Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 

இது அறிவுரை அல்ல. உங்களைப் போல் நானும் கற்றுக் கொண்டு வரும் புத்திக் கொள்முதல். இரவு உறங்கும் முன் நாளைய பொழுது இன்றை விட நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். காலையில் ஒரு தொலைபேசி அலாமானது அலறியது. எதிர்முனைக் கேள்விகள், அதிர்ச்சிகள், உடனே பதில் முடிவு எடுக்க முடியாத வில்லங்க விஷயங்கள், பயம், நடுக்கம்.ஆனால், அந்தத் தொலைபேசி அலாரம்தான் என்னை எழுப்பி விட்டதுமல்லாமல் உசுப்பியும் விட்டது. சூரியனுக்கு முன் சுறுசுறுப்புடன் உழைக்கத் தொடங்கினேன்.

நான் ஏதாவது திரைப்படம் பார்க்கும்போது ஒரு முடிவுடன் செல்வேன். இது நான் பார்க்க வேண்டிய படம். நான் இயக்க வேண்டிய, நடிக்க வேண்டிய படம் வேறு. என் கனவுகள் வேறு, இப்போதைய பிழைப்பு வேறு.

முன்பெல்லாம் யாரைச் சந்தித்தாலும் அவரிடமுள்ள நல்ல விஷயங்கள், திறமைகள் ஆகியவற்றைக் கவனிப்பதோடு எனக்கு உடன்படாத குணாதிசயங்கள் இருந்தால் அதைக் கூர்ந்து கவனித்து அதைப் பற்றியே சிந்தித்து, அவரை விட நான் நல்லவன் என்ற தம் பட்டம் அடித்துப் பல நேரங்களை வீணடித்துள்ளேன். தற்போதைய புத்திக் கொள்முதலால் இப்போதைக்கு என் நம்பிக்கை நூறு சதவீதம் நல்லவனாக யாருமில்லை, நானுமில்லை, எவரும் இருக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் தான் நம் தினசரி எதிரி. எதிர்பார்ப்பு இல்லையென்றால் நம் சந்தோஷப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். பிரச்சினையின் அளவை வைத்துதான் வெற்றி! வெற்றி பெரிதாக வரவேண்டுமென்று ஆசைப்படும் நாம்...பிரச்சினை சிறியதாக இருந்தாலே சங்கடப் படுவது எந்தவிதத்தில் நியாயம்© பிரச்சினை இல்லாத மனிதன் இறந்தவன் ஆகிறான். நாம் அதற்காகவா ஆசைப்படுகிறோம் ! பிரச்சினைகளைப் பட்டியல் போடுங்கள். தீரும் பிரச்சினை தீராதப் பிரச்சினை என்று பிரித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். அதே போல் உங்களுக்கு வந்திருக்கும் பிரச்சினை இது வரை உலகிலேயே யாருக்கும் வந்ததில்லையா© என்று யோசித்துப் பாருங்கள். பிரச்சினையோடு போரிடத் தொடங்கி விடுவீர்கள்.

வழக்காடு மன்றத்தில் வாதம் நடப்பதுபோல். நம் மனதுக்குள்ளும் வாதம்- மன நீதிமன்றத்திற்கு மரியாதை கொடுத்தால் நிச்சயம் வாழ்க்கையில் வழுக்கலே இருக்காது. முகம் காட்டும் கண்ணாடி முன் நம் அழகை சரி செய்வது போல் அகம் காட்டும் கண்ணாடி இருப்பதாக நினைத்து நம் மன அழுக்கை அகற்றுவோம்.

இன்று நேற்று அல்ல- உங்களை விட நூறு மடங்கு நல்ல இதயம் இல்லாதவன், உங்களை விட நூறு மங்கு அறிவு இல்லாதவன், உங்களை விட நூறு மடங்கு மனிதநேயம் இல்லாதவன், இந்த சமுதாயத்தில் உங்களை விட நூறு மடங்குக்கு மேல் மதிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்காக வருந்தியிருப்பீர்கள். இது இன்று நேற்று அல்ல,  வரலாறு தோன்றிய காலத்திலிருந்தே இப்படி ஓர் அநியாயம் இந்த உலகில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதை நினைத்து நம் நேர்மையையும், திறமையையும் ஒப்பிட்டு வேதனைப் படக்கூடாது. ஏனென்றால் இதையெல்லாம் பிரித்து. விபத்துக்களை உதாரணமாக எடுத்துக் கொண்டால் அது ஆபத்தில்தான் முடியும். அனுபவங்கள் அதிகம் இருந்தால் தான் நல்ல முடிவுகளை எடுக்க முடியும். அதே நேரத்தில் நல்ல முடிவுகளை எடுக்க வேண்டுமென்றால், சில கெட்ட அனுபவங்களைச் சந்தித்திருக்க வேண்டும்.

எந்த மனிதனைச் சந்தித்தாலும் அவரைப் பற்றி இரண்டு வார்த்தை பாராட்டிப் பேசுங்கள். பிறகு நீங்கள் எதைப் பேசினாலும் அவர் தலையாட்டுவார். ஒருவர் முன்பைவிட ஒல்லியாக இருந்தால், "எப்படி உடம்பை சிலிம்மா வெச்சிருக்கீங்க," என்றும் கேட்கலாம். அதே நேரத்தில்,  "என்ன உடம்பு இப்படி வீக்கா இருக்கு," என்றும் காயப்படுத்தலாம். மனிதனை மனிதன் காயப் படுத்தாமல் இருப்பது தான் மிகப்பெரிய புண்ணியம் என்று வாழத்துவங்கினால் "புகழ்" நம்மை நோக்கிப் "புயல்" வேகத்தில் வரும்.

கஷ்டப்பட்டவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில்லை. ஆனால் வெற்றி பெற்ற அனைவரும் கஷ்டப்பட்டவர்கள் என்று "பென்ஜமின் டிசிலெரி" என்பவரின் கருத்து. வெற்றியின் விதையே தேடுதல்தான். எல்லோரிடமும் தனித்தன்மை இருக்கும். அதைத் தேட வேண்டும்.இப்படி இருந்தால் வெற்றி கிட்டும் என்றும் விதிமுறையில்லை. ஆனால் மனதுக்குள் ஒரு விதிமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒழுக்கம் சொல்லி வரக் கூடாது. அது தானே வழக்கத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களின் அறிவை நீ அறிந்தாலே உன் அறிவு கூர்மையாகும். சிலநேரம் அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாமல் போவது கூட ஒரு பாவம் தான். உன் நம்பிக்கையை மற்றவர்களுக்குச் சொல், திணிக்காதே.

மற்றர்களின் நம்பிக்கையைக் கவனி, புறக்கணிக்காதே. பிரச்சினைகளின் வடிவம் தான் மாறுமே தவிர, பிரச்சினை தீராது. எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விட்டால் மரண பயம் என்று ஒன்று வரும். அதற்குப் பதிலே கிடையாது. ஆனால் நாம் வேறு பிரச்சினைகளுக்கு சிந்தனையையும் செயலையும் உபயோகிப்பதால் மரண பயம் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம். மரணத்திற்கு மருந்து கிடையாது.

 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

  

  © 2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home