Shesam Patti-Siva Lingam

Profile of Shesam Patti-Siva Lingam

கர்நாடக இசைக் கலையில் முக்கியமானதொரு அங்கம் வகிக்கும் இசைக் கருவிகளில் தொன்மை வாய்ந்ததாக நாதஸ்வரம் கருதப் படுகிறது. நாகஸ்வரம் என்றும் இதனை இசை வாணர்கள் அழைப்பர். எந்த ஒரு தமிழகக் கோவில்களிலும், தமிழர் வாழ் இல்லங்களிலும் விழாக் காலங்களிலும், மங்கல வாத்தியமாக நாதஸ்வரம் இசைக்கப் படுவது அனைவரும் அறிந்த ஒன்று. நாதஸ்வரம் இசைப்பதில் பல விற்பன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவ்வரிசையில் தற்போது பேசப்படுபவராக, சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சேஷம் பட்டி டி.சிவலிங்கம் அவர்கள் திறமை வாய்ந்தவராகக் கருதப் படுகிறார். இவர் 7-7-1944 அன்று தீர்த்தகிரி, ராஜம்மாள் தம்பதியர்க்குத் திருமகனாய் பிறந்தார். இவருக்கு ஒரு சகோதரரும், ஐந்து சகோதரிகளும் உண்டு. தான் பிறந்த ஊரான சேஷம் பட்டியைத் தன் பெயருக்கு முன்னால் வைத்துக் கொண்ட இவர் தர்மபுரியிலுள்ள நல்லம்பள்ளி இளநிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பு வரை படித்தார்.
தன் தந்தையின் இசையார்வம் இயற்கையாகவே இவரைப் பற்றிக் கொண்டதால் தானும் அவரைப் போலவே திகழ வேண்டும் என்ற இலட்சியத்துடன் முதல் குருவாகிய தந்தை தீர்த்தகிரியிடமே நாதஸ்வரம் கற்றுக் கொண்டும், மேலும் கீரணூர் ராமசாமி பிள்ளை மற்றும் கீவளுர் கணேசன் ஆகியோரிடமும் நாதஸ்வர இசையைப் பயின்றார். அதன் பின்னர் சென்னை அடையாரிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் மூன்றாண்டுகள் படித்து “வாத்ய விஷாரதா” என்ற பட்டத்தையும் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் மொழிகள் தெரிந்த இவரை முதன் முதலாக மேடை யேற்றிய பெருமை தந்தை தீர்த்தகிரி அவர்களையே சாரும். இவர் முதன் முதலாக “நாதோபாஸனா” என்ற சபாவில் தன் நாதஸ்வரக் கச்சேரியை நிகழ்த்தனார். தனது இருபதாம் வயதில், சென்னை மயிலையிலுள்ள கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவில் கல்யாணி ராகத்திலமைந்த “வாசு தேவயானி” என்று ஆரம்பிக்கும் கீர்த்தனையை நாதஸ்வரத்தில் வாசித்துக் காட்டி அனைவரையும் கவர்ந்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட சங்கீத உருப்படிகளை கற்றுத் தேர்ந்த இவருக்கு தமிழக அரசு “கலை மாமணி” என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.
இவருக்கு ஏராளமான விருதுகள், சான்றிதழ்கள், பரிசுக் கேடயங்கள், பதக்கங்கள் கிடைத்திருந்தாலும் அதனைக் கணக்கில் வைத்து கொள்ள வில்லை என்று மிக அடக்கத்துடன் கூறுகிறார். மொரேஷியஸ் மற்றும் அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கு மூன்று முறை விஜயம் செய்து நம் பாரம்பரிய இசையை நாதஸ்வரம் மூலம் இசைத்து நம் தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம், முன்னாள் உப ஜனாதிபதி கிருஷ்ண காந்த் மற்றும் தேசிய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கலைஞர்கள் முன் நாதஸ்வரம் வாசித்து அவர்களின் நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றிருக்கிறார். நாதஸ்வரம் மட்டுமின்றி இவருக்கு வாய்ப்பாட்டுக் கலையும் அத்துப்படியாகும்.
இவரின் முக்கியமான பொழுதுபோக்கு இசை மற்றும் காலை, மாலை வேளைகளில் நீண்ட நேரம் நடப்பது ஆகும். இசைத் துறைக்கு வருவதற்கு முன்னர் இவர் விவசாயத் தொழில் மேற்கொண்டிருந்தார். சேஷம் பட்டி சிவலிங்கம் அவர்களின் நாதஸ்வரக் கச்சேரியை நுங்கம் பாக்கம் கல்சுரல் அகாடெமி வீடியோ ஆல்பமாகத் தயாரித்து அளித்திருக்கிறது. பொதிகை, சன், ஜெயா, ராஜ் ஆகிய தொலைக் காட்சிகளில் இவருடைய நேரடி பேட்டிகள் ஒளி பரப்பாகியுள்ளன.
விருப்பங்கள் : சேஷம் பட்டி சிவலிவங்கம் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ராகம் கல்யாணி ஆகும். தனக்குப் பிடித்த வர்ணங்களாக ஸாமி நின்னே, நின்னுகோரி, எவரிபோத ஆகியவற்றைக் குறிப்பிட்டார். தில்லானா வகையறாக்களில் பிரபல வயலின் மேதை லால்குடி ஜி.ஜெயராமன் அவர்கள் தனஸ்ரீ ராகத்தில் இயற்றியதைக் குறிப்பிட்டார். சிறந்த இசை மேதையாக இவர் பிரபல நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அவர்களைக் கருதுகிறார்.
கர்நாடக இசைப் பாடகர்களில் எஸ்.ஜி.கிட்டப்பா, கே.வி.நாராயணசாமி, போன்றவர்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றார். பெண் பாடகியரில் திருமதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல் வசந்தகுமாரி ஆகியோரின் குரல் வளம் பிடிக்கும் என்றார். உடன் வாசிப்பவர்களில் நாதஸ்வரக் கலைஞர் செல்வம், தவில் வித்வான், சுப்ரமணியம் ஆகியோர் தமக்கு மிகவும் விருப்பமானவர்கள் என்றார். தான் விரும்பும் கலையரங்கங்களாக க்ளீவ் லேண்ட், (அமெரிக்கா) சென்னையில் மியூஸிக் அகாடெமி, ஸ்ரீகிருஷ்ண கான சபா, பாரதீய வித்யா பவன் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். கர்நாடக சங்கீதத்தில் தமக்கு விருப்பமான சாகித்ய கர்த்தாக்களாக தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், டி.கே. சியாமா சாஸ்திரி, ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யர், மற்றும் பாபநாசம் சிவன் ஆகியோரைத் தெரிவித்தார்.
சிறந்த சபாவாகத் தமக்கு விருப்பமான சென்னையில் மியூஸிக் அகாடெமி, ராஜா அண்ணாமலை மன்றம், பாரதீய வித்யா பவன் போன்றவற்றைத் தெரிவித்தார். சென்னை வானொலி நிலையம் தன்னை மிகவும் கவர்ந்த சிறந்த ஒலிப்பதிவுக் கூடம் ஆகும் என்று கூறினார். இசை உலகில் தனக்கு எல்லோரையும் மிகவும் பிடிக்கும் என்றார். தான் விரும்பும் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள், கொஞ்சும் சலங்கை ஆகியவற்றை தெரிவித்தார். திரைப்படப் பாடலாசிரியராக பாபநாசம் சிவன், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை விரும்புவதாகத் தெரிவித்தார். திரைப்பட பின்னணிப் பாடகர்களில் டி.எம்.சௌந்திரராஜன், சீர்காழி எஸ்.கோவிந்தராஜன், டி.ஆர்.மகாலிங்கம், பி.யு.சின்னப்பா ஆகியோரின் குரல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். பெண்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. எம்.எல்.வசந்த குமாரி மற்றும் டி.கே.பட்டம்மாள், ஆகியோரின் குரல் விரும்புவதாகத் தெரிவித்தார்.
தமிழ்த் திரைப்பட நடிகர்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி , கமல் ஆகியோரின் நடிப்பை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். நடிகையரில் சாவித்திரியின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றார். நகைச்சுவை நடிகர்களில் என்.எஸ்கிருஷ்ணன்,கே.ஏ.தங்கவேலு, நாகேஷ் ஆகியோரின் நடிப்பை விரும்புவதாக கூறினார். சிறந்த திரைப்பட இயக்குனராக கே.எஸ்.கோபால கிருஷ்ணன், ஏ.பீம்சிங் ஸ்ரீதர் ஆகியோரைக் குறிப்பிட்டார். உறவினர்களில் தனக்கு எல்லோரையும் பிடிக்கும் என்றார். சிறந்த நண்பராக மறைந்த நாதஸ்வரக் கலைஞர் செல்வம் என்பவரைக் குறிப்பிட்டார். உணவு வகைகளில் சைவ உணவை விரும்புவதாகக் கூறினார். வெண்மை நிற உடைகளை விரும்பி அணிவதாகக் கூறினார். வேஷ்டி, சட்டை அணிவதை எப்பொழுதும் விரும்புவதாகத் தெரிவித்தார். தனக்கு மிகவும் பிடித்த இடம் சென்னையிலுள்ள மயிலாப்பூர் ஆகும் என்றார். தனக்குப் பிடித்த நாடாக இந்தியா என்று தெரிவித்தார். பள்ளி நாட்களில் தான் விருப்பமுடன் பள்ளித் தோழர்களுடன் விளையாடியதை நினைவு கூர்ந்தார். தனக்கு மிகவும் பிடித்த தலைவராக “கர்ம வீரர்” காமராஜ் அவர்களை தெரிவித்தார். தான் விரும்பும் வாகனமாக ஆக்டிவா (HONDA) ஸ்கூட்டரைத் தெரிவித்தார்.
பொது : தினமும் தான் நடைப் பயிற்சியை மேற்கொள்வதாகவும், தினமும் நாதஸ்வர இசை சாதகம், மற்றும் மாணவர்களுக்கு இசையைப் பயில்விப்பதாகக் கூறினார். நல்ல மனிதன் என்று எல்லோராலும் அழைக்கப் படுவதை தான் சம்பாதித்த செல்வமாகக் கூறினார். நாதஸ்வரக் கலைஞராக இருந்திருக்கா விட்டால் தான் ஒரு விவசாயியாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்.இசையைத் தான் மிகவும் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழிலாகக் கூறினார். தன் சிறிய வயதில் பள்ளி நாட்களில் படித்துக் கொண்டிருந்த போது வருங்காலத்தில் ஆசிரியராக வர வேண்டும் என்று ஆசைப்பட்டதாகத் தெரிவித்தார். பழைய நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் தான் மிகவும் மன மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். தான் மிகவும் விரும்பும் உறவினராக தன் மாமனாராகிய சுப்ரமணியம் அவர்களைத் தெரிவித்தார். வெளிநாடுகளில், தான் செய்த கச்சேரிகளில் ரசிகர்கள் மெய் மறந்து ரசித்ததுடன் மட்டுமல்லாமல் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பியதைத் தன்னால் மறக்கவே இயலாது என்றார்.
சமூகத்திற்குத் தான் ஏதாவதொரு விதத்தில் தன்னால் இயன்றதை இன்று வரை தொண்டுகள் செய்து வருவதாகக் கூறினார். தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூறும் பொழுது பெருமையான குடும்பம் என்று தெரிவித்தார். வருங்காலத்தில் தான் தன் இசையனுபவங்களை ஒரு புத்தமாக வெளியிடும் எண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். தன் முன் அடிக்கடி தோன்றுபவர்களாக தன்னை ஈன்றெடுத்த தாய், தந்தையரைத் தெரிவித்தார். கடவுளை அடிக்கடி நினைத்துக் கொள்பவராக இருக்கிறார். தன் ரசிகர்களை மிகவும் நல்லவர்கள் என்று பெருமை பொங்கக் கூறுகிறார். தன் குடும்பத்தினருக்கு அடிக்கடி கூறும் அறிவுரையாக எப்பொழுதும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறார்.
மறக்க முடியாதவை தான் இதுவரை நிகழ்த்திய அனைத்துக் கச்சேரிகளும், மறக்கவே இயலாது என்றார். வெளிநாடுகளில் நிகழ்த்திய இன்னிசைக் கச்சேரிகளும் அவ்வாறே மறக்க வொண்ணாதது என்றார். தனக்கு வாழ்வில் கிடைத்தற்கரியதொரு அரிய வாய்ப்பாக, மதுரையில் நடந்த 5-ம் உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய தமிழக முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னிலையில் நாதஸ்வரம் வாசித்ததும், தான் வாசித்த காபி ராகத்திலமைந்த “சரணமுலாடே” என்ற ஜாவளியை உருப்படியை விரும்பிக் கேட்டு மறுபடியும் அவர் அதனை வாசிக்கச் சொன்னது தன்னை மெய் சிலிர்க்க வைத்தது என்றார். இன்பகரமான பொழுதாக நினைப்பது நாதஸ்வரம் வாசிக்கும் போது அதைக் கேட்கும் ரசிர்கள் ரசிப்பதையே எங்கு வாசித்தாலும் அவர்களின் ரசிப்புத் தன்மை தன்னை சொல்ல வொண்ணாத மகிழ்ச்சியை அளித்து வருகிறது என்றார். தனக்கு எல்லா நாளும் பிடிக்கும் என்று கூறும் இவர் தனது முதல் மகனின் பிறந்த நாளை மிகவும் விரும்பும் நாளாக தெரிவித்தார். மாலை வேளையே தனக்கு மிகவும் பிடித்தது ஏனென்றால் பெரும்பாலும் நாதஸ்வரம் இசைப்பதில் மாலை வேளை தனக்கு உகந்ததாக இருப்பதாகக் கூறினார்.
இசை தன்னுள் இசை ஆர்வம் இருந்ததை வெளிப்படுத்தியதற்காக தந்தை தீர்த்த கிரி அவர்களை மானசீக தெய்வமாகவே கருதி வருவதாக தெரிவித்தார். தனக்கு முதன்முதலாக நாதஸ்வரம் வாசித்ததைப் பாராட்டியவர், சங்கீத கலாநிதி பாலக்காடு கே.வி.நாராயணஸ்வாமி ஆகும். தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்த போது ஆரபி ராகம் வாசித்ததை அவர் ரசித்தது இன்றும் தன் மனதில் பசுமையாக உள்ளது என்று தெரிவித்தார். தன்னுடைய முதல் கச்சேரியாக சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நாதஸ்வர இன்னிசையை நிகழ்த்தியதில் அங்கு வந்திருந்த மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து முதலில் கொஞ்சம் கலவரமும், நடுக்கமும் ஏற்பட்டது என்றும் பிறகு அது சரியாகி விட்டது என்றும் கூறினார். தன் நாதஸ்வரக் கச்சேரிகள் இசை ஒலிப் பேழை, குறுந்தகடுகள் மூலம் வெளி வந்ததில் எண்ணற்ற மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, குறுந்தகட்டிலோ தன் நாதஸ்வர இன்னிசையைக் கேட்கும் பொழுதும், காணும் போதும் இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்ற எண்ணமே தனக்குள் தோன்றியதாக தெரிவித்தார். தனது முதல் கச்சேரியில் கிடைத்த சன்மானத் தொகையை திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியதைக் கூறினார்.
மறக்க முடியாத சம்பவம் ஒரு முறை சேஷம் பட்டி சிவலிங்கம் அவர்கள், தான் வசித்து வந்த வீட்டின் மாடியில் நாதஸ்வர சாதகம் செய்து கொண்டிருந்த போது எதேச்சையாக பிலஹரி ராகத்தில் காருகுறிச்சி அருணாச்சலம் அவர்கள் “கொஞ்சும் சலங்கை” திரைப்படத்தில் வரும் ராமலிங்க அடிகளாரின் “ஒருமையுடன் நினது திருமலரடி” என்ற இராமலிங்க அடிகளாரின் பாட்டை இசைத்துக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த இவரின் குரு வேகமாக வீட்டின் கீழ்ப் பகுதியிலிருந்து மாடிக்கு வந்து இவரைக் கடிந்து கொண்டார். ஏனென்றால் பிலஹரி ராகத்தில் வரக்கூடிய ஸ்வரங்களை வாசித்த போது அவருக்கு திருப்தி ஏற்படாததால் தன் சீடரான சிவலிங்கத்தை உரிமையுடன் குரு என்ற முறையில் அடிக்கவும் செய்திருக்கிறார். இச்சம்பவத்தை தன் வாழ்நாளில் மறக்கவே இயலாது என்கிறார். எதிர் பார்த்தது கிடைக்காமலும், எதிர் பாராமல் கிடைத்ததும் தன் வாழ்க்கையில் ஏராளம் என்றார்.
தான் செய்த கச்சேரிகளில் இதுவரை வாசித்த கீர்த்தனைகளில் பிரதானமாக, அதிக முறை வாசித்தது தியாகய்யர் இயற்றிய ஜெயந்த ஸ்ரீராகத்திலமைந்த “மருகேலரா” என்ற ஆதிதாளப் பாடலாகும் என்றார். இதுவரை வாசித்ததில் தான் கடினமாக பயின்ற பாடல் தியாகய்யர் இயற்றிய பைரவி ராகத்திலமைந்த “சேதுலரஸ” என்று தொடங்கும் பாடல் ஆகும். தன் குருவாகிய கீரனூர் ராமசாமி பிள்ளையவர்களிடம் இப்பாடலைக் கற்றுக் கொண்ட காலம் நேரம் சுமார் நான்கு மாதங்களாயிற்று என்கிறார். பிரபல இசை மேதைகளைப் பற்றி இவர் கொண்டிருக்கும் அபிப்பிராயம் அவர்கள் சிறந்த மகானுபாவர்கள் என்று வியக்கிறார். தன் குரு கீரனூர் ராமசாமி பிள்ளை அவர்களின் இசை முறையைத் தான் பின்பற்றுவதாகக் கூறினார். தன்னுடைய நாதஸ்வர வாசிப்புக்காக எந்த ஒரு பிரத்யேகமான செயலையும் மேற்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.
குளிர்ப் பிரதேசங்களில் அல்லது குளிர் காலங்களில் தன் உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் வகையில் கம்பளி ஆடைகள் அணிவதுடன் கம்பளிப் போர்வைகள் மற்றும் தலை, காதுகளுக்கு Monkey Cap அணிந்து கொள்வதாகவும் தெரிவித்தார். ஸ்ரீகிருஷ்ண கான சபா, மியூஸிக் அகாடெமி மற்றும் ஆகிய இவ்விடங்களில் தான் நாகஸ்வரம் வாசிக்கும் போது கிடைக்கும் இன்பமே அலாதியானது என்று குதூகலிக்கிறார். வெளிநாடுகளில் தான் வாசித்ததில் கிளீவ் லேண்ட்டில் கிடைத்த அனுபவம் தனக்குப் பெருமை சேர்த்ததாகக் கூறினார். பைரவி ராகத்திலமைந்த “சேதுலரஸ” என்ற கீர்த்தனை தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் கூறினார். கல்யாணி ராகம் தன்னை மிகவும் கவர்ந்த ராகம் என்று குறிப்பிட்டார். தான் இதுவரை கடினமாக வாசித்ததிலேயே த்வஜா வந்தி ராகத்திலமைந்த “அகிலாண்டேஸ்வரி” என்ற பாடலையும் “அன்ன பூர்ணே” என்ற பாடலையும் குறிப்பிட்டார். மேற்கூறிய இவ்விரு பாடல்களும் சங்கீத மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் அவர்கள் இயற்றியதாகும். தான் நாதஸ்வர சாதகம் செய்யும் போது கடினமான பயிற்சியாக இருந்தாலும் அதில் கிடைக்கும் அனுபவம் தனக்கு ஒரு வித மன நிறைவையே தந்துள்ளது என்றார்.
“கலை மாமணி” சேஷம் பட்டி டி.சிவலிங்கம் நாதஸ்வரக் இசைக் கலைஞர் (பழைய எண்-35), புதிய எண்-48, வி.சி. கார்டன் முதல் தெரு மந்தை வெளி, சென்னை-28. தொலைபேசி – 044 -24643534 கைபேசி – 9444434554 Email ID : maheswari.sivalingam@gmail.com

More Profiles