Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
நூறு முறை யோசி. ஆனால், முடிவு ஒருமுறை தான் எடுக்க வேண்டும்' என்று சொல்வார்கள். எனவே முடிவு எடுப்பதென்பது வாழ்க்கையில் முக்கியமான விஷயம். வெற்றி தோல்வி அனைத்துமே, எடுக்கிற முடிவைப் பொறுத்துத்தான் அமையும்.

என்னுடைய குருநாதர்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்ந்து, மூணு மாசம் கழிச்சுத்தான் நான் வேலைக்குச் சேர்ந்ததே எங்க அம்மாவுக்குத் தெரியும். தெரிஞ்சவுடனே லபோதிபோன்னு கத்துனாங்க. ''ஏண்டா கண்டக்டரா போய்க் கவர்ன்மெண்ட் வேலை பார்ப்பேன்னு பார்த்தா, நீ போய் சினிமாவுல சேர்ந்து இருக்கறியே... (எனது குடும்பத்தில் அப்பா, சித்தப்பா, மாமா, மச்சான் இப்படி எல்லோருமே ட்ரான்ஸ்போர்ட்ல வேலை பார்த்து வந்தார்கள்) சினிமாங்கறது நம்மமாதிரி இருக்கிறவங்க, பார்க்கத்தான் நல்லா இருக்கும். அதைப் போய் ஒரு தொழிலா நினைச்சு வேலைக்குச் சேர்ந்து இருக்கியே...'' என்று கத்தினாங்க. இந்த சூழ்நிலையில கோபிச்செட்டிபாளையத்துல 'தூறல் நின்னு போச்சு' படப்பிடிப்பில் அசிஸ்டெண்டா வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்பவே, மெட்ராஸ்ல இருந்து எங்க அம்மா ஒரு தபால் அனுப்பி இருந்தாங்க. பிரிச்சுப் பார்த்தா உள்ளே கண்டக்டர் வேலைக்கான ஆர்டர் லெட்டர் இருந்தது.

ஏற்கனவே, எங்க அப்பா டிரைவர்ங்கறதுனாலே எப்படியும் என்னைக் கண்டக்டரா சேர்த்துடலாங்கற நம்பிக்கையில எனக்குக் கண்டக்டர் லைசென்சு எடுத்துக் கொடுத்திருந்தார். நானும் ஃபர்ஸ்ட் எய்டு வரை படிச்சு வச்சிருந்தேன். உடனே டைரக்டர்கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டரைக் காண்பிச்சேன். பார்த்துட்டு...''நீ என்ன பாண்டியா முடிவு எடுத்து இருக்கிறே©'' என்று கேட்டார். நான் ஒன்றுமே பதில் சொல்லாமல் நின்னுட்டு இருந்தேன். அன்னிக்கு வந்து பாடல் காட்சியோடு படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கு. அதனால என் கழுத்துல விசில் தொங்கிக்கிட்டு இருந்துச்சு. டைரக்டர் என்னையும் விசிலையும் ஒரு முறை பார்த்துட்டு 'பாண்டியா இங்கேயும் விசில் அடிச்சிட்டுத்தான் இருக்கே, அங்கேயும் போய் விசில் அடிக்கத்தான் போறே. பேசாம இங்கேயே இருந்துடு''ன்னார். அன்னிக்கு டைரக்டர் எடுத்த முடிவை நான் ஏத்துக்காம இருந்தால் இன்னிக்கு ரசிகர்கள் என் படத்தைப் பார்த்து விசில் அடிக்கிற உயர்ந்த நிலை வந்திருக்காது.

நான் டைரக்டர்கிட்ட இருந்து வேலையை விட்ட விஷயம் கூட எங்க அம்மாவுக்கு மூணு மாசம் கழிச்சுத்தான் தெரியும். அந்த மூணு மாசமா 'கன்னி ராசி' படத்துக்காகக் கதை டிஸ்கஷன் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

அந்த டைம்ல 'முந்தானை முடிச்சு' பட ஸ்டில்ஸெல்லாம் பத்திரிகையில வந்துக்கிட்டு இருக்கு. இதைப் பார்த்துட்டு எங்க அம்மா...

''ஏண்டா அந்த புண்ணியவான் கடவுள் மாதிரி மாசாமாசம் கை நிறைய சம்பளம் கொடுத்துப் பிள்ளை மாதிரி வச்சிருந்தாரே, எதுக்கடா வேலையை விட்டுட்டு வந்தே''ன்னு அசிஸ்டெண்ட்டா சேர்ந்தப்ப திட்டின மாதிரியே அந்த வேலையை விட்ட போதும் திட்டினாங்க. அதுக்கு நான்...

''டைரக்டர் ஆகப் போறேன்'' என்று பதில் சொன்னேன்.

''என்னது டைரக்டர் ஆகப் போறியா - இது உனக்குத் தேவையா©'' என்று அட்வைஸ் பண்ணினாங்க. காரணம் என்னுடைய வெளித்தோற்றம் ஒரு டைரக்டருக்குரிய லுக் இல்லாததுதான். யார் எது சொன்னாலும் பரவாயில்லை, டைரக்டர் ஆக வேண்டும் என்று தைரியமாக முடிவெடுத்தேன். அந்த முடிவு வெற்றியாகத்தான் அமைந்தது.

அதேபோல 'ஆண்பாவம்' படத்துக்காக சில நடிகர்கள் கிட்ட கால்ஷீட் கேட்டேன். கிடைக்கலை. அதுக்கப்புறம் என் அசிஸ்டெண்டுகளைக் கூப்பிட்டு இந்தப் படத்துக்கு 'நான்தான் ஹீரோ' என்று சொன்னேன். 'இது உனக்குத் தேவையா©' என்ற அர்த்தத்தில் மௌனமாக இருந்தார்கள். என் முடிவை நான் மாற்றிக் கொள்ளவில்லை.

ஆனால், எனது குருநாதர் ஒரு தீர்க்கதரிசி. 'இன்று போய் நாளை வா' படப்பிடிப்பில் பஸ் ஸ்டாப்பில் ஒரு பெண்ணுடன் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதாக சீன். அந்த சீன்ல நடிக்கறவருக்கு வசனம் நான்தான் சொல்லிக் கொடுத்தேன். ஆனா டேக்ல தப்பு தப்பா வசனம் பேசி நடிச்சாரு. டைரக்டர் ''என்னய்யா இப்படி பேசுறே©'' என்று அவரைத் திட்டினார். அதுக்கு அவர்...

''இப்படிப் பேசச் சொல்லித்தாங்க உங்க அசிஸ்டெண்ட் டைரக்டர் சொல்லிக் கொடுத்தார்'' என்று பழியை என் மேல போட்டுட்டார். உடனே டைரக்டர்...

''பாண்டியா எப்படிப் பேசி நடிக்க சொல்லிக் கொடுத்தே©'' என்று என்னைக் கேட்டார்.

உடனே நான் டைரக்டர் எதிர்பார்த்தபடியே வசனம் பேசி நடிச்சுக் காட்டினேன். டக்குன்னு என் கையில இருந்த கிளாப் போர்டை வெடுக்குன்னு பிடுங்கிட்டு, ''போய் நில்லய்யா. இப்ப பேசி நடிச்சியே அதே மாதிரி செஞ்சிடு'' என்றார். நான் பயத்துல வெலவெலத்துப் போய் ''வேணாம் சார்''ன்னு இழுத்தேன்.

''நீ போய் நில்றா''ன்னார். சரின்னுட்டு வசனம் பேசினேன். ஒரே டேக்ல சீன் ஓ.கே. ஆயிடுச்சு.

டைரக்டர் கார்ல கிளம்பி ஆபீசுக்கு வந்துட்டார். நான் ஆபீசுக்கு வந்தேன். அப்ப என்கிட்ட...

''நீ நடிக்றதுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தியா''©ன்னு கேட்டார்.

உடனே நான் நாடகத்துல நடிச்சிக்கிட்டு இருந்த அனுபவத்தைச் சொன்னேன்.

''பின்னே ஏன் இதை என்கிட்ட முன்னாடியே சொல்லலை'' என்று கேட்டார்.

''தெய்வாதீனமா உங்ககிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டர் சான்ஸ் கிடைச்சிடுச்சு. அதுக்கிடையில நடிப்புலயும் ஆர்வம்னு சொன்னா துரத்திவிட்டுடுவீங்கற பயத்துல தான் சொல்லலை'' என்று சொன்னேன்.

உடனே பக்கத்துல நின்ன அந்தப் படத்தோட மானேஜர் கேப்டன்ங்கறவருடைய பாக்கெட்ல டைரக்டர் கையை விட்டார். பதினோரு ரூபாய் இருந்துச்சு. அதை என் கையில கொடுத்து ''சீக்கிரமே நீ பெரிய நடிகராகப் போறே... என்னுடைய முதல் அட்வான்ஸ்'' என்று வாழ்த்தினார். அது இப்போது பலித்துவிட்டது.

தேடல் தொடரும்... 

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home