Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
இந்தத் தத்துவத்தை எனக்குச் சொல்லிக் கொடுத்தவர் டைரக்டர் கேயார். அவர் டைரக்சன்ல 'கவலைப்படாதே சகோதரா' படத்துல நடிச்சிக்கிட்டு இருக்கேன். செட்ல அவரைப் பார்க்கும்போது, தினம் புதுசு புதுசா அவர்கிட்ட இருந்து கத்துக்குவேன். அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சது, என்ன நடந்தாலும் எந்தச் சூழ்நிலையிலும் டென்ஷனாக மாட்டார். அவர் சிரிக்க மாட்டார். ஆனா மத்தவங்களை சிரிக்க வைக்கிற மாதிரிதான் பேசுவார். அவர் முகத்துல எப்பவுமே அமைதியும் சாந்தமும் குடி கொண்டிருக்கும். எந்த விஷயத்தையும் ஈஸியா எடுத்துக்கணுங்கறதை எனக்குப் பிராக்டிக்கலா கத்துக் கொடுத்தவர் கேயார்தான்.

''டென்ஷனாகி ஒண்ணும் ஆகப் போறதில்லை' பாண்டியன். நாம டென்ஷனாகி ஏதோ வேலை முடியப்போகுதுன்னா டென்ஷனாகலாம். நாம டென்ஷனானாலும் இதேதான் நடக்கப் போகுது. அதனால் எப்பவும் ரிலாக்ஸா இருக்கக் கத்துக்கணும்.'' என்று அடிக்கடி சொல்வார்.

அதற்காக சோம்பேறியாகவோ, சோர்வாகவோ கேயார் இருப்பதில்லை. அதனாலதான் அவருடைய 'தியரி' எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. என்கிட்ட அசிஸ்டெண்டா வேலை பார்த்தவங்க சில பேர் பெரிய ரேஞ்சுல வளர்ந்துட்டதால, என்கிட்டத்தான் அசிஸ்டெண்ட்டா வேலை செஞ்சேன்ங்கறதை சொல்லமாட்டங்க. அதுக்காக மனசுல எனக்குச் சின்னதா நெருடல் உண்டாகும்.

ஆனா கேயாரை சந்திச்சதுக்கப்புறம் 'நடந்தா சந்தோஷம்... நடக்கலைன்னா ரொம்ப சந்தோஷம்'னு அவர் சொல்ற மாதிரி ©சொன்னா சந்தோஷம் சொல்லலைன்னா ரொம்ப சந்தோஷம்' அப்படீன்னு டேக் இட் ஈஸி பாலிசிக்கு வந்து விட்டேன்.

அதே மாதிரி சினிமா வட்டாரத்துல கிருபாசங்கர்னு ஒருவர் இருக்கிறார். நாங்களெல்லாம் 'நைனா' என்று அன்போடு அழைப்போம். அவர் சினிமாவுல எடிட்டரா இருந்தார். டைரக்டராக இருந்தார். தயாரிப்பாளராக இருந்தார். இப்ப ஓர் இருபது வருஷமா சினிமாவுலதான் இருக்கிறார். ஆனா, அவர் எந்த வேலையும் பார்க்கலை. தினம் ஷூட்டிங் வருவார். ஷூட்டிங்கிற்கு அவர் வரலைன்னா நாங்க டென்ஷனாகி விடுவோம்.

காரணம், அவருடைய சேவை என்னை மாதிரி நிறையப் பேருக்குத் தேவைப்பட்டது. அவராகவே பிரச்சினையை எடுத்துப் போட்டுக் கொண்டு, செயலாற்றுவார். உதாரணத்துக்கு செப்டம்பர், அக்டோபர்ல என்னுடைய கால்ஷீட் ப்ரீயா இருக்குதுன்னு அவர் தெரிஞ்சிக்கிட்டா, யாராவது ஒரு புரட்யூசர் கிட்ட போய் இந்த டேட்ல பாண்டியராஜன் ப்ரீயா இருக்கார். அந்த டேட்ல அவரை வச்சு ஒரு படம் பண்ணலாம்© என்று நமக்காக அவர் காவடி தூக்குவார். இப்படியே தன்னுடைய வயதான நிலையிலும், வாழ்க்கையை முறையாக ஓட்டிக் கொண்டிருக்கிறார். இவரிடம் இன்று வரை இருக்கும் ஒரே மூலதனம் அன்புதான்.

இவர் மூலம் நான் கத்துக்கிட்ட விஷயம் என்ன்னா, சினிமாவுல உழைச்சு நிறைய சொத்து வச்சிருந்தாத்தான் மரியாதை கிடைக்கும் என்பதல்ல; மரியாதையா இருந்தாலே இந்த உலகம் மதிக்கும் என்பதற்கு நைனாவே உதாரணம். எனவே சிறந்த நூல்கள் மட்டும் நமக்குப் பாடமாக அமைவதில்லை.நல்ல மனிதர்களும்தான்.

பெரிய அளவுல மூலதனம். பெரிய அளவுல பேக்ரவுண்ட். இதை வச்சு முன்னுக்கு வந்தவங்களை விட தன்னம்பிக்கையை மூலதனமா வச்சு ஜெயிச்சவங்கதான் நிறைய பேர். உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்குங்க.

எனக்கு ஏற்பட்ட சினிமா ஆசையினால் என் படிப்பைத் தொடர முடியலை. பார்த்துக்கிட்டு இருந்த எல்லா வேலைகளையும் உதறித் தள்ளிட்டேன்.

நான் சினிமாவுல அசிஸ்டெண்ட் டைரக்டரா சேர்றதுக்கு முன்னாடி 'சின்ன சின்ன வீடு கட்டி' என்கிற படத்துலதான் அறிமுகமானேன். இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் என் நாடகக் குரு சைதாப்பேட்டை ஸ்ரீராம்.

இந்தப் படத்தை எடுத்த அம்மன் கிரியேஷன்ஸ் சாதாரணமான கம்பெனி அல்ல. டைரக்டர் பாரதிராஜா சாரை வைத்துப் 'பதினாறு வயதினிலே', 'கிழக்கே போகும் ரயில்', என் குருநாதரை வச்சு 'கன்னிப் பருவத்திலே' போன்ற வெளிவிழாப் படங்களை தயாரித்த நிறுவனம். எனவே ஒரு பெரிய பேனர் வேல்யூ உள்ள கம்பெனி தயாரிக்கிற படத்துல முதன் முதலா நடிக்கப் போகிறேன் என்கிற சந்தோஷத்தில் ராத்திரியெல்லாம் தூக்கம் வரலை.

விடிஞ்சும் விடியாத அதிகாலைப் பொழுதில் எழுந்தேன். ஏழு மணிக்குள்ள மூணு முறை சேவிங் பண்ணினேன். குளிச்சேன். பாண்டி பஜார்லதான் ஷூட்டிங். எட்டு மணிக்கெல்லாம் லொக்கேஷனுக்குப் போயிட்டேன். பத்து மணிக்குத்தான் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க.

மேக்கப்பெல்லாம் போட்டு முடிஞ்சவுடனே டைரக்டர் விஜயராஜா என்னைக் கூப்பிட்டு ''நீ வந்து ரோட்ல வித்தை காட்டுகிற மோடி மஸ்தானுக்கு அசிஸ்டெண்ட். இவர் தான் மோடி மஸ்தான்'' என்று என்னை நடிக்க அழைத்து வந்த திரு. ஸ்ரீராம் அவர்களைக் காட்டினார். டைரக்டர் எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தார்.

''வா இந்தப் பக்கம்''

''வந்தேன்''

''கேட்டால்''

''சொல்வேன்''

''அய்யா என்ன பண்றார்©''

''பீடா திங்கிறார்.''

''இவர் பாக்கெட்ல என்ன இருக்கு©''

''மார்வாடிக் கடை ரசீது இருக்கு'' என்று, மோடி மஸ்தான் கேட்குற கேள்விகளுக்கெல்லாம் பட்பட்ன்னு டயலாக் பேசணும். வசனம் சொல்லிக் கொடுத்து முடிஞ்சவுடனே டைரக்டர் கேமிராமேன்கிட்ட ''மோடி மஸ்தான் 'வா இந்தப் பக்கம்' என்று சொல்வார். இந்தப் பையன் 'வந்தேன்' என்று சொல்லும் பொழுது டைட் குளோசப் வச்சுக்குங்க'' என்று சொன்னார். எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. நமக்கு மட்டும் குளோசப் ஷாட் என்று சொல்கிறாரே டைரக்டர் என்று. ஆனால் 'வந்தேன்' 'சொல்வேன்' 'பீடா திங்கிறார்' என்று வசனம் பேசும் பொழுதெல்லாம் போர்வையால் முகத்தை மூடி இருக்க வேண்டும் என்றும், அப்படி மூடியிருப்பதைத் தான் குளோசப்பில் எடுத்தார்கள் என்றும் பிறகுதான் தெரிந்தது.

நான் நடிக்க, சூட்டிங்கெல்லாம் முடிஞ்சு டப்பிங் பேச என்னைக் கூப்பிட்டாங்க. நானும் முதல் முதலா நம்ம முகத்தை சினிமாத் திரையில பார்க்கப் போகிறோமே என்ற சந்தோஷத்தில் டப்பிங் தியேட்டருக்குப் போனேன். என் சீனைப் போட்டாங். பார்த்தா 'வா இந்தப் பக்கம்' 'வந்தேன்' என்ற வசனம் தான் வருகிறது. என் முகத்தையே காணோம். ஜூம் பேக்ன்னு சொன்னாங்க. டைட் குளோசப்ன்னு சொன்னாங்க. ஆனா போர்வையைப் போட்டுல்ல நம்ம முகத்தை மறைச்சுட்டங்க. நாம அந்த அளவுக்கா அசிங்கமா இருக்கோம் என்று டப்பிங் தியேட்டர்லேயே அழுதுட்டேன். ஆனால் அடுத்த நிமிடமே மனதைத் தேற்றிக் கொண்டு நடந்தே வீட்டிற்கு வந்தேன்.

மறுநாள், நேற்று இப்படி நடந்து விட்டதே என்று அப்பா அம்மா சொல்லும் வேலைக்குப் போக என் மனசுக்குத் தோன்றவில்லை. மீண்டும் சினிமா கம்பெனி வாசல்களை நோக்கித்தான் என் கால்கள் சென்றன.

 தேடல் தொடரும்...

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home