Home     |      Profile       |      Film List     |       Interview      |       My Debutants     |      Books      |        Photo Gallery

 

உணர்ச்சி வேகத்தில் பிரியும் பலர் எதிர்கால வாழ்க்கையில் என்ன என்ன சந்திக்க வேண்டிவரும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாயசம் தான் பசியைப் போக்கும் என்பதில்லை. பச்சைத் தண்ணீர் கூட பசியை அடக்கும். நான் அறிவுரை கூறவில்லை , எனக்கு நன்றாகத் தெரியும் - என் அறிவுரை வேறு ஒருவருக்குப் பொருந்தாது. வேறு ஒருவரின் அறிவுரை எனக்குப் பொருந்தாது. இன்னும் சொல்லப் போனால் என் அறிவுரை எனக்கே பொருந்தாது. கடைபிடிப்பது கடினமாயிருந்தும் இப்படி யோசிப்பதை எழுதுவதால் என்னை அறியாமல் நானும் கொஞ்சம் அறிவுரைகளை ஆராய்கிறேன்.

குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை விடுமறையென்றாலே கொண்டாட்டம் தான். ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும் என்று பலர் சொல்லுவார்கள். அவர்களுக்குத் திடீரென்று விடுமுறையென்றால் அந்நாளைப் போக்கப் படாதபாடு படுவார்கள். ஆக வேலையில் தான் சுகமே தவிர, ஓய்வில் இல்லை. இனி ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து பாருங்கள். மகிழ்ச்சி வீடு தேடி வரும்.

தொடர்ந்து சூட்டிங்கில் இருக்கும்போது எனக்கு ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் டென்ஷன் ஆகிவிடுவேன். மற்றவர்களையும் டென்ஷன் ஆக்கி விடுவேன். ஒரு நாள் ஓய்விற்குப் பிறகு சூட்டிங் போனால் நமக்கு டைரக்‌ஷன் வருமா நடிப்பு வருமா என்ற சந்தேகமெல்லாம் உண்டாகி விடும். நான் வசனங்களை எழுதாமல் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்து சொல்லிக் கொடுப்பேன். இதனால் நான் எம்.ஏ.படித்துப் பரீட்சை எழுதும் போது வேகமாக எழுதி எழுதிக் கை வலியால் அவதிப்பட்டேன். எழுதாமல் கைக்கு ஓய்வு கொடுத்ததால் வந்த வேதனை.

அதே போல் கதை விவாதத்தில் ஏதாவது பேசிக் கொண்டே இருந்தால் தான் சீன் வரும். யாருடனும் பேசாமலிருந்தால் கதை வளராது. ஒருமறை சொன்ன கதையை வேறு ஒருவருக்கு மறுபடியும் சொல்லும் போது தை டெவலப் ஆகி இருக்கும். நேற்றைக்குப் பேசிய நகைச்சுவைக் காட்சியை இன்று பேசும் போதும் எல்லோரும் சிரிக்க வேண்டும். சிர்க்கவில்லை என்றால் இந்தக் காட்சி படத்தில் இல்லை என்று உடனே முடிவு எடுத்து விடுவேன். சிலர் வீம்புக்கு எதுக்காகவும் சிரிக்க மாட்டார்கள். அவர்களை நான் கணக்கில் வைத்துக் கொள்ள மாட்டேன். சிரிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டாலே கேரக்டர் மாறி விடும். தொடர்ந்து ஒரு வாரம் நான் எந்த இசையைம் ரசித்துக் கேட்காமலிருந்தால் எனக்கு எதையோ பறிகொடுத்த மாதிரி ஆகிவிடும். இசைக்கு ஓய்வு கொடுத்தால் நோயாளி ஆகிவிடுவோம்.இதயம் ஓய்வெடுத்தால் நம் கதி என்ன எனவே ஓய்வுக்கு இனி ஓய்வு கொடுப்போம்.

நம்மில் பலர் ஒட்டலில் ரூம் போட்டால், வெளியே செல்லும் போது விளக்கு மின்விசிறி போன்றவற்றை நிறுத்துவதில்லை ; நாம் தான் ரூமூக்குப் பில் கொடுக்கிறோமே, அதில் கரண்ட் பில்லும் அடக்கம்தானே என்று நினைக்கிறோம். மாறாக ரூமைப் பூட்டுவதற்கு முன் விளக்கு, மின் விசிறியை நிறுத்தியிருந்தால் உங்களை அறியாமல் நாட்டிற்கு மின்சாரத்தை சேகரிக்கிறீர்கள்.உங்களைப் போல் எல்லோரும் பொறுப்புடன் நடந்து கொண்டால், ஓட்டல் காரரும் மின்கட்டணம் குறைந்தால் ரூம் கட்டணத்தைக் குறைக்கலாம். யாருக்கும் பயன் படாமல் எந்த ஒரு பொருளையும் வீணடிக்கக் கூடாது. குறிப்பாக இதே விஷயத்தை வீட்டில் கடைப்பிடித்துப் பாருங்கள். மாத பட்ஜெட்டில் உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இதே போல ஷேவிங் செய்யும்போது வாஷ் பேசனில் குழாயைத் திறந்து விட்டு விட்டு முகத்தைக் கண்ணாடியில் அப்படி இப்படித் திருப்பிப் பார்த்து ஷேவ் செய்து கொண்டிருந்தால், தண்ணீர் வீணாகிக் கொண்டே இருக்கும். ஷேவ் செய்யும் போது தேவையை உணர்ந்து அவ்வப்போது தண்ணீரைப் பயன்படுத்தினால் நீங்கள் நாட்டின் நீர்ப்பற்றாக்குறையை சரி செய்யும் ஓர் அணில் போல் ஆவீர்கள். பலர் வெளியூர்களுக்குப் போகும்போது எடுத்துச் செல்லும் பொருட்களைப் பார்த்தால் ஏதோ வீட்டைக்காலி செய்து விட்டுப்போவது போன்று இருக்கும். அளவறிந்து பொருட்களை எடுத்து சென்றால் அதிக லக்கேஜ் இல்லாத ஆளாக மாறி பயணம் பளு குறைவானதாக இருக்கும்.

நம்மில் பலருக்கு யாரிடம் எந்த நேரத்தில் எதைக் கேட்கலாம், எதைக் கேட்கக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம் இருப்பதில்லை. உங்களுக்கு என்ன வயது, குழந்தை இல்லையா சம்பளம் எவ்வளவு செல்போன் நம்பர் என்ன என்ன ஜாதி சொந்த வீடா இப்படிப்பட்ட கேள்விகளால் மனது கஷ்டப்படும் என்று தெரியாமல் கேட்பவர்கள் கால்வாசிதான். தெரிந்தே கேட்வர்கள் தான் முக்கால் வாசிப்பேர். நாம் இப்படிப்பட்ட கேள்விகளை மற்றவர்களிடம் கேட்காமல் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிவிட்டால் போதும், மற்றவர்கள் இந்த மாதிரி கேள்விகளைக் கேட்கும் போது நம் மனசு அவ்வளவாகப் பாதிக்காமல் பக்குவப்பட்டு விடும்.

சிலர் திடீரென்று நம் முன் வந்து என்னை ஞாபகம் இருக்கிறதா எங்கே எப்போ பார்த்தீங்க சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்பார்கள். நமக்கு சிலநேரம் கோபம் கூட வரும். இந்தக் கேள்வி கேட்பவர் நாம் ஞாபகத்தில வைத்துக் கொள்ளக் கூடியவராக இருந்தால் அவரைப் பார்த்த உடனே நமக்கு யார் என்று தெரிந்து விடுமே !

என்னுடைய ஞாபகசக்திக்கு ஓர் உதாரணம் - என் மகன்கள் எந்தெந்த வகுப்பு படிக்கிறார்கள் என்று கேட்டாலே குழப்பிச் சொல்லுவேன். என் கார் நம்பரையும் நான் மிகவும் யோசித்தே சொல்வேன். ஆனால், நான் டைரக்ட் செய்கிற படத்தில் காட்சி எத்தனை டேக் என்று கேட்டால் தூக்கத்திலும் சரியாகச் சொல்வேன்.

பல பிரபலமானவர்களிடமிருந்து நான் தெரிந்து கொண்டே ஒரு விஷயம் - முதலில் அவர்கள் தங்கள் பெயரையும், தொழிலையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் பிரபலமானவர் ஆக இன்று முதல் முயலுங்கள்.

 

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |11| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

   

  2008 - Lakshman Sruthi. All Rights Reserved                                                                               Feedback | Contact Us | Home