Ragu Ravi

Profile of Ragu, Ravi-Flute

கர்நாடக இசைக் கச்சேரி செய்வதில் புல்லாங்குழல் வாசிப்பதில் விற்பன்னர்களாக விளங்கி வருபவர்கள் ரகு, ரவி ஆவர். இவர்கள் திரு சுந்தரம், திருமதி பூமாதேவி தம்பதியர்க்கு மகன்களாகப் பிறந்தவர்கள். மூத்தவரான ரகு 05.05.1953 –லும், இளையவரான ரவி 14-09-1955–லும் பிறந்தார்கள் கல்வி ரகு தன் பள்ளிப் படிப்பை சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள தேசிய ஆண்கள் பள்ளியிலும் ரவி அவர்கள் சென்னை, திருவல்லிக்கேணியிலுள்ள ஹிந்து உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.
இருவரும் S.S.L.C. வரை படித்து இருக்கிறனர். இசையின் மேல் நாட்டங் கொண்டமையால் தமது குருவாகிய சுந்தரம் அவர்களிடம் புல்லாங்குழல இசையைக் கற்றுக் கொண்டனர்.
குருகுலவாசம்: முன்பெல்லாம் குருகுலவாசம் மேற்கொண்ட மாணவர்கள் தொடர்ந்து 14 ஆண்டுகாலம் குருவிடம் இருந்தாலே “டாக்டர்“ பட்டம் வாங்குவதற்குச் சமம் என்று சொல்வார்கள். ரகு, ரவி சகோதரர்கள் தம் தந்தையாரிடம் இசை பயின்று 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொடர்ந்து இதுவரை 40 ஆண்டுகளுக்கு மேலாக புல்லாங்குழல் கச்சேரியைச் செய்து வந்திருக்கின்றனர்.
மறக்க முடியாத சம்பவம்:- முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் வி.வி. கிரி ஒருமுறை தம் குடியரசுத் தலைவர் மாளிகையில் ரகு, ரவியின் புல்லாங்குழல் இசைக்கச்சேரியைக் கேட்க ஒரு மணிநேரம் வாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விருவரும் வாசித்ததை ரசித்துக் கேட்ட குடியரசுத் தலைவரின் மனைவி இன்னும் கச்சேரியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் ரகு,ரவி இருவரும் அவரின் விருப்பத்தைப் ஏற்று புல்லாங்குழல் வாசிப்பதை தொடர்ந்து வாசித்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு மற்றவர்களுக்கு நேர்காணல் அளிக்க வேண்டிய சூழ்நிலையிலும் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பினை இவர்களால் தம் வாழக்கையில் மறக்க முடியாத சம்பவமாகவும், தாங்கள் கௌரவப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்தனர்.
ஒலி நாடா, சி.டிக்கள் விவரம்: பள்ளிப்பருவத்திலேயே தமது கர்நாடக இசைக்கச்சேரிகளை செய்து வந்த இவர்களின் புல்லாங்குழல் இசைக்கச்சேரி சம்பந்தப்பட்ட ஒலி நாடாக்கள், குறுந்தகடுகள் ஏராளாமாக வெளிவந்துள்ளன. அதேபோல் இசைத்தொகுப்புகளும் நிறைய வெளிவந்துள்ளன. வீடியோவில் இவர்களது கச்சேரி பதிவாகி அவையும் வெளி வந்துள்ளன. தமிழ், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் இவர்களது புல்லாங்குழலிசை திரைப்படங்கள் மூலமாக அதிகம் பயன்பட்டிருக்கிறது.
“சேர்ந்திசை” புகழ் அமரர் எம்.பி.சீனிவாசன் பற்றி ரகு,ரவி பல இசைக்கலைஞர்கள் தன்னுடன் வாசிக்கும் ஓரிரண்டு பக்க வாத்யக்காரர்களுடன் பாடும் முறையாகிய “கோரஸ்“ என்று அழைக்கப்படும் சேர்ந்திசையில் அமரர் எம்.பி.சீனிவாசன் என்னும் திரைப்பட இசையமைப்பாளர் அத்தகைய கோரஸ் இசை பற்றிய ஒரு கருத்தரங்கில் ரகு – ரவி சகோதரர்களின் புல்லாங்குழல் வாசிப்பைக் கேட்டு மிகவும் பாராட்டியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.
ரகு–ரவியின் குடும்பம்: ரகுவின் மனைவியின் பெயர் திருமதி லலிதா, ரவியின் மனைவியின் பெயர் திருமதி. விஜயவல்லி. ரகு,ரவிக்கு ரேவதி, ரேணுகா என்ற 2 மூத்த சகோதரிகளும் முரளி, ஸ்ரீதர் என்ற 2 இளைய சகோதரர்களும் உள்ளனர். இவர்களில் ரேவதியின் அக்காவின் மகன் விஜய் என்பவர் பலமொழியில் திரைப்படங்களுக்கும், பல பெரிய மேடைக் கச்சேரிகளில் புல்லாங்குழல் வாசித்து வருகிறார். இளைய சகோதரர்களில் முரளியும் திரைப்படங்களுக்கு புல்லாங்குழல் வாசித்து வருகிறார். கடைசி சகோதரர் ஸ்ரீதர் முதலில் திரைப்படங்களுக்கு புல்லாங்குழல் வாசித்து வந்தார். பிறகு சென்னை அகில இந்திய வானொலியில் சேர்ந்து இசைக்கலைஞராகப் பணி புரிந்து வருகிறார்.
ரகு-ரவியின் மகன்கள் முறையே அஸ்வின், அசோக் ஒரே நாளில் 11-09-1982 அன்று பிறந்தனர். முதலில் ரகுவிற்கு அஸ்வின் என்ற மகனும், ரவிக்கு அஸ்வின் பிறந்த 4 மணி நேரத்திற்குப் பிறகு அசோக் என்ற மகனும் பிறந்தனர். அஸ்வின், அசோக் ஆகிய இவ்விருவர் படித்தது சென்னை கோபாலபுரத்திலுள்ள நேஷனல் பப்ளிக் ஸ்கூல் ஆகும். சென்னை, ஆனந்த் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி என்ற கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து விட்டு தற்போது அமெரிக்காவில் பணிபுரிகிறார்கள். அஸ்வின், அசோக் ஆகிய இவ்விருவர் பிறந்த போது இவர்களது தந்தை ரகு, ரவி ஆகியோர் தமது இசைக்கச்சேரிகளுக்காக தொடர்ந்து ஐந்து நாட்களில் முறையே மும்பை, அஹமதாபாத், சூரத், ஆனந்த் என்று பல்வேறு இடங்களுக்குத் தொடர்ந்து இசைப் பயணம் மேற்கொண்டதால் உடனடியாக அஸ்வின், அசோக் ஆகிய இருவர் பிறந்த சுவாரஸ்யமான செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை என்று ரகு,ரவி தெரிவித்தனர். ரகுவின் மகன் அஸ்வின் தற்போது அமெரிக்காவில் சியாட் என்னுமிடத்திலுள்ள பிரபலமான I.B.M என்ற கம்பெனியிலும் ரவியின் மகன் சிக்காகோவில் உள்ள டாட்டா கன்ஸல்டிங் சர்வீசஸ் (T.C.S) என்ற கம்பெனியிலும் பணிபுரிகின்றனர். அஸ்வின் மனைவியின் பெயர் திருமதி வித்யா ஆகும். அசோக்கின் மனைவியின் பெயர் திருமதி ப்ரியா ஆகும். அவர்கள் இருவரும் கர்நாடக இசை வாய்ப்பாட்டில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாவர். விரைவில் அவர்களிருவரும் மேடைக்கச்சேரி செய்வதற்கு தயாராகி வருகின்றனர். அஸ்வின், அசோக் அவர்களின் இசைப்புலமையைக் கேட்டு வியந்து பிரபல கர்நாடக சங்கீதக்கலைஞர் கே.ஜே. யேசுதாஸ் அவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் உள்ள மாணாக்கர்களுக்கு ரகுரவி “SKYPE” என்று சொல்லப்படும் சாதனத்தின்மூலம் சென்னையிலிருந்து கொண்டே கர்நாடக இசையைக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள்.
பொழுதுபோக்கு: ரகு, ரவிக்கு கிரிக்கெட் விளையாட்டைப் பார்ப்பதில் வெகு ஆனந்தம். சிவாஜி கணேசன், எம்.ஜி.ராமசந்திரன் நடித்த திரைப்படங்களைப் பார்ப்பதிலும் ஆர்வம் உண்டு. ஒருமுறை இவர்களின் இசை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர் கச்சேரி முடியும் சமயம் வந்திருந்தார். ரகு, ரவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருவரின் தத்தளிக்கும் நிலையை உணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தாமே பிறகு ஒரு சமயம் அவர்களின் இசைநிகழ்ச்சியைக் கேட்க வருவதாகக் கூறியதோடு மட்டுமின்றி அவர்களின் இன்னிசையை பிறிதொரு சமயம் கேட்டு மகிழ்ந்ததை நினைவு கூர்ந்தனர். பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம்.எஸ் அவர்கள் ரகு, ரவியின் பரம ரசிகர் என்றும் தெரிவித்தனர்.
கர்நாடக இசையில், “ஸ்ருதி” எப்படி சேர்ப்பது என்பதில் பிரபல வயலின் இசை மேதை எம்.எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் பரிசேதனை செய்வது வழக்கம். ரகு, ரவி ஸ்ருதியை மிகவும் துல்லியமான வகையில் சேர்ப்பித்துக் காட்டிய விதத்தை எம்.எஸ். கோபால கிருஷ்ணன் மிகவும் பாராட்டியதையும் நினைவு கூர்ந்தனர். “அமுத சுரபி“என்ற தமிழ் மாத இதழில் ரகு, ரவி அவர்களின் இன்னிசையைப் பாராட்டி ஒரு செய்தியைக் கண்டு மும்பையிலுள்ள “கோரே கான் சங்கீத சபா” இவர்களின் விலாசம் தெரியாமால் ஒருவகை குருட்டு நம்பிக்கையுடன் சென்னை, சங்கீத வித்வத் சபைக்கு (MUSIC ACADEMY) கடிதம் எழுதியதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்ய எண்ணினர். அச்சமயம் சங்கீத வித்வத்சபையில் பணிபுரிந்து வந்த இசை விரிவுரையாளார் பி. ராமச்சந்திரன் அவர்களுக்கு ரகு,ரவி சகோதரர்களது விலாசம் தெரியும் என்பதால் ரகு,ரவிக்கு அக்கடிதத்தை நேரில் சேர்ப்பித்தார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு மும்பையிலுள்ள “கோரேகான் சங்கீத சபா”-வில் தங்களது புல்லாங்குழல் இசைக் கச்சேரியை நிகழ்த்தினர்.
ரகு, ரவியின் மகன்களான அஸ்வின், அசோக் ஆகிய இருவரின் எதிர்கால ஆசையாக விரைவில் இந்தியாவுக்குத் திரும்பி கர்நாடக இசைக்கச்சேரிகள் செய்வது என்று தீர்மானித்திருக்கின்றனர். ரகு – ரவியைப் போல அஸ்வின், அசோக்கின் இசைப்பணி தொடர வெற்றி பெற வாழ்த்துவோமாக!
முகவரி: ரகு, ரவி (புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள்) 37 ஆரிமுத்து, ஆச்சாரி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை–600 005. தொலைபேசி-044 28 44 65 97 கைப்பேசி-98842 77443
 Email : violin vittal@hotmail.com 
www.violin vittal.com 

More Profiles