Revathi Sridharan

Profile of Revathi Sridharan

கர்நாடக இசையில் தனித்துப் பாடும் வாய்ப்பாட்டுக் கலைஞர்களைப் போல இருவர் சேர்ந்து பாடும் கச்சேரி நிகழ்ச்சிகள் தனி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் பட்சத்தில் ரேவதி ஸ்ரீதரன், ப்ரியாஸ்ரீ சங்கர் ஆகிய இவ்விருவரின் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் இன்று ரசிகப் பெருமக்களிடையே அமோக ஆதரவை பெற்று வருகின்றது. இவ்விருவர் தற்பொழுது “மயிலை சகோதரிகள்” என்ற பெயரில் கர்நாடக இசைக் கச்சேரி செய்ய ஆரம்பித்து சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன.
முதலில் இவர்கள் தனித்துப் பாடி வந்தாலும் ஒருவருக்கொருவரின் புரிந்து கொள்ளும் திறன் கிட்டத் தட்ட உடன் பிறந்த சகோதரிகள் போன்று தோற்றமுடைய இவர்களின் ஒரே மாதிரியான குரல் வளத்தைப் பெற்றதனால் இருவரும் ஒன்று சேர்ந்து வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் செய்யும் அளவுக்கு கர்நாடக இசையின் மேல் உள்ள ஆர்வத்தினால் இவர்களது இன்னிசை நிகழ்ச்சிகள் இதுவரை எந்தவிதத் தொய்வு மின்றி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. ரேவதி ஸ்ரீதரன் அவர்களைப் பற்றிக் கூற வேண்டுமானால் இவரது பூர்வீகம் தஞ்சாவூரைச் சேர்ந்த வில்லியநல்லூர் ஆகும். ரேவதி அவர்கள் 1-5-1957 சுப்ரமணியன் - நாகலட்சுமி தம்பதியருக்குத் திருமகளாய்ப் பிறந்தார் . சுப்ரமணியன் அவர்கள் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் ஆவார்.
ரேவதியின் உடன் பிறப்புக்களின் விவரம் : 1. புவனேஸ்வரி மூத்த சகோதரி, ஓர் சிறந்த இசைக் கலைஞருங்கூட 2. எஸ்.வெங்கட்ராமன் மூத்த சகோதரர், எல்லோரிடமும் சகஜமாகப் பேசும் வழக்கமுடையவர். தற்போது பெங்களுரில் வசித்து வருகிறார். 3. சுந்தரி மூத்த சகோதரி, தோழமைக் குணமுடையவர், வாழ்க்கையில் எதையும் எதிர்த்துப் போராடும் குணங் கொண்டவர். சுக துக்கங்களைச் சரிசமமாக பாவிக்கும் தன்மையுடையவர். 4. எஸ்.ரவி சங்கர் இளைய சகோதரர், “திருப்புகழ்” பக்தர், எல்லோரிடமும் மிகுந்த பாசங் கொண்டவர். 5. எஸ்.ஜெயராமன் முரளி என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப் படுபவர். சிறந்த அறிவாற்றல், எந்த செயலையும் ஒழுங்காக செய்யும் அன்புள்ளம் கொண்டவர்.
ரேவதிக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் பேச,எழுதவும் தெரியும். தொடக்கக் கல்வியை தன் பூர்வீக ஊரான தஞ்சாவூர் குத்தாலத்திலுள்ள வில்லிய நல்லூரில் தமிழக அரசு நிதி உதவி பெற்று வரும் ஆரம்பப் பள்ளியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை குத்தாலம் அரசு உயர் நிலைப் பள்ளியிலும் படித்துத் தேறினார். பின்னர் திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் புகுமுக வகுப்பும், (P.U.C) B.Sc யும் படித்து பட்டதாரியானார். சென்னை பல்கலைக் கழகத்தில் B. Music-ம், M.Music-ம் படித்து பட்டம் பெற்றார்.
இவரது முதல் இசை குரு தனது தந்தை என்.சுப்ரமண்யம் ஆகும். இவர் ஒரு அலாதி இசைப்பிரியர். இளமையிலேயே நல்ல குரல் வளத்தையுடையவராதலால் பள்ளி நாட்களில் நடக்கும் அத்தனை பாட்டுப் போட்டிகளிலும், கல்லூரியில் நடந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள், தங்கம், வெள்ளி, மற்றும் வெண்கல பதக்கங்கள் பலவற்றை வென்றுள்ளார். ரேவதியின் கணவர் ஸ்ரீதர் மத்திய அரசின் அஞ்சல் துறையில் ஓர் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார். ஹரிஹரன் என்ற மூத்த மகனும் சுபாஷிணி என்ற இளைய மகளும் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. பிரபல கர்நாடக இசை ஜாம்பவான் மதுரை மணி அய்யரின் சீடரான வி.ஆர் சேதுராமன் அவர்களிடமும், சைதை “தேவாரம்” டி.நடராஜன் அவர்களிடமும் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்டு வருகிறார்.
ரேவதி முதன் முதலாக தன்னுடைய கர்நாடக இசைக் கச்சேரியை கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் சென்னை மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவனில் அரங்கேற்றினார். முதல் பாடலாக ஜோன்புரி ராகத்திலமைந்த “முருகனைப் பஜி மனமே ” என்ற பாடலைப் பாடினார். “குறையொன்றுமில்லை மறை மூத்தி கண்ணா” என்ற மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பாடல் ரசிகர்களால் பெரிதும் தன்னிடம் விரும்பிக் கேட்கப் படும் பாடல் என்று தெரிவித்தார். 300-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை தெரிந்து வைத்திருக்கிறார் . ரேவதிக்கு இசை உலகம் வழங்கிய பட்டம் “ இசை வேல்” ஆகும். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள “முருக சித்தர் ”டாக்டர் வரதராஜன் அவர்களால் இப்பட்டம் அளிக்கப் பட்டது.
தான் பணிபுரிந்து வரும் இந்தியன் வங்கியில் நடக்கும் இசைப் போட்டிகளிலும் வங்கிகளுக்கிடையே நடக்கும் இசைப் போட்டிகளிலும் கலந்து கொண்டும் ஹிந்தி பாடல்கள் பாடும் போட்டியிலும் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி நடத்தும் இசைப் போட்டிகளில் “ஜாவளி” என்ற அமைப்பில் உள்ள பாடலைப் பாடி முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். ஊத்துக்காடு வெங்கடசுப்பையர் பாடல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றுள்ளார். சுமார் பதினைந்து நிமிடங்கள் ஓடக் கூடிய, பத்திரிகையாளர் ஞானி அவர்கள் இயக்கிய டாகுமெண்டரிப் படமொன்றிற்காக பின்னணிப் குரல் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் இவருடைய புகழ் இசை உலகறியும் வகையில் மும்பையில் இருந்து வெளி வரும் செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ரேவதி ஸ்ரீதர், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததுடன் சிங்கப்பூரில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியிருக்கிறார்.உன்னிப்பாக இசை கேட்கும் இவர் ஓவியமும் நன்றாக வரையத் தெரிந்தவர். இவருக்கு வயலின் நன்றாக வாசிக்கத் தெரியும். இசையை கற்றுக் கொடுப்பதுடன் கர்நாடக இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளைத் திறம்பட நடத்தித் தருவதில் வல்லவர். இவர் விரும்பும் பொழுது போக்கு தனது குடும்பத்தினருடன் இருப்பது.
இசைத் தொகுப்பில் இவர் பாடிய ஒலி நாடாக்கள், குறுந்தகடுகளின் விவரங்கள் : “வேதநாயகி”, “தீபச்சுடரே திரௌபதியே”, “அஷ்டபுஜ காளி”, “லலித கானம்”, “வெங்கடேச சுப்ரபாதம்”, “ஷியாமளா தண்டகம்”, “வேத நாயகி”, “அஷ்டபுஜகாளி” “லலித கானம்” ஆகிய இசைத் தொகுப்புகளுக்கு ப்ரியாஸ்ரீ சங்கர் அவர்களுடன் சேர்ந்து மெட்டமைத்துள்ளார். இவர் தயாரித்தளித்த இசைத் தொகுப்புக்கள் “வேதநாயகி”, “தீபச்சுடரே திரௌபதியே”ஆகும்.
இவரது விருப்பங்கள் : ரேவதி ஸ்ரீதரன் விரும்பும் ராகங்கள் சுத்த தந்யாசி, பேஹாக், மாண்ட் ஆகும். கதன குதூகலம் ராகத்திலமைந்த “சரணாகத வத்ஸலே” என்ற வர்ணமும் சாருகேசியில் அமைந்த “இன்னும் என் மனம் ” என்ற வர்ணமும் இவருக்கு மிகவும் பிடித்தவை. சாவேரி ராகத்தில் வரும் “முருகா முருகா” என்று தொடங்கும் கீர்த்தனையும், சுத்த சாவேரியில் அமைந்த “தாயே திரிபுர சுந்தரி” என்ற கீர்த்தனையும் பேஹாக் ராகத்தில் அமைந்த “முருகனின் மறுபெயர்” என்று தொடங்கும் கீர்த்தனை இவருக்கு மிகவும் பிடித்தமானவையாகும். வாஸந்தி, மதுவந்தி, ராகேஸ்ரீ ஆகிய ராகங்களில் அமைந்த தில்லானாக்கள் இவருக்கு ரொம்ப பிடிக்கும். கலையரங்கங்களில் இவர் மிகவும் விரும்புவது சென்னை மியூசிக் அகாடெமியும், காமராஜர் அரங்கமுமே ஆகும். கர்நாடக இசைப் பாடகர்களில் டி.வி.சங்கர நாராயணன், விஜய் சிவா ஆகியோரின் இசையையும் பெண் பாடகியரில் எம்.எஸ்.சுப்பு லட்சுமி, எம்.எல் வசந்த குமாரியின் இசையையும் இவர் விரும்புகிறார். பக்க வாத்யக் கலைஞர்களில் கன்யாகுமாரி அவர்கள் வயலின் இசையையும், உமையாள்புரம் சிவராமன் அவர்களின் மிருதங்க வாசிப்பையும் மிகவும் நேசிப்பவராகிறார்.
கர்நாடக இசை சாகித்ய கர்த்தாக்களில் இவர் சங்கீத மூம்மூர்த்திகளான ஸ்ரீதியாகய்யர், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரை தெரிவித்தார். இவருக்கு மிகவும் பிடித்தமான ஒலிப்பதிவுக் கூடம் சென்னை “அபிராமி” ஒலிப்பதிவுக் கூடமாகும். தனது மாணவிகளில் சுபிட்சாமணி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் இசைத் திறனை இவர் புகழ்கிறார். தனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக சிந்துபைரவியைக் குறிப்பிடுகிறார். சிறந்த திரைப்பட பாடலாசிரியராக கவிஞர் கண்ணதாசன் அவர்களைத் தெரிவித்தார். தான் மிகவும் விரும்பும் இசையமைப்பாளராக எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தியையும், இளையராஜா அவர்களையும் குறிப்பிட்டார். சிறந்த பின்னணிப் பாடகராக பி.பி.ஸ்ரீனிவாஸ், பாடகியாக சித்ரா ஆகியோரையும் தெரிவித்தார். தாம் விரும்பும் சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் அவர்களையும் சமீபத்தில் பிரபலமாகி வரும் கார்த்தி சிவக்குமார் அவர்களையும் தெரிவித்தார். சிறந்த பெண் நடிகையாக சாவித்திரி அவர்களைக் குறிப்பிட்டார். சிறந்த நகைச்சுவை நடிகராக விவேக் அவர்களையும். சிறந்த திரைப்பட இயக்குநராக கே.பாலச்சந்தர் அவர்களையும் குறிப்பிட்டார்.
உறவினர்களில் தாம் பெரிதும் விரும்புவது கணவர் ஸ்ரீதரன் அவர்களையே என்றார். நண்பர்களாகத் தான் கருதுவது பி.எஸ்.விஜயலட்சுமி, ராஜேஸ்வரி சீதாராமன், ப்ரியாஸ்ரீ சங்கர், பால. ரங்காச்சாரி ஆகியோர். தென்னிந்திய சைவ உணவு வகைகளை மிகவும் விரும்பி உண்ணுவதாகத் தெரிவித்தார். ஊதா நிற வண்ணத்தை தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். உடைகளில் புடவை அணிவதையே தாம் விரும்புவதாகத் தெரிவித்தார். சிறந்த நாடாக இந்தியாவை குறிப்பிட்டார். தாம் விரும்பும் சிறந்த புத்தகமாக புராணக் கதைகளை தெரிவித்தார். சிறந்த தலைவராக மஹாத்மா காந்தி அவர்களைக் குறிப்பிட்டார். மற்ற துறையில் ஹரிகதா விற்பன்னர் விசாகா ஹரி அவர்களை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். வாகனங்களில் தாம் மிகவும் விரும்புவது “கார்” என்றார். தனது உதவியாளராகக் கருதுவது கடவுளின் பரிசாக தன் குடும்பத்திற்குக் கிடைத்த திருமதி.ஜெயந்தி அனந்த நாராயணன் என்பவரைக் குறிப்பிட்டார்.
தன்னுடைய தாயும் தந்தையும் சிறிய வயதிலிருந்தே தன்னை இசையில் நாட்டங் கொள்ளும் வகையில் ஊக்குவித்தனர் என்றும் தனது சகோதரிகள் உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் சமயங்களில் அவர்களுடன் சேர்ந்து பாடும் வழக்கத்தை மேற்கொண்டும். வானொலியில் கேட்கப்படும் இசை, மற்றும் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று இசைக் கலைஞர்களின் இன்னிசையை உன்னிப்பாக கவனித்து அதனை பாடிக் காண்பிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேற்கூறிய சந்தர்ப்பங்களில் தான் இசையறிவை வளர்த்துக் கொண்டதை கிராமத்து மக்களும், பள்ளி ஆசிரியைகளும் தன்னை வியந்து போற்றும் அளவுக்கு ஆளாகியதாகக் கூறினார். இருந்த போதிலும் தனது சகோதரி சுந்தரி அவர்களிடமும் ஆரம்பப் பயிற்சி பாடங்களை கணேசன் என்பவரிடமும் சிறிது காலம் கற்றுக் கொண்டார். தன்னுடைய சிறிய வயதில் உறவினர்களை கமலா சுப்ரமணியம், விஜய லட்சுமி ஆகியோர் இசை கற்றுக் கொண்டிருப்பதை ரேவதி உன்னிப்பாகக் கேட்டு வந்திருக்கிறார். “பாவயாமி ரகுராமம்”, “சம்போ மஹாதேவ” போன்ற பாடல்களை அவர்கள் பாடியது தம்மை மிகவும் கவர்ந்து விட்டதும் அல்லாமல் அதுவே தன் இசையறிவை மேலும் வளர்த்துக் கொள்ள அடித்தளமாக அமைந்தது என்றார்.
மூத்த சகோதரிகள் சுந்தரியும் புவனேஸ்வரியும் பாடல் பயிற்சி மேற் கொள்வதும் ரேவதிக்கு உதவிகரமாக அமைந்தது. தற்போது சகோதரி புவனேஸ்வரியுடன் சேர்ந்து “வில்லிய நல்லூர் சகோதிரிகள்” என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.தனது உறவினரான கமலா சுப்ரமணியம், திருச்சி பொன்மலையில் அமைந்துள்ள சாரதா பஜனை மண்டலியில் கலந்து கொண்டு பாடி வருவதை ரேவதி அவ்வப் பொழுது கேட்பது வழக்கம். இந்த நேரத்தில் ரேவதி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அகிலா நாராயணசாமி அவர்கள் பஜனை மண்டலியின் பிரதம பாடகியாக இருந்தார். லலிதா சுப்ரமணியம் என்பவர் தனது சகோதரிகள் புவனேஸ்வரிக்கும் சுந்தரி அவர்களுக்கும் ராகமாலிகையில் அமைந்துள்ள “லலிதா சகஸ்ர நாமம்” ஸ்லோகத்தைக் கற்றுக் கொடுத்தார். மேற்கூறிய அனைத்துச் சூழ்நிலைகளும் ரேவதிக்கு இசை ஆர்வத்தை தூண்டியது எனலாம். எல்லாவற்றிற்கும் மேலாக தனது மற்றொரு உறவினரும், ஓய்வு பெற்ற இரயில்வே அதிகாரியுமான ப.சுப்ரமணியம் என்பவர் கர்நாடக இசைப் பிரியர் ஆவார். அவர் தனது ஓய்வு நேரங்களிலும், இரவு படுக்கச் செல்லும் பொழுதும் பெரும்பாலும் வானொலியில் ஒலிபரப்பப்படும் கர்நாடக இசைக் கச்சேரிகளை கேட்பது வழக்கம். இந்த சூழ்நிலை தன்னை இசைத்துறையில் இன்னும் பரிமளிக்கும் வகையில் சாதகமாக அமைந்து விட்டது என்று ரேவதி தெரிவித்தார். தான் இந்தியன் வங்கியில் பணிபுரிய ஆரம்பித்தவுடன் எண்ணற்ற ஊக்கங்களும், ஆதரவும் பலர் மூலம் தனக்கு கிடைத்ததாக கூறினார். அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் அனைத்திலும் பங்கு கொண்டு தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் முதல் பரிசையே தட்டிச் செல்லும் வாய்ப்பினை பெற்றார்.
இச்சமயத்தில் தன் இசைத் திறமையைக் கண்டு உணர்ந்த பி.எஸ்.விஜயலட்சுமி என்னும் சக ஊழியர் கர்நாடக இசையை முறைப்படி கற்குமாறு பணித்தார். இவர் ரேவதி அவர்களின் சிறந்த ரசிகை ; மற்றும் கடும் விமர்சகருங்கூட. தமிழ்நாடு அச்சுத்தாள்கள் இலாகாவில் பணிபுரியும் ஆர்.சுசீலா, ராஜேஸ்வரி ஆகிய இருவரும், மத்திய அரசின் சுங்க இலாகாவில் பணிபுரியும் துணை ஆய்வாளர் பார்வதி கைலாசம் என்பவரும் தன்னை இந்த அளவுக்கு உயர்நிலைக்குக் கொண்டு வந்தார் என்றால் மிகையாகாது என்று கூறினார். மேற்கூறியவர்களுடன் உஷா ராகவன், கங்கா ஸ்வாமிநாதன் (இவர்களும் சுங்க இலாகாவில் பணிபுரிபவர்கள்) ஆகியோரும் ரேவதியின் இசைத் திறனை ஊக்குவித்தனர். திருமதி பார்வதி கைலாசம் தன் மகளின் திருமணத்திற்கு ரேவதியின் கர்நாடக இசை நிகழ்ச்சியினை அளிக்குமாறு அன்புக் கட்டளையிட்டதை தான் ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு அதிசிரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரக் கச்சேரி செய்யும் அளவுக்குத் தன்னை தயார் செய்து கொண்டது தன் வாழ்வில் ஒரு திருப்பு முனையையே ஏற்படுத்தி விட்டதாகக் கூறினார்.
31-1-1997 அன்று ரேவதி ஸ்ரீதரன் அவர்கள் முதன் முதலில் மேடையேறிச் செய்த கர்நாடக இசைக் கச்சேரி, சென்னை, தியாகராய நகரிலுள்ள முருகன் கல்யாண மண்டபத்தில் நடந்தது. தனது தாய், தந்தையர் அக்கச்சேரியை முழுவதுமாகக் கேட்டு ரசித்து பாராட்டியது தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று ரேவதி தெரிவித்தார். நல்ல சாதகம் செய்ததனால் எந்த வித படபடப்புமின்றி தன்னம்பிக்கையுடன் சர்வ சாதாரணமாகப் பாடியதை தெரிவித்தார். கச்சேரி முடிந்த போது தான் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன்னைச் சேர்ந்தவர்கள் தனக்கு ஆதரவு அளித்ததை வெற்றியின் முதல் படிக் கட்டில் காலடி எடுத்து முன்னேறிக் கொண்டிருப்பதாக கருதினார்.
நாளடைவில் தான் பணிபுரியும் இதே இந்தியன் வங்கியில் பணி புரியும் ப்ரியாஸ்ரீ சங்கர் என்ற சகஊழியருடன் சேர்ந்து “மயிலை சகோதரிகள்” என்ற பெயரில் கர்நாடக இசைக் கச்சேரிகள் செய்து வருவது தான் செய்த மாபெரும் பாக்கியமே என்றும் கடவுளே ப்ரியாஸ்ரீயை தன்னிடம் அனுப்பி வைத்ததாகக் கருதுகிறார். ப்ரியாஸ்ரீ சங்கர் ஒரு “பிறவி மேதை” எனலாம். அவரிடம் ஏகப்பட்ட கீர்த்தனைகளைத் தான் கற்றுக் கொண்டு வருவதாகவும் அதே போல் தான் கற்றுக் கொண்ட “பன்னிரு திருமுறை” தமிழ் இசைப் பாடல்களை ப்ரியாஸ்ரீக்கு கற்றுக் தருவதாகவும் ரேவதி கூறினார். ரேவதியும், ப்ரியாஸ்ரீயும் ஒன்று சேர்ந்தே சென்னைப் பல்கலைக் கழகத்தில் முறையே B. Music மற்றும் M.Music படித்துத் தேறியுள்ளனர். இந்த உயர் நிலைக்குக் காரணமாக சுங்க இலாகாவில் பணிபுரியும் மற்றொரு பெண்மணி திருமதி வஸந்தா அவர்களை ரேவதி பெருமைபடக் கூறினார். வஸந்தா அவர்கள் ப்ரியாஸ்ரீயை ரேவதிக்கு அறிமுகப் படுத்தி வைத்ததன் பயன் இன்று கர்நாடக இசை உலகம் “மயிலை சகோதரிகள்’’ என்று அகிலம் போற்றும் அளவுக்கு புகழ் அடைந்திருக்கிறார்கள் என்று கூறலாம்.
சென்னை வானொலி நிலையத்தில் தான் முதன் முதலாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் “சுட்டும் விழிச்சுடர் தான் கண்ணம்மா” என்ற பாடலைப் பாடிய நாளை மறக்கவே முடியாது என்றார். தான் பிறந்த பலனை அன்று தான் அடைந்ததாகவும் அதிர்ஷ்டக் காற்று தம் பக்கம் நோக்கி தொடர்ந்து இன்று வரை வருடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்த நல் வாய்ப்பை வழங்கிய (B.E.A.T) வங்கி ஊழியர் கலைக்குழுவின் அமைப்பாளர் சி.பி.ரவி சங்கர் (S.B.I) அவர்களை என்றும் மறக்க இயலாது என்றும் குறிப்பிட்டார். அதே போல் திருமதி ராஜ ராஜேஸ்வரி (A Senior Founder Member of Madras Youth Choir) அவர்கள் வங்கி ஊழியர் கலைக் குழுவினருக்கு (B.E.A.T) பாடல்களை கற்றுத் தரும் விதம் தன்னை மிகவும் கவர்ந்தது என்றார். அக்குழுவில் தான் அங்கம் வகித்ததன் மூலம் தன்னுடைய குரல் வளத்திற்குண்டான நல்ல பயிற்சியும், பொது மக்களிடமிருந்து தன் இசைக்கு கிடைத்த அங்கீகாரம், நல்ல நண்பர்கள் அளவற்றதாக கிடைத்ததற்கு திருமதி ராஜ ராஜேஸ்வரி அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.
S.B.I-ல் பணி புரிந்த “க்யாபா”என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் வெங்கட சுப்ரமணியம் அதே வங்கியில் பணிபுரிந்து வந்த ராஜா ஸ்ரீனிவாஸ் என்பவரை தனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ராஜா ஸ்ரீனிவாஸ் தமிழில் தெய்வப் பக்திப் பாடல்களை இயற்றியதை “வர வேண்டும் லட்சுமி தாயே” என்ற இசைத் தொகுப்பினை ஒலி நாடா வடிவிலும், குறுந்தகடு வடிவிலும் தன் சொந்த செலவில் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். அதே தொகுப்பு பின்னர் “வேதநாயகி” என்ற பெயரில் வீனஸ் ரிக்கார்டிங் நிறுவனத்தாரால் வெளியிடப் பட்டதையும் தெரிவித்தார். இந்த இசைத் தொகுப்பில் சில பாடல்கள் தன்னால் மெட்டமைக்கப் பட்டதையும் ரேவதி தெரிவித்துள்ளார். இவ்விசைத் தொகுப்பிற்குக் கிடைத்த வரவேற்பு, பாராட்டுகள், பல நல்ல உள்ளங் கொண்ட எல்லாம் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து தான் இசைப் பயணத்திற்கு எளிதாகச் செல்ல முடிந்தது என்கிறார். தான் என்ன சாதிக்க முடியும் என்று நினைத்தமோ அதை கடவுளின் அருளால் பெற்று விட்டதைப் பூரிப்புடன் கூறினார். தனக்கு கிடைத்த முதல் சன்மானத் தொகையில் தன்னுடன் பாடும் ப்ரியாஸ்ரீசங்கருக்கு தியாகராஜ கீர்த்தனைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார்.
கச்சேரியில் மறக்க முடியாத அனுபவங்கள் : ஒருமுறை சென்னை பாரதீய வித்யா பவனில் நடந்த கச்சேரியில் பிரதானமாகப் பாடும் கீர்த்தனை ஒன்றிற்கு நிரவல் செய்யும் போது ப்ரியாஸ்ரீ தன்னிடம் கண்ணால் ஏதோ சைகை செய்து விட்டு விரல்களில் தாளம் போடுவதை குறிப்பால் உணர்த்திய தருணம் எதேச்சையாக தான் நிரவல் செய்தது மட்டுமின்றி கல்பனா ஸ்வரங்களுடன் சேர்த்து பாடினார். எப்பொழுதும் முதலில் நிரவல் பாடும் வழக்கம் ப்ரியாவினுடையது. ஆனால் ஏனோ தெரியவில்லை ; அந்த வாய்ப்பை ப்ரியா தனக்குச் சைகை செய்தது, தான் முதன் முதலாக தங்கு தடையின்றி நிரவல் செய்த அச்சம்பவத்தை மறக்கவே முடியாது என்றும் அதற்கு கடவுள் அருளைத் தவிர வேறு எதுவும் இருந்திருக்க முடியாது என்று ரேவதி அடித்துக் கூறுகிறார். பின்னர் ஒரு சமயம், நடன நிகழ்ச்சி ஒன்றிற்காக, தானும் பிரியாஸ்ரீயும் பிரபல தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் அவர்களோடு பங்கு கொள்ளும் சந்தர்ப்பம் தஞ்சாவூரில் கிட்டியது. நிகழ்ச்சியின் முதல் பாடலும் பாடியாகி விட்டது. வருணபகவான் தன் வேலையை மெதுவாக காட்டத்தொடங்கினார். அதையும் பொருட் படுத்தாது இரண்டாவது பாடலை பாடிக் கொண்டிருக்கும் போதே ரசிகப் பெருமக்கள் ஆங்காங்கே கலைந்து ஒதுங்க இடந்தேடி அலைந்து கொண்டிருந்தனர். பிறகு வருண பகவான் அன்று தன் முழு பலத்தைக் காட்டியதால் தங்களுடைய கச்சேரி நின்று விட்டதே என்ற கவலை மற்றும் ஏமாற்றம் தங்களைக் கவ்விக்கொண்டதை தெரிவித்தார்.
மற்றொரு சமயம், தனது பிறப்பிடமாகிய உடையாளுரிலுள்ள பெருமாள் கோயிலில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. கச்சேரி தொடங்கிய சமயம் பார்த்து திடீரென்று தொண்டை கட்டிக் கொண்டதால் பாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டதே என்ற கவலையில் இருந்த தனக்கு ஆபத்பாந்தவனாக திருமதி சீதாலட்சுமி (ரேவதியின் பெரியம்மா) வந்து உதவினார். அவரை அங்கு எல்லோரும் “மருத்துவர்” சீதாலட்சுமி என்றே அழைப்பார்களாம். அவர் மிளகும், துளசி கலந்த கஷாயம் ஒன்றை விரைவில் தயாரித்து ரேவதிக்கு அளித்து அருந்த வைத்ததன் பலனாக தொண்டை கட்டியதன் சுவடே தெரியாமல் இசை நிகழ்ச்சியில் அபாரமாகப் பாடி அனைவரையும் மகிழ வைத்தது மட்டுமின்றி வியக்கவும் வைத்திருக்கிறார். இதுவும் தன்னால் மறக்க முடியாத சம்பவம் என்று தெரிவித்தார்.
உடையாளுர் செல்வ மஹாகாளி கோயிலில் “அஷ்டபுஜ காளி” என்ற இசைத் தொகுப்பை தாங்கள் தயாரித்து வெளியிட்ட நாளன்று தன்னுடன் பாடும் பிரியாஸ்ரீக்கு உடம்பு சரியில்லாமல் போயிற்று. கச்சேரி நடக்க வேண்டும் என்ற கவலை பிரியாஸ்ரீக்கு உடம்பு இப்படியாகி விட்டதே என்ற கவலையும் கூடச் சேர்ந்து கொண்டது. இந்நிலையில் அங்கு கோயிலுக்குச் சென்று இருவரும் கடவுளை வழிபட்டனர் அங்குள்ள கிராமத்து மக்கள் எல்லோரும் வேண்டிய உபசரணைகள் செய்தனர். கோயில் குருக்கள் அம்மன் சன்னதியில் இருக்கும் திருநீரை பிரியாஸ்ரீக்கு அளித்தார். சிறிது நேரம் கழித்து இறைவன் அருளால் பிரியாஸ்ரீக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை; மயக்கமுற்று கடும் காய்ச்சலுக்குட் பட்டிருந்த அவர் யாரும் எதிர்பாரா வண்ணம் கச்சேரி செய்வதற்கு தயாராகி விட்டார். நிகழ்ச்சியும் எந்தவிதத் தொய்வுமின்றி நன்றாக நடந்து முடிந்ததை நினைவு கூர்ந்தார்.
எதிர் பாராமல் தனக்கு கிடைத்த வாய்ப்பு : ஒரு சமயம் “திரிவேணி சங்கமம் ”என்ற தலைப்பில் வித்தியாசமான திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியை டாக்டர் நித்ய ஸ்ரீ மஹாதேவன் அவர்கள் சென்னை, காமராஜர் அரங்கத்தில் நடத்தினார். இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் ஆகிய “முப்பெரும் இசை மேதைகள் ”திரைப்படங்களில் பாடிய முப்பது பாடல்களைத் தொகுத்துப் பாடிய அந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த அமைப்பாளராக பால.ரங்காச்சாரி அவர்கள் இருந்தார். அவர் எல்.கிருஷ்ணன் அவர்களை தனக்கு அறிமுகம் செய்ததோடு மட்டுமல்லாமல் பின்னணி வாசிக்கும் வாத்யக் கலைஞர்களுக்கு முப்பது பாடல்களுக்குண்டான பின்னணி வாசிக்கும் முறையை கற்றுக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு எல்.கிருஷ்ணனின் உதவியாளராக மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கொள்ளுப் பேரனான ராஜ்குமார் பாரதி அவர்கள் பணிபுரிந்தார். ஒத்திகை நாட்களன்று ரேவதிஸ்ரீ அவர்கள் நித்ய ஸ்ரீ மகாதேவன் முன்னால் “ஆடல் காணீரோ” என்ற பாடலைப் பாடிக் காட்டியதில் நித்ய ஸ்ரீ மகாதேவன் தன்னை மிகவும் பாராட்டியதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கர்நாடக இசை தவிர தனக்கு ஹிந்துஸ்தானி இசை, மராத்திய அபங்க், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவையும் பிடிக்கும் என்றார். தன்னுடைய கர்நாடக இசை நிகழ்ச்சிகளுக்கு இன்றுவரை முதன் முதலில் தனக்கு பக்க வாத்தியம் வாசித்து வரும் வயலின் கலைஞர் ஸ்வர்ணா காமேஸ்வரியும், மிருதங்கக் கலைஞர் வி.பாஸ்கர் அவர்களும் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார். அதே போல் தான் தன் சகோதரி புவனேஸ்வரியுடன் நிகழ்த்தி வரும் “பன்னிரு திருமுறை” இசை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மிருதங்கம் வாசிக்கும் யுகராஜன் அவர்களை இதுவரை பயன்படுத்தி வருகிறார். யுகராஜ் பங்கு கொள்ள இயலாத நாட்களில் ரமேஷ் மற்றும் கோவிந்தராஜன் ஆகியோரையும் சந்திரன், மற்றும் கணேஷ் ஆகிய இருவர் வயலின் இசைக்கிறார்கள். ஜி.ஸ்ரீதர் மற்றும் மோகன்குமார் ஆகியோர் புல்லாங்குழல் வாசிக்கிறார்கள்,இராதா வெங்கடேசன், மற்றும் கிருஷ்ணா ஆகியோர் வீணையும் குருபிரசாத் அவர்கள் கஞ்சீரா வாசித்து வருகிறார்கள். தாம் இதுவரை பாடிய பாடல்களிலேயே பிரபலமான பாடலாகக் கருதிய பாடல்களாக “நம்பிக் கெட்டவர் எவரய்யா”, “முருகா முருகா” என்று, “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா”, “ஆறுமோ ஆவல்”, “துன்பம் நேர்கையில் யாழெடுத்து”, “பாரோ கிருஷ்ணய்யா”, “வெங்கடாசல நிலையம்” ஆகிய பாடல்களை விரும்பி வருவதாகக் குறிப்பிட்டார்.
கடினமாகக் கற்று அதிக சிரத்தையுடன் எடுத்து பாடிய பாடலாக திருப்புகழ் வரும் “விகட பரிமள” என்ற பாடலைக் குறிப்பிட்டார். இப்பாடலை “பன்னிரு திருமுறை” புகழ், “தேவார இசை வேந்தர் கலைமாமணி ”சைதை டி.நடராஜன் அவர்கள் மெட்டமைத்து ரேவதி போன்ற இசை ஆர்வலர்களுக்கு கற்றுக் கொடுத்து வரும் ஒரு மிகப் பெரிய தமிழிசை ஆசான் ஆவார். தமிழிசை என்று குறிப்பிடும் போது ரேவதி தயங்காமல் உச்சரிக்கும் பெயர் சைதை நடராஜன் ஆகும். இசை மேல் தனக்கு இருக்கும் ஆவல், 90 வயதிலும் மாறாத ஞாபக சக்தி, இசை கற்றுக் கொடுக்கும் முறை, தம் மாணவர்கள் பாடும் போது தனக்கு கிடைக்கும் ஆனந்தம், திருமறைப் பாடல்களின் மேல் உள்ள பக்தி, யாரிடம் திறமை உள்ளதோ உடனே அவரை கண்டுபிடித்து ஊக்கு வித்தல், ராகத்தின் சிறப்புத் தன்மையை உணர்ந்து வித்தியாசமான முறையிலும், கடினமான தாளங்கள் கொண்ட பாடல்களை ஆர்வத்துடன் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் சைதை நடராஜன் அவர்களின் திறமை யாருக்கும் சளைக்காததல்ல; என்று ரேவதி அடித்துக் கூறுகிறார்.
ரேவதி அவர்கள் யாரிடம் எந்தெந்த திறமை வெளிப்பட்டுப் பாடப் படுகிறதோ அவர்களையெல்லாம் பின்பற்றி தன் இசையறிவை வளர்த்துக் கொள்வதோடு அம்மேதைகளைப் பாராட்டவும் செய்கிறார். தான் எந்தவித குளிர்ந்த பானமும், அருந்துவதில்லை. என்றும் வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தல், அனாவசியமாக யாரிடமும் கத்திப் பேசுவதை தவிர்த்தும் வருகிறார். தன் குரலைப் பாதுகாக்கும் வகையில் தலைப் பகுதியை மூடிக் கொள்ளுதல், காதுகளில் குளிர்ந்த காற்று படாமல் பஞ்சை அடைத்துக் கொள்ளுதல், போன்றவற்றை மேற்கொள்கிறார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற தன்னுடைய கச்சேரி, குமரன் குன்றம், (குரோம் பேட்டை) தமிழிசைச் சங்கம் (ராஜா அண்ணாமலை மன்றம்) மும்பையில் வாசவி ரோடு, சிங்கப்பூரிலுள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் ஆகிய இடங்களில் நடந்த கச்சேரிகள் தமக்கு பிடித்தமானவையாக குறிப்பிட்டார். இதுவரை தாம் செய்து வரும் எந்த ஒரு கச்சேரிக்காகவும் சாதகம் மேற்கொள்ளாமல் இருந்ததில்லை என்று தெரிவிக்கிறார்.
மிகவும் மறக்க முடியாதவை 31.1.1997 அன்று தான் செய்த முதல் கச்சேரியை மறக்கவே இயலாது என்கிறார். முதன் முதலில் தனது “தீபச் சுடரே திரௌபதியே” என்ற இசைத் தொகுப்பிற்காக ஒலிப்பதிவு நடந்த சமயம் தன் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றார். தனது விசிறியாக அபிராமி அவர்களை மறக்காமல் குறிப்பிட்டார் அவர் தன்னை என்றும் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வது மட்டுமின்றி பிறந்த நாளான்று தவறாமல் தனக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை (இன்று வரை தொடர்ந்து வழக்கமாகக் கொண்டுள்ளார். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கையால் முதல் பரிசு வாங்கியதையும் அவர் தன்னைப் புகழும் வகையில் தான் பாடலைப் பாடிய விதம் குரல் வளம், ஆகியவற்றைப் புகழ்ந்ததை மறக்கவே முடியாது என்கிறார். தான் செய்த ராக ஆலாபனையைப் பற்றி வந்த ஒரு பத்திரிகை விமர்சனத்தில் தான் உச்சஸ்தாயிலும் பாடிய விதம், இசையின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பாராட்டி எழுதியிருந்ததை பெருமையுடன் கூறினார்.
ரேவதி தனது குழந்தைகளுடனிருக்கும் போதும் சகோதர , சகோதரிகளுடன் சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொள்வதை தனது இன்பமான பொழுது போக்காகக் கருதுகிறார். வங்கிகளுக்கிடையே நடந்த இந்தி இசைப் போட்டிகளில் “பாலமுரளி முராரே”என்ற ஹிந்தி பஜனைப் பாடலை பத்தீப் என்ற ராகத்தில் பாடி முதல் பரிசை வென்றிருக்கிறார். இப்பாடலைக் கேட்டு ரசித்து ராணி மேரி கல்லூரி விரிவுரையாளரான அபிராம சுந்தரி அவர்கள் தன்னை மிகவும் பாராட்டியதை மறக்க இயலாது என்றார். இந்தியன் வங்கி கலைக்குழுவின் சார்பில் நடந்த வங்கிகளுக்கிடையே நடந்த இசைப் போட்டிகளில் முதன் முதலாகக் கலந்து கொண்டதில் “மயில் வாஹனா” என்ற பாடலை மோகன ராகத்தில் பாடி ராகம்,ஸ்வரப்பிரஸ்தாரம் செய்து அப்போட்டியில் முதலிடம் வகித்ததையும் தன்னால் மறக்கவே முடியாது என்று கூறினார்.
ஞாயிற்றுக் கிழமை தனக்கு மிகவும் பிடித்த நாளாகும் என்று ரேவதி அவர்கள் கூறினார். தனக்கு இந்திய தேசமே மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறினார்.
கவலை : கார் விபத்தில் தனது மூத்த சகோதரி சுந்தரி அவர்களின் கணவர் இறந்தது தனக்கு கவலை தரும் நிகழ்ச்சியாக அமைந்தது என்றார்.
திருமதி ரேவதி ஸ்ரீதரன், 22/74 பெருமாள் கோயில் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-600 015 தொலைபேசி – 28850111 கைபேசி- 9444225284 Email ID : revathysridharan@ymail.com  

More Profiles