ளமோவும் பெற்றார். ஒரு தனியார் திரைப்படக் கல்லூரியில் 'டைரக்ஷன்' துறையிலும் டிப்ளேமா பெற்றார். இவ்வளவும் போதாதென்று ஸ்டண்ட் நடிகராகவும் பல படங்களில் பங்கேற்றார் லஷ்மன்.

கூடவே இவரது 'லஷ்மன்-ஸ்ருதி' இசைக்குழுவும் பிரபலமடைந்து வந்தது. வழக்கமாக எல்லா மெல்லிசைக் குழுவினரும் செய்வதுபோல அவ்வப்போது பிரபலமாக இருக்கும் திரைப்படப் பாடல்களை மட்டும் பாடுவதுடன், வேறு ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டுமென்று லஷ்மன் திட்டமிட்டார். அதற்குத் தோதாக இவரது குழுவில் பாடிக் கொண்டிருந்த மாலதி என்ற பாடகி அமைந்தார்.

கே.பி. சுந்தராம்பாள் பெங்களூர் ரமணி அம்மாள், மதுரை விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் ஆகியோர் பாடிய பாடல்களுக்கென்றே ரசிகர் கூட்டம் இருப்பதைக் கவனித்து வந்த லஷ்மன், அத்தகைய பாடல்களையும் தமது 'ஸ்ருதி' குழுவிலுள்ள பெண் பாடகிகள் பாடவேண்டுமென அவர்களுக்கு ஒரு 'டெஸ்ட்' வைத்தார். அந்தப் பரிட்சையில் வென்றார் மாலதி.

மூன்றாண்டுப் பயிற்சிக்குப் பிறகு அவரால் கே.பி. சுந்தராம்பாள், பெங்களூர் ரமணி அம்மாள் ஆகியோரின் குரல்களை 'இமிடேட்' செய்து உச்சஸ்தாயில் பாட முடிந்தது. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடிய கிராமியப் பாடல்களையும் அவரால் எளிதாகப் பாடமுடிந்தது. ஆகவே, 'லஷ்மன்-ஸ்ருதி' குழுவின் 'நட்சத்திரப் பாடகி'யாக மாலதி உருவெடுத்தார். நாற்பது குரல்களில் பாடினார்.

'ஸ்ருதி' தொடங்கப்பட்டதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே, அதாவது 1986ல் மேடையில் பாடத் தொடங்கியிருந்த மாலதி, 'ஸ்ருதி' குழுவில் சேர்ந்து முக்கியப் பாடகியாக மாறியதுடன் லஷ்மனின் மனதைக் கவர்ந்து அவரது இல்வாழ்க்கைத் துணைவியாகவும் இணைந்தார்.

பத்து மாணவர்களுடன் தொடங்கப்பட்ட 'லஷ்மன்-ஸ்ருதி' குழுவில் இன்று 50 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே தொழில்முறைக் கலைஞர்கள். 1987லிருந்து 2007 ஆகஸ்ட் மாதம் முடிய ஆறாயிரத்துக்கும் அதிகமான மேடைகளைக் கண்டிருக்கிறது இந்த இசைக்குழு.

அந்த ஆறாயிரம் மேடைகளில் பல வெளிநாட்டு மேடைகளும் அடக்கம். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேஷியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஃபிரான்ஸ், துபாய், ஷார்ஜா, பஹ்ரைன், கட்டார் ஆகிய நாடுகளின் பல மேடைகளில் வஷ்மன்-ஸ்ருதி இசைக் குழுவினர் இசை மழை பொழிந்திருக்கின்றனர்.

இத்தனை சாதனைகளையும் வெற்றிகரமாக இக்குழுவால், அதுவும் இருபதாண்டுகளுக்குள் நிகழ்த்த முடிந்திருக்கிறதென்றால்.... புத்தம் புதிதான தலைப்புகளில், புதுமையான இசை நிகழ்ச்சிகளை இக்குழு அரங்கேற்றியதே காரணமாக இருந்திருக்கிறது.

உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் நில அதிர்வு ஏற்பட்டு ஏராளமான உயிர்களும், ஊர்களும் சேதமடைந்தது. நமது நாடே அந்த மாநில மக்களுக்காக நிவாரண உதவிகளை அளிக்க முன்வந்தபோது, சென்னை நகரின் பல பாகங்களிலும் 'நடமாடும் இசைக்குழு' என்ற வகையில் ஒரு வாகனத்தில் அமர்ந்தபடி இக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டே நன்கொடை வசூல் செய்தார்கள். இதனால் குஜராத் நில அதிர்வு சேதங்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை சென்னை நகர மக்களிடம் ஏற்படுத்த முடிந்ததுடன் ஒருலட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் அளவிற்கு நன்கொடையும் வசூல் செய்தனர். அத்தொகையுடன் குழுவின் சார்பாக மேலும் பதிமூன்றாயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தம் 1,50,000 ரூபாயைத் தமிழக முதல்வர் மூலம் குஜராத் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்திய - பாகிஸ்தான் படைவீரர்களிடையே 'கார்கில்' பகுதியில் மோதல் ஏற்பட்டபோது சென்னை கலைவாணர் அரங்கத்தில் "ராணுவ மரியாதை" என்ற தலைப்பில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினார்கள். தேசபக்திப் பாடல்களை மட்டுமே பாடி நிதி வசூலித்தனர். அந்த வகையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வசூலித்து 'சென்னை மவுண்ட் ரோட்டரி சங்கம்' மூலமாக 'கார்கில் நிதி'யாக அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தை 'சுனாமி' அலைகள் தாக்கி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பறித்துக் கொண்டு போனபோது, இருபது நாள்களுக்குள் சென்னை அரிமா சங்கத்துடன் இணைந்து நாரதகான சபா அரங்கில் ஒரு மாபெரும் இசைநிகழ்ச்சி நடத்தி, மூன்று லட்சரூபாய் வசூலித்துத் தமிழக முதல்வரிடம் 'சுனாமி நிவாரணநிதி'யாக அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியில் 100 பின்னணிப் பாடக - பாடகிகள் இலவசமாகப் பாடி உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1994 ஆம் ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய இருநாள்களிலும் தொடர்ந்து முப்பத்தாறு மணி நேரம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இடைவிடாது இசை மழை பொழிந்து, உலக சாதனை படைத்தார்கள். இந்த வகையில் இக்குழுவினர்தான் முதல் சாதனையாளர்களாவர். அந்த நிகழ்ச்சியைப் பிரபல பின்னணிப் பாடகரான கே.ஜே. யேசுதாஸ் தொடங்கி வைக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள்.

முன்னதாக 1991 ஆம் ஆண்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் "காதல் தோல்விப் பாடல்கள்" என்ற பெயரில் சோகப் பாடல்களை மட்டுமே பாடி ஒரு புதுமை செய்தார்கள். விஜய், டி.ராஜேந்ந்தர், சிறப்பு விருந்திரனாகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

1996 ஆம் ஆண்டு "லேடீஸ் ஸ்பெஷல்" என்ற பெயரில் ரசிகைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினர். காமராஜர் அரங்கத்தில் நடந்த அந்நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே பாடினர்.

"நட்சத்திர இசை நிகழ்ச்சி" என்ற பெயரில் திரையுலக நட்சத்திரங்களான கார்த்திக், விஜய், ஜெய்சங்கர், வினுசக்ரவர்த்தி, ராதாரவி, லிவிங்ஸ்டன், ராஜீவ், அப்பாஸ், மஞ்சுளாவிஜயகுமார், தியாகு, குமரிமுத்து போன்ற 37 பேர் பாடிய இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டு "சில்ரன் ஸ்பெஷல்" என்ற பெயரில் ஒரு மணி நேரம் குழந்தைகள் மட்டுமே வழங்கிய இசைநிகழ்ச்சியையும் நடத்தினர்.

கூட யாருமே பாடாமல் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மட்டுமே பாடிய ஒரு முழுக்கச்சேரியையும் இவர்கள் நடத்தியதுண்டு.

"Music legends" என்ற பெயரில் பின்னணிப் பாடகர்கள் யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணிம் இருவர் மட்டுமே பாடிய இசைநிகழ்ச்சியை ஃபிரான்ஸ் நாட்டுத் தலைநகரான பாரிஸில் தொடங்கி, உலகின் பல நாடுகளிலும் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய நகரங்களிலும் நடத்தினர்.

கர்நாடக இசை ராகங்களின் அடிப்படையில் அமைந்த திரைப்பாடல்கள் மட்டுமே பாடப்பட்ட ஒரு நிகழ்ச்சியையும் நடத்தினர். அந்த நிகழ்ச்சியில் 25 ராகங்களில் அமைந்த நாற்பது பாடல்களை குன்னக்குடி வைத்யநாதன். கத்ரி கோபால்நாத், ஜி.எஸ். மணி, நித்யஸ்ரீ மகாதேவன், செளம்யா, ஸ்ரீராம் பார்த்தசாரதி, ரேவதி-கிருஷ்ணா ஆகியோர் இசைத்தும் பாடியும் ரசிகர்களை மகிழ்வித்தனர்.

மேலம், "லைட்டிங் ஸ்பெஷல்", "பட்டிக்காடா பட்டணமா", "கவியரசு கண்ணதாசன்" இயற்றிய பாடல்கள் மட்டும் "வைரமுத்து" பாடல்கள் மட்டும்". "எம்.ஜி.ஆர். படப்பாடல்கள்", "சிவாஜி படப்பாடல்கள்", "கே. பாலசந்தர் படப்பாடல்கள்", "மணிரத்னம் படப்பாடல்கள்" ஆகிய தலைப்புகளிலும் தனித்தன்மை வாய்ந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். எலக்ட்ரானிக் இசைக் கருவிகளைப் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க வாத்யக் கலைஞர்களே இசைக்கருவிகளை இசைக்கும் குழு இந்த 'லஷ்மன்-ஸ்ருதி' என்பது குறிப்பிடத்தக்கது.

"லஷ்மன்-ஸ்ருதி' இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகியான மாலதி லஷ்மன், தற்சமயம் ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பின்னணிப் பாடல்களைப் பாடிவருகிறார். மற்றொரு பிரபல பின்னணிப் பாடகரான மாணிக்க விநாயகம், மாலதிக்காக இசையமைப்பாளர்களிடம் பரிந்துரை செய்ததன் காரணமாக தேவா இசையமைப்பில் "சாதிசனம்" என்ற படத்தில் இடம்பெற்ற "மச்சானே மச்சானே......" என்ற பாடலை முதன் முதலில் பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து "கார்மேகம்" என்ற படத்தில் ஒரு தமிப்பாடலையும் "அன்பே சிவம்" என்ற படத்தில் கமல்ஹாசனுடன் ஒரு டூயட் பாடலையும் பாடினார் என்றாலும் அவரை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய பாடலென்றால் அது "மன்மத ராசா.. மன்மத ராசா..." என்ற பாடல்தான். "திருடா திருடி" என்ற படத்தில் இடம் பெற்ற அப்பாடலின் பிரபலத்தால் "திருப்பாச்சி" என்ற படத்தில் "கும்பிடப்போன தெய்வம்" என்ற பாடலை தினாவின் இசையமைப்பில் பாடினார். "பரமசிவம்" என்ற படத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் "உண்டிவில்லை" என்ற பாடலையும் மாலதி பாடினார். இரண்டு பாடல்களுமே சங்கர்மகாதேவனுடனான டூயட்கள்! "சச்சின்" என்ற படத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் மாலதி பாடிய "குண்டு மாங்கா" என்ற பாடலும் பிரபலமானது. இதுவரை இளையராஜா இசையில் ஐந்து பாடல்களைப் பாடியுள்ள மாலதி 10 தெலுங்குப் படங்களில் பாடிய அத்தனை பாடல்களும் 'ஹிட்' ஆனதால் இவர் அங்கும் 'பிசி' ஆகிவிட்டார்.

மேடையில் நாற்பது வேறு வேறு பெண்குரல்களில் பாடும் திறமை கொண்ட மாலதி, "பார்த்திபன் கனவு" பட்த்தில் பாடிய "வாடி மச்சினியே" என்ற பாடல் வெளிநாட்டுத் தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாகும். இந்த ஒரு பாடல் காரணமாகவே சிங்கப்பூருக்கு மூன்று தடவை சென்று பாடும் வாய்ப்புப் பெற்றாராம்.

இலங்கைத் தமிழ் ரசிகர்கள் எல்லாவித்திலும் உயர்ந்த ரசனை உடையவர்கள் என்றும், இசையின் சிறப்பம்சங்களையும், நுணுக்கங்களையும் அவர்கள் தவறவிடுவதில்லை என்றும் கருத்துத் தெரிவித்தார் லஷ்மன்.

எப்படியும் ஒரு நாள் இந்த மெல்லிசை மேடைகளிலிருந்து ஓய்வு பெற்றுத்தான் தீரவேண்டும் என்பதால் நன்கு திட்டமிட்டு ஓர் அருமையான முதலீட்டைச் செய்திருக்கிறார் லஷ்மன். சென்னை அசோக்நகர் பகுதியில் பரபரப்பான நூறடி சாலையில் நான்கு வழி சந்திப்பில் "லஷ்மன் ஸ்ருதி மியூசிக்கல்ஸ்" என்ற பெயரில் பிரம்மாண்டமான வர்த்தக நிறுவனத்தை 2003 ஆம் ஆண்டில் தொடங்கினார். அங்கு எல்லாவிதமான, பாரம்பரிய மற்றும் நவீன இநச்கருவிகள் உலகத்தரத்துடன் விற்பனை செய்யப்படுகின்றன. கூடவே இசை குறித்த பலமொழி நூல்கள், இசை இலக்கண நூல்கள், ஒலிநாடக்கள், குறுந்தகடுகள் போன்றவையும் விற்கப்படுகின்றன. மூவாயிரம் சதுர அடிப் பரப்பளவு கொண்ட அந்த இசை 'ஷோரூம்' குளிர்சாதன வசதி கொண்டது. கமல்ஹாசன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அந்த வளாகத்தில் இசைப் பதிவுக்கான ஸ்டுடியோவும், ஒத்திகை பார்க்க வசதியாக 'சவுண்ட் ப்ரூப்' (Sound-Proof) செய்யப்பட்ட அரங்கமும் வாடகைக்கு விடப்படுகின்றன.

அந்த வளாகத்தின் முழுப் பொறுப்பையும் லஷ்மனின் சகோதரரான ராமன் கவனித்துக் கொள்ளுகிறார். இருவரும் இரட்டைப் பிறவிகள் என்பதும், ராமன், விலங்கியலில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமது குழுவின் அத்தனை தகவல்கள் மட்டுமல்லாது இசையுலகைக் குறித்த எல்லாவிதமான செய்திகளுக்காகவும் www.lakshmansruthi.com என்ற பெயரில் ஒரு இணையதளத்தையும் உருவாக்கியுள்ள லஷ்மன் விரைவில் உலகத்தரம் வாய்ந்த இசைக்கருவிகளைச் சென்னையிலேயே தயாரித்து பிறநாடுகளுக்கு விற்பனை செய்ய வேண்டுமென்பதையே தமது குறிக்கோளாகக் கொண்டுள்ளார். நிச்சயம் சாதிக்கக் கூடியவர்தான் அவர்!

நன்றி: கலைமகள்

Back To Index