Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
சினிமாவில் ஆர்வம் இருந்ததால் அந்தத் துறையில் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்றுதான், தூயவன் சார் காப்பி ரைட்டர் வேலை என்று சொல்லி விட்டுக் காபி வாங்க அனுப்பும்போது, இதையெல்லாம் வாங்கிக் கொடுக்கற வேலை பார்த்தா காபி ரைட்டர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும், சந்தோஷத்திலும் அந்த வேலையை விழுந்து விழுந்து செய்தேன்.

நான் நினைச்ச மாதிரியே ஆபீஸ் பையனா வேலை பார்த்த நேரம் போக அப்பப்ப காபி ரைட் செய்யும் வேலையும் செய்ய ஆரம்பிச்சேன்.

தூயவன் சார் எழுத்து அந்தக் காலத்துக் கணக்குப் பிள்ளை எழுத்து மாதிரி கிறுக்கலா இருக்கும். ஆனா அதை நான் சுலபமா புரிஞ்சிக்குவேன். சில வார்த்தை புரியலைன்னா, அதுக்கு நானே சொந்தமா வார்த்தையைப் போட்டு எழுதிடுவேன். ஆனா, அதை அவர் கண்டுபிடிச்சு ஏண்டா நான் டயலாக் ரைட்டரா© இல்லை நீ டயலாக் ரைட்டரான்னு செல்லமா கண்டிப்பாரு.

அதே மாதிரி சில எழுத்து, படம் வரைஞ்ச மாதிரி இருக்கும். அதை என்ன எழுத்துன்னு கண்டுபிடிக்க முடியலைன்னு நானும் அப்படியே படம் வரைஞ்சு வச்சுடுவேன்.

அதைப் பார்த்துட்டு, ''ஏண்டா என் எழுத்து புரியலைன்னுதானே உன்னைக் காபி எடுக்கச் சொல்றேன். நீயே இப்படி படம் வரைஞ்சு வச்சா என்னடான்னு'' சிரிச்சுக்கிட்டே என்னுடைய குறைகளைத் திருத்துவார்.

ஒரு நாள் தூயவன் சார் என்னைக் கூப்பிட்டு, ''பாண்டியா நாளைக்கு ஆபீஸுக்கு, நாம தயாரிக்கப் போற 'விடியும் வரை காத்திரு' படத்துக்காக டிஸ்கஷன் செய்ய பாக்யராஜ் வர்றாரு. அவரை நல்லா கவனிச்சுக்கணும். அவரு எது கேட்டாலும் வாங்கிக் கொடு'' என்று அவர் சொன்ன அந்த நிமிடத்தில் இருந்தே கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டேன்.

'சுவர் இல்லாத சித்திரங்கள்' படத்தை இயக்கிய அந்தப் பிரம்மா இந்த ஆபீசுக்கு வரப்போகிறாரா© எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நேரில் எப்படி இருப்பார்© எப்படி நம்மிடம் பேசுவார். நாம் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், என்னென்ன அயிட்டம் கேட்பார். சிக்கன் சிக்ஸ்டி ஃபைவா, தந்தூரி சிக்கனா, எந்த ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல வாங்கிட்டு வரச் சொல்லுவார், என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தேன்.

ஆனால், மறுநாள் அவரை நேரில் பார்த்தபோது என்னுடைய கற்பனையில் இருந்த எந்த பிரம்மாண்டமும் அவரிடம் இல்லை. எல்லாமே நான் நினைத்ததற்கு நேர் மாறாக இருந்தது. படத்துல பார்க்கும்போது ரொம்ப யதார்த்தமான முகம். நேர்ல அதைவிட யதார்த்தம்.

அன்னிக்கு முழுக்க, என்னை வாங்க போங்கன்னு ரெஸ்பெக்ட் பண்ணிக் கூப்பிட்டதே எனக்கு ரொம்ப சங்கோஜமா இருந்துச்சு.

சாயங்காலம் டிஸ்கஷன் ரூமூக்குள்ள போய் டிபன் என்ன வேணும்னு கேட்டேன். எது கேட்டாலும், எவ்வளவு தூரமாக இருந்தாலும் வாங்கிட்டு வந்து அசத்திடலாம்னு நின்னுக்கிட்டு இருந்தேன். ஆனா அவரு,

''வாணிமகால் பக்கத்துல வண்டிக்கடைகள் இருக்கும். அதுல சூடா கண்டலும், மிளகாய் பஜ்ஜியும் வாங்கிட்டு வாங்க'' என்றார்.

என்னது, தோற்றத்துல, பழகறதுலதான் எதார்த்தமா எளிமையா இருக்கார்னு பார்த்தா சாப்பிடுகிற அயிட்டத்திலுங் கூட, தன்னை ஒரு வி.ஐ.பி.ங்கறத மறந்து இப்படி சிம்பிளா கேக்குறார்னு யோசிச்சுக்கிட்டே அவர் கேட்ட அயிட்டங்களை வாங்கிட்டு வந்து கொடுத்தேன்.

பொதுவா நான் நிறைய வி.ஐ.பி.க்களை சந்திச்சு இருக்கேன். அவங்க எல்லாரும் தன்னுடைய இயல்பான வாழ்க்கையில் மனைவி, மக்கள், நண்பர்கள் கிட்ட நடந்துக்கறதுக்கும், தன்னுடைய தொழில் சார்ந்த, துறை சம்பந்தப்பட்டவர்களிடமும் மற்றவர்களிடமும் பழகும், பேசும் முறை எல்லாவற்றிலும் வித்தியாசம் இருக்கும். ஆனால், என்னுடைய குருநாதரிடம் எந்தவித வித்தியாசமும் இருக்காது.

இப்படித் தினமும், சுணடலும் பஜ்ஜியும் வாங்கிக் கொடுத்துட்டு இருந்தேன். அவரை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு திங்க் பண்ணிக்கிட்டேயிருப்பேன். திடீர்னு அவர் டேஸ்டுக்கு தகுந்த மாதிரி மிளகாய் பஜ்ஜிக்குப் பதிலாக அவர் விரும்பும் ரேஞ்சிலேயே, முட்டை பஜ்ஜி, முட்டை போண்டான்னு அப்பப்ப அயிட்டங்களை மாத்தி வாங்கிக் கொடுத்து அசத்துவேன். தினம் டிபன் வாங்கிக் கொடுக்கறதுதான் என் வேலை. டிபன் கொடுத்து முடிச்சவுடனே கதவை சாத்திக்குவாங்க.

அதுக்கப்புறம் கதை டிஸ்கஷன் பண்ணுவாங்க. டிஸ்கஷன்ல கதை எப்படிப் பேசறாங்க© என்ன பண்றாங்க© அப்டீங்கறதை எப்படி யாவது பார்த்துடணும்னு ஆசைப்பட்டேன். அதுக்கொரு ஐடியா பண்ணினேன். டிபன் எல்லாம் கொடுத்து முடிச்சுட்டு, கதவை சாத்திட்டு வரும்போது சரியா சாத்தாம, லைட்டா சின்ன கேப் இருக்கற மாதிரி சாத்திட்டு வந்துடுவேன். அதுக்கப்புறம் அந்தக் கதவு இடுக்கில, ஒட்டுக்கேக்குற மாதிரி பாத்துட்டு இருப்பேன். இப்படியே கிட்டத்தட்ட கதவு இடுக்கிலேயே, 'விடியும் வரை காத்திரு' படத்தின் மொத்தக் கதையையும் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்படிக் கதவு இடுக்குலேயே பார்த்துப் பார்த்து, எப்படியாவது அதே டிஸ்கஷன் ரூம்ல நாமளும் உட்காரணும்கற வைராக்கியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே இருந்தது.

அதே தூயவன் சார் ஆபிஸ்ல இசைஞானி இளைய ராஜாகிட்டே இருந்தது இன்னொரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன்.

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home