Desa Mangayarkarasi

Profile of  Sollarasi Desa Mangayarkarasi

இன்றைய உலகில் தமிழ் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றி வருபவர்களில் மிகவும் பிலபலமாக விளங்குபவர் தேச மங்கையர்க்கரசி ஆவார். இவர் திரு தேவி சண்முகம் பாக்கியலட்சுமி என்னும் தம்பதியருக்கு மதுரையில் 19.06.1984 அன்று மகளாகப் பிறந்தார். இவர் “மங்கை”, “அம்மா” மற்றும் “செல்லம்” என்றும் தாய் தந்தையரால் அழைக்கப்பட்டார். இவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரரும் உண்டு. சகோதரிக்குத் திருமணமாகிவிட்டது. கங்கை சக்ர முருகன் என்ற இவரின் சகோதரருக்கும் திருமணமாகிவிட்டது.
கல்வி: தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் எட்டாவது வரை மதுரையில் தெப்பக்குளத்தில் அமைந்துள்ள ரோஸரி சர்ச் பள்ளியில் படித்தார். ஒன்பதாவது, பத்தாவது வரை மதுரையில் உள்ள ஈ.வே.ரா நாகம்மை பள்ளியில் படித்தார். கல்லூரிப் படிப்பைத் தொடர இவருக்கு அவகாசமின்மையால் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.ஏ (இளநிலை) தமிழ் இலக்கியம் பயின்று முதலிடம் வகித்து தேர்ச்சி பெற்றார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகள் இவருக்கு தெரியும்.
இலக்கியப் பணி: இவரை மேடையில் தமிழ் மொழியில் இலக்கியச் சொற்பொழிவு ஆற்றிய பெருமை தந்தை தேவி சண்முகம் அவர்களைச் சாரும். இவர் முதன் முதலில் ஆற்றிய மேடைச் சொற்பொழிவின் தலைப்பு “இன்மையிலும் நன்மை தருவார் சிவன்” திருக்குறள், தேவாரம், திருவாசகம் மற்றும் பிற தமிழ்ப் பாயிரங்களில் பாண்டித்யம் பெற்ற இவர் தம் 6வது வயதில் திருக்குறள் பாடல்கள் 1330-ம் மனனம் செய்து மேடைகளில் பிரசங்கங்கள் ஆற்றி புகழின் உச்சிக்குச் செல்லும் வகையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தமிழ்ப்பதிகங்கள் இவருக்கு அத்துப்படி. தேவாரம், திருவாசகம், கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றுக் கொண்ட இவர் பரதநாட்டியக்கலையிலும் தேர்ச்சி பெற்றவராவார். 13.02.2011 ம் நாள் தமிழக அரசு இவருக்கு “கலைமாமணி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது. “கிருபானந்தவாணி” என்ற பட்டமும் இவருக்கு மதுரையில் வழங்கங்கப்பட்டிருக்கிறது. இவர் பள்ளியிலும் கல்லூரிகளிலும் நடைபெற்ற போட்டிகளில் வாங்கிய பரிசுகள் விருதுகள், பட்டங்கள், வெண்கலம் வெள்ளி மற்றும் தங்க கோப்பைகள் ஏராளம்.
இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஸ்விட்சர்லாந்து, மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில்தன் இலக்கிய உரைகளின் மூலம் தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். கூடைப்பந்து, இறகுப் பந்து ஆகிய விளையாட்டுக்களில் விருப்பங்கொண்டவர். கீபோர்டு மற்றும் ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகள் வாசிக்கத் தெரிந்தவர். இவரது முக்கியமான பொழுதுபோக்கு “படித்தல்” ஒன்றே ஆகும். இலக்கியச் சொற்பொழிவுகள் சம்பந்தமாக இதுவரை இவரது 12 குறுந்தகடுகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமல்லாமல் தன் அறிவுத் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் வகையில் “இந்து மதம் என்ன சொல்கிறது?” என்ற நூலையும் “நூறு ஆண்டுகள் இன்பச் சுற்றுலா” என்ற மற்றொரு நூலையும் எழுதியுள்ளார். அருள் வீடியோஸ் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இவரது 12 குறுந்தகடுகள் வெளி வந்துள்ளன.
மறக்க முடியாத நிகழ்வுகள் : மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி இவரது வாழ்வில் நடந்தவற்றைக் கூறவேண்டுமென்றால், முதலில் தன் குருநாதராகிய கிருபானந்த வாரியாரும் இவரும் சேர்ந்து ஒரே மேடையில் கந்தபுராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவை ஆற்றியதுதான். இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் 75வது ஆண்டு விழாவில் தலைமை ஆற்றிய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுடன் தானும், தவத்திரு குன்றக் குடி அடிகளாரும் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டத்தை தம்வாழ்நாளில் மறக்க முடியாததாகக் கருதுகிறார்.
கோவையில் சென்ற ஆண்டு 2010 ஜூன் மாதத்தில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் “இடைக்காலத்தமிழ்” என்ற தலைப்பில் பேச கலைஞர் முதல்வர் தமகக்களித்த வாய்ப்பினை பெரும்பேறாகக் கருதுகிறார். இலண்டனில் ஒருமுறை இவரது சொற்பொழிவைக்கேட்க அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி இவரை ஆரத்தழுவி, உச்சி முகர்ந்து முத்தமும் கொடுத்துதன் கையில் அணிந்திருந்த தங்க வளையலைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தார்.
இரண்டாவது நிகழ்வாக, இவர் நாகர்கோயிலில் இலக்கிய உரை நிகழ்த்தியதைக் கேட்ட ஒருவர் சற்றும் எதிர்பாராத வகையில் நான்கு பவுன் தங்கச் செயினைத் தன் கழுத்திலிருந்து எடுத்துப் பரிசாகக் கொடுத்து திகைக்க வைத்தார். விருத்தாசலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தன் கணவன், தன் குழந்தை மற்றும் சுற்றத்தாரை விட்டுவிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண், தான் அதற்கு முன்னதாக “பொதிகை” தொலைக்காட்சியில் இவர் அருணகிரிநாதர் பற்றி இலக்கிய உரை ஒன்றை நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஒரு உயரமான பகுதியில் இருந்துதன்னை மாய்த்துக் கொள்ள விரும்பிய அருணகிரிநாதர் தன் உடம்பில் எந்தக் காயமுமின்றித் தப்பித்ததோடு மட்டுமல்லாமல் இறைவன் முருகனின் புகழ்பாடும்படி அருணகிரிநாதருக்கு இட்ட கட்டளையிட்டதைக் கேட்ட அப்பெண்மணி தற்கொலை செய்து கொள்வதை விட்டுவிட்டார். இவரின் ரசிகையான அப்பெண் தேச.மங்கையர்க்கரசியை நேரில் சந்தித்து இப்படி ஒரு திருப்பம் தன் வாழ்வில் நேர்ந்ததற்கு அவரே காரணம் என்று பாராட்டி நினைவுப் பரிசொன்றை தனக்கு அளித்ததைப் பெருமையாகக் கருதுகிறார்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் இவரது பேச்சாற்றலைக்கண்டு கேட்டு வியந்த நடைபாதையில் காய்கறி விற்கும் ஏழை வியாபாரி ஒருவன் தனக்கு அன்று கிடைத்த சற்றே சிறய ஊதியமான ரூபாய் இரண்டை பரிசாக அளித்ததை நினைவு கூறுகிறார்.
தனது 6வது வயதில் மதுரை ஆடிவீதி திருக்குறள் கழகத்தில் ஆற்றிய இலக்கிய உரையைக்கேட்டு அக்கழகம் “திருக்குறள் செல்வி” என்ற பட்டம் இவருக்கு வழங்கியது. தான் 8வது படித்த காலத்தில் மதுரையில் உள்ள ஒரு கோவிலில் அருணகிரிநாதர் பற்றிய இலக்கிய உரையாற்றிமுடித்து விட்டு வீடு திரும்புமுன் கோவில் வாசலில் பராரி ஒருவன் படுத்துக் கொண்டுடிருந்ததைப் பார்த்து அவனுக்கு இவர் தன் கைப் பையிலிருந்து ரூபாய் பத்தை நீட்டியளித்ததைக் கண்டுத் துணுக்குற்ற அந்தப் பராரியோ இவரைப் பார்த்து எனக்கே ரூபாய் தானமாகக் கொடுக்கிறாயா நீயே அதை வைத்துக் கொள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நன்றாக இரு என்று ஆசிகளை வழங்கினானாம்.
பிற மதத்தவரான முஸ்லீம் ஒருவர் இவரது இலக்கிய உரையை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள மதுக்கூர் என்னும் இடத்தில் கேட்டுவிட்டு வியந்ததோடு மட்டுமல்லாமல் இவர் தலைக்கு மேலே நேராக ஒரு மகானின்உருவம் கையை அசைத்து ஆசீர்வாதம் வழங்குவது போல் இருந்ததாக தன்கைப்பட எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
குருபக்தி: திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இவரது குடும்பத்தினருடன் நேரடித் தொடர்பு கொண்டவர். இவரது தந்தை தேவி சண்முகம் கையிலிருக்கும் திருநீற்றை வாரியார் எடுத்துத் தன் நெற்றியில் இட்டுக் கொள்ளும் அளவுக்கு வாரியாரிடம் பரிச்சயம் இருந்திருக்கிறது. முதன் முதலில் இவரது இலக்கிய உரை ஒலிப்பதிவான தலைப்பு திருக்குறளும் இன்பமும்”. தேச மங்கையர்க்கரசியால் மறக்க முடியாதவர்களில் முதன்மையானவராக திருமுருக கிருபானந்தவாரியார் திகழ்கின்றார் மற்றும் ஒருவர் மதுரை டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் என்பவராவார். இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் இலட்சக் கணக்கில் உள்ளனர். கணவரிடமும் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இருப்பதை தனக்கு இன்பமான பொழுதாகக் கருதுகிறார்.
தனது குருநாதராகிய கிருபானந்த வாரியார் அவர்களது இறப்பை இன்னும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாத இழப்பாக கருதுகிறார். ஏனென்றால் இவர் தம் சிறு வயது முதற்கொண்டே வாரியார் அவர்களிடம் நேரடித் தொடர்பு கொண்டது மட்டுமின்றி மூச்சுக்கு மூச்சு அவரே நமக்கு எல்லாம் என்ற மனப்பக்குவத்தை ஏற்றக் கொண்டதுதான். தனக்குப் பிடித்த தினமாக இவர்கூறுவது எது வென்றால் தனது குருநாதர் திருமுருக கிருபானந்தவாரியாரின் பிறந்த நாள் ஆகும். குடிகாரர்கள், மனைவிகளை அடிக்கும் கணவன்மார்கள் இவரது இலக்கியச் சொற்களைக் கேட்டுமனம் திருந்தி நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ளப்போவதை இவரிடமே தெரிவித்ததை தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகின்றார். வாரியார் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டி அதில் அவர் அமர்ந்திருப்பதுபோல சிலை ஒன்றை நிறுவி அதற்குத் தங்கக்கலசம் வைத்து பாலபிஷேகம் நடத்தியதுதான் வாரியார் ஸ்வாமிகளுடைய உடன் பிறந்த சகோதரர் திருப்புகழ் மணி தாத்தாவின் பக்கத்தில் அமர்ந்து குருபக்தி என்ற இலக்கிய உரை நிகழ்த்த அதை அந்தப் பெரியவர் திருப்புகழ் மணி தாத்தா கேட்டுவிட்டுத்தன்னைப் பாராட்டிய நாளை என்றும் தனக்கு என்றும் பிடித்தமானதொன்றாகக் கருதுகின்றார். அதுபோல தன் குருநாதரின் நினைவுநாள் 07.11.1993. தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அன்பு, அருள் ஆகியோரின் பிறந்தநாள் 5.5.2010 மற்றும் கணவரின் பிறந்த நாளாகிய 9.5.1981 வாரியார் ஸ்வாமிகளின் பிறந்தநாள் 25.8.1906 ஆகிய நாட்களை என்றென்றும் மறக்கவே முடியாது என்கிறார்.
விருப்பங்கள் : இவருக்குப் பிடித்த ராகமாக கர்நாடக இசையில் ஹம்சத்வனியைக் குறிப்பிடுகிறார். அதுபோல “நின்னுகோரி” என்று ஆரம்பிக்கும் கர்நாடக இசையில் உள்ள வர்ணம் ஆகும் மேலும் தனக்குப் பிடித்த இசையாக “குழந்தைகளின் மழலையே” என்கிறார். தனக்கு மிகவும் பிடித்த மேடை அரங்கமாக சென்னை, மாம்பலத்தில் அமைந்துள்ள அயோத்தியா மண்டபத்தைக் குறிப்பிட்டார். இவருக்குப் பிடித்தமானவர்களாக இன்னும் கருதுவது, தன்னோடு இளமைக் காலத்தில் பரதநாட்டியம் மற்றும் கர்நாடக இசை கற்றுக் கொண்ட (பெண்கள்) ஆகும். தனக்குப் பிடித்த தமிழ் திரைப்படமாகத் தில்லானா மோனாம்பாள் என்று தெரிவிக்கிறார் பாடலாசிரியர்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அருணகிரிநாதர், பட்டிணத்தார், காரைக்காலம்மையார் ஜோதி இராமலிங்க அடிகளார் ஆகியோரைக் குறிப்பிட்டார். தனக்குப் பிடித்த இசைக் கருவியாகிய வீணையில் பிரபலமாக இன்று விளங்கி வரும் ராஜேஷ்வைத்தியா வைக்குறிப்பிடுகிறார். இவருக்கு மிகவும் பிடித்தமான உணவு சைவம் ஒன்றே. பச்சை நிறம் இவருக்கு மிகவும் பிடிக்கும் சேலை அணிவதையே மிகவும் விரும்புகிறார். தனக்குப் பிடித்த இடமாகத் தனக்கு சிறந்த வாழ்வளித்த சென்னையைக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இவரை மிகவும் கவர்ந்த இடம் ஸ்விட்ஜர்லாந்து ஆகும். சிறு வயதில் விளையாட்டுக் கலைகளில் இவருக்கு ஆர்வம் இருந்திருக்கிறது. இப்பொழுது நேரமின்மையால் அதைத் தொடர முடியவில்லை என்றார். தனக்கு மிகவும் பிடித்த நூல் திருக்குறள் என்கிறார்.
சிறந்த தலைவராக நேரு, காந்தி காமராஜ் டாக்டர் கலைஞர் என்று பட்டியலே நீள்கிறது. கார் வேகமாக ஓட்டுவதில் இவருக்கு மிகுந்த விருப்பம் இருந்தாலும் பெற்றோர்களின் அறிவுரைப்படி ஓட்டுவதில்லை. தனது இலக்கிய உரைக்குப்பிறகு பிடித்தமான ஒரு கலையாக இசையைத் தேர்ந்தெடுக்கின்றார். இலக்கிய உரைச் சொற்பொழிவு ஆற்றவந்திருக்காவிட்டால் ஆசிரியர் பணிக்குத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்திருப்பார். இளமைக் காலத்தில் தான் பழகி வந்த தோழர்களை சந்திக்கும்போதெல்லாம் அளவில்லா ஆனந்தம் கொள்வதாகத் தெரிவிக்கின்றார். தனக்குப் பிடித்த உறவினராக தனது தாய் தந்தையே என்று பட்டென்று பதிலளிக்கிறார். வெளிநாட்டில் இலக்கிய உரையாற்றிய சம்பவம் பற்றிக் குறிப்பிடுகையில் இலங்கையில் உரையாற்றியதைப் பெருமையுடன் கூறிக் கொள்வதோடு ஆனந்தப்படவும் செய்கிறார். தனது சுயசரிதையைத் தம் வாழ்நாளில் எழுதுவது நிச்சயம் என்கிறார். சமூகத்திற்குதான் ஆற்ற விரும்பும் பங்களிப்பாக வருங்காலத்தில் இலக்கிய உரைக்கென்று தனியாக ஒரு பள்ளியை நிறுவுவதைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டிருக்கிறார். தாய் தந்தையரையும் அக்குடும்பத்தில் பிறர்ந்ததையும் மிகவும் பெருமையாகக் கருதுகின்றார். தனது இலக்கிய உரை அனுபவங்களைத் தொகுத்து நூலாக வருங்காலத்தில் வெளிவருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகக் கூறுகிறார். தான் சம்பாதித்த்தில் பெருமையாகக் கருதுவது ரசிகப்பெருமக்களைத்தான் என்று மகிழ்வுடன் கூறுகிறார்.
வானொலி, தொலைக்காட்சி விவரங்கள் தனது 6-வது வயதில் மதுரை வானொலியில் “குறள் காட்டும் கதைகள்” என்ற தொடரில் உரையாற்றியதை முதல் நிகழ்வாக கூறுகிறார். அதேபோல “பொதிகை”, “சன்” மற்றும் விஜய் தொலைக்காட்சிகளில் தோன்றியிருக்கிறார். விஜய் டிவியில் நையாண்டி தர்பார் தலைப்பில் முதன் முதலாக தோன்றியிருக்கிறார். தனது குடும்பம் என்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். என்றென்றும் தான் ரசிகப் பெருமக்களால் விரும்பப்படுவதற்கு ஆண்டவன் அருள்புரிய வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கினறார். அவ்வப்போது தன்மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும் ஒரே மனித ஆன்மா திருமுருக கிருபானந்த வாரியாரே என்கிறார். வாரியார் மரணம் தனக்கு நீண்ட நாட்களுக்கு அறிவிக்கப்படாததை மிகவும் விசனப்படச் செய்கிறது என்கிறார். தனக்கு இன்று கிடைத்திருக்கும் புகழ் என்றென்றும் வாழ்நாள் உள்ளவரை ரசிகப் பெருமக்களின் ஆதரவுடன் நீடித்திருக்கவேண்டும் என்று விரும்புகிறார். தன் உறவினர்கள் இலக்கியத் துறையில் இதுவரையில் வரவில்லை என்கிறார்.
முகவரி: “ஆன்மீக திலகம்” தேச மங்கையர்க்கரசி, இலக்கியச் சொற்பொழிவாளர் 706-இ, வளர் நகர், உத்தங்குடி, மதுரை-625107. தமிழ்நாடு, இந்தியா

 சென்னை விலாசம்: பழைய எண்.11-இ, புதிய எண்.5, வேதவள்ளி தெரு, சாலிகிராமம், சென்னை-600 093 தொலைபேசி: 9443143810, 9442450581

More Profiles