லஷ்ம்ன் ஸ்ருதியின் ஜாம்பியா இசைப் பயணம்

 15-11-2009 - நான்காம் நாள் - விக்டோரியா நீர் வீழ்ச்சி சுற்றுலா

மனதைக் கவர்ந்த விக்டோரியா அருவி

நிகழ்ச்சிக்கு மறுநாள் காலையில் விக்டோரியா அருவியை பார்க்க ஏற்பாடு செய்திருந்தார் கார்த்திக். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியவில்லை. சேகர் என்பவர்

உலக அதிசயமான விக்டோரி அருவியில் லஷ்மன்
இந்த பயணத்துக்கான ஏற்பாடுகளை கூடவே வந்து அருமையாக கவனித்துக் கொண்டார். சுந்தரராஜன்;  அவரது துணைவியார் கல்பன  மகள் பிரியா மற்றும் மகேஷ் ஆகியோரும் உடன் வந்தனர். போட்ஸ்வானா மணிமாறனும் தனது காரில் வந்தா. மூன்று மணி நேரம் அவரது காரை நான் ஓட்டினேன். ஜாம்பியா நான்கு பக்கமும் வெவ்வேறு நாடுகளால் சூழப்பட்ட நாடு என்பதை அறிந்திருப்பீர்கள். நயாகரா போல (கனடா மற்றும் அமெரிக்கா) விக்டோரியா அருவியும் ஜாம்பியா  ஜிம்பாப்வே நாடுகளுக்கு சொந்தமாக இருக்கிறது.

அருவியை நெருங்கும் சமயத்தில் அடைமழை கொட்டத் தொடங்கியது. காத்திருக்கும் நேரத்தில் ‘லஞ்ச்’ முடித்துவிடலாம் என்று அழைத்தார்கள். கார்த்திக் பணி புரியும் நிறுவனத்துக்கு சொந்தமான ‘பால்ஸ் வே’ ஓட்டலுக்கு அழைத்துச் சென்றனர். இங்கு ஆர்டர் எடுப்பது  சமைப்பது  பரிமாறுவது என எல்லாமே ஆப்ரிக்க ஊழியர்கள்தான். எங்களை அன்புடன் உபசரித்தார்கள். சாப்பிட்டு முடிப்பதற்கும் மழை நிற்பதற்கும் சரியாக இருந்தது. நேரத்தை வீணாக்காமல் உடனடியாக அருவிக்கு புறப்பட்டோம்.

நாங்கள் சென்றிருந்தபோது ஜாம்பெஸி ஆற்றில் தண்ணீர் குறைவாகவே வந்து கொண்டிருந்தது. எனினும் ஜிம்பாப்வே எல்லையில் இருந்த அருவியில் ஓரளவு அதிகமாகவே தண்ணீர் விழுந்து கொண்டிருந்ததால், இங்கிருந்து பார்க்கும்போது புகைமூட்டமாகத் தெரிந்தது.

அருவியின் உயரம், அகலம் உலகிலேயே அதிகம் இல்லை என்றாலும் தண்னீர் விழும் பரப்பின் அளவை வைத்து (அகலம் 5,600 அடி மற்றும் உயரம் 360 அடி) உலகின் மிகப் பெரிய அருவியாக இதை குறிப்பிடுகிறார்கள். அருவியின் இயற்கை அழகை நாங்கள் எல்லோரும் வெகுவாக ரசித்தோம். விக்டோரியா அருவியை கண்டுபிடித்து உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்ற டேவிட் லிவிங்ஸ்டோன் (ஸ்காட்லாந்தில் பிறந்தவர்)

விக்டோரியா அருவியை கண்டுபிடித்த டேவிட் லிவிங்ஸ்டோன் சிலை முன்பு இசைக் குழுவினர்
என்பவரின் சிலையை அருவியின் ஜாம்பியா பக்க எல்லையில் நிறுவியிருக்கிறார்கள். அவருக்கு நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது. அருவியை பார்க்க வந்திருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களுடன் எங்கள் இசைக் குழுவை சேர்ந்தவர்கள் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டனர். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் சந்தோஷமாக ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இடையிடையே... கார்த்திக் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை போன் செய்து எங்கிருக்கிறோம்? பிரச்னை ஏதும் இல்லையே? எல்லோரும் சாப்பிட்டார்களா? பத்திரமாக இருக்கிறார்களா? என்று அக்கறையுடன் விசாரித்தார்.

அருவியை பார்த்து ரசித்ததும், அங்கிருந்து மணிமாறன் போட்ஸ்வானா கிளம்பினார். மூன்று நாட்கள் எங்களுடன் தங்கிப் பழகிய அவர் எங்களைப் பிரிந்தபோது வருத்தமாக இருந்தது.
ஜாம்பியா நிகழ்ச்சிக்கு முன்பாகவே, போட்ஸ்வானாவில் எங்கள் இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று மணிமாறன் மிகுந்த முயற்சி செய்தார். பல்வேறு காரணங்களால் அது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. நாங்கள் ஜாம்பியா வருவதை அறிந்ததும், நேரில் சந்திக்க வேண்டும் என்று நண்பர்களுடன் சேர்ந்து லுஸாகா வர திட்டமிட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவரது நண்பர்களின் விசா நடைமுறைகள் தாமதமாகி, அவர்களால் ஜாம்பியா வர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடைசி நேரத்தில் விமான டிக்கெட் கிடைக்காததால், காரிலேயே 1600 கி.மீ. பயணம் செய்து எங்களை சந்தித்ததுடன், நிகழ்ச்சி முடியும் வரை கூடவே இருந்து பல வகையில் உதவினார். மறுநாள் விக்டோரியா அருவி சுற்றுப்பயணத்திலும் கலந்து கொண்டார். போட்ஸ்வானா தமிழ் சங்கம் சார்பில் 2010 ஏப்ரலில் எங்களின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அவருக்கு, மற்ற ஆப்ரிக்க தமிழ் சங்கங்கள் எல்லா வகையிலும் உதவ வேண்டும் என்று லஷ்மண் ஸ்ருதி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

75 வயதைத் தாண்டிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் சகுந்தலா கிருஷ்ணமூர்த்தி (டெல்லி மாமி) தம்பதியினர் எங்களுக்காக இரவு 9 மணிக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தார்கள். விக்டோரியா அருவிப் பயணம் தாமதமானதால்... நள்ளிரவு 2 மணிக்குதான் அவர்கள் வீட்டுக்கு வர முடிந்தது. அந்த வேளையிலும் எங்களுக்காக காத்திருந்து உணவு பரிமாறிய அந்த முதிய தம்பதிகளை எங்களால் என்றும் மறக்க முடியாது. இந்த விருந்தில் கலந்து கொள்ள பல்வேறு நண்பர்கள் எங்களுக்காக 9 மணியில் இருந்து காத்திருந்து கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல் கிடைத்தது. அதற்காக மிகவும் வருந்தினோம். விக்டோரியா அருவிக்கு சென்றதாலும்...போதிய நேரம் இல்லாததாலும் ஐயப்பன் பூஜை நிகழ்ச்சி, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது, ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சி ஆகியவற்றில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. அந்த நண்பர்களுக்கும் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.


விக்டோரியா அருவி இருக்கும் லிவிங்ஸ்டன் நகரில் மதிய உணவு

        விக்டோரியா அருவியில் இசைக் குழுவினர்

12, 13, 14, 15, 16-11-09           Back to Index