Jai Balaiyah

Profile of Jai Balaiyah (film artist, singer, mimicry artist)

இன்றைய திரைப்பட மெல்லிசைக் குழுவினரில் ஜெய்பாலைய்யா நடத்திவரும் “திரையமுதம்” என்ற அமைப்பு பல வகையில் விசேஷமாகக் குறிப்பிடப்படும் குழுவாகும். தனது அன்பார்ந்த ரசிகர்கள், நண்பர்கள் வட்டாரத்திலும் ,உறவினர்கள் உட்பட J.B.என்று செல்லமாக அழைக்கப்படும் ஜெய்பாலைய்யா, மாபெரும் திரைப்பட பழம் பெரும் நடிகர் T.S. பாலையா அவர்களின் திருமகனாவார். இவரது தாயார் பெயர் திருமதி பி. பத்மாவதி ஆகும். கணேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவரின் பிறந்த தேதி 10.04.1955 ஆகும். இவருக்கு காளிச்சரண் என்ற ஒரே மகன் உண்டு. அவர் சமையற்கலையில் பட்டப்படிப்பு படித்துத் தேறியிருக்கிறார். இளமையிலேயே நாம் வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலாவது சாதித்து காட்டுவோம் என்ற ஒரு இலட்சிய வெறியுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார். “கலைத்தாய்“ இவரை அரவணைத்துக் கொள்ளும் வண்ணம் ஜெய்பாலைய்யாவின் முன்னேற்றப்படிகள் வெற்றிப்படிகளாகவே தொடர ஆரம்பித்தன.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவர் சென்னை, தியாகராயநகர் ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் L.K.G. &U.K.G யும், சென்னை, சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் பள்ளியில் முதலாவது வகுப்பிலிருந்து நான்காம் வகுப்பு வரையிலும், அதன் பிறகு தியாகராய நகர், பெஸண்ட் பள்ளியில் 5-வது வகுப்பு முதல் S.S.L.C வரையிலும், Dr. T.S. நாராயணசாமி அவர்களின் சைதன்யா டியூஷன் சென்டரில் P.U.C படித்துத் தேறினார். (பாட்டியாலா பல்கலைக்கழகம்) பெஸண்ட் பள்ளியின் முதல்வராக இருந்த சி. சரோஜினி ராவ் அவர்கள் இவரின் கலைத்தாகத்திற்கு வித்திட்டவர் ஆவார்.
தனது மானசீக குருவாக Dr. T.S.நாராயணசாமி, பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் T.M.சௌந்திரராஜன், மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் ஆகியோரை ஏற்றுக் கொண்டார். இந்தி மொழியில் பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் அவர்களையும் தனது மானசீக குருவாகக் கருதுகிறார். திருமதி ஸ்ரீலட்சுமி என்பவர் இவருக்கு ஹிந்தி மொழியைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர் ஆவார்.
முதன் முதலில் ஜெய்பாலைய்யா அவர்களை மேடைக் கச்சேரிகளில் அறிமுகம் செய்து வைத்த பெருமை 1970-களில் புகழ்பெற்று விளங்கிய காமேஷ், ராஜாமணி, ஏ.வி. ரமணன், வி. சந்திரன் ஆகியோரையே சாரும். சென்னை Fridends Cultural Academy–யின் ஆதரவில் இவரின் முதல் மேடைப் பாடல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோயில் திரைப்படத்தில் வரும் “என்னைத் தெரியுமா“ என்ற பாடலாகும். இதுவரை சுமார் 1,100–க்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கச்சேரிகளில் பாடி அருஞ்சாதனை புரிந்திருக்கிறார். தாம் படித்த பள்ளி நாட்களில், கலந்து கொண்ட மெல்லிசைப் போட்டிகளில் வென்று வாங்கிய பரிசுகள், சான்றிதழ்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் ஏராளம் என்றார்.
மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி, ஸ்ரீலங்கா ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று மெல்லிசைக்கச்சேரிகள் செய்திருக்கிறார். இவர் “மௌத் ஆர்கன்“ என்ற இசைக்கருவியை வாசிப்பதில் விற்பன்னர். ஹிந்து முன்னணி அமைப்பு “நமது விஞ்ஞான சாதனைகள்“ என்ற தலைப்பில் இவரது குரலைப் பதிவு செய்து “குரல் தொகுப்பு“ ஒன்றை குறுந்தகட்டில் வெளியிட்டுள்ளது. வருங்காலத்தில் தானே பாடல்கள் எழுதி, இசையமைத்து இசைத் தொகுப்பு [ALBUM] ஒன்றை வெளியிடும் எண்ணம் தனக்கு உள்ளது என்றும் கூறினார்.
சந்தோஷம்: சென்னையில் தான் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் பெரும்பாலும் ஆட்டோ ரிக்க்ஷா ஒட்டுநர்கள் இவரை நன்கு அடையாளங் கண்டு கொண்டு உடனே அவரின் இசை நிகழ்ச்சிகளைப் பற்றிப் புகழாரம் சூட்டுவது தனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது என்கிறார். தன்னுடன் பழகிய இளமைக்கால நண்பர்களைக் காணும் பொழுது அளவிடற்கரிய ஆனந்தம் அடைவதாகத் தெரிவித்தார்.
மறக்கமுடியாத சம்பவங்கள் ஒரு முறை சின்னாளப் பட்டியில் அம்பாத்துரை கோவிந்தன் என்னும் SPONSOR மூலம் 15.08.2010 அன்று சுதந்திரதினத்துடன் எம்.ஜி,ஆர் விழாவும் கொண்டாடப்பட்டதில் தான் அளித்த இன்னிசை நிகழ்ச்சியை இன்னும் தன் நெஞ்சை விட்டு அகலாத ஒன்றாகக் கருதுகிறார். மேலும் சிவகுமார் என்பவரின் திருமணத்திற்கு மெல்லிசை நிகழ்ச்சி செய்த இவர் அவருடைய மகளின் திருமணத்திற்கும் மெல்லிசை நிகழ்ச்சியை அளிக்கும் அரிய வாய்ப்பினை பெற்றார். யாருக்கும் கிடைக்கப் பெறாத வாய்ப்பாகத் தனக்கு அமைந்ததை தன் வாழ்நாளில் மறக்கவே இயலாது என்கிறார்.
ஒரு சமயம் சென்னை, மியூசிக் அகாடமியில் இவரது நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது இவர் பாடும் நேரம் பார்த்து ஒலிபெருக்கி சரிசெய்பவர் கவனக்குறைவாக ஸ்விட்ச் ஆப் செய்ததன் விளைவாக நிகழ்ச்சியைக் காணவந்த ரசிகர்களின் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று என்பதை தன்னால் மறக்க முடியாத நகைச்சுவை சம்பவம் என்று அந்நிகழ்வை பற்றிக் குறிப்பிட்டார். தனது தாய், தந்தை மரணம், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், S.A. அசோகன் ஆகியோரின் மரணம் தன்னால் என்றும் மறக்கவே இயலாதது என்றார். ஒரு முறை சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தனது மெல்லிசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “ராசாத்தி ஒன்னே காணாத நெஞ்சு“ என்ற பாடலைக் கேட்ட ஹோட்டல் உணவு பரிமாறும் சிப்பந்தி ஒருவர் தன் சட்டைப் பையிலிருந்த இரண்டு ரூபாயை இவருக்குச் சன்மானமாக அளித்ததைப் பெறும் பேறாகக் கருதுகிறார்.
மெல்லிசைக் கலைஞர்கள் காமேஷ் ராஜாமணி தனக்கு அளித்த முதல் சம்பளமான ரூ. 100/-ஐ தன் தாயாரிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டதையும் தான் மறக்கவே முடியாது என்றார். ஒரு சமயம் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உடல் நலங்குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அதே நேரம் ஜெய்பாலைய்யா அவர்கள் தன் இடதுகை அறுவைசிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கவிஞரிடம் உடல் நலன்களை விசாரித்து விட்டுத் திரும்பும் வழியில் எதேச்சையாக ஜெய் பாலைய்யாவைப் பார்த்ததும் திடுக்கிட்டவராய் அவரிடம் உடல் நலம் விசாரித்து விவரங்கள் அனைத்தையும் கேட்டு அறிந்து கொண்டு, மருத்துவ மனையில் இருந்த கல்வித் துறை, துணை இயக்குநர் ராமன்பிள்ளையிடம் ஜெய் பாலைய்யாவிற்கு வேண்டிய சிகிச்சைக்குரிய சகல வசதிகளையும் செய்து தருமாறு உடனடியாக உத்தர விட்டார். இதைச் சற்றும் எதிர் பார்த்திராத ஜெய் பாலைய்யா எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் மனித நேயத்தையும் அவரது தயாள குணத்தையும் தான் வியந்து பாராட்டியதாகத் தெரிவித்தார். மற்றும் ஒருமுறை இவர் 1987–ல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களைக் காணும் சந்தர்ப்பம் கிட்டிய போது எம்.ஜி.ஆர் இவரிடம் வரப்போகும் பொங்கல் திருநாளன்று அவசியம் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் இவரது துரதிர்ஷ்டம் காலன் எம்.ஜி.ஆர் அவர்களை 24-12-1987 அன்று அழைத்துக் கொண்டதைத் தம்மால் இன்னும் மறக்க இயலவில்லை என்றார். தான் மிகவும் எதிர்பார்த்து ஆனால் கிடைக்காமல் போன மிகவும் வருத்தப்பட்ட சம்பவமாக எம்.ஜி.ஆர் அவர்களின் மரணம் தன்னை மிகவும் பாதித்தது என்று கூறினார். எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்தாலும் அவர் தனக்கு அளித்த தன்னம்பிக்கை வார்த்தைகள் தான் இன்றும் தன்னை வழி நடத்திச் செல்வதாகத் தெரிவித்தார்.
ஜெய் பாலையா, “கிஷோர் குமார் குரலின் மறு பதிப்பு“ (REVOICE OF KISHORE KUMAR) என்று அபுதாபியின் அதிபரால் கௌரவப்படுத்தப்பட்டார். பிரபல இந்தி திரைப்பட நடிகரும், பின்னணிப் பாடகருமான கிஷோர் குமார் அவர்கள் “மெஹ்பூபா” திரைப்படத்தில் “மேரே நேய்னா சாவன் பாதோ(ன்)” என்று தொடங்கும் வரிகளில் பாடிய பாடல், இவருக்கு இந்தக் கௌரவத்தை அளித்தது. இப்பாடலைக் கேட்ட அபுதாபி அதிபர் இவரை உருது மொழியில் புகழ்ந்து தள்ளியதை யூகித்துக் கொண்ட ஜெய் பாலையா அதிபரிடம் ஆங்கிலத்தில் பேசி இருந்தால் தனக்கு இன்னும் சந்தோஷத்தை அளித்திருக்கும் என்று கூற அபுதாபியின் அதிபர் ஷேக் அவர்களோ “உன்னைப்போல் யாரும் இந்த அளவுக்கு அட்சர சுத்தமாகப் பாடி இருக்கவே முடியாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியை நன்கு கற்றுக் கொண்டு மறுபடியும் இங்கு வந்து கலந்து கொள்ளும் எல்லா நிகழ்ச்சிகளிலும் நீயே பாடவேண்டும்“ என்று அவர் கூறியதை தம் வாழ்நாளில் என்றும் மறக்கவே முடியாது என்று தெரிவித்தார்.
இவரது விருப்பங்கள் தாம் பிறந்த நாளாகிய 10.04.1955–ஐத் தன் விருப்ப நாளாகக் குறிப்பிட்டார். கிழமைகளில் வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்கள் இவருக்குப் பிடிக்கும். வெளிநாடுகளில் சிங்கப்பூர், மற்றும் அமெரிக்கா தமக்குப் பிடித்த நாடாகும் என்கிறார். இயற்கையை வெகுவாக ரசிக்கும் இவர் கடலிலிருந்து பௌர்ணமி நாளன்று சந்திரன் தோன்றும் சமயத்தைக் காண்பதில் கிடைக்கும் சுகம் வேறெதிலும் இல்லை என்று தெரிவித்தார். இவர் தனது தாய் நாடாகிய இந்தியாவை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். இவர் தனக்குப் பிடித்த இசையாக ஷான் கான்னரி நடித்த ஆங்கிலப்படமான ப்ரம் ரஷியா வித் லவ்” என்ற படத்தில வரும் TITLE MUSIC – ஐ தன் Mobile Phone –ல் Caller Tune- ஆக வைத்திருக்கிறார்.
அதிகாலையில் சூரியோதயத்தின் போது இசைக்கப்படும் பூபாள ராகத்தை தான் மிகவும் விரும்பி ரசிப்பதாக் கூறினார். கர்நாடக இசையில் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். கலையரங்கங்களில் தமக்கு விருப்பமானதாக சிங்கப்பூர் நேஷனல் தியேட்டர்ஸ்–ஐக் குறிப்பிட்டார். சென்னையில் தனக்குப் பிடித்தமான சபாவாக ஓம் விக்னேஸ்வரா கல்சுரல் அகாடெமியை தெரிவித்தார். தொழில் ரீதியில் தனக்குப் மிகவும் பிடித்தவராகவும் நலம் விரும்பியாகவும், நடிகர் சத்யராஜ் அவர்களைத் தெரிவித்தார். தமக்கு மிகவும் விருப்பமான திரைப்படங்களாக ஆயிரத்தில் ஒருவன், கௌரவம், ராஜா, தில்லானா மோகனம்பாள், காதலிக்க நேரமில்லை ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
திரைப்படப் பாடலாசிரியர்களில் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, ஆகியோர் தனது விருப்பத்துக்குரியவர்கள் என்றார். இசையமைப்பாளர்கள் வரிசையில் தமக்கு விருப்பமான “மெல்லிசை மன்னர்” எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்–கணேஷ், ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் தேவா ஆகியோரைக் குறிப்பிடுகிறார். திரைப்பட நடிகர்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திகலம் சிவாஜி கணேசன், S.A. அசோகன், ஜெய் சங்கர், கமலஹாசன், ரஜினி காந்த், சூர்யா மற்றும் அஜீத் ஆகியோரைத் தெரிவித்தார். நடிகைகளில் சாவித்ரி, பத்மினி, ஸ்ரீவித்யா ஆகியோரையும் நகைச்சுவை நடிகர்களில். ஜே. பி. சந்திரபாபு, நாகேஷ், கே.ஏ.தங்கவேலு, கவுண்டமணி, ஆகியோரை மிகவும் விரும்புவதாகக் கூறினார். ஹிந்தியில் தேவ் ஆனந்த், ராஜ் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோரது நடிப்பை மிகவும் விரும்பி ரசிப்பதாக கூறினார்.
சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகராக T.M. சௌந்திராஜன் அவர்களையும், சிறந்த பெண்பாடகியாக பி. சுசிலா அவர்களையும் பிடிக்கும் என்கிறார். சிறந்த திரைப்பட இயக்குநர்களாக ஸ்ரீதர், “வியட்நாம் வீடு சுந்தரம்”, கே. பாக்யராஜ் ஆகியோரை குறிப்பிட்டார். உறவினர்களில் தனது மைத்துனர் ராஜ் கிருஷ்ணாவையும், சகோதரிகளான அம்புஜா தங்கவேல், துர்காலட்சுமி ஆகியோரை விரும்புவதாகத் தெரிவித்தார். தனக்குப் பிடித்த நண்பர்களாக மகேஷ்,“ஸ்டில் காமிரா மேன்” ராமலிங்கம்,ஒளிப்பதிவு இயக்குநர்களாகிய ரவி பாபு, ராஜராஜன், என்.டி.ஆர் அவர்களின் ஒப்பனைக் கலைஞரின் மகனாகிய கணேஷ் பாபு, சி.டி, ராமகிருஷ்ணா ஆகியோரை தெரிவித்தார்.
உணவு வகைகளில் கீரை வகையும், நிறங்களில் வெண்மை, மஞ்சள், நீலம்,ஆகியவை தனக்குப் மிகவும் பிடிக்கும் என்றார். உடை வகைகளில் ஜீன்ஸும், முழுக்கை டீ-ஷர்ட்டுகளும் தனக்கு பிடிக்கும் என்றார். தான் பார்க்க விரும்பும் இடமாக அமெரிக்காவிலுள்ள யூனிவெர்சல் (ஹாலிவுட்) ஸ்டுடியோவைக் குறிப்பிட்டார். சிங்கப்பூர் அபுதாபி, மலேஷியா போன்ற நாடுகள் தனக்குப் பிடித்தமான நாடுகள் என்று தெரிவித்தார். விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீர்ர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். தனக்கு விருப்பமான புத்தகமாக கவிஞர் கண்ணதாசனின் “அர்த்தமுள்ள இந்து மதம்“ என்ற தலைப்பில் வெளி வந்த தொகுப்புக்களைத் தெரிவித்தார். வட இந்திய இசையில் ஜெக்ஜித் சிங், அனூப் ஜலோட்டா, பங்கஜ் உதாஸ், ஆகியோரின் “கஜல்“ இசையைத் தான் விரும்பி ரசிப்பதாகக் கூறினார். தனக்கு மிகவும் பிடித்த தலைவர்களாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகிய இருவரைத் தெரிவித்தார். கார்களில் தனக்கு விருப்பமான “மெர்ஸிடெஸ் பென்ஸ்-ஐ“ தெரிவித்தார்.
கமல்,ரஜினி பற்றி இவர் கூறும் தகவல்கள் :- தான் முதன் முதலாக நடித்த “களத்தூர் கண்ணம்மா“ படத்தில் T.S. பாலையா, ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோருடன் பாலகனாக நடித்த நாட்கள் இன்னும் பசுமையாக தன் நெஞ்சில் நிற்கின்றது என்று கமல் இவரிடம் தெரிவித்தார். கிட்டத்தட்ட தன் தந்தை T.S. பாலையா அவர்கள் சாயலில் கமல் நடித்த “நாயகன்“ திரைப்படம் இருந்ததாகக் கூறினார். கமல் நடித்த “தசாவதாரம்“ திரைப்படத்தை தான் மிகவும் விரும்பி ரசித்ததாக கூறினார். தன் தந்தை T.S. பாலையா அவர்கள் நடித்த “பாமா விஜயம்“ படத்தை சுமார் 100 தடவைகள் பார்த்திருப்பதாக ரஜினிகாந்த் அவர்கள் “தங்கமகன்“ படப்பிடிப்பின் போது தன்னிடம் கூறியதாக ஜெய்பாலைய்யா தெரிவித்தார். அதே போல ரஜினிகாந்த் நடித்த “பாட்ஷா“ படம் தான் மிகவும் ரசித்த படமாகும் என்று ஜெய்பாலைய்யா தெரிவித்தார்.
ஜெய்பாலைய்யா அவர்கள் தாம் பாடிய கடினமான பாடலைப் பற்றிக் குறிப்பிடும் போது தன் இன்னிசைக் குழுவில் கீ-போர்டு வாசிக்கும் கலைஞர் தோழமை உணர்வுடன் வேண்டுமென்றே கே. பாலசந்தரின் “நினைத்தாலே இனிக்கும்” படத்தில் வரும் “சிவ சம்போ“ என்ற பாடலை வழக்கமான ஸ்ருதியில் இல்லாமல் சிறிது உச்சஸ் தாயியில் வாசிக்க ரசிகப் பெருமக்கள் முன்னிலையில் தானும் உச்சஸ்தாயியில் மிகவும் கடினமாகக் கஷ்டப் பட்டு நன்றாகப் பாடி அனைவரின் கைத்தட்டல்களைப் பெற்றார். அண்மையில் மயிலை மாங்கொல்லையில் நடந்த “லஷ்மன் ஸ்ருதி“ இன்னிசைக் குழுவில் “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்“ என்ற “நினைத்ததை முடிப்பவன்“ படப்பாடலைப் பாடி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார்.
தன் குரல்வளத்திற்காக பச்சை வாழைப்பழங்கள், திராட்சைப் பழங்களை தவிர்க்கிறார். வெது வெதுப்பான நீர் மட்டுமே அருந்த வேண்டிய இவருக்கு குளிர்ந்த நீர் மிகவும் விருப்பமானது. மருத்துவர்களாக தனது உடல் நலத்திற்கு டாக்டர் மாத்ரூபூதம், எலும்பு முறிவு சிகிச்சைக்கு டாக்டர் T.K. சண்முகசுந்தரம் கண்மருத்துவர் டாக்டர் விஜயசங்கர் (மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகன்) ஆகியோர் தனக்கு உதவி செய்து வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தன்னை மிகவும் பாதித்த பாடலாக “சுமைதாங்கி” படத்தில் Dr.P.B. சீனிவாஸ் அவர்கள் பாடிய “மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” என்ற பாடலை குறிப்பிட்டார். விஜயா, வாகினி ஸ்டுடியோ அதிபர் நாகிரெட்டி வீட்டுத்திருமணத்திற்கு வருகை புரிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், கே.எ. தங்கவேலு ஆகியோர் முன்னிலையில் இவர் பாடிய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வரும் “அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்“ என்ற பாடலைப் பாடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்றார்.
தனது குருவான Dr. T.S. நாராயணசாமி அவர்களின் மகன் திருமணத்தில் இவரது மெல்லிசை நிகழ்ச்சியின் போது “புதிய பறவை” திரைப்பட பாடலான “ஆஹா மெல்ல நட மெல்ல நட” என்ற பாடலையும், “முதல் தேதி” திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் பாடிய “சம்பள தேதி ஒன்னிலிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்” என்ற பாடலையும் பாடிய போது திருமண வைபவத்திற்கு வருகை புரிந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஜெய்பாலைய்யா பாடியதை மிகவும் உன்னிப்பாகக் கேட்டு ரசித்து அவரை பாராட்டினார்.
ஆன்மீகம்: தாம் இதுவரை பாடிய பக்திப் பாடல்களிலேயே “திருத்தணிகை சென்று தரிசித்து வருவோர்க்கு“ என்ற பாடலைத் தானே எழுதிப் பாடியதும்“ கோதாவரி ஆற்றுப்பக்கம் ஒரு பாபா ஷீரடி சாய்பாபா“ என்ற பாடலும் அடிக்கடி மேடை நிகழ்ச்சிகளில் தன்னால் பாடப் பட்டு வருகிறது என்று தெரிவித்தார். வருடா வருடம் சபரி மலைக்குப் போகும் வழக்கம் உடைய இவரின் குலதெய்வம் திருச்செந்தூர் முருகன் ஆகும்.
பொது: தினசரி தான் மேற்கொண்டு வரும் பழக்கங்களாக நடைப்பயிற்சி, பூஜை செய்தல், கோயில் செல்லுதல், நடிப்பு, இசை, மிமிக்ரி போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகிறார். கலைத்துறையை விரும்பி ஏற்றுக் கொண்ட இவர், ஒரு வேளை அப்படி வந்திருக்காவிட்டால் மருத்துவக்கல்வி படிக்கச் சென்றிருக்கலாம் என்றார். தன் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருப்பவராக “மெல்லிசை மன்னர்” எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களைக் குறிப்பிட்டார்.
சமூகத்தொண்டு : சமூகத்திற்கு ஆற்றிய தொண்டாக ஒருசமயம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் மன நலங் குன்றியோருக்காக உதவும் பொருட்டு நிதி உதவி செய்யும் வகையில் மெல்லிசை நிகழ்ச்சி ஒன்றினை இலவசமாக நடத்திக் கொடுத்திருக்கிறார்.
குடும்பம்:- தன் குடும்பத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது “எங்கள் குடும்பம் பெரிசு,“ என்று பெருமை பொங்கப் பேசினார்.
வானொலி, தொலைக்காட்சி பற்றிய விவரங்கள்:- வானொலியிலும், ரெயின்போ F.M, மற்றும் ரேடியோ மிர்ச்சியிலும், இவரது பேட்டிகள் ஒலிபரப்பாகி உள்ளன. பொதிகை, சன், விஜய், தமிழன், மெகா, ராஜ், கலைஞர் ஆகிய தொலைக்காட்சிகளில் ஜெய்பாலைய்யா தோன்றியுள்ளார். இவரது நிகழ்ச்சிகளில் மிமிக்ரி, பாடுதல் போன்றவை விஜய், தமிழன், ராஜ், மெகா,கலைஞர் ஆகிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப பட்டுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப் போவது யாரு” என்ற மெல்லிசைக் குழுவினர்கள், மற்றும் பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் இவரது தந்தை டி.எஸ். பாலையா வேடத்திலும் எஸ்.ஏ. அசோகன் நடித்த “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என்ற திரைப்படத்தில் நடித்த பூதம் வேடத்திலும் தோன்றி நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வரும் LIBERTY MEDIA–வின் இயக்குனர் பால் T. ராஜ் என்பவரின் மூலம் “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற தலைப்பில் “என்றும் இனிக்கும் தேனிசைப் பாடல்கள்” வரிசையில் இவரது பலகுரல்களில் ஒலிக்கும் பாடல்களைக் கேட்கலாம்.
“மெகா” தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும்“என்றும் எம்.எஸ்.வி” என்ற தொடரில் ஜெய்பாலைய்யா பாடி வருகிறார்.எம்.எஸ்.வி அவர்களின் மேடைக் கச்சேரிகளிலும் தொடர்ந்து பங்குகொண்டு பாடியும் வருகிறார். “எட்டாவது வள்ளல்“ எம்.ஜி.ஆர் என்ற தொலைக்காட்சித் தொடருக்கு இவர் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்களுக்குப் பின்னணிக் குரல் (டப்பிங்) கொடுத்து வருகிறார்.
சென்னைத் தொலைக் காட்சியில் Dr.T.S. நாராயணசாமி அவர்களின் “அமுத சுரபி“ என்ற தொடரில் ஜெய்பாலைய்யா நடித்திருக்கிறார். திரைப்பட இயக்குனர் கே.எஸ். கோபால கிருஷ்ணன் அவர்கள் எழுதி இயக்கிய “இசையமுதம்”, பாபு அவர்கள் இயக்கிய வா மணமகனே வா“ என்ற இரு தொடர்கள் டிடி-யில் ஒளிபரப்பாகியுள்ளன. “இசையமுதம்” தொலைக்காட்சித் தொடரில் ஸ்ரீவித்யா, “கம்பர்” ஜெயராமன், ஆகியோருடனும், “வா மணமகனே வா” என்ற தொடரில் ஸ்ரீகாந்த், பி.ஆர் வரலட்சுமியுடன் ஜெய்பாலைய்யா நடித்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சியில் Dr. T.S. நாராயணசாமியின் இயக்கத்தில் ஒய்.ஜி. மகேந்திரன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் “அம்பிகாபதி” என்ற தொலைக்காட்சி தொடரில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கிருஷ்ணஸ்வாமி அஸோஸியேட்ஸின் தயாரிப்பான “ஊரறிந்த ரகசியம்“ என்ற சன் தொலைக்காட்சியிலும் “புத்த ஜாதகம்“ என்ற தொடரிலும் நடித்துள்ளார். கலைஞர் தொலைக் காட்சிக்காக சமீபத்தில் “நெஞ்சம் மறப்பதில்லை“ என்ற தலைப்பில் மெல்லிசை குழுவினர்கள், மற்றும் பாடகர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எந்த நடிகர் பற்றிய பாடல் உள்ளதோ அந்த நடிகர் வேடத்தில் தோன்றி நடித்துப் பாடிப் புகழ் பெற்றார்.
மிமிக்ரி இவர் மிமிக்ரி செய்வதில் வல்லவர். பொழுதுபோக்காக பின்னணிப் பாடகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரின் குரலில் நடித்து, பேசி, பாடிக்காட்டுவதில் தொடங்கப்போய் அதுவே இவரைப் பல மேடை இன்னிசை நிகழ்ச்சிகளில் செய்து காட்டும் அளவுக்குப் புகழேணியின் உச்சிக்குச் சென்றிருக்கிறார்.
ஒரு சமயம் தனது தந்தை T.S.பாலையா அவர்களைக் காண பிரபல பாடகரான S.G. கிட்டப்பாவின் சகோதரர் சுப்பையா பாகவதர் அவர்கள் தன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் தன் தந்தையிடம் பேசிவிட்டுப் போன சில மணித்துளிகளிலேயே அவரைப் போலவே பலர் முன் தான் நடித்துப் பேசியதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர். டி.எஸ்.பாலையா அவர்கள் தனது மகனின் இந்தப் போக்கைக் கண்டித்தாலும ஒரு வகையில் சமாளித்துக் கொண்டு தனது மகனின் திறமையை எண்ணி வியந்திருக்கிறார்.
ஜெய் பாலைய்யா அவர்கள் தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை படத்தில் தன் தந்தையாரைப் போலவே பேசி அனைவரையும் ஆச்சர்யம் அடையும் வகையில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தகைய ஹாஸ்ய உணர்வு தனக்கு “கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் மூலம் வளர்ந்து வந்திருக்கிறது என்று கூறும் அவர் “முதல்தேதி” திரைப்படத்தில் அவர் பாடிய “சம்பளத் தேதி ஒன்னிலேயிருந்து இருபது வரைக்கும்“ என்ற பாடலில் அவர் செய்து காட்டிய நகைச்சுவைப் பாணியை “இனி எவர் செய்ய முடியும் ? ”என்று மற்றவர்களுக்குச் சவால் விடுகிறார்.
T.S.பாலையா, M.R.ராதா, J.P. சந்திரபாபு, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், C.S. ஜெயராமன், A.L. ராகவன், டாக்டர் M. பாலமுரளி கிருஷ்ணா, திருச்சி லோகநாதன் போன்றோர் குரலில் ஜெய்பாலைய்யா அவர்கள் மிமிக்ரி செய்தும், பாடிக்காட்டியும் ரசிகப் பெருமக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். “நகைச் சுவை விருந்து“ என்ற தலைப்பில் வெளியான ஒலிநாடாவில் நடிகவேள் M.R. ராதா அவர்களின் குரலில் பேசி அசத்தியிருக்கிறார்.
சிவகாசியில் திறந்தவெளிக் கலையரங்கம் ஒன்றில் ஜெய்பாலைய்யா அவர்கள் “மேஜிக்” ராதிகாவுடன் இரத்தக் கண்ணீர் திரைப் படத்தின் உச்சக் கட்டக் காட்சியை நடிகவேள் எம்.ஆர்.ராதாவைப் போல் பேசிக்காட்டியதும் ரசிகர்கள் அளித்த பாராட்டுமழையில் இன்றும் தாம் நனைந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
ஒரு சமயம் டெல்லியில் நடந்த இவரது “மிமிக்ரி” கலை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்த பெண்மணி ஒருவர் குலுங்கிக் குலுங்கிச் சிரித்த சம்பவம் தன்னை இன்னும் மறக்காமல் இருக்கச் செய்கிறது என்றார். காரணம் என்னவென்றால் அப்பெண்மணியின் கணவர் இறந்து மூன்று நாட்கள் கூட ஆகவில்லையாம். அவரை அவரது உறவினர்கள் ஒரு மனமாற்றத்திற்காக இவரது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்தார்கள். பெருந்துக்கத்திலிருந்த அப்பெண்மணி இவரிடம் தனது கணவரின் மரணம் என்ற மீளாத் துயரத்திலிருந்து தான் சிறிது நேரமாவது மீண்டதற்காக இவருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தது தனக்கு மிகவும் மன நெகிழ்ச்சியை அளித்தது என்றார்.
“கொஞ்சும் சலங்கை” என்ற திரைப்படத்தில் வரும் “சிங்கார வேலனே தேவா“ என்று வரும் பாடலில் ஜெமினி கணேசன் அவர்கள் பேசும் வசனமாகிய, “சாந்தா உட்கார்! என்று ஆரம்பித்து பாடு சாந்தா பாடு” என்று முடிக்கும் வசனத்தை நடிகர்கள் சிவாஜி கணேசன், பிரபு, கமலஹாசன், ரஜினிகாந்த், எஸ்.ஏ. அசோகன், மேஜர் சுந்தரராஜன், சுருளிராஜன், தேங்காய், சினிவாசன், சோ, வி.எஸ், ராகவன், மற்றும் கிருபானந்த வாரியார், ஈரோடு தமிழன்பன், தமிழ்ப் பேராசிரியர் நன்னன், போன்றோர் பேசினால் எப்படியிருக்கும் என்பதை அவரவர்கள் குரலில் தத்ரூபமாகப் பேசும் விசேஷத் திறமை பெற்ற ஜெய்பாலைய்யாவை எப்படிப் புகழ்ந்தாலும் தகும்.
சிவாஜிகணேசன் அவர்கள் கௌரவம் திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரமான பாரிஸ்டர் ரஜனிகாந்த் “நம்பிக்கை“ யைப் பற்றிப் பேசும் வசனத்தை நடித்துக் காட்டியிருக்கிறார்.
அதே போல “ஆராதனா“ என்ற ஹிந்திப் படத்தில் வரும் “ரூப் தேரா மஸ்தனா“பாடலை “ஏழிசை வேந்தர்” எம்.கே. தியாகராஜபாகவதர் அவர்களும், “இசைச்சித்தர்” சிஸ். ஜெயராமன் அவர்களும் “மேரா தில் பீ கித்னா பாகல் ஹை“ என்ற பாடலை எப்படிப் பாடுவார்கள் என்பதை தனது இன்னிசை நிகழ்ச்சிகளில் பாடிக்காண்பித்து ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறார். விளையாட்டாக தொலைபேசியில் மற்றவர் பேசும் குரலைப் போலப் பேசியதால் ஏமாந்து இவர் வீட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். கீறல் விழுந்த கிராம போன் ரிக்கார்டில் எப்படி குரல் எழுப்பப்படுமோ அதை அப்படியே தன் குரலில் செய்து காட்டி அனைவரையும் வியக்க வைப்பார்.
கலை வாரிசு: கலைத் தொழிலில் தனது வாரிசாகத் தன்னிடம் பயின்ற மாணவி திருமதி அனுராதா அவர்களை ஜெய்பாலைய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார். தமிழக அரசின் ‘கலைமாமணி“, “நட்சத்திரக் குரல் அரசி“ போன்ற பல பட்டங்களை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடம் அனுராதா பெற்றிருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் பின்னணி பாடி வருகின்ற அனுராதா பிரபல திரைப்பட நடிகைகளுக்கும் பின்னணிக்குரல் கொடுத்து முன்னணி டப்பிங் கலைஞராக விளங்குகின்றார்.
முகவரி: ஜெய் பாலைய்யா கைபேசி எண் – 9551003007.

ஜெய் பாலைய்யா @ J.B அவர்கள் பாடிக்காண்பித்த பல பிரபல கலைஞர்கள் பாடிய பாடல்கள்,  திரைப்படங்கள் பற்றிய விவரங்கள் :

            படம்                                                   குரல்                                              பாடல்

 1  குடியிருந்த கோயில்                   டி.எம்.எஸ்.                                    என்னைத் தெரியுமா

2   புதையல்                                            சந்திரபாபு                            உனக்காக எல்லாம் உனக்காக

3    பாக்கியலட்சுமி                            ஏ.எல்.ராகவன்                              கல்லூரி ராணிகாள்

4    உலகம் சுற்றும் வாலிபன்        எஸ்.பி.பி                              அவள் ஒரு நவரச நாடகம்

5   திருவிளையாடல்                 டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா      ஒரு நாள் போதுமா

6   சுமைதாங்கி                                 பி.பி.ஸ்ரீனிவாஸ்          மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

7   தை பிறந்தால் வழி பிறக்கும்   திருச்சி லோகநாதன்               ஆசையே அலை போலே

8   சுகம் எங்கே?                           கே.ஆர்.ராமசாமி செந்தமிழ்               நாட்டுச் சோலையிலே

9    முதல் தேதி             என்.எஸ்.கிருஷ்ணன் சம்பள தேதி ஒன்னிலே இருந்து 20 வரைக்கும்

10  பாவை விளக்கு           சி.எஸ்.ஜெயராமன்            ஆயிரங்கண் போதாது வண்ணக் கிளியே

மேற்கண்ட பாடல்களுக்கு பாடியவர்களின் குரலையொற்றிப் பாடிய ஜெய்பாலையா நிச்சயம் தான் ஒரு பலகுரல் மன்னன் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

More Profiles