Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
சென்டிமெண்ட்' இது மற்ற தொழில்களை விட சினிமாவுல ரொம்ப பாப்புலர். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நிறைய சென்டிமெண்ட்டை உடைச்சுட்டுத் தான் வெளியே வந்திருக்கேன்.

என்னுடைய முதல் படம் 'கன்னிராசி' செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணைப் பற்றிய கதை. இன்னும் சொல்லப்போனா மூட நம்பிக்கையைக் கண்டிக்கும் ஒரு சிறிய பிரச்சாரப் படம் என்று கூடச் சொல்லலாம்.

ஆனால், இந்தக் கதை உருவாகும் பொழுதே, நிறைய பேர் என்கிட்ட செவ்வாய் தோஷம்கிறதே ஒரு ராங்சென்டிமெண்ட். அதனால் இந்தக் கதையைப் படம் எடுக்காதீங்க என்று சொன்னார்கள்.

அது மட்டுமில்லாமல், பூஜை அழைப்பிதழிலேயே ஜாதகக் கட்டம் போட்டு, அந்த ஒவ்வொரு கட்டத்துலயும், இசைஞானி இளையராஜா சார் பேர், பிரபு சார் பேர், கேமிராமேன் அசோக்குமார் சார் பேர், தயாரிப்பாளர் பேர், 'கன்னிராசி' டைட்டில், என் பெயர் உட்பட எல்லா பெயர்களுமே அந்த ஜாதகக் கட்டத்துக்குள்ள இருக்குற மாதிரி டிசைன் பண்ணி இருந்தேன். இந்த இன்விடேஷனைப் பார்த்த நிறைய பேர், 'விபரம் தெரியாம ஜாதகக் கட்டத்துக்குள்ளேயே இவன் கை வச்சுட்டான். இனி இந்தப் படம் எங்கே ரிலீஸ் ஆகப் போகுது'ன்னு பேச ஆரம்பித்து விட்டார்கள். முதல் படம் என்பதால் எனக்கும் மனதில் கொஞ்சம் பயம் வந்தது.

ஆனா அந்தப் படம் மாபெரும் வெற்றி பெறாவிட்டாலும் ஒரு பெரும் வெற்றியைத் தந்து இந்தப் பாண்டியராஜனை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.

அதே மாதிரி 'ஆண்பாவம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானேன். அந்தப் படத்துல கம்பெனி சின்னமான திருப்பதி வெங்கடாஜலபதி சிலை உடைஞ்சு போனதுனால, அவ்வளவுதான் புது ஹீரோ அம்பேல்னு என் காதுபடவே பேசினாங்க.

இந்தச் சூழ்நிலையில், படமெல்லாம் ரெடியாகி, பெட்டி ஒவ்வொரு ஏரியாவுக்கும் அனுப்பி வைக்க வரிசையா அடுக்கி வச்சிருந்தார் தயாரிப்பாளர் சுப்ரமணியம்.

''பாண்டியராஜன், முதல் பெட்டியை உங்க கையால விநியோகஸ்தர்கள் கையில் கொடுங்கள்'' என்றார். நான் ஒரு நிமிஷம் ஷாக்காகிப் போய்,

''சார் ஏற்கனவே என் ராசியைப் பற்றிச் சிலபேர் பேசிக்கிறது உங்க காதுல விழலன்னு நினைக்கிறேன். அதனாலதான் தைரியமா என்னைப் பெட்டி எடுத்துத் தரச் சொல்றீங்க'' என்று மறுத்தேன். அதற்கு சுப்ரமணியம் சார்...

''பாண்டியா எப்பவுமே பாசிடிவா திங்க் பண்ணுங்க. நெகடிவா திங்க் பண்ணாதீங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்© என்றார். சரியென்று நானும் படப்பெட்டியை எடுத்துக் கொடுத்தேன்.

படமும் ரிலீஸ் ஆச்சு. சுப்பரமணியம் சார் என்னைக் கார்ல ஏத்திக்கிட்டு, பல்லாவரம் சாந்தி தியேட்டரில் நம்ம படம் ரிலீஸ் ஆகியிருக்கு, வாங்க பார்த்துட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றார்.

பகல் காட்சி, இரண்டரை மணிக்கு ஆரம்பிச்சாங்க. படம் ஆரம்பித்துப் பத்து நிமிடம் கழித்து உள்ளே போனோம். பார்த்தா மொத்த தியேட்டர்லயும் பீச்ல சுண்டல் வாங்கித் தின்னுக்கிட்டு தூரம் தூரமா இடை வெளி விட்டு உட்கார்ந்திருக்கிற ஜோடிகள்தான் உள்ளே உட்கார்ந்து இருந்தாங்க. பார்த்தவுடனே மனசு பகீர்னு ஆயிடுச்சு. அப்படியே அழுதுகிட்டே சுப்ரமணியம் சாரோட கார்ல வந்து உட்கார்ந்துட்டேன்.

ஒழுங்கா ஒரு படம் டைரக்ட் பண்ணி டைரக்டர்னு பேர் வாங்கியிருந்தோமே, இப்ப தேவையில்லாம ஹீரோவா நடிக்கப் போய் டைரக்சன் தொழிலும் பாதிக்கப் போகுதே என்று கலங்கிப் போனேன். ஆனால், சுப்ரமணியம் சார் மட்டும் வேதனையை வெளிக்காட்டாமல் சிரிச்சுக்கிட்டே வந்தார். அவரிடம் ''இந்த லட்சணத்துல என் கையால பெட்டியை எடுத்துத் தர சொல்லிட்டீங்க'' என்று வருத்தப்பட்டுச் சொன்னேன்.

ஆனால், அவரோ, ''கவலைப்படாதே பாண்டியா! எல்லாம் நல்லதாவே நடக்கும்'' என்று வழி நெடுக தைரியம் சொல்லிக் கொண்டே வந்தார்.

வீட்டில் என்னை இறக்கி விட்டுட்டு, சுப்ரமணியம் சார் கிளம்பிவிட்டார். நான் இரவு எட்டு மணிவரை வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எட்டே கால் மணிக்கு என் வீட்டிற்கு, அபிராமி தியேட்டர்ல படம் ஹவுஸ்புல் ஆயிடுச்சு என்று தகவல் வந்துருச்சு. உடனே பைக் எடுத்துட்டு அபிராமி தியேட்டருக்குப் போனேன்.

தியேட்டருக்குள்ளே நுழைஞ்சு பார்த்தேன். ஆடியன்ஸ் நிறைஞ்சு இருந்தாங்க. அப்பப்ப ஒவ்வொருத்தரும் கலகலப்பா சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கு அப்பத்தான் உயிர் வந்தது மாதிரி இருந்துச்சு.

படம் முடிஞ்சு எல்லாரும் வெளியே வந்துக்கிட்டு இருந்தாங்க. அவுங்கள்ல எல்லோருமே பாண்டிய ராஜன்ங்கற புதுப் பையன் நல்லா காமெடியா நடிச்சு இருக்கான். பையன் நல்லா வருவான் என்று சொல்லிக் கொண்டே போனார்கள். சில பேர் என்னிடம்...

''சார், நீங்கதானே இந்த படத்துல நடிச்சிருக்கிற ஹீரோ©'' என்று அடையாளம் கண்டு கொண்டு ஆட்டோ கிராஃப் கேட்டார்கள்.

அந்த நிமிடத்தில்தான் நாம் தப்பித்து விட்டோம் என்று நம்பிக்கை வந்தது. எனவே செண்டிமெண்ட் என்பதை ஒரு மூட நம்பிக்கை என்று சொல்லும் அளவுக்கு நாம் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

இதே போல் 'காதலன்' என்ற டைட்டில் வைத்தாலே படம் ஓடாது என்கிற ராங்க் செண்டிமெண்ட்டை உடைத்து, காதலன் என்ற டைட்டிலில் படம் எடுத்து வெற்றி கண்டவர் டைரக்டர் ஷங்கர்.

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home