Saidai D. Natajaran

Profile of "Kalaimamani" Thiru Saidai D. Natajaran

இந்தியாவில் சைவச் சமயச் சான்றோர்களின் அறப்பணி சிறக்கக் காரணங்களில் தமிழில் இயற்றப் பட்ட பன்னிரு திருமுறைப் பாடல்களும் அடங்கும். இத்திருமுறைப் பாடல்கள் தமிழ்நாட்டின் திருக்கோயில் களில் பாடப்படுவது மட்டுமின்றி, மேடைக் கச்சேரி களிலும், இலக்கியப் பிரசங்கங்களிலும் முதன்மை வகித்து வருவதை நாம் இன்றும் கண் கூடாகக் காண்கிறோம். இப்பாடல்கள் பாடுவதில் “கலைமாமணி” சைதை திரு. டி. நடராஜன் அவர்கள் தன்னிகரற்று விளங்கி வருகிறார். இவர் 1919–ம் ஆண்டில் தனகோடி – குப்பம்மாள் தம்பதியருக்குத் திருமகனாய் பிறந்தார்.
தனது பிறந்த மாதம், வருடம் தேதியை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள வில்லை. சகோதரரின் பெயர் சைதை சம்பந்தம் ஆகும். இவரது பூர்வீகம் பாண்டிச்சேரியிலுள்ள கதிர்காமம் என்னும் ஊராகும். தமிழைத்தாய் மொழியாகக் கொண்ட இவர், சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மூன்றாவது வகுப்பு வரை படித்தார். குடும்பத்தின் வறுமைச் சூழ்நிலை காரணமாக இவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. தமிழறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் தினமும் சிவாலயம் சென்று அங்கு திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்கள் பாடும் பன்னிரு திருமுறை பாடல்களைக் கேட்டே தன் மனத்துக்குள் கணினிபோல் பதிவு செய்து கொண்டு அப்படியே திரும்பப் பாடிக் காட்டும் ஆற்றல் பெற்றிருந்தார்.
நெல்லை சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்களின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி சைதை காரணீஸ்வரர் கோயில் மற்றும் மயிலை கபாலீஸ்வரர் கோயில் ப்ரம்மோத்ஸவங்களில் இரவு 10 மணிக்குத் தொடங்கி விடியற்காலை 4 மணி வரையில் வீதி உலாவாகவும், கோயில் நிகழ்ச்சியாகவும் நடக்குமாம். அப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை தனது 8 வயது முதலே அப்பாவுக்கு தெரியாமல் மதியம் 3 மணிக்கே கோவிலுக்குச் சென்று இரவு வரை காத்திருந்து ஓதுவா மூர்த்திகளின் முன்னேயே சென்று நிகழ்ச்சிகளை தன்னை மறந்து ரசித்துக் கேட்பாராம். அப்படிக் கேட்டுகேட்டு தன்மனதில் பதிந்த பாடல்களை இன்றளவும் புத்தகங்களைப் பாராமல் பாடக்கூடிய திறமையைக் கொடுத்திருக்கிறது என்கிறார். சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்களை தாம் மானசீகக் குருவாகக் கொண்டு கற்றுக் கொண்ட தேவாரப் பனுவல்கள் இவருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பசுமரத்தாணி போல் மனதில் பதிந்து “தேவாரம்“ என்ற அடைமொழி பிற்காலத்தில் இவரைத் தானே தேடி வந்திருக்குமோ என்ற சந்தோஷமான வினா நம்முன் எழுகிறது. கோயில் நிகழ்ச்சிகள் முடிந்து விடியற்காலை வீடு வந்து சேரும் போது தனது தகப்பனார் அளிக்கும் தண்டனைகள் வேறு. பலமுறை அவர் தன் மகனிடம் இப்படி இரவில் கண்விழித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்று கண்டித்தும் இவரை கயிற்றால் கட்டியும், தலையில் பலமாகக் குட்டியும், அடித்தும் இருக்கிறார். தேவாரத்தின் மேல் கொண்ட அளவிலா தாகத்தாலும், இசை மீது இருந்த நாட்டத்தினாலும், தகப்பனாரின் தண்டனைகளைப் புறந் தள்ளி, தேவார இன்னிசை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து எல்லா நாட்களிலும் முன்பு சொன்னதுபோல் விடியற்காலை 3 மணிக்கே தந்தையை ஏமாற்றி விட்டுச் செல்வதும் அவரிடம் அடி வாங்குவதும் இயல்பான நிகழ்ச்சியாகும்.
இவரது இசையார்வத்தைக் கண்ட தந்தை ஒரு விதத்தில் புரிந்து கொண்டு இசைப்பயிற்சிக்காக முனுசாமி பண்டிதரிடம் இசை பயில அனுப்பினார். முனுசாமி பண்டிதர் இசைக்கலையில் மிகவும் வல்லவர். சிறந்த வீணைக்கலைஞராகிய அவர் நாயனக்கலையிலும் முதன்மை இடம் வகித்தவர். அவரது மறைவுக்குப் பிறகு நடராஜன் காஞ்சிபுரம் விநாயகம் முதலியார் அவர்களிடம் இசைப்பயிற்சியைத் தொடர்ந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து தேவார இன்னிசைக் கச்சேரிகள் செய்யும் அளவுக்குத் தம் திறமையை வளர்த்துக் கொண்டார்.
சைதை நடராஜன் தமது 12வது வயதிலிருந்து தேவார இன்னிசை நிகழ்ச்கிகளிலும், சாஸ்திரீய சங்கீத நிகழ்ச்சிகளிலும் பாடத் தொடங்கி விட்டார். தமது ஆழ்ந்த சங்கீதப் பயிற்சியும், சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்களின் மூலம் கிடைத்த திருமுறை இசையனுபவமும் சேர்ந்து இவரை மிகவும் நல்ல முறையில் பாடி ஒளிரும் அளவுக்கு இவரைச் செதுக்கியிருககிறது. அப்படிச் செதுக்கப்பட்ட இசையனுபவத்துடன் இவர் தமது முதல் மேடை இசை நிகழ்ச்சியை சென்னை வெள்ளீஸ்வரர் கோயிலில் நடக்கும் 10 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் நிகழ்த்தியிருக்கிறார். அப்போது அவருக்குக் கிடைத்த முதல் சன்மானமான ரூபாய் 80/-யைத் தான் தாயாரிடமே அளித்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார். தாயாருக்கு மகன் மேல் அளவு கடந்த பாசத்தின் காரணமாக, மகன் அவ்வப்போது தரும் சன்மானத்தைக் கொண்டு தங்கத்தினாலான செயின், மோதிரம், கல் பதித்த பிரேஸ்லெட் போன்றவற்றை வாங்கி அவரை அணியச் செய்து அழகு பார்ப்பதில் பெருமையடைவாராம்.
சைதை நடராஜன் அவர்களின் திருமுறை இசைப்பற்றுக்குக் காரணமாக விளங்கியவர்களில் ஆடலரசன் என்பவர் குறிப்பிடத் தக்கராவார். இவர் மிகுந்த ஊக்கம் தந்தது மட்டுமின்றி திருமுறை ஆசிரியராகும் வாய்ப்பினையும் அளித்தார். சைதை நடராஜன் அவர்கள் மாபெரும் புலவர் மறைமலையடிகளாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது, அவரது தமிழறிவால் கவரப்பட்டு அவரது அணுக்கத் தொண்டனாகப் பல வருடங்கள் இருந்து அவரது இல்லத்திலேயே தங்கும் அளவுக்கு அரிய பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்.
கர்நாடக இசை நிகழ்ச்சிக்கு பாடிக் கொண்டிருந்த இவரை மறைமலை அடிகளார் “தேவாரத்திற்கு மட்டுமே உன்னை நீ அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழிசைப் பாடல்களும், பன்னிரு திருமுறைப் பாடல்களை மட்டுமே நீ பாட வேண்டும்“ என்று கேட்டுக் கொண்டது மட்டுமின்றி இவரிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாராம். மறைமலை அடிகளாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றும் வகையில் இன்றுவரை திருமுறைப் பாடல்களை மட்டுமே பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவரைத் தமிழ்த்தொண்டிற்கும், சைவத் தொண்டிற்கும் இழுத்து வந்த பெருமை மறைமலை அடிகளாரையே சாரும்.
மறைமலை அடிகளார் தமது இல்லத்தின் முதல் மாடியில அமைந்துள்ள நடராஜப்பெருமான் கோயிலுக்குச் செல்ல இவருக்கு மட்டுமே அனுமதியளித்திருந்தாராம். அவரின் இறுதிக் காலத்தில் அவருடைய உயிர் பிரியும் முன் 2 மாதங்களுக்கு முன்பிருந்தே அவருடன் கூடவே இருந்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அவருடைய உயிர் இவர் மடியில் பிரியும் அளவுக்கு பெரிய பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார். மறைமலையடிகளார் தாம் எழுதி வைத்த தம் உயிலில் சைதை நடராஜன் மட்டுமே தன் வீட்டு மாடியில் உள்ள நடராஜப் பெருமாளுக்கு தினசரி பூஜை, மற்றும் ஆராதனைகளைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததைத் தாம் குருவின் மேல் கொண்ட அளவற்ற பக்தியின் அடையாளம் என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினார்.
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள மறைமலை அடிகளாரின் இல்லத்திற்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடராஜப் பெருமாளுக்கு பூஜை ஆராதனைகளைச் செய்த சைதை நடராஜன் அவர்கள் சமீப காலமாக தன் உடல் தளர்ச்சி கருதி அப்பணியினைத் தொடர்ந்து செய்ய இயலவில்லையே என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார். சைதை நடராஜன் அவர்கள் பாடல்பெற்ற ஸ்தலங்களுக்குப் பலமுறை சிவனடியார்களுடன் திருத்தல யாத்திரை சென்றிருக்கிறார். அப்படி யாத்திரை செல்லும்போது ஒருமுறை விருத்தாசலம் அருகில் உள்ள சிற்றூரான “எருக்கத்தம் புலியூர்“ என்ற இடத்தில் தமது இசை நிகழ்ச்சியை நடத்தச் சென்றிருந்தார். இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில் ஒரு வயதான மூதாட்டி தோற்றத்தில் (மாடு மேய்ப்பவர்) வந்த ஒருவர், இவரிடம் “மாதர் மடப்பிடி“ என்று தொடங்கும் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடலைப் பாடும்படி வேண்டிக் கொள்ள அவரின் அன்புக்கட்டளைக்கிணங்கி அப்பாடலைப் பாடிக்காட்டினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கும்போது, வயதான மூதாட்டியையும் அழைத்து அடியார்களுடன் அமுதுண்ண அழைத்தபோது, அப்படி ஒருவரையும் அங்கு கண்டு பிடிக்க முடியவில்லை. அவ்வூர் மிகவும் சிறிய கிராமம். அந்நிகழ்ச்சி அமைந்த இடத்தைச் சுற்றிச் சுமார் 10 வீடுகள் கூட கிடையாது. மேலும் கூரை வேயப்பட்ட குடிசைகளே கொஞ்சம் இருந்தது. அவ்வூர் மக்களோ அம் மூதாட்டியை தாங்கள் பார்த்ததில்லை என்றும் அதே சமயம் அவர்கள் சைதை நடராஜன் குழுவினருடன் வந்த அம்மையார் என்று நினைத்திருந்ததாகவும் தெரிவித்ததைக் கேட்ட சைதை நடராஜன் அவர்களுக்கு ஏதோ ஒன்று பொறி தட்டியது போல் உரைத்தது.
அதாவது அம்பாளே காட்சி தந்திருப்பாளோ என்று யூகித்துக் கொண்டார். அவ்வூர் ஞானசம்பந்தப் பெருமானின் தாய் வழிப்பாட்டனாரின் ஊர் என்றும், எல்லாம் வல்ல உமையம்மையே அம்மூதாட்டியின் வடிவில் வந்து தம்மைப் பாடச் சொல்லிக் கேட்டிருப்பார்களோ என்று தாம் உணர்ந்ததாகச் சொல்லி மெய் சிலிர்க்கிறார். மேலும் அவ்வூரில் அம்பாளுக்குச் சக்தி மிகவும் அதிகம் என்றும் அந்த ஊர் மக்களுக்கு நோய் ஏதேனும் வந்திருந்தால் அவர்கள் மருந்து உட்கொள்ளாமல், அம்பாளே பார்த்துக் கொள்வாள் என்ற இறை நம்பிக்கையோடு நோய் வந்தவரை இரவில் வெளியில் படுக்க வைத்துக் கதவைத் தாளிட்டுக் கொள்வார்களாம். மறுநாள் பொழுது விடிந்தவுடன் அவர் பூரண குணமாகி இருப்பது வியப்பான நிகழ்ச்சி என்று சைதை நடராஜன் அவர்கள் தெரிவித்தார்.
தமது இசைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கதாக அவர் நினைப்பது, இலங்கையில் கண்டி கதிர்காமத்தில் நடந்த திருமுறை இன்னிசை நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். அடர்ந்த காட்டுப பகுதியில் நீண்ட நாட்கள் அறியப்படாதிருந்த சிவன் கோயிலை அங்கிருந்தவர்கள் கண்டெடுத்து, அதற்கு பாலாபிஷேகம் செய்தனர். தேவார இசை நிகழ்ச்சியை அவர்கள் ஏற்பாடு செய்ததையும் அவ்வடர்ந்த காட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருக்கும் போது, இரவில் அவருடன் சேர்ந்து பாம்புகளும் தங்கிய நிகழ்ச்சியை சுவைபட விவரித்தார். இறைவன் சிவபெருமானே அந்தக் காட்டில் தமக்குப் பாதுகாப்பு அளித்ததாகக் கருதுகிறார்.
இசை மட்டுமல்லாமல் இயற்கலையும் சைதை நடராஜன் அவர்களை ஆட்கொண்டது, கவிதை, கட்டுரை, பாடல்கள் புனைவதில் வல்லமை பெற்று விளங்கினார். இவரது கவிதைகளும், கட்டுரைகளும் “தினமணி“ நாளிதழில் வெளிவந்துள்ளன. சைதை நடராஜன் அவர்கள் “ஹார்மோனியம்“ நன்றாக வாசிக்கத் தெரிந்தவர். தாம் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் தன்னை மறந்து பாடிக் கொண்டே மிகவும் லாவகமாக ஹார்மோனியம் வாசிக்கும் போது அதில் இருந்து வரும். நாதம் மிக்க இனிமையை உண்டாக்குவதாகும் என்பார்.
“திருஞான சம்பந்தர்“ வரலாற்றை வில்லிசைப் பாடலுக்குரிய கவிதைகளின் வடிவில் அழகாக வடித்திருக்கிறார். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் இதனை வெளியிட்டிருக்கிறது. திருவாசகத்தின் சிவபுராணத்துக்கு இருபத்து நான்கு பண்ணில் இசையமைத்து ஸ்வரக் குறிப்போடு வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார். சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இதுவரை தேவாரப் பாடல்களைக் கற்றுத் தந்துள்ள சைதை நடராஜன் அவர்கள் நிச்சயம் புகழுக்குரியவர் ஆவார். அவ்வாறு தம்மிடம் கற்றுக் கொண்ட சில மாணவிகளில் குறிப்பாக திருமதி கிரிஜா ராமசாமி என்பவருக்கு அடியார்களின் வரலாறுகளை இன்னிசைக் கதைகளாக்கிப் பயிற்றுவித்து “சிவகதை“ நிகழ்த்த பழக்கியிருக்கிறார்.
சைதை நடராஜன் அவர்கள் தமிழ்நாடு ஓதுவா மூர்த்திகள் சங்கத்தைத் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு அதன் தலைவராக இருந்திருக்கிறார். மாதந்தோறும் ஆலய வழிபாடும விழாக்களும் நடத்தியிருக்கிறார். இவ்வமைப்பின் மூலம் திருமுறைக் கலைஞர்களுக்கு மரியாதையும், பணமுடிப்பும் தரப்பட்டிருக்கிறது. இதுவரை நால்வர் திருவுருவப்படங்கள் (அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்க வாசகர்) 4015 –க்கும் மேற்பட்ட இல்லங்களில் திறந்து வைத்த “சாதனை வீரர்” திரு சைதை நடராஜன் அவர்கள் ஆவார்.
பிரபல நரம்பியல் மருத்துவ நிபுணர் பி. ராமமூர்த்தியின் அவர்களின் உதவியாளரான மருத்துவர் ராஜேஸ்வரியும் அவரது சகோதரிகள் மூவரும், சகோதரர்கள் மூவரும் சைதை நடராஜன் அவர்களின் மாணவர்கள் ஆவார். அவரது இல்லத்தில் அடிக்கடி தேவார இன்னிசை நிகழ்ச்சி நடத்துவதையும், அந்த நிகழ்ச்சியைக் கேட்க அவரது சகோதர, சகோதரிகள் அனைவரும் COMPUTER WEBSITE ON LINE –மூலம் நிகழ்ச்சியை கேட்டு ரசித்து மகிழ்வார்களாம்.
இவர் வாழ்க்கையில் இதுவரை நடக்காத ஒன்றாக சிறு பிராயத்தில் தான் எழுதிய துப்பறியும் நாவல் ஒன்று வெளிவராமல் போன சம்பவம் இன்றளவும் தன்னைப் பாதிக்கிறது என்றார். பன்னிரு திருமுறைப் பதிகங்களான தேவாரம், திருவாசகம் திருமந்திரம், திருவெம்பாவை இவற்றில் புகழ்பெற்றிருந்த சைதை நடராஜன் அவர்கள் இசைத்துறையில் வந்திருக்காவிட்டால் தாம் வெறும் ஒரு சாதாரண மனிதராகவே இருந்திருப்பார் என்று குறிப்பிட்டார். தாம் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழிலான பன்னிரு திருமுறைப் பாடல்களை எல்லோருக்கும் கற்றுத் தர வேண்டும் என்ற இலட்சியத்துடன் இன்றுவரை வாழ்ந்து வருவதாகக் கூறினார்.
ஒருசமயம் ஸ்ரீலங்காவில் திருக்கேதிச்சுரம் என்ற இடம் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இடத்தில் சிவன் கோவில் ஒன்றை புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மறைத்து வைக்கும் சூழலை உருவாக்கி வைத்திருந்தனர். புதையுண்ட அந்த இடம் பின்னர் சீராக்கப்பட்டு சிவன் கோவில் மக்கள் அனைவருக்கும் தெரியும்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அச்சிவன் கோவிலில் தனது பன்னிரு திருமுறை இன்னிசை நிகழ்ச்சி இனிதே நடந்தேறியதில் அளவிலா ஆனந்தம் அடைந்தார். சென்னையை அடுத்த பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள நாகற்கேணி என்ற இடத்தில் அமைந்துள்ள மைதானத்தில் இவர் ஹரிஜனங்களுக்குப் திருமுறை இன்னிசைப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவ்விடத்தின் கூரை கோணியினால் வேயப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதி மாடு வெட்டும் கொட்டகையின் தரைப்பகுதியாகும். பாடம் நடத்திக் கொண்டிருந்த இவர் தன்னுடைய வேஷ்டி கொஞ்சங்கொஞ்சமாக ஈரமாகிக் கொண்டு வருவதை உணர்ந்தார். அதாவது தரைப்பகுதியில் இருந்த மாட்டின் ரத்தம் இவரது வேஷ்டியை ஈரமாக்கியதுடன் கரையாக்கிவிட்டது. ஆனால் இவரோ அந்த ஹரிஜன மாணவர்களின் இசையார்வத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் எதையும் பொருட்படுத்தாது அவர்களுக்காகப் பாடம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்ததை நாம் அறியும் போது இவரது ஆன்மீகம் மற்றும் சமூகச் தொண்டு எந்த அளவுக்கு உயர்ந்தது என்பதை நன்கு உணர முடிகிறது.
இவர் தம்முடைய மாணவர்களுக்கு இசையைப் போதிக்கும் கால அட்டவணையைப் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருப்பதை உணரலாம். அதாவது சென்னையில் மூன்று வாரம், மீதி ஒரு வாரம் பாண்டிச்சேரியில் இருவேளையிலும், திருப்போரூரிலும், செம்பாக்கத்திலும தொடர்ந்து 16 வகுப்புகளுக்கும் குறையாமல் வகுப்புகள் நடத்தி வந்திருக்கிறார். தனக்கு மிகவும் கடினமான பாடலாக “விகட“பரிமள“ என்று தொடங்கும் “திருப்புகழ்“ பாடல் அமைந்தது என்றும் அப்பாடல் சுமார் 25 நிமிடங்களுக்கும் குறையாமல் அப்பாடல் பாடப்படுவதாகும். இப்பாடல் இவரது இசை நிகழ்ச்சிகளில் நிறைய தடவை பாடப்பட்டு வந்திருப்பதாகவும், மாணவர்களுக்கு இப்பாடலைக் கற்றுக் கொடுப்பதில் மிகவும் சந்தோஷம் அடைவதாகக் குறிப்பிட்டார்.
இவரை ஆதரித்தவர்களில் ஒருவர் “ருக்மணி குக்கர்“ சோமசுந்தரம் செட்டியார் என்பவராகும். அவரது தேவார TRUST மூலம் நிறைய தேவார வகுப்புகள் நடத்தியிருக்கிறார். அவர் முதுகலைப் பட்டம் (M.A) பெற்றவர். தமிழ்ப்புலவராகிய அவர் தேவாரப் பாடல்களின் தீவிர ரசிகர் ஆவார். சைதை நடராஜன் அவர்களுடைய மாணாக்கர்களில் பலர் வெளி நாட்டில் வசிக்கின்றனர். ப்ரியா என்னும் இவரது மாணவி அமெரிக்காவில் தற்போது தேவார வகுப்பு நடத்தி வருகின்றார். சீன மாணவர் ஒருவர் சீனாவில் தேவார வகுப்பு நடத்தி வருகின்றார். அவர் MUSIC THERAPY –மூலம் “ஒன்று கொலாமது“ என்ற அப்பரின் பாடலில் விடம் தீர்த்த பதிகத்தைச் சொல்லி விஷக்கடிக்குச் சிகிச்சையளிக்கிறார். கிரிஜா ராமசாமி என்னும் இவரது மாணவி தன் 8 வயது இளம் பிராயத்தில் இவரிடம் கற்றுக் கொள்ள ஆரம்பித்து கண்ணப்ப நாயனார், காரைக்காலம்மையார், மார்க்கண்டேய சரித்திரம் தேவாரம் போன்ற பல்வகைத்தலைப்புகளில் இலக்கிய உரை நிகழ்த்தி வருகிறார்.
இவர் தனது குருவான திருநெல்வேலி சுந்தரமூர்த்தி ஓதுவாரையே சிறந்த இசை மேதையாகக் கருதுகிறார். தன் குரல் வளத்திற்காகப் பிரத்யேகமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடுவதில்லை கடவுள் கொடுத்த தன் குரல் வளம் ஆயுள் வரை என்றும் நீடித்திருக்க வேண்டும என்று வேண்டுகிறார். குளிர்ப்பிரதேசங்களில் சென்றிருந்தாலும் தாம் இதற்காக பிரத்யேகமாக எத்தகைய முயற்சியையும் மேற்கொண்டதில்லை. தன்னைக் கவனிக்கும் ஒரே மருத்துவர் இறைவன் ஒருவனே என்றார்.
தாம் நடத்திய இசை நிகழ்ச்சிகளிலேயே ஸ்ரீலங்கா நிகழ்ச்சி பிரதானமாய் திகழ்ந்ததாகத் தெரிவித்தார். கடினமான பாடலாக இதுவரை தான் கருதிய “விடகபரிமள“ என்ற பாட்டை 6 கட்டை ஸ்ருதியில் பாடியது என்றும் மறக்க முடியாத ஒன்று என்கிறார். ராகங்களில் சங்கராபரணத்தை விரும்புவதாகக் கூறினார். ஒருமுறை திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் விழாவில் திருஞானசம்பந்தர் அப்பர் பாடல்களை இசைத்த இவருக்கு “பொற்காசு” ‘அளித்ததோடு மட்டுமல்லாமல் பாராட்டும் வழங்கப்பட்டது. கிழக்கு தாம்பரத்தில் 60 வருடமாக கற்பக வினாயக திரு நெறிமன்றம் என்ற அமைப்பை ஜெயச்சந்திரன் செட்டியார் என்பவர் நடத்தி வருகிறார். அவ்வமைப்பிற்கு சைதை டி. நடராஜன் அவர்கள் ஆஸ்தான குருவாக விளங்கி வருகிறார்.
W.S.S INSULATORS நிறுவன அதிபர் சேதுராமன் என்பவர் சைதை டி. நடராஜன் அவர்களது பாடலை எப்பொழுதும் பதிவு செய்து வருபவர். இவரது மகள் நளினி இவரிடம் கற்றுக்கொண்டதுண்டு. திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் சேதுராமனின் குடும்ப நண்பர் ஆவார். சேதுராமன் இல்லத்திற்கு ஒருமுறை விஜயம் செய்த எம்.எஸ். சுப்புலட்சுமி, சைதை டி. நடராஜன் பன்னிரு திருமுறை சம்பந்தப்பட்ட பாடல்கள் இசைத்ததை வெகுவாக ரசித்ததுண்டு என்று நினைவு கூர்ந்தார்.
விருப்பங்கள் கர்நாடக இசையில் அமைந்த வர்ணங்களில் பைரவி ராகத்தில் அமைந்த “விரிபோணி“ என்ற அடதாளவர்ணம் இவர் விரும்பிக் கேட்கும் வர்ணமாகும். “சோபில்லு சப்தஸ்வா“ என்று தொடங்கும் கீர்த்தனை தன்னை மிகவும் கவர்ந்ததாகும் என்றார். இசைமேதைகளில திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் குறிப்பிடத்தக்கவர் என்கிறர்ர். கர்நாடக இசையில் ஆண் பாடகர்களில் மதுரை மணி அவர்களை மிகவும் பிடிக்கும் என்றார். தனக்கு பக்கவாத்யம் வாசிக்கும் கலைஞர்களில் நீண்டகாலமாக மிருதங்கம் வாசிக்கும் யுவராஜ என்பவரைக் குறிப்பிட்டார். தன்னிடம் கற்ற மாணவர்களிலேயே தம்மைக்கவர்ந்தவராக சைதை டி. நடராஜன் அவர்கள் குறிப்பிட்டது மறைந்த பாலசுந்தரம் என்பவரை தற்போது கற்றுக் கொண்டுவரும் மாணவிகளில் திருமதி ரேவதி ஸ்ரீதரன், திருமதி வசந்தா ராம்மோகன், திருமதி புவனேஸ்வரி நாராயணன், திருமதி ரேவதி கிருஷ்ணமூர்த்தி, திருமதி கமலா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். ஞானேஸ்வரன் காரணீஸ்வரன் என்ற இவரது இளவயது மாணவர்கள் சமீபகாலமாக பன்னிருதிருமுறை இசையில் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள்.
தமக்குப் பிடித்த திரைப்படமாக திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் நடித்த “மீரா“ படத்தைக் குறிப்பிடுகிறார். பாடலாசிரியர்களில் அப்பர் சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரைக் குறிப்பிட்டார். உறவினர்களில் குடும்பத்திலுள்ள அனைவரையும் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். நண்பர்களது வட்டாரத்தில் T.V.S GROUP -ச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி அவர்களை நினைவு கூர்ந்தார். உணவு விஷயங்களில் தமக்குப் பிடித்தமான “புளிப்பில்லாத கூட்டு“ வகையைக் கூறினார். நிறங்களில் வெண்மையும், உடையில் வேஷ்டி மிகவும் பிடிக்கும் என்றார். என்றும் தமக்குப் பிடித்தமான இடமாகப் பாண்டிச்சேரியிலுள்ள கதிர்காமத்தைக் குறிப்பிட்டார். இந்தியநாடே தான் விரும்பும் நாடாகும் என்று தெரிவித்தார். புத்தகங்களில் “பன்னிருதிருமுறை“ தனக்குப்பிடித்தமான புத்தகமாகும் என்றார். தலைவர்களில் மறைமலை அடிகளாரைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். கலைத் துறையல்லாத மற்ற துறையில் தனக்குப் பிடித்தவராக நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் அவர்களை மனதாரக் குறிப்பிட்டார்.
வாகனங்களில் “கார்“ தமக்குப் பிடிக்கும் என்று சொல்லும அவர் தன் உதவியாளராக P.R. ரேவதி கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் குறிப்பிட்டார். தன் தாயாரிடம் வளர்ந்த தருணங்கள் தான் தமக்கு சந்தோஷமாய் அமைந்தன என்று குறிப்பிட்டார். இவர் கவலை கொள்வது என்னவென்றால் தனது வயது மூப்பு காரணமாக தள்ளாமையினால் தொடர்ந்து பன்னிரு திருமுறை இசை வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்த இயலாமலிருப்பதே என்றார்.
இந்திய விடுதலைப் போராட்ட சமயங்களில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களைப் பாடலாக எழுதி அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி அவர்களுக்கு அனுப்பி வைப்பாராம். அதே போல் திருத்தணி தமிழகத்திற்குத் தான் சொந்தம் என்று வாதாடிய சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வகையில் பாடல்கள் புனைந்து அனுப்பிவைப்பாராம். தாம் எழுதிய திருவாசகம் என்ற முதல் நூலில் பாடல்களை ஸ்வரக் குறிப்புகளுடன் சேர்த்து வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டதை தெரிவித்தார். 2-வது நூலான திருஞானசம்பந்தர் வரலாற்றை வில்லுப்பாட்டின் மூலம் நிகழ்த்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டதைக் குறிப்பிட்டார்.
தினமணி நாளேட்டில் தாம் சிறுகதைகள் எழுதி வெளிவந்ததைத் தெரிவித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவர் டாக்டர் பிரமிளாகுருமூர்த்தி இவரது இன்னிசை நிகழ்ச்சியை தனது மாணாக்கர்களாகிய ரேவதிஸ்ரீதர், புவனேஸ்வரி நாராயணன் ஆகியோரைக் கொண்டு நிகழ்த்தியதை நினைவு கூர்ந்தார். இவரது ஒலிப்பதிவு, வீடியோ மற்றும் டி.வி.டி ஆகிய இசை வடிவங்களின் எண்ணிக்கை சுமார் 20 வரை வெளிவந்துள்ளன என்றார்.
சைதை டி நடராஜன் அவர்கள் தேவார இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மட்டுமின்றி, கதாகாலட்சேபம், வில்லுப்பாட்டு போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். அவர் சிறுகதைகள் நிறைய எழுதியிருக்கிறார். 1. பிள்ளை மனம் 2. செல்லாத காசு 3. அறிவுச்சுடர் 4. காரைக் காலம்மையார் இதுமட்டுமல்லாமல் சைதை டி.நடராஜன் அவர்கள் கவிதைகள் நிறைய புனைந்திருக்கிறார்.
ஒருமுறை இவரது இசை நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் நடந்தது. நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாசித்த பக்கவாத்யக்காரர்கள் மாட்டுவண்டியில் ரயிலடிக்குப் புறப்பட்டு விட்டனர். திடீரென்று இவருக்கு ஒருவித உடல் உபாதை வந்து விடவே தன் மாணவியான ரேவதி கிருஷ்ண மூர்த்தியிடம் தேவாரப்பாடல் ஒன்றை சீக்கிரம் பாடச் சொல்ல அவரும் தன் குருவின் கட்டளைக்கிணங்கப் பாடிய சுமார் ½ மணி நேரத்தில் தனது உடல் உபாதை நீங்கிய அதிசயத்தை தெரிவித்தார். பிறிதொரு சமயம் இவருக்கு திருக்கோவலூர் என்னும் ஊரில் 10 நாட்கள் தொடர்ந்து கச்சேரி செய்யும் வாய்ப்பு கிட்டியது மழை காரணமாகப் போகும் வழியில் பளிங்கு போல் தண்ணீர், திடீரென்று பக்கவாத்யக்காரர்கள், தம் பக்கம் இழுக்கும் நிலை ஏற்பட்டது காரணம் என்னவென்றால், பாம்பு ஒன்று இவரை நோக்கி வந்ததால் ஏற்பட்ட பரபரப்பு அப்படிப்பட்ட கண்டத்திலிருந்தும் இவர் தப்பியிருக்கிறார்.
தம்மிடம் திருமுறை இசை பயிலும் மாணவியரில் ஒருவரான வசந்தா ராமமோகன் அவர்களின் மகனான மாதவன் தன் அன்னைக்கு சைதை டி நடராஜன் தேவாரப்பண் இசை கற்றுக் கொடுப்பதை அருகிலிருந்து கேட்டதன் விளைவாக, அவரின் இசைப்புலமையை வியந்து போற்றும் வகையில் அவருக்குச் சன்மானமாக ரூ. 1000/- மாதா மாதம் வழங்கப்போவதாக அறிவித்து இன்றுவரை அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை பெருமைப்படத் தெரிவித்தார்.
முகவரி: “கலைமாமணி” சைதை டி. நடராஜன் அவர்கள் 58/2 கிருஷ்ணப்ப நாயக்கர் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015. கைபேசி: 98401 60020

More Profiles