Priya Sri Sankar

Profile of Priya Sri Sankar

கர்நாடக இசையில் தனித்துப் பாடும் வாய்ப்பாட்டுக் கலைஞர்களைப் போல இருவர் சேர்ந்து பாடும் நிகழ்ச்சிகள் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் பட்சத்தில் ப்ரியாஸ்ரீ, ரேவதி சங்கர் ஆகிய இவ்விருவரின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் இன்று ரசிகப் பெருமக்களிடையே அமோக ஆதரவைப் பெற்று வருகின்றது. இவ்விருவர் தற்பொழுது “மயிலை சகோதரிகள்” என்ற பெயரில் கர்நாடக இசைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் தனித்துப் பாடி வந்திருந்தாலும் ஒருவருக் கொருவரின் புரிந்து கொள்ளும் திறன், கிட்டத் தட்ட சகோதரிகள் போன்று தோற்றமுடைய ஒரே மாதிரியான முக ஜாடையும் பாடுவதில் ஒரே மாதிரியான குரல் வளத்தைப் பெற்றதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு கர்நாடக இசையின் மேலுள்ள ஆர்வத்தினால் இவர்களது இன்னிசை நிகழ்ச்சிகள் இதுவரை எந்தத் தொய்வுமின்றி வெற்றி கரமாக நடை பெற்று வருகின்றன.
முதலில் ப்ரியா ஸ்ரீ அவர்களை பற்றிக் கூற வேண்டுமென்றால். இவரது பூர்வீகம் தஞ்சாவூர் ஆகும் 23-9-1966-ல் கோபால கிருஷ்ணன், லீலாவதி தம்பதியர்க்கு இவர் திருமகளாய் பிறந்தார். இவரது தாயார் லீலாவதி ஒரு தலை சிறந்த இசைக் கலைஞராவார். இவரது சகோதரர் பெயர் ஜி.ஸ்ரீகாந்த். இவரும் கர்நாடக இசையில் ஒப்பற்ற கலைஞர். ப்ரியாஸ்ரீயின் சகோதரியின் பெயர் சுபஸ்ரீ ஆகும். ப்ரியாஸ்ரீயின் தாய் கர்நாடக இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக மட்டுமின்றி, சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளுக்குச் சென்று இசை சம்பந்தமான போட்டிகளுக்கு நடுவராக இருந்து வந்திருக்கிறார். சென்னை தமிழிசைச் சங்கத்தில் சிறிது காலம் முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதே போல் ப்ரியாஸ்ரீயின் சகோதரர் ஸ்ரீகாந்தும் கர்நாடக இசைப் பாடகராக மட்டுமின்றி பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பாடுவதுடன் நட்டு வாங்கமும் செய்து வருகிறார். சமீபத்தில் STAR VIJAY TV யில் நடந்து முடிந்த Air Tel Super Singer போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அஜீஷ் இவரது மாணவரே. ப்ரியாஸ்ரீயின் கணவர் பெயர் சங்கர் ஆகும். இவர் “NESTLE” நிறுவனத்தில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். ப்ரியாஸ்ரீக்கு ஒரு மகளும், மகனும் உண்டு.
தனது தொடக்கக் கல்வியை ப்ரியாஸ்ரீ, நங்க நல்லூர் ராஜேஸ்வரி மாண்டிஸோரி பள்ளியில் 2வது வகுப்பு வரையிலும் செயிண்ட் டொமினிக்ஸ் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் (செயிண்ட் தாமஸ் மவுண்ட்) 3வது வகுப்பு முதல் 10வது வகுப்பு வரையிலும், பத்மா சேஷாத்ரி பால பவன் மெட்ரிகுலேஷன் 11-ம் வகுப்பும் 12-ம் வகுப்பும் படித்துத் தேறினார். சென்னை தேனாம் பேட்டையில் அமைந்துள்ள ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சையது பெண்கள் கல்லூரியில் (S.I.E.T) B.Sc (Maths) பட்டம் பெற்றார். இது தவிர சென்னை பல்கலைக் கழகத்தில் B.Music-ம், M.Music-ம் படித்து பட்டம் பெற்றார்.
இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வரும் ப்ரியா ஸ்ரீயும் ரேவதியும் இணைந்து “மயிலை சகோதரிகள்“ஆனதே ஒரு சுவையான சம்பவம். ஒரு முறை இந்தியன் வங்கியில் ஆண்டு தோறும் நடந்து வரும் கலை நிகழ்ச்சிகளிலும் இசைப் போட்டிகளிலும் கலந்து கொண்டு தனித் தனியாகப் பங்கேற்று பல பரிசுகளை வென்றிருக்கிறார்கள். ஒருவரின் திறமை மற்றொருவருக்குத் தெரியும் வகையில் இவ்விருவரின் மனத்திலும் ஓர் உந்துதல் ஏற்பட்டதன் பலன், இருவரும் சேர்ந்து பாடி இனிவரும் காலத்தில் மேடைக் கச்சேரிகள் செய்யும் வாய்ப்பினைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்களின் இசைப் பணி இன்று வரை தொடர்ந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. ப்ரியாஸ்ரீ சென்னை வானொலி நிலையத்தில் “B” கிரேடு இசைக் கலைஞராக தெய்வப் பக்திப் பாடல்களைப் பாடுவதில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். தமிழைத் தவிர ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகள் இவருக்குத் தெரியும். தன்னை கர்நாடக இசை உலகிற்கு அறிமுகப் படுத்திய தன் தாயார் லீலாவதி அவர்களையும் உறவினர் லதா ராம்சந்த் ஆகியோரை என்றும் நினைவு கூர்வதாகத் தெரிவித்தார். பிரபல சங்கீத வித்வான் டி.எம்.தியாகராஜன் மற்றும் நெய்வேலி சந்தான கோபாலன் ஆகியோரிடம் கர்நாடக இசையை கற்றுக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய முதல் சபா கச்சேரியை ப்ரியாஸ்ரீ அவர்கள் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவனில் அரங்கேற்றினார். மேடையில் தான் முதல் பாடிய முதல் பாடலாக “நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா” என்ற பாடலைப் பாடினார். “குறையொன்று மில்லை” என்ற மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பாடலைத் தன்னுடைய கச்சேரிகளில் பாடாத நாளே இல்லை என்கிறார். சுமார் 600க்கும் மேலாக கீர்த்தனைகளை கற்றுக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் மராத்தி மொழிகளில் உள்ள பாடல்களைப் பாடி வருகிறார். இசையில் இவருக்கு கிடைத்த பட்டம் “இசை வேல்” ஆகும். சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வரும் முருக சித்தர், டாக்டர் வரதராஜன் அவர்களால் இப்பட்டம் வழங்கப் பட்டது.பள்ளியில் படித்த நாள் முதலே தான் கலந்து கொண்ட இசைப் போட்டிகளில் நிறைய பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள், மற்றும் வெண்கலம், வெள்ளி தங்கப் பதக்கங்களை அள்ளிக்குவித்துள்ளார். சென்னை மியூசிக் அகாடெமியில் கலந்து கொண்ட போட்டியில் “தம்பூரா” பரிசை வென்றும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி, மைலாப்பூர் ஃபென் ஆர்ட்ஸ் கிளப், தியாக பிரும்ம கான சபா, மற்றும் தமிழ் இசைச் சங்கம் போன்ற அமைப்புகளின் மூலம் எண்ணற்ற பரிசுகள் பலவற்றையும் வாங்கியுள்ளார்.
ப்ரியா ஸ்ரீ சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். வாய்ப்பாட்டை தவிர வீணை வாசிப்பதிலும் கை தேர்ந்தவர். கர்நாடக இசை பயிலும் மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மூலமும் நடன நிகழ்ச்சிகளுக்குப் பாடவும் செய்கிறார். பொழுது போக்காக இசை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் காண்பதிலும் தன் நேரத்தைச் செலவிடுகிறார். இசைத் தொகுப்பு என்று குறிப்பிடும் பொழுது “வேதநாயகி”, “தீபச் சுடரே திரௌபதியே”, “அஷ்டபுஜகாளி”, “லலித கானம்”, “வெங்கடேச சுப்ரபாதம்”, மற்றும் “ஷியாமளா தண்டகம்” போன்ற ஆல்பங்களில் பாடியுள்ளார். தான் மெட்டமைத்த இசைத் தொகுப்புகளாக “வேத நாயகி”, “அஷ்டபுஜ காளி”, மற்றும் “லலிதாகானம்” ஆகியவற்றைக் குறிப்பிட்டார். “வேத நாயகி” “தீபச்சுடரே திரௌபதியே” என்ற இரு இசைத் தொகுப்புக்களைத் தயாரித்தளித்திருக்கிறார்.
விருப்பங்கள் : ப்ரியா ஸ்ரீ தான் விரும்பும் ராகங்களாக மோகனம், சுத்த தந்யாசி, தோடி, பைரவி போன்றவற்றை குறிப்பிட்டார். சஹானா ராகத்தில் அமைந்த “கருணிம்ப ” என்ற வர்ணம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். “உபச்சாரமுலு”, “காணக் கண் கோடி வேண்டும்”, “மீனாட்சி மேமுதம் தேஹி” ஆகிய கீர்த்தனைகள் தன்னை மிகவும் கவர்ந்தவை என்றார். தில்லனா வகையறாக்களில் வாசந்தி, ராகேஸ்ரீ, மது வந்தி போன்ற ராகங்களில் அமைந்தவை தனக்கு பிடிக்கும் என்று கூறினார். சிறந்த சங்கீத மேதையாக தான் விரும்புவது தன் தாயார் லீலாவதியையே என்றார்.கர்நாடக இசைப் பாடகர்களில் மஹாராஜபுரம் சந்தானம், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எல். வசந்த குமாரி ஆகியோரை விரும்புவதாகத் தெரிவித்தார். பக்க வாத்யக் கலைஞர்களில் வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபால கிருஷ்ணன், மிருதங்கக் கலைஞர்களில் திருவாரூர் பக்த வத்சலம் ஆகியோரின் வித்வத் தன்மையைப் போற்றுகிறார். கலையரங்கங்களில் தனக்கு மிகவும் பிடித்த அரங்கமாக மியூசிக் அகாடெமியைக் குறிப்பிடுகிறார். கர்நாடக இசையில் சாகித்ய கர்த்தாக்களில் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரைக் குறிப்பிட்டார்.
சபாக்களில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் தனக்குப் பிடித்தமான சபாவாகக் கூறினார். ஸ்ருதிலயா, அபிராமி ஆகிய ஒலிப்பதிவுக் கூடங்களைத் தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். இசைத் துறையில் தனக்கு நண்பர்களின் வட்டாரம் ஏராளமாக இருப்பதாகத் தெரிவித்தார். தான் விரும்பும் குறிப்பிடத் தக்க மாணவர்களாக எஸ்.அஷ்வின், சௌம்யா, ஜெய் கிஷன், லட்சுமி, கிருபா ஆகியோரைத் தெரிவித்தார். தாம் மிகவும் விரும்பிப் பார்த்த திரைப்படங்களாக தமிழில் சிந்து பைரவியும் தெலுங்கில் அன்னமய்யா ஆகியவற்றைக் குறிப்பிட்டார். பாடலாசிரியர்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, மற்றும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களை விரும்புவதாகத் தெரிவித்தார். திரைப்பட பின்னணிப் பாடகர்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களையும் பெண் பாடகிகளில் எஸ்.ஜானகி, பி.சுசீலா, ஆகியோரை விரும்புவதாகத் தெரிவித்தார்.
தான் விரும்பும் திரைப்பட நடிகர்களாக சிவாஜி கணேசன், மற்றும் கமலஹாசனையும், நடிகைகளில் பத்மினி, சாவித்ரி, குஷ்பூ, ஜோதிகா ஆகியோரை விரும்புவதாக தெரிவித்தார். நகைச்சுவை நடிகர்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், விவேக் ஆகியோரின் நடிப்பை மிகவும் விரும்பி ரசிப்பவராகத் தெரிவித்தார். சிறந்த இயக்குனர்களாக கே பாலச்சந்தர், பாரதி ராஜா ஆகியோரைத் தெரிவித்தார். சிறந்த உறவினராக தனது கணவர் சங்கர் அவர்களைத் தெரிவித்தார். தான் விரும்பும் நண்பர்களாக ரேவதி ஸ்ரீதரன், ராஜேஸ்வரி சீதாராமன், பால.ரங்காச்சாரி ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டார். சைவ உணவே தான் விரும்பி உண்ணும் உணவாகும் என்று கூறினார். தான் விரும்பும் நிறமாக பச்சையையும், உடைகளில் புடவை அணிவதைப் பெரிதும் விரும்புவதாகத் தெரிவித்தார். தனக்குப் பிடித்தமான இடமாக தற்போது வாழ்ந்து வரும் இல்லத்தைத் தெரிவித்தார்.
சிறந்த நாடாகத் தன் தாய் நாடான இந்தியாவையே விரும்புவதாகத் தெரிவித்தார். விளையாட்டுகளில் கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்ப்பதை விரும்புவதாகக் கூறினார். தமக்குப் பிடித்த புத்தகமாக மகாபாரதம், ராமாயணம் ஆகிய இதிகாசங்களைக் குறிப்பிட்டார். சிறந்த தலைவராக மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இசையல்லாது, மற்ற துறையில் தனக்கு விருப்பமானவராக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெயரைக் குறிப்பிடுகிறார். அதே போல பரத நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் பெயரையும் தெரிவித்தார். வாகனங்களில் கார் தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று தெரிவித்தார். தன் உதவியாளராக எம்.மகாலட்சுமியை மிகவும் விரும்புவதாகக் கூறினார்.
இளம் பிராயத்தில் தனது தாயார் லீலாவதி கோபாலகிருஷ்ணன் பாடுவதைக் கேட்டு மாணவர்களுக்கு இசையைக் கற்றுக் கொடுக்கும் போதும் அதை உன்னிப்பாகக் கேட்டும் தன் இசையறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நிறைய பாடல்களை கற்றுக் கொண்டார். படிப்படியாக நிரவல் ராகம் பாடுதல், கல்பனா ஸ்வரம் பாடுதல் (மனோதர்ம சங்கீதம்) இத்தனையையும் தனது ஐந்தாவது வயதிலேயே நன்கு கற்றுத் தேறினார். இது போதாதென்று வானொலியில் நடக்கும் கச்சேரிகளையும் டிசம்பர் மாத சீசனில் நடக்கும் இசை விழாக்களில் பிரபல சங்கீதக் கலைஞர்களின் நிகழ்ச்சியையும் தவறாமல் சென்று ரசிக்கும் வழக்கமுடையவராயிருந்தார். தான் முதன் முதலில் மேடையறிய கர்நாடக இசை நிகழ்ச்சியை 1997-ம் வருடம் ஜுன் மாதம் தனது நண்பரான புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஜி.ஸ்ரீதரின் திருமண வரவேற்பு வைபவத்தன்று ரேவதி ஸ்ரீதரனுடன் நிகழ்த்தினார்.
முதல் வாய்ப்பு தனக்குக் கிடைத்த முதல் சன்மானமாக ரூ 1000/- பெற்றதில் ஒரு பகுதியை கடவுளுக்குக் காணிக்கையாக செலுத்தியும், மீதியைத் தனது மாமியார் அவர்களிடம் கொடுத்து விட்டார். முதல் கச்சேரியை தனது கணவர் சங்கரும், நிறைய நண்பர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். முதலில் வாங்கிய விருதாக தான் படித்த பள்ளியில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் கர்நாடக இசையில் சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞருக்குரிய பரிசினை வென்றதாக தெரிவித்தார். முதன் முதலாக கர்நாடக இசைக் கச்சேரி செய்யும் முன் தனக்கு படபடப்பாக இருந்தாலும் அதே சமயம் மகிழ்ச்சியுணர்வோடு இருந்ததாகவும், கடவுளிடம் கச்சேரி நல்ல படியாக வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். கச்சேரி நல்லபடியாக எல்லோரும் ரசிக்கும் படியாக இருந்ததுடன் அனைவரும் ஊக்கம் அளித்து வாழ்த்தியதாக தெரிவித்தார்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிபுரியும் ராஜா ஸ்ரீனிவாஸ் என்பவர் எழுதிய தெய்வமணங் கமழும் பக்திப் பாடல்களை இயற்றி இருந்தார். அவரை வங்கி ஊழியர் கலைக் குழுவைச் (B.E.A.T) சேர்ந்த ஆர்.வெங்கட சுப்ரமணியன் அவர்கள் ரேவதிக்கும், தனக்கும் அறிமுகம் செய்து வைத்தார். ரேவதியும், ப்ரியாஸ்ரீயும் அப்பாடல்களுக்கு மெட்டமைத்து ஒலி நாடா, குறுந்தகடு வடிவில் “வரவேண்டும் வரலட்சுமி தாயே” என்ற இசைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு பின்னர் அதே பாடல்களை வீனஸ் ரிக்கார்டிங் நிறுவனம் “வேதநாயகி” என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூரில் வெளியிட்டது. ஒலிப்பதிவின் சமயம் தங்கள் பிற வாத்யங்களோடு ஒன்றிணைந்து கேட்கையில் ஒரு பக்கம் பெருமையும், ஒரு வித திகலும் அடைந்ததாகவும் தெரிவித்தார். தன் குடும்பத்தினர் கொடுத்த ஒத்துழைப்பு, ஊக்கம் நண்பர்களின் ஆதரவு, இசைத் தொகுப்பை வெற்றிகரமாக வெளியிட முடிந்தது என்றும் இதற்காக தானும் ரேவதியும் வயலின் கலைஞர் சந்துரு, வீணை வாசித்த ராதா வெங்கடேஸ்வரனுக்கும் புல்லாங்குழல் வாசித்த ஜி.ஸ்ரீதருக்கும் ; ரிதம் பேட், டிரம்ஸ் வாசித்த முரளி கிருஷ்ணாவிற்கும் என்றென்றும் நன்றிக் கடன் பட்டிருப்பதாக கூறினார்.
தன் பதினொன்றாம் வயதில், சென்னை வானொலியில் “இளைஞர் இசை” நிகழ்ச்சியில் தான் பாடியதாக தெரிவித்த ப்ரியாஸ்ரீ, பக்திப் பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசையை தம் பதினாறாம் வயதில் நிகழ்த்தியிருக்கிறார். தற்போது வானொலியில் “B” கிரேட் இசைக் கலைஞராக இருந்து வருகிறார். பக்திப் பாடல்களை ரேவதி ஸ்ரீதருடன் பாடி வருவதுடன் தொலைக் காட்சிகளிலும் இவரது நிகழ்ச்சிகள் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. எதிர்பாராத ஆனால் மறக்க முடியாத இசை நிகழ்ச்சியாக ஒரு சமயம் சென்னை, மயிலையிலுள்ள பாரதீய வித்யா பவனில் ரேவதி ஸ்ரீதருடன் இசை நிகழ்ச்சி செய்து கொண்டிருந்த போது சட்டென்று நிரவல் பாட மறந்து விடும் சூழ்நிலை உருவாகியது. உடனே ரேவதி யிடம் நிரவல் பாடும் படி சைகை செய்யவே ரேவதியும் நிரவல் பாடி முடித்தார். கச்சேரி நடந்து முடிந்த பின்னரே தான் நிரவல் பாட மறந்த காரணத்தை ரேவதியிடம் கூறியதாக தெரிவித்தார்.
ஒரு சமயம், உடையாளுரிலுள்ள அஷ்டபுஜ மஹாகாளியம்மன் சன்னதியில் “அஷ்டபுஜ காளி” என்ற தலைப்பில் இசைக் குறுந்தகடு வெளியாகும் நாளன்று ரேவதியுடன் தானும் சேர்ந்து பாடும் அந்த நாள் மாலையில், கச்சேரி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக தனக்கு உடம்பு சரியில்லாமற்போகவே வாந்தி எடுக்கும் நிலைக்கு ஆளாகவும் நேர்ந்தபடியால் கச்சேரியில் பாடுவோமோ என்ற சந்தேகமும் வலுப்பெற ஆரம்பித்த தருணம், கோயில் குருக்கள் அம்மனின் கோயில் சன்னதியின் தீர்த்தப் பிரசாதம் இவருக்கு அருளிய அந்தக் கணமே தனக்குள் ஒரு வித உந்துதல் ஏற்பட்டு அக்கச்சேரியில் பாட முடிந்தது, தெய்வத்தின் அருளினால் தான் என்று வியப்புடன் கூறினார்.
ஒரு சமயம் தஞ்சாவூரில் தோப்பு பிள்ளையார் கோயிலில் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களுடன் “நாதலய நாட்யா” என்ற அமைப்பின் சார்பில் தான் பங்கு கொண்ட நடன நிகழ்ச்சியில் முதல் பாட்டு பாடி முடித்தார். அச்சமயம் வருண பகவான் தன் பணியினை மெதுவாக ஆரம்பித்தார். மூன்றாவது பாடல் ஆரம்பிக்கும் முன் வருண பகவானின் கை மேலும் ஓங்கவே, நிகழ்ச்சியைக் காணவந்த மக்கள் அங்குமிங்கும் அலைந்து ஓடி ஒதுங்க இடம் தேடியதில் நிகழ்ச்சியும் தொடர முடியாமல் போயிற்று. தாம் ஏமாற்றப் பட்ட இச்சம்பவம் இன்னும் தன்னை வருத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். எதிர் பாராமல் தனக்கு கிடைத்த வாய்ப்பாக ப்ரியாஸ்ரீ தன்னுடைய உறவினர் லதா ராம்சந்த் அவர்கள் பிரபல நடனக் கலைஞர் ஷோபனாவைக் காணச்செல்லுமாறு பணிக்கவே, கொச்சியில் அவரின் நடன நிகழ்ச்சிக்குத் தான் பாடிய அரிய சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ப்ரியா ஸ்ரீ இதுவரை தான் நிகழ்த்திய எல்லா இசை நிகழ்ச்சிகளும் தனக்கு மிகவும் திருப்தியை தந்ததாகவே கூறினார். கர்நாடக இசை தவிர தமக்கு ஹிந்துஸ்தானி இசையும் பழைய ஹிந்திப் பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறினார். தன்னுடன் முதல் கச்சேரியில் வாசித்து வரும் வயலின் கலைஞர் சொர்ணா காமேஸ்வரியும், மிருதங்கக் கலைஞர் பாஸ்கர் இருவருமே தொடர்ந்து இன்று வரை தனக்கு பக்க வாத்யம் வாசித்து வருவதாகக் கூறினார். “ஸ்ரீ கணேசா சரணம்”, “காணக் கண் கோடி வேண்டும்”, ‘குறையொன்றும் இல்லை”, “ஆறுமோ ஆவல்”, “சம்போ சம்போ ”, “துர்மார்க்கச்சரா” போன்ற பாடல்களைத் தன் கச்சேரியில் எல்லோரும் விரும்பிக் கேட்பவையாக அமைந்து வருகின்றன என்று கூறுகிறார்.
இசை மேதைகள் பற்றிக் குறிப்பிடும் போது செம்மங்குடி சீனிவாச ஐயனின் அபார ஞாபக சக்தி கர்நாடக இசை மேல் அவருக்கு இருக்கும் அளவற்ற பற்று, தன்னிடம் இசை கற்க வரும் மாணவர்களுக்கு 90-ம் வயதுக்கும் அப்பாற்பட்ட வயதிலும் அவர் கற்றுத் தரும் விதம், உலகின் வேறு எந்த இசைக் கலைஞருக்கும் கிடைக்காத பெருமை அவருக்கு மட்டுமே உண்டு என்றும் தன்னுடைய குருவாகிய டி.எம்.தியாகராஜன் அவர்களே செம்மங்குடி அவர்களின் பிரதான சிஷ்யர் என்று தெரிவித்தார். பல தரப்பட்ட இசை உருப்படிகளை வித்யாசமாக மெட்ட மைத்து இமாலயச் சிகரத்தைத் தொட்டிருக்கிறார் என்று செம்மங்குடி சீனிவாச அய்யரைப் பற்றி வானளாவப் புகழ்ந்து தள்ளுகிறார். செம்மங்குடி அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான இசைக் கலைஞராக இருந்தவர்.
சத்தம் போட்டுப் பேசுவதை தவிர்ப்பதன் மூலமும், அதிகமாக பேசுவதை குறைத்துக் கொள்வதன் மூலமும், குளிர்ந்த பானங்கள் எதையும் அருந்துவதில்லை என்றும் அதை அறவே தவிர்த்து வருவதாகவும். குளிர்ச்சி உண்டாக்கும் பழங்களை அறவே சாப்பிடமலிருப்பதும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தான் தினமும் வழக்கமாகிக் கொண்டிருக்கிறார். மழை மற்றும் குளிர் காலங்களில் தலைக்கு தொப்பி அணிந்து கொள்வதாகவும் காதுகளை நன்றாக போர்வைகளின் மூலம் போர்த்திக் கொள்ளுவதாகவும் கூறினார்.
மறக்க முடியாதவை : கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் ஆதரவில் நடந்த தன் கச்சேரியும் பிலஹரி கான சபாவின் ஆதரவில் குமரன் குன்றத்தில் (குரோம்பேட்டை) நடந்த கச்சேரியும் மும்பையில் நாரிமன் பாயிண்ட்டில் நடந்த National Centre for Performing Arts ஆதரவில் நடை பெற்ற கச்சேரியும் தன் நெஞ்சை விட்டு இன்னும் அகல வில்லை என்றார். தான் செய்த முதல் கர்நாடக இசைக் கச்சேரியைத் தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று குறிப்பிட்டார். “வர வேண்டும் வர லட்சுமி தாயே” என்ற ரேவதியுடன் பாடிய முதல் இசைத் தொகுப்பு ஒலிப்பதிவான தருணம் தன்னால் மறக்கவே இயலாது என்கிறார்.
தன் இசை வழித் தோன்றல்களாக தன்னிடம் இசை கற்று வரும் மாணவர்களைத் தெரிவித்தார். ரேவதி ஸ்ரீதருடன் தான் சேர்ந்து பாடும் நிகழ்ச்சிகளைக் கேட்க வரும் ரசிகர்கள் இரு குரல் அல்லாது ஒரே குரலில் பாடும் திறன் தங்களுக்கிருப்பது எப்படி என்று வியக்கும் வகையில் அனைவரும் ஒரு மித்த குரலில் கேட்பதை பெருமையுடன் கூறினார். தனக்கு கிடைத்த பரிசுகள் விருதுகள் நிறைய என்று கூறினார். பிரபல கலைஞர்களும் இசை விதூஷிகளின் பொற்கரங்களினால் பெற்றது தனக்கு கிடைத்த பாக்யமே என்றும் கூறினார். குடும்பத்தினர் அனைவருடனும் ஒன்று சேரும் போது கிடைக்கும் ஆனந்தம், குதூகலம் அளவிடற்கரியது என்றார். தான் வளர்க்கும் உயர்ந்த ரக ஜாதி நாயுடன் விளையாடுவதும், அதனிடம் கொஞ்சுவதும் தனக்கு பிடிக்கும் என்றார். தன் கணவர் கூறும் ஹாஸ்யத் துணுக்குகள், கடி ஜோக்குகள் கேட்பவர் எல்லோரையும் வயிறு புண்ணாகும் படி சிரிக்க வைத்து விடுவார் என்று தெரிவித்தார்.
20.6.1993 அன்று மயிலை செயிண்ட் இஸபெல் மருத்துவமனையில் மாலை 4.42 மணியளவில் தனது மகள் பிறந்த நாளை மறக்க என்றென்றும் முடியாது என்றார். “வெங்கடேச சுப்ரபாதம்” இசைத் தொகுப்பிற்கான ஒலிப்பதிவின் போது தான் மிகவும் கடினத்துடன் உழைத்துப் பாடியதாக தெரிவித்தார். சாதகம் செய்யாமல் எந்த கச்சேரியும் நிகழ்த்துவதில்லை என்ற அடிப்படையிலேயே மிகவும் சிரத்தையும் எடுத்துக் கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருவதாகத் தெரிவித்தார்.
கவலை : தான் ஆசையுடன் வளர்த்து வந்த இரண்டு போமரேனியன் நாய்கள் ஒவ்வொன்றாக இறந்த போது சோகம் தன்னை முழுவதுமாய் கவ்வியதாகத் தெரிவித்தார்.
பொது : தினசரி காலை எழுந்து குளித்து பூஜை செய்தல், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் வரை அவர்களுக்கு வேண்டியதைச் செய்து தருதல். நேரம் கிடைக்கும் போது கர்நாடக இசை சாதகம் செய்தல், தான் இந்திய வங்கியில் பணி புரிந்து வருவதால் காலை 9.30க்கு மேல் புறப்பட்டு மாலை 5.30 மணிக்குத் திரும்பியவுடன் சமையல் செய்தல், குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல். மீண்டும் கச்சேரி நிகழ்ச்சிக்கு வேண்டிய பாடல்களைச் சாதகம் செய்தல்.
குடும்பத்தினர் அனைவரும் உறவினர் உள்பட கலையுலக நண்பர்கள் யாவரிடமும் “நல்ல பெண்மணி” என்று சொல்லும் வகையில் தான் வாழ்ந்து வருவதாகவும் அதுவே தன்னுடைய வாழ்க்கையில் முழுவதும் தொடர வேண்டும் என்று இறைவனருளை வேண்டுகிறார். இசைத் துறையல்லாது தான் இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருவதைத் தெரிவித்தார். ஒரு வேளை தான் இசைத்துறைக்குள் நுழைந்திரா விட்டால் இந்தியன் வங்கியில் பணி புரிந்து வந்திருக்கலாம் என்றார். தான் விரும்பியே இசைத் துறையை தேர்ந்தெடுத்ததாக கூறினார். தன் பள்ளிக் காலங்களில் நன்றாகப் படித்து அதன் பின்னர் ஒரு பொறியாளராக வர வேண்டும் என்று நினைத்திருந்ததாகவும் தெரிவித்தார். தன் சிறிய வயதில் பழகிய நண்பர்களைக் காணும் வாய்ப்புப் பெறும் போது, மனத்தில் இனம் தெரியாத மகிழ்ச்சி ஏற்படுவதாகக் கூறினார். தன் சிறந்த உறவினராகவும் எல்லா வகையிலும் தனக்கு ஆதரவு அளித்து வரும் கணவர் சங்கர் பெயரைக் குறிப்பிட்டார். கர்நாடக இசை கற்க விரும்பும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதையே தாம் சமூகத்திற்குச் செய்து வரும் தொண்டாகக் கருதி வருகிறார். தனது குடும்பம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருப்பதில் கணவர் சங்கரும், தன் குழந்தைகள் இருவருமே தன் முழு ஆஸ்தி என்றார்.தன்னுடைய இசை அனுபவங்களை எழுதும் அளவுக்கு இன்னும் ஆளாக வில்லை என்பதை மிகவும் தன்னடக்கத்துடன் கூறிக் கொண்டார்.
தன் அபிமான விசிறியாகவும் புத்தி கூர்மையுள்ள ரசிகராகவும் இருந்து வரும் ராஜேஸ்வரி சீதாராமன் தனக்கு கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷமாகும் என்று கூறும் ப்ரியாஸ்ரீ, எந்த நேரத்தில் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாலும் இசையைப் பற்றியதாகவே இருக்குமாம். தான் இதுவரை நிகழ்த்தி வந்திருக்கும் அனைத்துக் கச்சேரிகளுக்கும் வந்து ராகம், கீர்த்தனைகள், நிரவல், ஸ்வரம் பாடுதல் என்றும் எது எதில் எப்படி மிகவும் அபாரமாக இருந்தது என்றும் பாடியதில் எந்த மாதிரி யெல்லாம் குறைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று அன்புடன், பரிவுடன், ஆசையுடன், வாஞ்சையுடன் கூடப் பிறந்த சகோதரிக்கு ஆலோசனையும் அறிவுரை கூறும் திருமதி.ராஜேஸ்வரியை ரசிகையாக, நண்பராகப் பெற்றதில் தான் மிகவும் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார். பற்றாக்குறைக்கு அவருடைய இல்லத்தில் சாதகம் செய்வதற்கு வரச் சொல்லி வேண்டிய எல்லா வசதிகளும் செய்து கொடுத்து வரும் அவரை கம்பனிடம் நட்புறவு பாராட்டிய சோழனுக்கு ஒப்பிடலாம் என்றார்.
திருமதி ப்ரியாஸ்ரீசங்கர், 26,சிங்காரி நாயக்கன் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600 004 தொலைபேசி : 044 24938358 கைப்பேசி : 94441 10362, 98410 83264 Email ID – priyashree.mylaisisters@gmail.com

More Profiles