HOME LAKSHMAN SRUTHI ORCHESTRA MUSIC SHOP MUSIC SCHOOL REHEARSAL HALL SERVICES RENTALS EVENT MANAGEMENT CHENNAIYIL THIRUVAIYARU
QUICK LINKS   News & Events   |    Music Review  |      Photo gallery      |    Videos    |      Audios      |      Top 10 Songs      |    New Releases    |    Tamil Books   
   Fun in Music     |       Lyrics       |   Upcoming Events      |   Specials   |    Partners     |    CT - Food Festival    |         Contact us
PROFILES     Music      |     Cinema      |     Dance      |     Drama      |     Television      |     Radio      |     Variety      |     Mimicrys      |     Kavidhai        
சுனாமி நிவாரணம்: 14 மணி நேர 'மாரத்தான்' இசை நிகழ்ச்சி!
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக லஷ்மன் ஸ்ருதி, லயன்ஸ் கிளப் இண்டர்நேஷனல் மற்றும் கர்னாட்டிகா.நெட் இணைந்து நடத்திய மாபெரும் 'மாரத்தான்' தொடர் இசை நிகழ்ச்சி, 21.01.2005 வெள்ளியன்று ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபா அரங்கில் காலை 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 14 மணி நேரத்திற்கு நடைபெற்றது.

இந்த தொடர் இசை நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக 100க்கும் மேற்பட்ட பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கர்னாடக இசைக் கலைஞர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் பங்கேற்று இடைவிடாது நாள் முழுவதும் இசை மழை பொழிந்தனர். நிகழ்ச்சியை வயலின் மாமேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நீதியரசர் கிருஷ்ணன் (சென்னை உயர்நீதிமன்றம்) அவர்கள் தலைமை வகித்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிய பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும் போது, இயற்கையை வணங்கிப் போற்றுவதோடு அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மிகவும் வலியுறுத்தினார். அவரது உரையிலிருந்து..." இந்தப் புனிதமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுனாமி ஏன் ஏற்பட்டது? இதற்குக் காரணம் யார்? என்றால்...மனிதர்களாகிய நாம்தான் காரணம்.

நாம் இயற்கையை, பஞ்ச பூதங்களை சற்றும் மதிக்காமல் சிறிதளவு கூட அக்கறையில்லாமல் மாசுபடுத்தி வருகிறோம். வாகனப் புகையால் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. சாலையில் எச்சில் துப்புவது, கண்ட இடத்திலும் குப்பைக் கூளங்களை வீசுவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்று பொறுப்பின்றி செயல்படுகிறோம். பேருந்து நிலையங்களில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கோப்பைகள், பேப்பர்கள்...குப்பைத் தொட்டியில் குப்பையை போடுவதற்குக் கூட பொறுமையில்லாமல் பொறுப்பின்றி நடந்து கொள்கிறோம். அதே நேரம் இங்கிருந்து வெளிநாடு செல்பவர்கள், அங்கு விதிக்கப்படும் தண்டனைக்குப் பயந்து ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள்.

நாம் ஒருவர் குப்பை போடுவதால் இயற்கையே அழிந்துவிடுமா? என்று ஒவ்வொருவரும் நினைப்பதால்தான் இந்த நிலைமை. இப்படியே பலகோடி பேர் நினைக்கும் போது இயற்கைச் சூழ்நிலை பாதிக்கப்பட்டு சீற்றமாக மாறுகிறது. எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு ஒரு பாதுகாப்பான சுகாதாரமான உலகை நாம் விட்டுச் செல்ல வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். மேடையில் ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பி அவர்களிடம் சுனாமி நிவாரண நிதி வழங்கினர்.

100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்கும் முன்னதாகவே வந்திருந்து பொறுமையுடன் காத்திருந்து மிகுந்த ஆர்வத்துடன் பாடியது, நிகழ்ச்சியின் உன்னதமான நோக்கத்திற்கு உறுதுணையாக அமைந்தது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்ற போதிலும், இந்த நல்ல நோக்கத்திற்காக பாடகர்களும் இசைக் கலைஞர்களும் மிகப் பெருமளவில் ஒன்று திரண்டது அவர்களின் மனித நேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு பிரபல கலைஞர் மேடையில் தோன்றி சிறப்பான இசை விருந்தளித்த விதம் ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது என்றால் அது மிகையல்ல.

நிகழ்ச்சியில் மூத்த கலைஞர்கள் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், சங்கர் கணேஷ், இசை அமைப்பாளர்கள் தேவா, பரத்வாஜ், தேவிஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, மாணிக்க விநாயகம், ஏ.வி.ரமணன், அபஸ்வரம் ராம்ஜி, ரமேஷ் விநாயகம், சபேஷ், பின்னணிப் பாடகர்கள் எஸ்.என்.சுரேந்தர், டி.எல்.மகராஜன், தீபன் சக்கரவர்த்தி, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், கார்த்திக், திப்பு, எஸ்.பி.சைலஜா, சசிரேகா, எம்.எஸ்.ராஜேஸ்வரி, பவதாரிணி இளையராஜா, ஏ.ஆர்.ரெஹானா, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சௌம்யா, ஹரிணி, மதுமிதா, மாலதி லஷ்மன், கிரேஸ் கருணாஸ், மஹதி, மகாநதி ஷோபனா, ரேவதி கிருஷ்ணா, பாப் ஷாலினி, கல்பனா ராகவேந்தர், சிலோன் மனோகர், வீரமணி ராஜு, விஜய் யேசுதாஸ், படையப்பா ஸ்ரீராம், சத்யன், பிரசன்னா ராவ்... உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புஷ்பவனம் குப்புசாமி, தேனி குஞ்சரம்மா இருவரும் நாட்டுப்புற பாடல்களை வழங்கினர். நடிகர்கள் பாண்டியராஜன், ஸ்ரீகாந்த் (ரோஜாக் கூட்டம்), தாமு, பாபு கணேஷ், குண்டு கல்யாணம் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

கர்னாடக இசை மேதைகள் டி.வி.கோபால கிருஷ்ணன், என்.ரமணி, மகாராஜபுரம் ஸ்ரீநிவாசன், பாம்பே சிஸ்டர்ஸ், மாம்பலம் சிஸ்டர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், ஜனார்தன், ராஜேஷ் வைத்யா, ரேவதி கிருஷ்ணா, நிஷா ராஜகோபால், எல்.ஆதிரா, சிக்கில் குருசரண்....உள்பட பலரும் பங்கேற்று தங்கள் தேனினும் இசையால் ரசிகர்களை மகிழ்வித்தனர். செல்வி உபாசனா தலையிலும் கைகளிலும் மெழுகுவர்த்திகள் எரிய, பானை மீதேறி ஆடிய அற்புதமான நாட்டியம், சாய் சந்தானம் இணையின் பலகுரல் நிகழ்ச்சி ...என்று இந்த பிரம்மாண்டமான 'தொடர் இசை நிகழ்ச்சி' ரசிகர்களுக்கு மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் நெகிழ்ச்சி மிக்கதாகவும் அமைந்தது.

தொடர்ச்சியாக 14 மணிநேரம் சிறிதளவு கூட சோர்வடையாமல் உற்சாகத்துடன் பின்னணி இசை வழங்கிய லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினரை கலைஞர்கள் அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சி முழுவதும் விண் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

   Tsunami's fury on Marina, Chennai - Photo Gallery                                       Tsunami Relief Fund Photo Gallery

In Print Media                                                                                                                                                 Back To Index