Subbu Arumugam

Profile of Subbu Arumugam

தமிழக கிராமீய இசைக்கலைகளில் “வில்லுப் பாட்டுக் கலை” ஓர் சிறந்த அங்கம் வகிக்கிறது. அத்தகைய கலை நம் தமிழ் நாட்டிற்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்து இன்று கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளாவிய நிலையில் உன்னதம் அடைந்துள்ளது. கவிஞர் சுப்பு ஆறுமுகம் திரு. ஆ. சுப்பையா பிள்ளை, திருமதி சுப்பம்மாள் தம்பதியருக்கு 28-06-1928 அன்று திருமகனாய் பிறந்தார். கவிஞரின் பூர்வீகம் திருநெல்வேலியில் உள்ள நெல்லை சத்திரம் புதுக்குளம் கிராமம் ஆகும்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு வித்துவான் ஆ.க. நவநீத கிருஷ்ண பிள்ளை என்பவர் ஆவார்.  இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன் பிறகு “மதுரை தமிழ்ச் சங்கம்” என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். பள்ளிப் பருவத்திலிருந்தே கவிஞர் அவர்கள் பெற்ற சான்றிதழ்கள், பட்டங்கள், விருதுகள், பதக்கங்கள் மிகவும் ஏராளம். இவற்றின் விவரங்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு குறுந்தகட்டின் மூலம் நாம் அறிய முடியும். கவிஞர் தம் பதினாறாம் வயதில் “குமரன் பாட்டு” என்ற நூலை எழுதியிருக்கிறார்.
நகைச்சுவை அரசர், சிந்தனாவாதி, திரைப்பட நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்திமகான் கதையை, கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.
15-09-1954 அன்று பெரியவர்கள் ஆசியுடன் நெல்லைச்சீமையில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களுக்கும், அவரின் மாமன் மகள் எஸ்.ஏ. மகாலட்சுமிக்கும் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தேறியது. கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் முதல் மேடை வில்லிசை நிகழ்ச்சியாக அமையப் பெற்ற இடம் காஞ்சிபுரத்தில் உறையும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஆகும். 1960-ம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி “கருணைக்கடல் காஞ்சி காமாட்சி” என்ற தலைப்பில் அரங்கேறியது. “காந்தி வந்தார்” என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது எனலாம்.
அகில இந்திய சென்னை வானொலி நிலையம் கவிஞரது காந்திமகான் கதையை வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி மூலமாக சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு ஒலிபரப்பியது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000-க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் “கலைமாமணி” என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். இன்னும் பலப்பல !
இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.
இலக்கிய வில்லிசைகள் : 1. சிலப்பதிகாரம், 2. சீவகசிந்தாமணி, 3. திருக்குறள், 4. பாரதியார் வந்தார், 5. பாரதிதாசன் கவிதைகள்,
தெய்வீக வில்லிசைகள் : 1. மகாபாரதம், 2. இராமாயணம், 3. பகவத்கீதை, 4. தெய்வத் திருமணங்கள், 5. கந்த புராணம், பெரிய புராணம்.
மருத்துவ வில்லிசைகள் : 1. கண் தானம், 2. இரத்த தானம், 3. உடலுறுப்புகள் தானம், 4. தாய்மார்களின் கர்ப்பகாலத்தில் வாழும் வழிமுறைகள், 5. கர்ப்பப் புற்றுநோய், 6. புகை வேண்டாம், 7. எய்ட்ஸ்.
அறிவியல் நிகழ்ச்சிகள் : 1. விண்வெளி சாதனைகளில் ஸ்ரீஹரி கோட்டாவின் பங்கு, 2. நெய்வேலி அனல் மின்நிலையம், 3. கல்பாக்கம் அனல் மின்நிலையம்,
சமுதாய வில்லிசைகள் : 1. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 2. இயற்கை சம்பந்தமாக மரம் நடுதல், 3. எரிபொருள் சிக்கனம், 4. தண்ணீர் வளம், 5. வாக்காளர் உரிமை போன்ற பல்வேறு தலைப்புகளில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினை நடத்தியிருக்கிறார்
வில்லிசைப்பணியோடு, தமிழ்த் திரைப்படங்களில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் பங்கு மிகப்பெரிய அளவில் இருந்திருக்கிறது. கதை, வசனம், பாடல்கள், நகைச்சுவை போன்றவற்றில் இவர் தன் முழு ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். “மனிதனைக் காணோம்” என்ற தலைப்பில் வெளியான கதை தான் “சின்னஞ் சிறு உலகம்” என்ற பெயரில் திரைப்படமாக வெளி வந்து பெரிய வெற்றியைப் பெற்றது. “வீட்டுக்கு ஒரு பிள்ளை” “உலகம் இவ்வளவு தான்”, “ஏன்”, “அன்னை அபிராமி” போன்ற படங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கிறார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் திரைப்படப் பங்களிப்பு நகைச்சுவைப் படங்களில் கொடிகட்டிப் பறந்த நாகேஷ் நடித்த சுமார் 60 படங்களுக்கும் மேலாக இருந்தது.
கவிஞரின் வில்லிசை வெளியீடுகள் 1. “வள்ளித்திருமணம்” (ஏ.வி.எம்) 2. முப்பிறவி கண்ட முதல்வர் (ஏ.வி.எம்) 3. ஸ்ரீனிவாச கல்யாணம் (ஹெச்.எம்.வி.) கண்ணிலே நல்ல குணம் [ சர்க்கரை, விழித்திரை நோய் பற்றிய வில்லிசை விழிப்புணர்வு வி.சி.டி] - [சங்கர நேத்ராலயா] 1. “மீனாட்சி கல்யாணம்” 2. “ஆன்மீக ராகங்கள்” (கவிஞரின் சொந்த வெளியீடுகள்)
கவிஞர் அவர்கள் தம் மனைவி திருமதி மகாலட்சுமி பெயரில் “மகம் பதிப்பகம்” என்ற நிறுவனத்தின் மூலமாக “உண்மை உள்ள ஒரு கவிஞன்” என்ற நூலையும் “வில்லிசையில் சமுதாயப் பாடல்கள்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். திருவையாற்றில் ஆண்டு தோறும் நடை பெற்று வரும் தியாகப்பிரம்மத்தின் விழாவில் 147வது வருடத்திய ஆராதனை விழாவில் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் “ஸ்ரீராம ஜெயம்” என்ற தலைப்பில் சுமார் இரண்டு மணிநேர வில்லிசை நிகழ்ச்சியை நடத்தினார். “நாதத்தில் பேதமில்லை” என்ற தலைப்பிலும் அம்மகோத்சவத்தில் வில்லிசை நிகழ்ச்சியை வெற்றியாக நடத்தியிருக்கிறார். அங்கு பஞ்சரத்ன கீர்த்தனை “ஜகதாநந்தகாரகா” என்ற நாட்டைராக சந்தத்தில் “வயலே வாழ்கவே” என்ற பாடலை கவிஞரின் மகள் பாரதி திருமகன் பாடினார்.
கருத்து :- ஜனக மகாராஜன் ஒரு நாள் உழுதான். வயலில் கிடைத்தனள் சீதேவி ! உழவ மகாராஜன் நாளெல்லாம் உழுதான் ஒவ்வொரு வீட்டிலும் சீதேவி ! கவிஞரின் இந்தப் பாடலை அங்கிருந்த இசைவாணர்கள் மிகவும் ரசித்தனர் ! பொதுவாக மக்களைப் பற்றி அவர் கொண்டிருந்த அபிமானமும், அன்பும் அசாத்தியமான நம்பிக்கை என்று தெரிந்தது! கவிஞர் சுப்பு ஆறுமுகம் சொல்கிறார் : “மக்கள் மிகவும் நல்லவர்கள் ” அணுக வேண்டிய முறையில் அவர்களிடம் சென்றால் அன்பாக நடந்து கொண்டால் யாவரும் நம் அன்பு மக்களே !” என்று வெகுவாகப் புகழ்ந்தார்.
இவரது விருப்பங்கள் :- சிந்துபைரவி தன்னால் பெரிதும் விரும்பப்படும் ராகமாகும் என்று கவிஞர் அவர்கள் குறிப்பிட்டார். கீர்த்தனைகளில் தமக்குப் பிடித்ததாக திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய எல்லா கீர்த்தனைகளையும் தெரிவித்தார். முத்துத்தாண்டவர் இயற்றிய “ஆடிக் கொண்டான்” என்ற பாடல் தம்மைக் கவர்ந்த ஒன்றாகும் என்று தெரிவித்தார். இசைமேதை என்று தான் விரும்பி ரசித்தது “திருவாவடுதுறை டி.என்.ராஜ ரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர இசையை” என்று குறிப்பிட்டார். ஆண் பாடகர்களில் எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களையும் “பத்மபூஷண்” பி.எஸ்.நாராயணஸ்வாமி அவர்களின் கர்நாடக இசையை வெகுவாக ரசிப்பதாகக் கூறுகிறார். பெண்களில் திருமதி எம்.எஸ்.சுப்பு லட்சுமி அவர்கள் “தெய்வீகப்பிறவி மேதை” என்று குறிப்பிட்டார்.
வில் இசை நிகழ்ச்சியில் தன்னுடன் பாடுபவர்களாக மகள் பாரதி திருமகன், [M.A.,M.Phil.] மகன் காந்தி [M.A.,M.Phil.] மருமகன் டாக்டர்.திருமகன் [M.Sc., M.Phil.M.A.Ph.D.] பேரன் மற்றும் கலைமகனும் உள்ளனர் என்று தெரிவித்தார். 1. கர்நாடக இசையில் தனக்குப் பிடித்த சாகித்யகர்த்தாவாக மூம்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி ஆகியோரைக் குறிப்பிட்டார். 2. சபாக்களில் தனக்கு மிகவும் பிடித்தமான பாரத் கலாச்சார், நாரத கான சபா, பாரதீய வித்யா பவன், ஆர்.ஆர்.சபா, மற்றும் பல என்று தெரிவித்தார். 3. தாம் விரும்பும் கலையரங்கங்களாக சென்னை நாரத கான சபா, பாரதீய வித்யா பவன், வெளிநாடுகளில் மஸ்கட் தமிழ்ச்சங்கம், சிங்கப்பூர் கோவில் அரங்கங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
தன் தொழிலுக்கு உகந்த நண்பனாக “மனசாட்சி”யைக் குறிப்பிட்டார். தமது மாணாக்கர்களாக சுப்புலட்சுமி, பாரதி, காந்தி, திருமகன், கலைமகன் ஆகியோரைக் கூறினார். தனக்குப் பிடித்த திரைப்படமாக கர்நாடக இசைமேதைகளான, ஜி.என்.பால சுப்ரமண்யம், எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த “சகுந்தலை”யைத் தெரிவித்தார். பாடலாசிரியர்களில் உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் ஆகியோரை மிகவும் பிடிக்கும் என்றார். சிறந்த திரைப்பட இசையமைப்பாளராகத் தாம் விரும்புவது சி.ஆர்.சுப்பராமன் அவர்கள் என்றார்.
திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் டாக்டர் பி.பி.ஸ்ரீனிவாஸ் தன்னை மிகவும் கவர்ந்தவர் என்றும் மேலும் தான் எழுதிய பாடலான “அன்போடு இன்பமாக வாழலாம் நண்பனே” என்ற பாடலைத் திரு.பி.பி.எஸ் அவர்கள் பாடியது தமக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது என்றார். சிறந்த பின்னணிப் பாடகியாக திருமதி எஸ்.ஜானகி அவர்களைக் குறிப்பிட்டார். திரைப்படங்களில் தமக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். திரைப்பட நடிகைகளில் திருமதி டி.ஏ. மதுரம் அவர்களின் நடிப்பு தனக்குப் பிடித்தமான ஒன்றாகும் என்று தெரிவித்தார். சிறந்த திரைப்பட நகைச்சுவை நடிகரான நாகேஷ் அவர்களை மிகவும் பிடிக்கும் என்றார். திரைப்பட இயக்குனர்களில் கே.எஸ். பிரகாஷ் ராவ் தமக்கு மிகவும் பிடித்தமானவர் என்றார்.
உயிரான உறவுகளில் தாய், தந்தை போன்ற தன் அருமை மனைவி எஸ்.ஏ. மகாலட்சுமியை ரொம்ப பிடிக்கும் என்றார். நண்பர்களில் எல்லோரும் தனக்கு நண்பர்களே ! என்றும் அவர்கள் யாவரும் நல்லவரே! என்றும் தெரிவித்தார். தமக்கு மிகவும் பிடித்தமான உணவாக சைவ உணவு என்றும் “உழைத்து உண்ணும் உணவே சிறந்ததாகும்” என்று தெரிவித்தார். நிறங்களில் வெண்மையை விரும்புவதாகக் கூறினார். தாம் அணியும் உடைகளில், “நாகரிகங்கள் எதற்கு? ” வேஷ்டியை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். தமக்கு மிகவும் பிடித்த இடமாக சென்னை, மயிலாப்பூரிலுள்ள ஸ்ரீ இராமகிருஷ்ண மடத்தைத் குறிப்பிட்டார். தாய் நாடான இந்தியாவையே தாம் மிகவும் விரும்புவதாகக் கூறினார். மகாத்மா காந்தியைப் பற்றிய “சத்திய சோதனை” தமக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் என்றார். தமக்கு மிகவும் பிடித்தமான தலைவராக மகாத்மா காந்தி அவர்களைக் குறிப்பிட்டார்.
மற்றும் தொழில்துறையில் பிரபலமாக விளங்கி வரும் “ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்” அதிபர் முரளி அவர்களை பிடிக்கும் என்றார். கார் தமக்கு பிடித்த வாகனம் என்றார். தாம் விரும்பும் ஆன்மிகக்கலை உதவியாளராக மகன் காந்தியையும் மகள் பாரதி திருமகனையும் குறிப்பிட்டார். வில்லிசையில் ஆய்வு நடத்தி, முனைவர் பட்டம் பெற்ற மருமகன் முனைவர் திருமகனையும், கர்நாடகத் தமிழிசையில், சிறந்த திறமையுடன் வளரும் பேரன் டி.கலைமகனைப் பெரிதும் பாராட்டுகிறார்.
பொது தினசரி தான் வழிபடும் தெய்வங்களுடன் இந்திய தேசிய வரைபடத்தையும் சேர்த்து தொட்டுக் கண்களில் ஒற்றி வணங்குகிறார். வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் இன்னும் நன்றாக வளர வேண்டும் என்பதற்காகத் தயார் நிலையில் ஒத்திகை பார்ப்பது தனது தினசரி வழக்கமாகும் என்றும் தெரிவித்தார். தாம் தொடர்ந்து புத்தகம் படிக்கம் வழக்கத்தை தினசரி மேற்கொள்கிறார். இதுவரை தான் வாழ்க்கையில் சம்பாதித்தது “ஒழுக்கம்” ஒன்றைத்தான் என்று குறிப்பிட்டார். இதுவே போதும் என்று மனம் நிறைகிறார். இந்த இயல்புகள் அதிகம் என்பதால் எதிர்பார்ப்புகள் தனக்கு எதுவும் இல்லை என்று கவிஞர் அவர்கள் தெரிவித்தார். தான் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்ட பணியாக “வில்லுப்பாட்டை” தேர்ந்தெடுத்துக் கொண்டார். பழைய நண்பர்களைக் காணும் போது எல்லை இல்லா ஆனந்தம் கொள்வதாக தெரிவித்தார்.
ஒரு முறை சிங்கப்பூரில் நடந்த ஒரு கோயில் விழாவில் இவருடைய வில் இசை ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஜப்பானியப் பெண்மணி ஒருவர் இவர் நிகழ்ச்சியை கேட்க வந்திருந்தார். அவரிடம் கவிஞர் அவர்கள் “தமிழ் தெரியுமா?” -என்று கேட்க, அந்த ஜப்பானியப்பெண்மணி, “தனக்கு தமிழும் தெரியும் தேவாரப் பாடல்களும் தெரியும்” என்று சட்டென்று பதில் அளித்தது மட்டுமன்றி “ மற்று பற்று எனக்கென்ன நின் திருபாதமே மனம் பாவித்தேன் ”என்ற தேவாரப் பாடலைப் பாடிக் காட்டினார். கவிஞர் “ யாராவது அப்பெண்ணிடம் அப்பாடலை ஒலிப்பதிவு செய்து தர முடியுமா?” என்று கேட்டு முடிப்பதற்குள் தான் பாடிக் கொண்டிருக்கும் போதே டேப்ரிகாடரில் ஒலிப்பதிவு செய்து விட்டதாக கூறினார். அப்பெண்ணிடம் “என்ன பாடல் பாட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்” என்று கேட்க அப்பெண்ணோ “வள்ளல் பெருமான் அருட்பெருஞ்சோதி” பாடலைக் கேட்க விரும்புவதாகவும் மேலும் அப்பாடல் சாரங்கா ராகத்தில் அமைந்துள்ளதாகவும் இருக்க வேண்டும் என்று கவிஞரிடம் கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்ச்சி கவிஞரின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவமாகும் என்றார்.
மறுநாள் கவிஞரின் வில் இசை ஒரு கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜப்பானியப்பெண் தன் வில் இசை நிகழ்ச்சிக்கு எப்படியும் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் கவிஞர் குடும்பத்தினர் தேடிக்கொண்டிருந்தாலும் அவரது வில்லிசை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று அப்பெண்ணைப் பார்த்த மகிழ்ச்சியில் நிகழ்ச்சியை முடித்த பின்பு “ஏன் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரவில்லை” என்று கேள்வி எழுப்ப அந்த ஜப்பானியப் பெண்மணியோ தான் முன்னதாகவே வில் இசை நிகழ்ச்சிக்கு வந்து விட்டதாகவும் கவிஞரின் வில் இசையை கேட்டுக்கொண்டே கோவிலின் முன்புறத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளின் திரி சரிவர எரியாமையினால் அவற்றைச் சரிசெய்து எரிய விட்டு வந்ததாக பதில் அளித்தது கவிஞருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது என்றார்.
சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தத் தம் வில் இசை மூலம் பல முயற்சிகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். தனது குடும்பம் மிகவும் அன்பான குடும்பம் என்றும் எல்லாப் பெருமைக்கும் தமது அன்பு மனைவியே காரணம் என்று பெருமையோடு தெரிவித்தார். “எனது அன்பு மனைவி மகாலட்சுமி”, “உண்மையுள்ள ஒரு கவிஞன் ” என்னும் தலைப்பில் 360 பக்கங்களுக்கு மேல் எழுதி, தேன்மழை, மகம் பதிப்பகம் வெளியீடாக, உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு வேங்கடசாமி அவர்கள் முன்னுரை, எழுதித் தந்தும் வெளியிடவும் செய்தார்கள் என்பதை வாழ்வின் இமாலய வெற்றி போல விளக்கினார். தமக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு என்றும் தம் வில் இசை நிகழ்ச்சியின் மூலம் மனம் திருந்தியவர்கள் உண்டு என்று கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் மன மகிழ்ச்சியோடு தெரிவித்தார் !
அகில இந்திய சென்னை வானொலியில் முதன்முதலாக இவரது பேட்டி நடந்தது. தொலைக்காட்சிகள் வந்தநாள் முதல் இன்று வரை தொடர்ந்து அவற்றிற்கு நிறைய பேட்டிகள் அளித்திருக்கிறார். அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் கவிரது வில்லிசை ஒளிபரப்பாகி வருகின்றது. தன் மனதில் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருப்பவர் மகாத்மா காந்தி என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீ இராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி இவ்விருவரையும் விவேகானந்தர் வழிபடும் காட்சியும் தம் மனத்தில் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருப்பதாகவும் கூறினார்.
இதுவரை தான் சம்பாதித்ததில் மக்கள் யாவரும் தன்னை “ஒழுக்கமுள்ள மனிதர்” என்று பாராட்டப் படுவதே என்று குறிப்பிட்டார். தாம் ஒரு “தேசியவாதி” பாராட்டுவதே என்பதைக் குறிக்கும் வகையில் எப்பொழுதும் தேசியப் பொருள்களையே விரும்பி வாங்கிப் பயன்படுத்துவதாகவும், அந்நியப் பொருள்களை என்றும் நாடுவதில்லை என்ற உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். சிதம்பரம் நடராசப் பெருமானைத் தான் முழுமுதற் கடவுளாகக் கருதுவதாகக் கூறினார்.
மறக்க முடியாதவை தான் இதுவரை நிகழ்த்திய வில் இசை நிகழ்ச்சிகளில் “மஸ்கட் தமிழ்ச் சங்கத்தில்” நடந்த நிகழ்ச்சி வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் அவர்களுக்கு“ வாழ்நாள் சாதனையாளர்” என்ற பட்டத்தை மஸ்கட் தமிழ்ச் சங்கம் அளித்துக் கௌரவித்தது ! தாம் என்றும் மதிக்கும் மாமனிதராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் திகழ்கின்றார் என்று தெரிவித்தார். சந்தோஷமான சம்பவமாகக் கவிஞர் குறிப்பிடுவது “வாழியவே பல்லாண்டு காலம்” என்பது “பாடும் வரியாக அமைந்ததையே” குறிப்பிடுகிறார்.
கவலைகள் தமக்கு இல்லை என்பதைத் தெரிவித்த அதேநேரத்தில் “மகா ஸ்வாமிகள்” காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் மறைந்த தினம் தம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியதாக தெரிவித்தார். அதே போல தாம் வணங்கும் அன்னை காஞ்சி காமாட்சியிடம் நான் எனக்கு அளிக்க விரும்புவதே தன் கவலைகளை மட்டுமே அவர் கவலையில் உள்ள “வ” வை அழித்து கலை வாழ வேண்டும் என்று வேண்டுகிறார்.
தமக்குப் பிடித்த நாளாக 05-09-1954-ல் நடந்தேறிய திருமண நாளைக் குறிப்பிட்டார். மகாத்மாகாந்தி அவர்களின் பிறந்த நாளாகிய 02-10-1869 தனக்கு மிகவும் பிடித்த மற்றொரு நாளாகும் என்று தெரிவித்தார். தருமமிகு சென்னை தமக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றும் தனது தாய் நாடான இந்தியாவே தமக்குப் பிடித்தமான நாடாகும் என்றும் தெரிவித்தார்.
வில் இசை வில் இசையைப் பற்றிக் குறிப்பிடும்போது தமது தந்தையாக சுப்பையா பிள்ளை ஆசுகவி அவர்களே தம்மை வில்லிசைத் துறையில் தாம் வருவதற்குக் காரணமானவர் என்றார். கவிஞரின் பிறப்பிடமோ நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலி மாவாட்டம். நெல்லையோ, கோவில் இசையின் பிறப்பிடமாகும் என்றார்.
தனக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அளித்த சன்மானமே முதன் முதலாக வாங்கிய சம்பளமாகும். அதுவும் ரூ 10,000/- ஆகும். அதைத்தம் தாய், தந்தையாரிடம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியதைப் பெருமையுடன் கூறினார். தமக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் தன்னை முதன்முதலில் பாராட்டியதை நினைவு கூர்ந்தார். முதன்முதலில் தாம் வாங்கிய விருதாக தமிழ்நாடு அரசு தமக்கு அளித்த “கலைமாமணி” என்ற பட்டத்தைக் குறிப்பிட்டார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பரம்பரை நடத்திய “பொன்னி” என்ற பத்திரிகை மூலம் தனக்கு அளிக்கப் பட்ட “பாரதிதாசன் பரம்பரை” கவிஞர் பட்டத்தைப் பற்றி தெரிவித்தார்.
தமது வில்லுப் பாட்டு நிகழ்ச்சி தொடங்கும்போது பாடும் முதல் பாடலே எல்லோரையும் கவரும் வகையில் அமைய வேண்டும் என்று விரும்பினார். தனது ஒவ்வொரு நிகழ்ச்சி முடியும் தருணம் மீண்டும் அடுத்த நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்திருந்து அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வரும் எண்ணமே தமக்கிருப்பதாகத் தெரிவித்தார். முதன்முதலில் தம்முடைய வில் இசை நிகழ்ச்சி ஒலிப்பதிவு நடந்த சமயம் தாம் “கடவுளைக்கண்டேன்” என்று ஒலி பெருக்கியில் அறிவித்ததைக் குறிப்பிட்டார். வானொலியிலோ, தொலைக்காட்சிகளிலோ, குறுந்தகட்டிலோ தமது நிகழ்ச்சிகளைக் கேட்கும்போதும் காணும்போதும் தனது குழந்தையின் மழலை குரல் போலிருந்தது என்று தெரிவித்தார்.
புது டெல்லியில் முன்னாள் இந்தியக் குடியரசுத்தலைவர் மாளிகையில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஒரு கலைஞனுக்கு அளிக்கும் கௌரவமாகக் கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு கவிஞரது வில் இசை நிகழ்ச்சி முடியும் வரை ரசித்துக் கேட்டதையும், பாராட்டியதையும் தம் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றார். எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பாகவும் கௌரவமாகவும் “லஷ்மன் ஸ்ருதி” நிறுவனம் தம்மை நேர் காணல் கண்டதை மன நெகழ்ச்சியுடன் தெரிவித்தார். தாம் நிகழ்த்தும் ஒவ்வொரு வில் இசை நிகழ்ச்சியில் ரசிகப் பெரு மக்களிடமிருந்து பெறும் கரவொலியைக் கிடைத்தற்கரிய பெரும் பொக்கிஷமாகக் கருதி வருவதைத் தெரிவித்தார். வில்லிசையைத் தவிர கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானி இசையையும் மிகவும் விரும்பி ரசிப்பதாகத் தெரிவித்தார்.
தனது குடும்பத்தினர்களுடன் வில் இசை நடத்தி வருவது தமக்கும் பெருமை ஒரு வரம் என்றார். தான் நடத்தி வரும் வில் இசை நிகழ்ச்சியில் பாடும் வணக்கப் பாடல் “தந்தனத்தோம் என்று சொல்லியே” என்று நிகழ்ச்சியில் தொடங்கும் பாடலும் நிகழ்ச்சியின் முடிவில் “வாழியவே ! பல்லாண்டு காலம் ! ” என்று பாடி முடிக்கும் பாடலும் அதிகமுறை பாடிய பாடல்களாகும் என்று குறிப்பிட்டார். ஆக வணக்கம், வாழ்த்து என் வில்லிசையின் நாடித் துடிப்பாயிற்று என்கிறார்.
ஒரு திருக்குறள் பாடலை சுவைபடக் கதையாக விளக்கி அதை ஏழு நிமிடங்களில் மட்டுமே பாட வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்பட்டதைக் கடினமாகப் பாடிய தருணம் தனக்கு இனிமையாக ஏற்பட்டது என்றார். கவிஞர் அவர்கள் இசைமேதை திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை “சரஸ்வதி தேவி”யின் மறுஅவதாரமாகக் கருதுகிறார். இசைக்கு மட்டுமல்ல, அவரது நல்ல குணங்களுக்கும் என்றும் அவர் ஒரு பல்கலைக் கழகம், அந்த ஸ்வர தேவதையை மீண்டும் பெற நாமனைவரும் பிரார்த்திப்போம் என்றார். அவரது குரலைக் குயிலுக்கும், வானம்பாடிக்கும், தாயின் தாலாட்டுக்கும், கொஞ்சும் கிளிக்கும் கவிஞர் அவர்கள் ஒப்பிட்டும் பேசுகிறார்.
தனது குரல் வளத்திற்குத் தாம் மேற்கொள்ளும் வழியை “உண்மை பேசுதல்” என்ற கொள்கையுடன் இருந்து தொண்டையில் குரல்வளம் நன்றாக இருப்பதால் அதையே இன்றும் தொடர்ந்து கடைப் பிடித்து வருவதாகக் கூறினார். மருத்துவமுறைப்படியும் தனதுகுரல் வளத்திற்கு எதுவும் ஊறு நேர்ந்து விடாதபடி அதி ஜாக்கிரதையுடன் இருந்து வருவதாகக் குறிப்பிட்டார். ஒரு சிறந்த மருத்துவராக தனக்குக் கிடைத்திருக்கும் தன் அன்பான மனைவி மகாலட்சுமி அவர்களையே குறிப்பிட்டார். தம்மை இன்று வரைப் பாதித்து வரும் பாடலாக திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய“குறையொன்றுமில்லை” என்ற பாடலைக் குறிப்பிட்டார். கவிஞர் அவர்கள் மகாபாரதத்தில் எழுதிய பாடலாகிய “கண்ணா நீ ஒரு கடலா” என்ற பாடலை அவரது அருமை மகள் பாரதி திருமகன் இசையமைத்துப் பாடியதும் தம்மை பாதித்த மற்றொரு பாடலாகும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தாம் எழுதிய “கன்னியாகுமரியின் திருச்சடைதனிலே” என்று பாடும் தேசிய ஒருமைப்பாட்டுப் பாடலும் தம் உள்ளத்தை உருக்கும் என்கிறார்.
“வாழ்க்கையே தன்னைப் பொறுத்தவரை நாடகமல்ல; ஒரு ஒத்திகையே ! எனவே ஒத்திகைகளில் மிகவும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார். கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் ! ஒருமுறை தம் வில் இசை நிகழ்ச்சியில் பாரதியாரைப்பற்றிக் குறிப்பிடும் போது அவரை “பாரதி ஆழ்வார்” என்று சொல்ல வேண்டும் என்று கூறினார். தேசியவாதிகளின் திருவுருவங்களை தெருக்களில் வைக்கிறார்கள். பாரதியாரை திருக்கோயில்களில் வழிபடும் தெய்வமாக வைக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் தாம் அதற்குமுன் வருவதாகக் கூறினார்.
அதற்கு கவிஞர் தம் வீட்டில் பூஜைஅறையில் வைத்து வழிபடும் பாரதியாரின் திருவுருவத்தைப் போல இருக்க வேண்டும் என்று அவரிடம் கூற அவர்களும் உடனே தஞ்சையில் உள்ள நாச்சியார் கோயிலுக்கும் சென்று தம் சொந்த செலவில் வெண்கலச்சிலை செய்வதற்காக சிற்பி ஒருவரிடம் பணித்தார். பாரதியாரின் திருவுருவச்சிலை சென்னையில் ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்யப் பட்டது. அவ்விழாவில் பட்டர்கள், புரோகிதர்கள் ஆவன செய்ய வேண்டிய எல்லா அபிஷேக ஆராதனைகளையும் கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே செய்யட்டும் என்று பெருந்தன்மையுடன் கூற அவ்வாறே கவிஞரும் பிரதிஷ்டை செய்யும் மாபெரும் பேற்றினை பெற்றார்கள். பாரதி சிலைக்கும் முதல் அபிஷேகமும் இனிதே கவிஞரால் நடந்தேறியது. அதன் பிறகே புரோகிதர்கள், பட்டர்கள் ஆகியோர் மற்ற திருப்பணிகளைச் செய்து முடித்தனர். பிரபல தமிழ் எழுத்தாளர், விக்ரமன், பாரதி சுராஜ், பாரதி காவலர் ராமமூர்த்தி போன்ற பல பிரமுகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற தகவலைக் கவிஞர் அவர்கள் தெரிவித்தார்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பாரதி என்ற மகாகவிக்கு காலம் தந்த காணிக்கையாகத் தான் வில்லிசையின் இமய வெற்றிச் சிகரமாக இந்நிகழ்வைத் தான் குறிப்பிடுகின்றார்! “வந்தே மாதரம்”!
முகவரி கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள், 12/1, மகாலட்சுமி இல்லம், நேரு அவென்யூ, கே.கே. நகர், சென்னை-600078 தொலைபேசி - 044/24892391 கைபேசி - 9840443278

More Profiles