Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 
இயக்குநர் பாண்டியராஜனின் 'தேடல்'
 தேடும் போது கிடைக்காது. விரும்பிப் போனா விலகிப் போகும். ஆனா முயற்சி செய்தா முடியும், என்பதற்கு என் வாழ்க்கையில் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

அன்றாடம் கூலி வேலை பார்ப்பவன் எப்படியாவது ஓர் அட்லஸ் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதை தன் வாழ்நாளின் இலட்சியமாகக் கொண்டு, வாங்கி சந்தோஷம் அடைவது மாதிரி, நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே என் வாழ்நாளில் எப்படியாவது இந்த்சுசுகி பைக் ஒன்று வாங்கி விட வேண்டும் என்பது இலட்சியமாக இருந்தது. அந்த இலட்சியம் நான் சினிமா டைரக்டர் ஆன பிறகுதான் நிறைவேறியது.

ஆனா அதை வாங்குறதுக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இருந்தே யாரைப் பார்த்தாலும், ஏங்க ஒரு இந்த்சுசுகி பைக் வாங்கணும்னா ரெடி கேஷ் எவ்வளவு© இன்சால்மெண்ட்னா எவ்வளவு தொகை முன் பணம் வேணும்© எவ்வளவு தொகை மாச மாசம் கட்டணும். எத்தனை பேர் செக்யூரிட்டி போடணும். லோன் போடறது எப்படி©' என்று அது சம்பந்தமாவே கேட்டுக் கிட்டே இருப்பேன். சில நேரம் அதைக் கேக்குற பழக்க தோஷத்துலேயே ஏற்கனவே விபரம் கேட்ட அதே ஆள்கிட்ட மூன்றாவது முறையாகவும் கேட்பேன். அதற்கு அவர்...

''ஏன் பாண்டியா! மாசம் ஒரு வாட்டி பைக் வாங்குறது எப்படின்னு பாடம் நடத்தறதுதான் என் வேலையா© என்று சிரித்துக் கொண்டும் சில நேரம் சிடுசிடுத்துக் கொண்டும் சொல்வார்கள். கொஞ்ச நாள் கழித்து....

திடீர்னு ஒரு நாள் சைதாப்பேட்டையில இருக்கிற என் வீட்டுக்கு ஆண்பாவம் பட பைனான்சியர் பி.என் வேலாயுதம் வந்தார். வந்தவர் என் கையில் ஒரு சாவியைக் கொடுத்து ''இனிமே யார்கிட்டேயும் பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி 'சந்தைக்கு போகணும். ஆத்தா வையும்' என்று வர்றவன் போறவன் கிட்டயெல்லாம் பைக் வாங்கறது எப்படின்னு கேட்டுத் தொல்லை பண்ணாதே'' என்று சொல்லி என்னை வாசலுக்கு அழைத்து வந்தார். பார்த்தா வாசல்ல சந்தனம் பூசி மாலையெல்லாம் போட்டு இந்த்சுசுகி பைக் கம்பீரமா நிக்குது. எனக்கு வேலாயுதம் சார்கிட்ட என்ன பேசணும்ங்கறதே தெரியாம சந்தோஷத்துல திக்குமுக்காடி நின்றேன்.

அப்ப தெரிஞ்சுக்கிட்டேன். வெறுங்கை முழம்போடாது. தேடினா கிடைக்காது. ஆனா உழைப்பும் விடா முயற்சியும் இருந்தா கண்டிப்பா எதையும் சாதிக்கலாங்கறதை. அடுத்து வசதி இருந்தாலும் இல்லாட்டியும் மனுசனா பொறந்தா ஏதாவது இலட்சியம் கொள்கைன்னு கண்டிப்பா இருக்கணும். எனக்குத் தெரிஞ்ச வடநாட்டு நண்பர் ஒருத்தர், அவர் நல்ல வசதியோட வாழ்ந்துட்டு, மிகவும் கஷ்ட நிலைக்கு ஆளாகிவிட்டார். அவர் எனக்குக் குடும்ப நண்பர் என்பதால் அவர் வீட்டு எல்லா விசேஷங்களுக்கும் போவேன்.
ஒருநாள் அவருடைய குழந்தையோட பிறந்தநாள் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போய், வாங்கிட்டுப் போன ப்ரசன்டேஷனை அவர் கையில் கொடுத்தேன். ஆனா அவர் வாங்க மறுத்திட்டார்.

அதுக்கு அவரும் அவருடைய மனைவியும் சொன்ன காரணம் ''எப்பவுமே நாம திருப்பி செய்ய முடியுங்கற சூழ்நிலை இருக்கும் பொழுதுதான் உறவுக்காரங்களா இருந்தாலும் சரி, அவங்ககிட்டே இருந்து எதையும் வாங்கிக்கலாம். நாம திருப்பிச் செய்ய முடியற நிலைல இல்லைங்கற பொழுது அவங்ககிட்ட இருந்து வாங்குறது சரியில்லை. நாளைக்கே உங்க வீட்ல ஒரு விசேஷம் வரலாம். அதுக்கு நாங்க ஏதாவது செய்யக் கூடிய நிலை இருந்தா இன்னிக்குக் கண்டிப்பா நீங்க கொடுக்கறதை வாங்கிக்குவேன்'' என்றார்கள்.
இப்படி ஒரு விளக்கம் கொடுத்து அந்தத் தம்பதிகள் என்னை மெய்சிலிர்க்க வச்சுட்டாங்க. அதனால யாரோ ஏதோ கொடுக்கிறாங்கங்கறதுக்காக வாங்குற பழக்கம் எவ்வளவு அநாகரிமானது என்பதை அன்றைக்கு அவர்கள் உணர்த்தினார்கள். அதாவது ஏழ்மையிலும் செம்மை என்பதை. சுருக்கமாச் சொல்லணும்னா, எந்த வேலை செய்தாலும் அதுல கண்டிப்பா புகழும் உண்டு, இலாபமும் உண்டு. வாழ்க்கையில் சில பிரச்சினைகள் உச்சமாயிடும் பொழுது நமக்கு சட்டத்தின் மீதும் நேர்மையின் மீதும் நீதியின் மீதும் உள்ள ஒரு நம்பிக்கை போய்விடும்.

என்ன இது இவ்வளவு நல்லவங்களா இருக்கோம். ரொம்ப கரெக்டா இருக்கோம். இவ்வளவு உழைக்கிறோம். அதுக்கேத்த கூலி கிடைக்கலை. இவ்வளவு நேர்மையா இருக்கோம். நம்ம மேல வீண்பழி வருது, தப்புப் பண்ணினவங்க நல்லா இருக்காங்களே; ஆனா நமக்கு டைமுக்கு நீதி கிடைக்கலையே என்ற உணர்வு வரும் பொழுதெல்லாம் கவியரசு கண்ணதாசன் எழுதிய கட்டுரையில் படித்தது ஒன்று என் நினைவுக்கு வரும்.

பாளையங்கோட்டை சிறையில் கவிஞர் இருந்த போது, அங்கே மறுநாள் காலையில் தூக்கு மேடைக்குப் போகும் ஒரு தூக்கு தண்டனைக் கைதியைப் பார்த்திருக்கிறார். இவரைப் பார்த்ததும் அந்தக் கைதி தேம்பித் தேம்பி அழுதானாம். உடனே கவிஞர்.....

''ஏனய்யா நீ கொலை பண்ணினதுக்குத்தானே உன்னைத் தூக்குல போடப் போறங்க. மத்தவங்களைக் கொலை பண்றதும் பாவம்தானே'' என்று சொன்னாராம்.

அதற்கு அந்தக் கைதி, '' சத்தியமா நான் இந்தக் கொலையை பண்ணலீங்க. பொய் சாட்சிகளை வச்சு சட்டத்தின் மூலமா எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டாங்க. '' என்று கைதி சொல்லி முடித்தவுடன்'' என்ன அநியாயம் இது கொலையே பண்ணாத ஒருத்தனைக் கொலை பண்ணிட்டான்னு சொல்லி...'' கவிஞர் ஷாக்காகிக் கன்னத்தில் கை வைத்தவாறு ஃபீல் பண்ணி இருக்கிறார். அந்தச் சமயத்தில் தொடர்ந்து அந்த கைதி..

'' இதுக்கு முன்னாடி உண்மையிலேயே இரண்டு கொலை பண்ணி இருக்கேன். அப்ப என்னை சட்டம் தண்டிக்கலை ஐயா'' என்றானாம்.

இதைப் படித்தவுடன் நான் தெரிஞ்சுக்கிட்டது என்னன்னா, உடனடியாக நேர்மைக்கு நீதி கிடைக்காமல் இருந்திருக்கலாம். குற்றவாளி தண்டனை பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால், காலம் கடந்தாவது என்றாவது ஒரு நாள் சரியான தீர்ப்பு வழங்கப்படும் என்பது நிச்சயம்.

Back To Index

 

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home