Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
படிக்கற காலத்தில் ஆசிரியர் பழமொழிகள் சொல்லிக் கொடுத்த போது, அது பரீட்சைக்காகப் பயன்பட்டது. ஆனால், வாழ்க்கையில் பல பிரச்னைகள், பல விஷயங்களை சந்திக்கும் பொழுதுதான், அன்றைக்கு மனப்பாடமாகப் படித்த பழமொழிகளின் பயனை உணர முடிந்தது. அதன் பொருளையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

''ஒரு பிரச்னையைக் கண்டு ஒதுங்குபவனைவிட, அந்தப் பிரச்னையில் மாட்டிக் கொண்டு விழிப்பவனே மேலானவன். ஏனென்றால் அவன் வெற்றியையோ, அல்லது தோல்வியையோ சந்திக்கப் போகிறான். ஆனால், பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கி இருப்பவன், எதையுமே சாதிக்கப் போவதில்லை. வாழ்க்கையில் அனுபவமும் கிடைக்கப் போவதில்லை.''

சுவாமி விவேகானந்தரின் இந்தப் பொன்மொழியை நான் என்றோ படித்தது. ஆனால், இன்றுதான் அதன் பொருளைப் பூரணமாக உணர்கிறேன்.

அண்ணன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு ஒன்றில்,

'சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி, போராடும் வரை மனிதன்' என்று எழுதியிருக்கிறார். இந்த வரிகள் என் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு நம்பிக்கையூட்டி இருக்கின்றன என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருக்கிறேன்.

அதே போல், நண்பர் வெல்வெட் ராஜ்குமார். சில நேரங்களில் நம்பிக்கை இழந்து நான் பேசுகிற பொழுது...

''கவலைப்படாதே பாண்டியா, கண்டிப்பாக நீ மீண்டு வருவே. ஒரு பிரச்னை வருகின்ற பொழுது மனிதனைக் கார்னருக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். பிறகு நல்ல ஒரு விடியல் வரும்.'' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த வார்த்தைகளின் வலிமைகளையெல்லாம் இப்பொழுது நன்றாகவே உணர்கிறேன்.

ஆண்பாவம் படப்பிடிப்பு முடிஞ்சவுடனேயே, ஏ.வி.எம் படக் கம்பெனியின் பூமி உருண்டை எம்பளம் மாதிரி, அலமு மூவிஸ் படக் கம்பெனிக்காகப் புதுசாக ஏதாவது எம்பளம் ஒன்றை உருவாக்க யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ, அந்தப் படத்தோட தயாரிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சார் என்கிட்ட ''திருப்பதிக்குப் போய் ஒரு ஷாட் எடுத்துட்டு வந்து, அதை எம்பளமா வச்சுக்குங்க'' என்றார்.

கடைசி நேரத்துல அங்க போயிட்டு வர லேட்டாகிடும்னு அவர்கிட்ட சொல்லிகிட்டு, அதே படத்தோட பைனான்சியர் திரு. வேலாயுதம் எனக்கு வாங்கிக் கொடுத்த பைக்கை எடுத்துக்கிட்டு, நானே பாண்டி பஜார் போனேன். அப்ப கொலு சீஸன்; வீதி முழுக்க சாமி சிலைகளா குவிஞ்சு கிடக்கு.

ஒரு கடையில வெங்கடாஜலபதி சிலை ஒண்ணு ரொம்பப் பிரகாசமாக தெரிஞ்சுச்சு. அதைப் பார்த்து வச்சுக்கிட்டு நேரே ஆபீசுக்குப் போனேன். மேனேஜரைக் கூப்பிட்டு, அந்தக் கடையோட விலாசத்தைச் சொல்லி, நான் பார்த்துட்டு வந்த வெங்கடாஜலபதி சிலையைப் பேரம் பேசாம சொன்ன விலை கொடுத்து வாங்கிக்கிட்டு வந்துடுங்க என்று அனுப்பி வைத்தேன். அவரும் அதே சிலையை வாங்கிட்டு வந்துட்டாரு. வாங்கிட்டு வந்ததுல இருந்து அதை ஆபீசுல வச்சு மூணு நாளா அவல் பொரிக் கடலையெல்லாம் படைச்சு எல்லாரும் கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. நாலு நாள் கழிச்சு, அரசு ஸ்டுடியோவுக்கு (இடையில் எம்.ஜி.ஆர். பிலிம்சிட்டி இருந்தது) அந்தச் சிலையை ஷூட் பண்ண எடுத்துக்கிட்டுப் போறோம்.

அந்தச் சிலையைப் பிரமாதமா ஜோடிச்சு, அதை வைக்கப்போற ரேக் மேலே ஒளிப்பதிவாளர் அசோக்குமார் லைட்டிங்கெல்லாம் பண்ணி ரெடியாயிட்டார். உடனே நான் பக்கத்துல நின்ன ஓர் ஆர்ட்டிஸ்டைக் கூப்பிட்டு, ''அந்த வெங்கடாஜலபதி, சிலைய எடுத்து அந்த ரேக் மேல வைப்பா''ன்னு சொன்னேன். எடுத்துக்கிட்டு வந்த பையன் ரேக் மேலே வைக்கும் போது கை தறவி கீழே விட்டுட்டான்.

வெங்கடாஜலபதி இரண்டா, உடைஞ்சுப் போயிட்டார். நான் திராவிடக் கருத்துக்களைப் பேசறவன்தான். ஆனாலும் மனம் உடைஞ்சு போயிட்டேன். அதுக்கேத்தாப்புல பக்கத்துல நின்ன லைட்மேன் ஒருத்தர்...

'இவனெல்லாம் ஹீரோவா நடிக்க வந்துட்டான். அதுனாலதான் இப்படிக் கெட்ட சிம்டம்ஸ் நடந்திட்டிருக்கு' என்று என் காதுபடவே பேசினார். நான் உடனே ஷூட்டிங்கைப் பேக்கப் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டேன்.

மறுநாள் அதே வெங்கடாஜலபதி பெருமாளை பெவிக்கால் போட்டு ஒட்டி, கலரெல்லாம் பூசி கரெக்ட் பண்ணிட்டு, ''என்னைக் காப்பாத்திக்கப் படம் எடுத்துட்டேன் பெருமாளே. உன்னை நீ காப்பாத்திக்க'' என்று வேண்டிக் கொண்டு, அதே அரசு ஸ்டுடியோவுக்கு எடுத்துச் சென்று ஷூட் பண்ணினேன். படம் ரிலீசாகிப் பெரிய வெற்றி அடைஞ்சிருச்சி. அதுக்கப்புறம் ஒவ்வொரு பட ஷூட்டிங் முடிஞ்சவுடனேயும், ஒரு வெங்கடாஜலபதி சிலை வாங்கி உடைச்சிட்டு அதையே ஷூட் பண்ணி எம்பளமா வைக்கலாமே©'' என்று என் அசிஸ்டெண்டுகளெல்லாம் சென்ட்டிமெண்ட் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால எது நடந்தாலும் அதை ப்ளஸ் ஆக்கிக்கப் பழகிக்கணும்.

''உனக்காகப் படைக்கப்பட்ட ஒவ்வொரு அரிசியிலும் உனது பெயர் எழுதப்பட்டிருக்கிறது'' என்று பைபிளில் வரும் வாசகம் எனக்குப் பிடிக்கும்.

நமக்கு வரவேண்டியது வந்தே தீரும், அப்படிங்கறதில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

'மழுவில் காவடி'ங்கற மலையாளப்படம். இதைத் தமிழில் தயாரிக்க, தயாரிப்பாளர் ருக்மாங்கதன் என்னை புக் பன்ன வந்தார். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால், குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவரும் பைனான்சியரை ரெடி பண்ணிட்டுப் பத்து நாள்ல வர்றேன்னுட்டுப் போனார். பத்தாவது நாள் வந்தார். அதுக்குள் கதையெல்லாம் ஓரளவு ரெடி பண்ணி வச்சிருந்தார்.

''சார் உங்களை ஹீரோவா போட்டா எந்த ஃபைனான்சியரும் பணம் கொடுக்க முன் வரமாட்டேங்கிறாங்க. அதனால, இப்ப என்னால உங்களை வச்சு படம் பண்ண முடியாது''ன்னு சொல்லிட்டு ருக்மாங்கதன் போயிட்டார். இப்படி அவர் வெளிப்படையாய்ச் சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சு இருந்தது.

அதுக்கப்புறம் யாராவது போய் அவர்கிட்ட அந்தப் படத்தோடு ரைட்ஸ் கேட்டாங்கன்னா...

''இந்தப் படத்தை பாண்டியராஜனை வச்சுப் பண்ணுங்க; வேற யாரை வச்சுப் பண்ணினாலும் நல்லா இருக்காது''ன்னு சொல்லுவார்.

அதே மாதிரி என்கிட்ட யாராவது புதுசா நடிக்க கால்ஷீட் கேட்டு வந்தாங்கன்னா, ருக்மாங்கதன் சார்கிட்ட 'மழுவில் காவடி'ங்கற படத்தோட ரைட்ஸ் வாங்கிட்டு வாங்க பண்ணலாம்னு சொல்லுவேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என்னை வச்சு படம் பண்ண ஒரு தயாரிப்பாளர் வந்தாரு. உடனே, ருக்மாங்கதன் சார்கிட்ட போய் ''அந்தப் பட பிரிண்டைக் கொடுங்க, உங்களுக்கு டி.கே.ஏரியா மாதிரி ஒரு ஏரியாவைக் கொடுத்துடறேன்.'' என்று கேட்டேன்.

அதற்கு அவர் ''எனக்கு ஒரு ஏரியாவும் வேண்டாம். இதை எடுத்துட்டு போய் பண்ணிக்க. கண்டிப்பா மார்க்கெட் வரும். அப்புறம் எனக்கொரு படம் பண்ணிக்கொடு'' என்று சொன்னார்.

அதுக்கப்புறம் அந்த பிரிண்டை வாங்கிட்டு வந்தேன். ஒரு வாரம் பெட்டி என் வீட்லயே இருந்துச்சு. ஆனா அதைப் பார்க்க வேண்டிய தயாரிப்பாளர் வந்து பார்க்கலை.

அதனால பிரிண்டை திரும்ப ருக்மாங்கதன் சார்கிட்டயே கொடுத்துட்டேன்.

அவரும் வேற ஹீரோவை வச்சு இரண்டு மூன்று தடவை பூஜை போட்டார்.

ஒவ்வொரு முறை பூஜை போடும் போதும் 'அய்யோ நமக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காமப் போச்சே'ன்னு வருத்தப்படுவேன். காரணம், அந்தக் கதையில் ஜெயராமன் சார் ரொம்ப இயல்பா காமெடியா நடிச்சு இருப்பார். ஆனா, அந்தப்படம் வெறும் பூஜையோடவே நின்னு போயிடுச்சு.

அந்த சமயத்துலதான் என்.கே. விஸ்வநாத் இயக்கத்துல நான் நடிச்ச 'பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது'ங்கற படம் ரிலீஸ் ஆச்சு. படம் நல்லா போயிட்டு இருந்துச்சு. உடனே திரும்பவும் ருக்மாங்கதன் சார் என்கிட்ட வந்து 'இப்ப உங்களை வச்சுக் கேட்டா ஃபைனான்சியரெல்லாம் பணம் தர்றேன்னு சொல்றாங்க. படம் பண்ணிடலாமா'னு கேட்டார்.

நானும் 'ஓ.கே.சார்'னு சொன்னேன்.

அந்தப் படம்தான் 'சுப்பிரமணியசுவாமி'; சக்ஸஸ் புல்லா போச்சு. அதனால, நம்முடைய கடமையை ஒழுங்கா செஞ்சுக்கிட்டு இருந்தோம்னா நடக்க வேண்டியது நன்றாகவே நடக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home