Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
ஊரெல்லாம் ஒரே மழை வெள்ளமா இருக்கு. குறிப்பா சென்னையிலதான் சின்ன மழை பெய்தாலே ரோடெல்லாம் ஒரே வெள்ளமாயிடுமே. இந்த மழை வெள்ளத்தைப் பார்த்தவுடனே ஒரு கடந்த கால ப்ளாஷ்பேக் நிகழ்ச்சி என் நினைவுக்கு வருது.

மழை பெய்து வெள்ளம் வந்தா ரோட்ல தண்ணி நிக்குமோ இல்லையோ, முதல்ல எங்க வீட்டுக்குள்ள தண்ணி வந்துடும். ஏன்னா, முதல்ல எங்க வீடு உயரமாத்தான் இருந்துச்சு. கவர்ன்மெண்ட் ஒவ்வொரு வருஷமும் ரோட்டை உயர்த்திக்கிட்டே போனதினாலே எங்க வீட்டு தரை தாழ்ந்திடுச்சே ஒழிய, எங்க வீட்டுத் தரையை உயர்த்தணுமேங்கற எண்ணம் இல்லை. எங்க வீட்டுக்குப் போகணும்னா ரோட்லயிருந்து இரண்டு படி இறங்கித்தான் போகணும்.

அதனால வெள்ளம் வந்ததுன்னா முதல்ல எங்க வீட்டுக்குள்ளதான் வரும். அதுக்கப்புறம் எலி பொந்துக்குள்ள இருந்து தண்ணி வரும். முதல்ல எலி வளையைத்தான் அடைப்போம். அதையும் மீறி தண்ணி வந்ததுன்னா ஜன்னல் வழியாத்தான் வரும். வீட்ல இருக்கறது ஒரே கட்டில்தான். அதுல பொட்டி சட்டி எல்லாத்தையும் தூக்கி வச்சுட்டுக் கட்டில்லயே உட்கார்ந்துப்போம். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தா அந்தக் கட்டிலே மூழ்கிற நிலைமை வந்துடும். இதுதான் டேஞ்சர் சிக்னல்.

துறைமுகத்துல சிவப்புக்கொடி ஏத்துன மாதிரி ஒரு தடவை எல்லாரும் கட்டில் மேல் உட்கார்ந்தபடியே தூங்கிட்டோம். அப்ப ரேடியோவில வெள்ள அபாயச் செய்தியைச் சொல்லிக்கிட்டு இருந்தப்ப கட்டிலோரமா ஒரே சவுண்டா இருந்துச்சு. என்னடா இவ்வளவு சவுண்டா இருக்கேன்னு முழிச்சுப் பார்த்தா, எங்க வீட்டு ரேடியோ தண்ணியில மிதந்துகிட்டே வந்து வெள்ள அபாயத்தைப் பத்தி சொல்லிக்கிட்டு இருந்தது. அதுக்கப்புறம்தான் எல்லோரும் தடாபுடான்னு எழுந்திருச்சு மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு, பக்கத்துல இருக்கிற சைதாப்பேட்டை மாவட்ட உயர்நிலைப் பள்ளிக் கூடத்துக்கு ஓடினோம்.

இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் கவியரசு வைரமுத்து, 'இது வரை நான்' என்ற தொடரில் வைகை அணைகட்டும் போது தன்னுடைய கிராமத்துக்குள் வெள்ளம் வர, வைரமுத்து தன் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் வடுகப்பட்டிக்கு நடந்து சென்றதுதான் என் நினைவுக்கு வரும்.

பள்ளிக்கூடத்துல ராத்திரி முழுவதும் தங்கிடுவோம். காலையில எழுந்து கார்ப்பரேஷன் கொடுக்கும் சாப்பாட்டுப் பொட்டலத்துக்காகக் காத்திருப்போம். அதுக்குள்ள சின்ன பசங்களெல்லாம் ஸ்கூலுக்கு வருவாங்க. அப்ப நான்தான் ''பள்ளிக்கூடத்துக்குக் குடித்தனம் வந்துட்டோம். அதனால இன்னிக்கு உங்க எல்லாருக்கும் ஸ்கூல் லீவு'' ன்னு சொல்லி அனுப்பிடுவேன்.

அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கும்போது கூட, ''என்னடா வீடு வாசலை விட்டு, கார்ப்பரேஷன் கொடுக்கிற சாப்பாட்டைச் சாப்பிடுறோமே'' என்ற கஷ்டத்தின் வலி பெரிதாகத் தெரியவில்லை. ஆனா பங்களா மாதிரி வீடுகட்டி, கட்டில் மெத்தையோட வசதி இருந்தும் தூக்கம் வரவில்லை. காரணம் வீட்டின் பேர்ல கடன் இருக்கறதுனால, ஏதோ இன்னொருவர் வீட்டுத் திண்ணையில் ஒண்டியிருப்பதாக ஓர் உணர்வு உறுத்திக் கொண்டே இருக்கிறது.

சில பேரைச் சந்திக்கக் காலை நேரத்துல வீட்டுக்குப் போய் ''சார் இருக்காங்களா''ன்னு கேட்டா,

''இல்லை வாக்கிங் போயிருக்காங்க''ன்னு சொல்வாங்க. நான் கூட ஆச்சரியப்படுவேன். என்னது, ஏதோ ஒரு வேலை செய்யறதுக்கு நேரம் ஒதுக்குகிற மாதிரி 'வாக்கிங்' அதாவது, நடந்து செல்வதற்கு மட்டுமே நேரம் ஒதுக்குகிறார்களே என்று. காரணம் அப்பொழுது வாக்கிங் என்பதே எனக்கு வாழ்க்கையாக இருந்தது.

தூயவன் சார்கிட்ட நான் வேலை செஞ்சுகிட்டு இருந்தப்ப, தினம் பஸ்ஸுக்குக் காசு இருக்குங்கறது உத்திரவாதமில்லை. அதனால சைதாப்பேட்டையில இருந்து தேனாம்பேட்டைக்கு நான் நடந்தே போயிடுவேன். சில நாள் தூயவன் சார் கொடுத்த ஐம்பது நூறுன்னு பாக்கெட்ல இருந்தாக்கூட, அந்த ஞாபகமே இல்லாம அனிச்சைச் செயல் மாதிரி நடந்துதான் போவேன்.

நடிகர் முத்துராமன் சாருடைய சொந்தப்படம் 'வாடகைக்கு வீடு'. இந்தப் படத்துக்குத் தூயவன் சார்தான் கதை வசனம். நான் முதன் முதலா டயலாக் காபி ரைட்டரா வேலை செஞ்ச படமும் இதுதான்.

இப்ப இருக்கற நவரச நாயகன் கார்த்திக்தான், அப்ப முரளிங்கற பேர்ல மேனேஜரா இருந்தார். அவர்கிட்ட 50 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு வவுச்சர்ல கையெழுத்துப் போடுறப்ப இருந்த சந்தோஷமும், நிம்மதியும் இப்ப இலட்சங்களாகச் சம்பளம் வாங்குகிறபோது இல்லை.

அதே மாதிரி ஸ்கூல்ல படிக்கிறப்ப எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற சலூன்ல ஒரு ரூபாய் கொடுத்தா தலைக்கு சுடு தண்ணியெல்லாம் போட்டு முடி வெட்டி விட்டு, தலையில கிளிப் மாட்டி சுருள் முடி ஆக்கி விடுவாங்க. அந்த சுருள் முடி இரண்டு மாசம் வைரைக்கும் அப்படியே இருக்கும். அப்புறம் முடி வளர வளர சுருள் முடி கோரை முடியாகிவிடும். திரும்ப அஞ்சு காசும், பத்து காசுமா சேர்த்து ஒரு ரூபா தேற்றி, திரும்ப முடி வெட்டிச் சுருள் முடி ஆக்கிக் கொள்ளும் போது இருந்த சந்தோஷமும் திருப்தியும், இப்ப சினிமாவுல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விதவிதமான சிகை அலங்காரம் செய்து கொள்ளும் பொழுதோ அல்லது ஸ்டார் அந்தஸ்துள்ள ஏர்கண்டிஷன் அறையில் முடி வெட்டிக் கொள்ளும் பொழுதோ இல்லை.

அதேபோல தீபாவளிக்கு எனது தகப்பனார் பத்து ரூபாய்க்குப் பட்டாசு வாங்கிக் கொடுத்தால் அதுவே அதிகம். இந்தப் பத்து ரூபாய்க்குப் பட்டாசு வாங்கறதுக்கே, உனக்கு என்னென்ன வெடி வேணும்னு கேட்டு எல்லாத்தையும் எழுதிக்குவாரு. அதுல பத்து ரூபாய்க்குள்ள எதெது வாங்க முடியுமோ அதை மட்டும் டிக் பண்ணிட்டு சீட்டைக் கையில எடுத்துட்டுப் போவாரு.

ஆனா நான் நம்ம வீட்லயும் அதிகப் பட்டாசு வாங்கி வெடிச்சோம் அப்படீங்கறதை மத்தவங்களுக்குக் காட்டிக்கிறதுக்காக, தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தெருவுல கிடக்கற வெடிச்ச பட்டாசு வெடிக்காத பட்டாசு எல்லாத்தையும் பொறுக்கி, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வச்சுக்குவேன்.

அதுக்கப்புறம் வெடிக்காம இருக்கிற பட்டாசுகளில் இருந்து மருந்தை எல்லாத்தையும் பிரிச்சு ஒரு பேப்பர்ல கொட்டிக்கிட்டு சொந்தமா ஒரு வெடி தயார் செய்வேன். அப்படி தயார் செஞ்ச பட்டாசு எல்லாத்தையும் எங்க வீட்டு வாசல்ல வச்சு வெடிப்பேன். ஆனா அது எதுவுமே வெடிக்காது. எல்லாமே புஸ்ஸுன்னு போயிடும். ஆனா விடிஞ்சு பார்த்தா எங்க வீட்டு வாசல் முழுக்க நிறைய பட்டாசு வெடிச்சது மாதிரி நிறைஞ்சு கிடக்கும். அதோட எங்க தெருவுல அணுகுண்டோ ராக்கெட் வெடியோ யாராவது வெடிச்சா, ''இதோ பாரு, இந்த மாதிரி வெடியெல்லாம் இங்கே விடாதே'' என்று எச்சரிக்கை பண்ணுவேன். அதுக்கு இரண்டு காரணம். ஒண்ணு, எங்க தெருவுல குடிசைங்க நிறைய இருக்குதுங்கறது. மற்றொரு மிக முக்கிய காரணம், நாம அந்த மாதிரி காஸ்ட்லியான வெடி எல்லாம் வெடிகக முடியலையேங்கற ஃபீலிங்!

ஆனாலும் இன்னிக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெடி வாங்கி என் பசங்களோட வெடிச்சாலும் அன்னைக்கு வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி அதுல தயார் செய்து வெடிக்கும் போது இருந்த சந்தோஷமும், திருப்தியும் இதுல இல்லை. ஆக மனிதனுக்குத் தேடும் போது இருக்கற சுகம், அது கிடைச்ச பிறகு இருப்பதில்லை.

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home