Geetha Raja

                 Profile of Geetha Raja 

கர்நாடக இசை உலகில் இன்று பிரபலமான பெண் வாய்ப்பாட்டுக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர். திருமதி கீதாராஜா ஆவர். இவர் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட வி. பாலகிருஷ்ணன், பாமா தம்பதியருக்கு 05.06.1955 அன்று மகளாய்ப் பிறந்தார். இவருக்கு ஒரே ஒரு இளைய சகோதரர் உண்டு. இவர் கணவரது பெயர். எஸ்.கே. ராஜா ஆகும். 
கல்வி பள்ளிப்படிப்பை மும்பை, மாதுங்காவில் உள்ள ஆக்ஸிலியம் கான்வென்ட்டில் படித்து முடித்தார். இவர் மும்பை சயானில் உள்ள S.I.E.S என்ற கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலை இலக்கியம் படித்துத் தேறினார். [M.A. ENGLISH. LITERATURE]. இது தவிர பிரெஞ்சு மொழியில் இளங்கலையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். (B.A. FRENCH) மும்பைப் பல்கலைக் கழக பட்டதாரியான இவர் புது டெல்லியில் கந்தர்வ மகா வித்யாலயாவில் இசைக்கலையிலும் முதுகலைப்பட்டம் பெற்றார் (M.A. MUSIC). தமிழ்மொழியைத் தவிர ஆங்கிலம் ஹிந்தி, மராத்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு ஆகிய மொழிகள் இவருக்குத் தெரியும். இவரின் இசை குருவாக விளங்கியவர்கள் முதன் முதலில் தனது தாய் தந்தையர் மற்றும் “சங்கீத கலாநிதி“ டி. பிருந்தா, சங்கீத கலா ஆச்சார்யா“ மும்பை ராமச்சந்திரன், கே.எஸ். நாராயணஸ்வாமி. “பத்மஸ்ரீ“ குன்னக்குடி வைத்யநாதன் ஆகியோர் ஆவார்.
மும்பையில் நளந்தா நடன ஆய்வுக் கழகத்தில் சில மாதங்கள் பணி புரிந்தார். மும்பை S.N.D.T பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கௌரவப் பேராசிரியர் (VISITING PROFESSOR) ஆகவும் பணி புரிந்துள்ளார். முதன் முதலில் இவர் செய்த சபா கச்சேரி புது டெல்லியில் நடைபெற்றது. கச்சேரி மேடையில் தான் பாடிய முதல்பாடல் ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த “வாதாபி கணபதிம் பஜே“ ஆகும். ஏராளமான கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்ட இவருக்குத் தமிழக அரசு 2006 –ல் “கலைமாமணி“ பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. 2007 –ல் ஜெயதாரிணி என்னும் அமைப்பு “ஜெயரத்னா“ என்ற விருதை இவருக்கு அளித்திருக்கிறது. 2007-ல் கர்நாடக இசையில் “தமிழிசை“ பற்றிய ஆய்வுக்காக இவருக்கு மத்திய அரசின் கலைப்பண்பாட்டுத்துறை நிதி உதவி அளித்துள்ளது.
2006–ல் மஹாராஜபுரம் சந்தானம் டிரஸ்ட் இவருக்கு தலை சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர் என்ற பட்டத்தை அளித்த்து. 2004-ல் “பண்ணிசை மாமணி“ என்ற பட்டத்தை குன்னக்குடி மீனாட்சி ராமஸ்வாமி டிரஸ்ட் வழங்கியது. 2001-ல் கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மட பீடாதிபதி ஸ்ரீசங்கராச்சாரியார்“ ஆஸ்தான விதூஷி“ என்ற பட்டத்தை இவருக்கு வழங்கினார். 2000 –ல் சென்னை சங்கீத வித்வத்சபை (MUSIC ACADEMY) ராக ஆலாபனையில் சிறந்தவராகத் தேர்வு செய்து “டாக்டர்.எஸ். பினாகபாணி விருதை” அளித்துள்ளது. 1998–ல் “டி.எஸ். சபேச அய்யர்”, “தஞ்சாவூர் கே. பொன்னைய்யா பிள்ளை விருதுகளை” சென்னை சங்கீத வித்வத் சபை (MUSIC ACADEMY) கீதா ராஜாவிற்கு அளித்துக் கௌரவித்துள்ளது. இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பில் 1991 –ல் “சஞ்சாரி“ என்ற நடன டாக்குமென்ட்டரி படத்திற்காக இவர் பாடியிருக்கிறார்.
1998- 1990 – இவ்விரு வருடங்களில் இந்திய அரசு, கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கும் “FELLOWSHIP” விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
1998–ல் அகில இந்திய வானொலி நிலையம் ஆந்திர மாநிலத்தில் விசேஷமாக அழைக்கப்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இவரது கர்நாடக இசைக் கச்சேரியை ஏற்பாடு செய்தது. 1977–ல் சென்னை இயல், இசை நாடக மன்றம் இவருக்கு தென் இந்தியாவிலுள்ள பல இடங்களில் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்ய வாய்ப்பளித்துள்ளது. 1976–ல் மும்பையிலுள்ள சுர் சிங்கார் ஸம்சாத் என்ற அமைப்பு இவருக்கு “சுர் மணி“ என்ற பட்டத்தையளித்துக் கௌரவித்துள்ளது. 1975 –ல் ஸ்ரீகிருஷ்ண கான சபா (சென்னை) இவருக்கு “கோகுலாஷ்டமி” விருதையளித்தது. 1971–74–ல் அகில இந்திய வானொலி நிலையம் நடத்தும் கர்நாடக இசைப் போட்டி, மெல்லிசைப் போட்டிகளில் பல விருதுகள் வாங்கியிருக்கிறார்.
1967 லிருந்து 1975 வரை நடந்த எல்லா இசைப்போட்டிகளிலும், சபாக்கள் நடத்திய போட்டிகளிலும் தங்கப்பதக்கமும் மற்றும் இதர பரிசுகளையும் வென்றிருக்கிறார். ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ரஷ்யா, இலண்டன், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து இருக்கிறார். இசைப் பயிற்சி முகாம்களில் இவர் அங்கு கலந்து கொண்டு இசை சம்பந்தமான பயிலரங்கங்களில் உரையாற்றியிருக்கிறார். பாடுவதைத் தவிர இசை சம்பந்தமான புத்தகங்கள் படிப்பதிலும் ஆர்வம் காட்டும் இவர் வீணை நன்றாக வாசிக்கக் கூடியவர். உலகின் பல பாகங்களுக்கு அதிலும் குறிப்பாக புதுப்புது இடங்களைக் காண்பதில் இவருக்கு ஆர்வம் மிக அதிகம் உண்டு.
கர்நாடக இசைத் துறைக்கு வருவதற்கு முன் மும்பையில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக ரூபாரெல் கல்லூரியில் பணிபுரிந்துள்ளார். கீதா ராஜா அவர்கள், சங்கீதா, ஹெச். எம்.வி. ஸரிகமா, அமுதம், கலாவர்த்தனி, ட்ரீம்ஸ் ஆடியோ, கீதா போன்ற இசை ஒலி நாடாக்கள் தயார் செய்யும் நிறுவனங்களில் பாடியிருக்கிறார். கல்யாணி ராகம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறும் கீதா ராஜாவிற்கு பைரவிராகத்தில் அமைந்த “விரிபோணி“ என்ற அடதாள வர்ணத்தையும் விரும்புவதாகத் தெரிவித்தார். இவர் குருவைத் தவிர விரும்பும் மற்ற கர்நாடக இசைப் பிரபலங்கள் : K.V நாராயணஸ்வாமி T.V. சங்கர நாராயணன், வோலேட்டி வெங்கடேஸ்வரலு ஆகியோராவர்.
அதே போல பிரபலமாக விளங்கிய எம்.எஸ். சுப்புலட்சுமி, கே. பட்டம்மாள். எம்.எல் வசந்தகுமாரி ஆகியோரின் இசைப்புலமை மற்றும் குரலினிமை தன்னைக் கவர்ந்த ஒன்றாகும் என்றார். சாகித்ய கர்த்தாக்களில் ஸ்ரீ த்யாகய்யர். தாம் பெரிதும் போற்றும் மகானாவார் என்று கீதா ராஜா தெரிவித்தார். உறவினர் என்று சொல்லும் பட்சத்தில் தம் கணவர் எஸ்.கே. ராஜாவைக் குறிப்பிட்டார். தாம் உண்ணும் வகைகளில் வற்றல் குழம்பு மிகவும் பிடிக்கும் என்றார். வர்ணங்களில் பச்சையும், பெரும்பாலும் உடை விஷயத்தில் புடவையணிவதையே பெரிதும் விரும்புகிறார்.
தனக்குப் பிடித்தமான இடமாக சென்னையைக் குறிப்பிடும் இவர் கிரிக்கெட் விளையாட்டை விரும்பி ரசித்துப் பார்ப்பார். பி.ஜி. வோட் ஹவுஸ் புத்தகங்கள் தமக்கு மிகவும் படிக்கப் பிடிக்கும் என்றார். சிறந்த தலைவர்களில் மகாத்மா காந்தியைக் குறிப்பிட்டார். இசைத்துறையில் அல்லாது மற்ற துறையில் சிறந்த விளங்கும் “தபோவனம்” குருஜி ஹரிதாஸ்கிரி ஸ்வாமிகள் அவர்களின் நாம சங்கீர்த்தனம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். தனக்குப் பிடித்த வாகனம் “கார்“ என்றார்.
பொது: தாம் தினசரி பூஜை செய்தல், இசைப் பயிற்சி செய்தல் மாணவர்களுக்கு இசை கற்றுக் கொடுப்பது, அவ்வப்போது சமூகப் பணிகள் செய்து வருகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் தன்னை மிகவும் விரும்புவதாகக் கூறினார். ஒருவேளை கர்நாடக இசைத்துறைக்கு வந்திருக்காவிட்டால் தாம் ஆங்கில விரிவுரையாளராக இருந்திருப்பார் என்று தெரிவித்தார். சிறு வயது முதற் கொண்டே தான் விருப்பப்பட்ட இசைத் துறையைத் தேர்ந்தெடுத்தாகக் கூறினார். தான் பழகிய பழைய நண்பர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் கிடைக்கும் சந்தோஷமே அலாதி என்றார்.
அதிதி, ஸ்ருதி என்ற இவரின் இரு பெண்களுக்கும் திருமணமாகிவிட்டது. அவர்கள் தற்போது அயல் நாட்டில் வசித்து வருகின்றனர். தனது இசையனுபவங்களை நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளதாகத் தெரிவித்தார். ரசிகப் பெருமக்களின் ஆதரவு தொடர்ந்து தமக்கு சந்தோஷம் அளிப்பதாக என்றார். 1973–74–ல் அகில இந்திய வானொலியில் நடந்த கர்நாடக இசைப் போட்டிகளில் முதல் பரிசை வென்று நேரிடையாகவே B HIGH GRADE நிலைக்குத் தகுதி பெற்றிருக்கிறார். வானொலியில் நடக்கும் மெல்லிசைப் போட்டிகளிலும் கர்நாடக இசை மெல்லிசைப் போட்டிகளிலும் கலந்த கொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
11.07.1983 அன்று அகில இந்திய வானொலி இவருக்கு “A“ கிரேடு அந்தஸ்தை அளித்ததோடு மட்டுமல்லமால் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுத்து பல இசை நிகழ்ச்சிகளை ஆந்திர மாநிலத்தில் ரசிகர்களின் முன்னிலையில் அளிக்கச் செய்து இருக்கிறது. தேசிய இசை நிகழ்ச்சிகளில், சென்னையில் 05.05.2002 அன்றும் திருவையாற்றில் 18.01.2003 அன்றும் இவரது கர்நாடக இசைக் கச்சேரிகள் ஒலிபரப்பாகி உள்ளன. 1995-ல் ஆகாஷ் வாணி சங்கீத் சம்மேளனம் திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் இவரது கர்நாடக இசையை ஒலிப்பரப்பி இருக்கிறது.
மறக்க முடியாத சம்பவங்கள்:- தமது குடும்பத்தினருடன் இருப்பது எல்லையில்லாத மகிழ்ச்சியையும், அவர்களுடன் சேர்ந்து விடுமுறையில் சுற்றுலா ஸ்தலங்கள் செல்வதிலும், அவர்களோடு திரைப்படங்கள் பார்ப்பதிலும் அலாதி ஆனந்தம் அளிக்கிறது என்றார். நகைச்சுவை பற்றி குறிப்பிட்ட அவர் ஹாஸ்ய நடிகர் நாகேஷ் அவர்களின் நடிப்பை மறக்கவே முடியாது என்றார். கவலைகள் என்று தனக்கு எதுவும் இருந்ததில்லை என்று தெரிவித்த அவர் தனக்கு விருப்பமான கிழமை “ஞாயிறு“ என்றும் தெரிவித்தார். தமக்கு மிகவும் பிடித்த இடமாக சென்னையையும், மும்பையையும் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கலிபோர்னியாவை சுற்றிப்பார்க்க ஆசைப்படுவதாகக் கூறினார். மேடைக் கச்சேரிகள் செய்து முடித்த பின்னர் கிடைக்கும் ஒருவகை நிம்மதி தனக்கு எப்பொழுதும் நீடிக்க வேண்டும் என்கிறார்.
ஒலிப்பதிவான தம் பாடல்களைக் கேட்கும் பொழுது இன்னும் அதிக சிரத்தை எடுத்துச் செய்திருக்கலாம் என்ற உத்வேகம் வருகிறது என்றும் குறிப்பிட்டார். தனக்கு கர்நாடக இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு முதன் முதலில் சன்மானமாக வாங்கிய தொகையில் ‘‘டேப் ரிகார்டர்“ வாங்கியதாகக் குறிப்பட்டார் கேரளாவில் அமைந்துள்ள கண்ணனூரில் கொட்டும் மழையில் ரசிகர்கள் குடை பிடித்துக் கொண்டே மழையில் நனைந்தபடி இவரின் கர்நாடக இசைநிகழ்ச்சியைக் கண்டு ரசித்த மக்களை மறக்கவே முடியாது என்று தெரிவித்தார்.
ஸ்ரீலங்காவில் கதிர்காமல் சுற்றிப் பார்த்ததையும் மறக்கவே இயலாது என்றார். கர்நாடக இசை மட்டுமன்றி ஹிந்துஸ்தானி இசை தமக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மியூஸிக் அகாடெமியின் ஆதரவில் இவர் பதம், ஜாவளி போன்ற உருப்படிகளை மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறார். தன் குரலினிமைக்காக, முடிந்தவரை கச்சேரி செய்யும் நாட்களில் அதிகமாகப் பேசுவதை குறைத்துக் கொண்டும், ஆழ்ந்து உள்மூச்சை வாங்குவதிலும், பிராணாயாமம் செய்வதிலும் கவனம் செலுத்துகிறார். குளிர்காலங்களில் முகத்திற்கு SCARF அணிந்து கொள்கிறார்.
ஒருமுறை பெல்ஜியத்தில் நடந்த “பெண்களின் குரல்“. (VOICES OF WOMEN) என்ற விழவில் அவரவர் துறையில் தேர்ந்த பெண் கலைஞர்கள் உலகின் பல பாகங்களிலிருந்து வந்து கலந்து கொண்டனர். திருமதி கீதா ராஜா அவர்கள் தாம் எடுத்துக் கொண்ட தலைப்பான கர்நாடக இசை பற்றியும் ராகம், தாளம் பற்றியும், ஆரோஹணம், அவரோஹணம் பற்றிய சிறுவிளக்கவுரையைத் தயார் செய்து கொண்டார். தான் பிரெஞ்சு மொழியில் கற்றுத் தேர்ந்தவர் என்பதனால் மேற்கொண்ட விளக்கவுரையை பிரெஞ்சு மொழியில் தயார் செய்து முதன் முதலில் கர்நாடக இசையில் வரும் ஆரம்பப் பாடங்களான ஸ்வராவளி பாடப்படும் முறையை விளக்கிக் காட்டினார். பிறகு தாம் நிகழ்த்தவிருக்கும் உரை நடத்திக் காட்டுதலில் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடலை அங்குள்ள மாணவர் குழுவுடன் பியானோ என்ற இசைக் கருவியின் உதவியுடன் சேர்ந்து பாடிய போது விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டியதோடு பலத்த கரவொலி எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்றார்.
பிரெஞ்சு வானொலியில் தாம் நிகழ்த்திய கர்நாடக இசைக் கச்சேரி தனக்கு ஒரு புதிய அந்தஸ்தையும், கௌரவததையும் அளித்ததாகக் கூறினார். பிரான்ஸில் உள்ள “நாதோபாசனா“ என்ற அமைப்பில், அங்குள்ள பிரெஞ்சு மாணவர்களுக்கு கர்நாடக இசைப்பயிற்சி முகாம் ஒன்றை நடத்திக் காட்டியிருக்கிறார். ஒருமுறை கீதாராஜா அவர்கள் தமது கர்நாடக இசை நிகழ்ச்சிக்காக பெல்ஜியம் சென்ற போது பிரஸ்ஸெல்ஸ் (BRUSSELS) என்ற இடத்தில் ஒரு பெண்மணி பிரசவம் ஏற்படும் தருணத்தில் தம்பூராவை மீட்டும் போது வரும் இசை ஒலியைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை அவ்வாறே பூர்த்தி செய்து கொண்ட சம்பவத்தைக் கூறினார்.
இவர் தெரிவித்த மற்றும் ஒரு தகவல் என்னவென்றால் கோபாலகிருஷ்ண பாரதியாரின் “நந்தனார் சரித்திரத்தில்“ வரும் பாடலான “வருகலாமோ உன் அருகில் ஆடவும், பாடவும் கொண்டாடவும் வருகலாமோ ஐயா“ என்று நந்தனார், சிவ பெருமானிடம் வேண்டிக் கொள்ளும் பாடலின் விளக்கங்களைக் கூறிய பிறகு அப்பாடலை பாவத்தோடும், உருக்கமாகவும் பாடிக்காட்டியதை அங்குள்ள வெளிநாட்டு ரசிகர்கள் பாடலின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நெக்குருகியதையும் அவ்வரிகள் எந்த அளவுக்கு மகத்துவம் வாய்ந்த்து என்பதை அவர்கள் உணர்ந்த்தை வியப்புடன தெரிவித்தார்.
முகவரி MRS. GEETHA RAJA NO. 81, LUZ CHURCH ROAD. 1ST FLOOR, D-5 PALANISAMY APARTMENTS, MYLAPORE, CHENNAI – 600 004. geetharaja@5gmail.com www.geetharaja.com Ph: 044 - 2499 39 39 Mobile :9380693939

More Profiles