Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
ராஜா சாரிடம் நான் கற்ற முதல் விஷயம்... சினிமாத் துறை என்பது ஏதோ ஆபீசுக்கு வர்ற மாதிரி எட்டு மணி நேர வேலையல்ல.

இது இருபத்து நாலு மணி நேர வேலை என்று.

ஒரு நாள் இசைஞானி பாடல் கம்போசிங்குக்காக வந்தார். அப்ப டைரக்டர் அங்கே இல்லை.

எங்கேய்யா டைரக்டர்© என்று என்னிடம் கேட்டார்.

''எங்கேயாவது டிராபிக்ல் மாட்டியிருப்பாரு. இதோ இப்ப வந்திடுவார்''ன்னு சொல்லி, காபி டீயெல்லாம் கொடுத்து உட்கார வச்சேன். ஆனா டைரக்டர் ரொம்ப நேரம் ஆகியும் வரலை. வேற ஏதோ ஒரு வேலையில் மாட்டிக்கிட்டாரு.

கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த்த இசை ஞானி, ஆர்மோனியப் பெட்டியைத் திறந்து வச்சுக்கிட்டு அவர் பாட்டுக்கு ட்யூன் போட ஆரம்பிச்சுட்டாரு.

மத்த துறையிலன்னா, அவர் இல்லையா© சரி நான் வந்தேன்னு சொல்லுன்னுட்டு, 'அப்பாடா இன்னிக்கு ஃப்ரீ' என்று ஜாலியா வெளியில கிளம்பிடுவாங்க. ஆனா, இந்தத் தொழில் அப்படியில்லை. ஏற்கனவே எரிஞ்சுக்கிட்டு இருக்கற விளக்குக்குல எண்ணைய ஊத்துற மாதிரி இசை ஞானி எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்தாரு.

எந்தக் கதவு இடுக்குல டிஸ்கஷன் ரூமைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டேனோ, அதே டிஸ்கஷன் ரூமுக்குள்ளேயே எனக்கும் ஓர் இடம் கிடைத்தது. எப்படிக் கிடைத்தது©

'விடியும் வரை காத்திரு' பட டிஸ்கஷனெல்லாம் முடிஞ்சு படப்பிடிப்பு ஆரம்பமாயிடுச்சு. நான் தூயவன் சார்கிட்ட வேலை பார்த்ததினால கம்பெனி அசிஸ்டெண்டா படப்பிடிப்பு நடக்கற லொக்கேஷனுக்குப் போவேன். டைரக்டர் என்னைப் பார்க்கும் போது கம்பெனி வேலை செய்யற மாதிரி நடிச்சுக்குவேன். இப்படித் திருட்டுத்தனமா வேலையைக் கத்துக்கிறது நல்லா இல்லேன்னு என் மனசுக்குத் தோணிச்சு. ஒருநாள் அவர் ஷூட்டிங் முடிஞ்சு மதியம் சாப்பிட்டதுக்கப்புறம் ரெஸ்ட்ல இருந்தாரு. நான் நேரா அவர்கிட்டபோய், ''சார், என்னை உங்ககிட்டே வேலைக்கு வச்சுக்குங்க சார்'' என்று கேட்டேன். அதற்கு டைரக்டர்,

''என்கிட்ட நிறைய பேர் வேலைக்கு இருக்காங்க. அவுங்களுக்கே வேலை கொடுக்க முடியலை. டிஸ்கஷன் நேரத்துல கூட எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேலையைப் பிரிச்சுக் கொடுத்துட்டு இருக்கேன். அதனாலஇ இப்ப உன்னைச் சேர்த்துக்க முடியாது'' ன்னு சொல்லிட்டார்.

இப்படிச் சொன்னவுடனே, 'ஏண்டா கேட்டோம்'னு ஆயிடுச்சு. பேசாம கம்பெனி அசிஸ்டெண்ட்டுங்கற பேர்ல நிம்மதியா வேலை பார்த்திருக்கலாமே என்று ரொம்ப ஃபீலீங் ஆயிடுச்சு. இதோட நம்ம வாழ்க்கை முடிஞ்சு போச்சா© என்று மனம் உடைந்துவிட்டேன்.

அதுக்கப்புறம் டைரக்டர், டிஸ்கஷனுக்காக தூயவன் சார் ஆபிசுக்கு வந்து போய்க்கிட்டு இருந்தார். ஒருநாள் அசிஸ்டெண்டுகள் யாரும் வரலை. ஆனா டைரக்டர் மட்டும் வந்துவிட்டார். வந்த உடனே என்னைக் கூப்பிட்டு ''டயலாக் எழுதி இருக்கேன். அதைக் காப்பி எடுக்கத் தெரியுமா©'' என்று கேட்டார். நான் தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே அசோஸியேட் டைரக்டர் சுப்ரமணியன் வந்தாரு. டைரக்டரிடம், ''இந்தப் பையன்கிட்ட கொடுங்க சார் நல்லா எழுதுவான்'' என்று சர்டிபிகேட் செய்தார்.

உடனே டைரக்டர் எழுதிய வசன பேப்பரை என்னிடம் கொடுத்தார். வாங்கி நான் கடகடவென உடனே எழுதிக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்து விட்டுப் பக்கத்திலிருந்த அசோஸியேட் சுப்ரமணி,

''இவன் ரொம்ப நல்ல பையன் சார்.. உங்ககிட்டே வேலை செய்யணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கான்...'' என்று வசன காப்பி எழுத சிபாரிசு செய்ததோடு, இப்பொழுது வேலைக்கும் சிபாரிசு செய்தார். ஆனால்,

''ஏங்க சுப்ரமணி, நம்மகிட்டதான் நிறைய பேர் இருக்காங்களே, அப்புறம் எப்படி©'' என்றார். இரண்டாவது முறையாகவும் என் தலை மீது இடி விழுந்ததாக நொறுங்கிப் போனேன்.

அன்னிக்கு இருந்த சூழ்நிலையில் தூயவன் சார்கிட்டச் சொன்னா என்னை எந்த டைரக்டர்கிட்ட வேணும்னாலும் சேர்த்து விட்டிருப்பார். ஆனால், சேர்ந்தால் இவரிடம் தான் சேர வேண்டும் என்கிற வைராக்கியம் மனதிலே ஊறிப்போனதால் வேறு யாரிடமும் சேர வேண்டும் என்று தோன்றவில்லை.

ஒரு மனிதன் ஒன்றில் உறுதியாக, உண்மையாக இருந்தால் கண்டிப்பாக அது நிறைவேறும் என்பது என் வாழ்நாளில் அறிந்த உண்மை.

கதவு இடுக்கிலேயே டிஸ்கஷன் ரூமைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருந்த எனக்கு உள்ளே போய் உட்கார வழிவிட்டவர் இன்றைய டைரக்டர் அன்றைய அசோஸியேட் டைரக்டர் கோகுல கிருஷ்ணா சார் அவர்கள்தான். அவர் பிரமோஷனாகி டைரக்டராக வெளியில் சென்றார்.

எனவே, மத்த டைரக்டர்களுக்கும் பிரமோஷன் கிடைத்து விட்டது. இப்பொழுது கிளாப் அடிக்க ஓர் ஆள் தேவைப்பட்டது. இந்தக் காலி இடத்தில் என்னை அமர்த்த, மற்ற அனைத்து அசிஸ்டெண்டுகளும், எனக்கு அமோக ஆதரவளித்தார்கள். இதற்குக் காரணம் நான் டைரக்டரை இம்ப்ரஸ் செய்ய என்னவெல்லாம் செய்தேனோ அதே மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்களுக்கும் கொஞ்சம் கூட கூச்சப்படாமல், கௌரவம் பார்க்காமல் டீ, காபி, பீடி, சிகரெட் என்று அலுக்காமல் அவர்களுக்கு வேண்டியதைச் செய்வேன். அதனால், அவர்களுக்கும் என்னை ரொம்பப் பிடித்திருந்தது.

'விடியும் வரை காத்திரு' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே 'மௌன கீதங்கள்' படத்தின் படப்பிடிப்பும் துவங்கியது. அடையாறுல ஒரு வீட்ல படப்பிடிப்பு 'நீ அங்கே வந்திடு பார்த்துக்கலாம்' என்று அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் என்னை லொக்கேஷனுக்கு வரச்சொல்லி விட்டார்கள்.

சரிதாவும், டைரக்டரும் சம்பளப் பணத்தை என்னவெல்லாம் பண்ணலாம்னு பேசுற மாதிரி சீன். டைரக்டரின் முதுகுப்புறம்தான் கேமிரா இருந்தது. அண்ணன் கோவிந்தராஜன் அவர்களும், அண்ணன் ஈதோடு முருகேஷ் அவர்களும் கிளாப் பலகையை என் கையில் கொடுத்து, தைரியமாக அடி என்று சொல்லி விட்டார்கள்.

நானும், என்ன ஆனாலும் சரி என்று டைரக்டர் கிளாப் என்று சொன்னவுடன் கேமிரா முன் சென்று டக்கென்று அடித்து விட்டு ஓடி ஒளிந்து கொண்டேன். டைரக்டர் உடனே 'கட்' என்றார். லைட் பிரச்சினையா, இல்லை டயலாக் பிரச்சினையா© எதுக்காக கட் சொன்னார் என்று குழம்பிப் போனேன்.

உடனே டைரக்டர், கோவிந்தராஜ் அண்ணனைக் கூப்பிட்டு ''நீதானப்பா கிளாப் அடிக்கணும். இப்ப கிளாப் அடிச்சுட்டு ஒளிஞ்ச பையன் யார்© அவனைக் கூப்பிடு'' என்றார். ஒளிந்து கொண்டிருந்த நான் ஓடி வந்து அப்படியே சாஷ்டாங்கமாக காலைப் பிடித்துக் கொண்டு ''சார் நான் அப்பா இல்லாத பையன். கத்துக்கொடுங்க. என்னை நம்பி இரண்டு தங்கச்சிங்க. அம்மா இருக்காங்க. எனக்கு சினிமான்னா உயிரு'' என்று அழுதேன். சரிதா உட்பட படப்பிடிப்பு அரங்கில் இருந்த எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

டைரக்டரும் சுற்றி உள்ள சூழ்நிலையையும் என்னையும் பார்த்தார். சரி எழுந்திரு என்று முதுகில் தட்டி ''கண்டினியூ பண்ணு'' என்றார். அன்றைக்கு மட்டும் அந்தக் கை என்னை அரவணைக்கவில்லை என்றால்© எந்தப் பஸ்ஸில் கண்டக்டராக விசில் அடித்துக் கொண்டிருப்பேனோ©

என் குருநாதர்கிட்ட அசிஸ்டெண்டா வேலை செய்யணுங்கற இலட்சியம் ஒரு வழியா நிறைவேறிடுச்சு. ஆனா குடும்பத்துல இருந்த கஷ்டம் தீர்ந்தபாடில்லை.

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home