V.L.V.Sudharsan

Profile of V.L.V. Sudharsan
உதவி பேராசிரியர், இசைப்பிரிவு, அண்ணாமலை பல்கலைக் கழகம் சிதம்பரம்

இன்றைய கர்நாடக இசை உலகில் வயலின் வாசிக்கும் கலைஞர்களில் இளைய தலைமுறையின் பிரதி பிம்பமாக வி.எல்.வி சுதர்ஸன் அவர்கள் கருதப்படுவதில் யாருக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. பிரபல வயலின் விற்பன்னர் வி.எல். வேதகிரி, வி. கமலம்மா தம்பதியருக்கு இவர் திருமகனாய்ப் பிறந்தார். 30.08.1967 அன்று சென்னையில் பிறந்த இவருக்கு வி.எல்.குமார் என்ற மூத்த சகோதரர், மீனாட்சி (மூத்த சகோதரி) லலிதா (இளையவர்) என்ற இரு சகோதரிகள் உண்டு.
தந்தை வேதகிரியும் சகோதரர் குமார் அவர்களும் கர்நாடக இசையில் வயலின் வாசிப்பதில் புகழ்வாய்ந்தவர்களாக கருதப்பட்டதால் தானும் அவர்கள் வழியே பின்பற்றி இன்று அகிலம் புகழும் அளவுக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்ரீகற்பகவல்லி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் 6வது வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சென்னை மயிலையிலுள்ள கேசரி உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்பு தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் சேர்ந்து சங்கீதவித்வான் பட்டயப்படிப்பும், சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ (இசை) மற்றம் எம்.ஏ (இசை) பட்டமும் பெற்றிருக்கிறார். தற்பொழுது சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் இசைப்பிரிவில் உதவி பேராசிரியாகப் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு வந்தனா என்ற மனைவியும் லாவண்யா என்ற மூத்த மகளும், சஞ்சய்குமார் என்ற இளைய மகனும் உண்டு. தாய்மொழி தெலுங்கைத்தவிர தமிழ், ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகளும் தெரியும். இவர் வயலின் தவிர வயோலா மற்றும் லலிதா வீணை ஆகிய வாத்யங்களை வாசிக்கத் தெரிந்தவர். வாய்ப்பாட்டிலும் தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி பன்முகங்கொண்ட இவரை முதன்முதலாக மேடைக் கச்சேரி செய்ய அடித்தளமாகவும், குருவாகவும் அமைந்தவர்கள் இவரது தந்தை வேதகிரியும் சகோதரர் குமார் ஆவார். தனது தந்தையின் மறைவிற்குப் பின்னர் தன்னுள் இருந்த தணியாத இசைதாகத்தை சகோதரர் குமாருடன் இசை நிகழ்ச்சிகளுக்குச் சென்று தீர்த்துக் கொண்டார்.
ஒருமுறை குமார் இவரது இசையாற்றலையறியும் பொருட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்திருக்கும் அண்ணாசாலையிலுள்ள ஒரு கடையில் இருக்கும் வானொலியில் அடிமைப் பெண் திரைப்படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. எஸ்.பி.பாலசுப்ரமண்யம் அவர்கள் பாடிய அப்பாடலின் முதலடியில் வரும் ஸ்வரங்களை பாடிக்காட்டு என்று தம்பி சுதர்ஸனத்திடம் கேட்க இவரோ சற்றும் சளைக்கர்மல் அப்பாடலுக்குரிய முதலில் வரும் ஸ்வரங்களை (மா கரி ஸாரிகபா) உடனே பாடிக்காட்டினார். அதன் பின்னர் தன் இசை ஞானத்தை மென்மேலும் வளர்த்துக் கொள்ளும் வகையில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொள்ளத் தயாரானார் குமார் அவர்கள் தனது தம்பியின் இசையாற்றலை உணர்ந்து தான் செல்லுமிடங்களுக்கு அவரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இவர் முதன் முதலில் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் தன் வயலின் இசை கச்சேரியை துவக்கினார். வாதாபி கணபதிம் பஜே என்ற முத்துஸ்வாமி தீட்சிதரின் கிருதியை முதன் முதலாக வயலினில் வாசித்தார். இவருக்கு மிகவும் புகழைக் கொடுத்த பாடல் எந்தமுத்தோ என்று தொடங்கும் பிந்துமாலினி ராகத்தில் வரும் கீர்த்தனையாகும். இவர் சுமார் 500க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டிருக்கிறார். விருதுகள் பட்டங்கள் இதுவரை இவருக்கு ஏனோ கிடைக்கவில்லை. ஆனால் சான்றிதழ்கள் முதல்பரிசுகள், தங்கம் வெள்ளி வெண்கலப் பதக்கங்களைத் தன் சிறிய வயதிலிருந்தே அள்ளிக்குவித்து வந்திருக்கிறார்.
துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், கலிபோர்னியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கும் இவர் விரைவில் டாக்டர் நித்ய ஸ்ரீமகாதேவனுடன் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்லவிருக்கிறார். இதுதவிர இசை சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்வதிலும் இசையமைப்புப் பணியிலும் பாடல்கள் இயற்றுவதிலும் தன் கவனத்தை முழு மூச்சுடன் செலுத்தி வருகிறார். சுதர்ஸன் கர்நாடக இசைத் துறைக்கு வருவதற்கு முன்பும் இசையையே மூச்சாகக் கொண்டவர். பிரபல இசைக் கலைஞர்களுடைய இசைத் தொகுப்புகளுக்கு (மியூசிக் ஆல்பம்ஸ்) வயலின், வயோலா, மற்றும் லலித வீணை வாசித்து இருக்கிறார். இதுவரை 10 இசைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார்.
அவ்விசைத் தொகுப்புக்களின் விவரங்கள் 1. நின்ன தாஸ நாதே என்ற தலைப்பில் புரந்தரதாஸர் பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் 2.தெய்வீகத் தேனிசை 3.Breath Ecstasy 4. Trendz Fusion Ensemble என்ற இரு ஆங்கில இசைத் தொகுப்புக்கள். இவர் சிவபதம் என்ற தலைப்பில் புரந்தரதாஸரின் கிருதிகளையும் தியாகராஜ வைபவம் மற்றும் அஷ்டபதி போன்ற இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.
இவரது விருப்பங்கள்: சுதர்ஸனுக்கு எல்லா ராகங்களும், வர்ணங்களும், திலலானா வகையறாக்களும் பிடிக்கும். ஆலத்தூர் சகோதரர்கள், தந்தை வி.எல்.வேதகிரி, சகோதரர் வி.எல். குமார் மற்றும் வி.எல். ஜானகி ராமன் ஆகியோர் இவரது அபிமான இசை மேதைகளாவர்.சிறந்த பாடகர்களாக எம்.எம். தண்டபாணி தேசிகர், டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா, வோலேட்டி வெங்கடேஸ்வரலு, பி. ராமச்சந்திரய்யா (Music Academy) B.கோவிந்தராஜன் (அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைத்துறைத் தலைவர்) டாக்டர் கே. வாகீஷ், T.V. சங்கரநாராயணன், T.V. கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் பெண்களில் M.S. சுப்புலட்சுமி, D.K. பட்டம்மாள், M.L.வஸந்தகுமாரி ஆகியோரைக் குறிப்பிட்டார்.
சுதர்ஸன் தமிழில் இரு வர்ணங்களை இயற்றியிருக்கிறார். 1. மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த ப்ரியதர்ஷிணிராக வர்ணம் 2. ஆதி தாளத்தில் அமைந்த மாளவி ராக வர்ணம் தெலுங்கில் ஆதி தாளத்தில் அமைந்த சுமனேஸரஞ்சனி ராக வர்ணமும், ஆதி தாளத்தில் அமைந்த விஜயநாகரி ராக வர்ணமும் தெலுங்கு கீர்த்தனை ஒன்றை ஆதி தாளத்தில் அமைந்த ரஸிகப்ரியா ராகத்தில் இயற்றியிருக்கிறார். ஸமஸ்கிருதத்தில் கண்ட ஜாதி தாளத்தில் அமைந்த பத்தீப் ராக தில்லானா ஒன்றையும் இயற்றியிருக்கிறார். தனது சக இசைக்கலைஞர்கள் எல்லோரையும் விரும்புவதாகத் தெரிவித்தார். கலையரங்கங்களில் தனக்கு விருப்பமான சென்னை மியூசிக் அகாடெமியும், வெங்கடசுப்பாராவ் பள்ளியிலுள்ள கலையரங்கமும், மும்பையில் உள்ள பிர்லா அரங்கத்தையும் குறிப்பிட்டார். பிர்லா அரங்கம் ஒலிபெருக்கி சாதன மில்லாமலேயே நிகழ்ச்சியைக் காணவரும் ரசிகர்கள் மிகத் துல்லியமாகக் கேட்கும் அளவுக்கு விசேஷத்தன்மை வாய்ந்ததாகும் என்று தெரிவித்தார்.
சாகித்யகர்த்தாவாக ஸ்ரீதியாகராஜரைத்தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். எல்லா சபாவும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். சங்கீதா ஒலிப்பதிவுக் கூடம் தான் மிகவும் விரும்பும் ஒலிப்பதிவுக்கூடம் என்றார். தான் விரும்பும் ஒலிப்பதிவுப் பொறியாளராக ராதா கிருஷ்ணன் அவர்களைத் தெரிவித்தார். கர்நாடக இசைத்துறையில் தான் மிகவும் விரும்புவர்களாக B. கோவிந்தராஜன் விஜயேந்திரன் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டார்.
இவர் தனது மாணவர்கள் யாவரையும் மிக விரும்புவதாக தெரிவித்தார். சுதர்ஸன் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான தமிழ்த்திரைப்படம் பார்த்தால் பசி தீரும் ஆகும். திரைப்பட பாடலாசிரியர்களில் கண்ணதாசன் அவர்களை விரும்புவதாகத் தெரிவித்தார். தான் மிகவும் விரும்பும் திரைப்பட இசையமைப்பாளர்களாக ஹிந்தியில் லட்சுமி காந்த், பியரேலால், நௌஷாத் அலி தமிழில் ஆர். சுதர்ஸனம், கே.வி. மகாதேவன் ஆகியோரைக் குறிப்பிட்டார். பின்னணிப் பாடகர்களில் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ், முகம்மது ரஃபி, எஸ்.பி. காலசுப்ரமண்யம் மற்றும் கன்னட நடிகரும் பாடகருமான ராஜ்குமார் போன்றோரைத் தெரிவித்தார். பிடித்த பெண் பாடகிகளில் லதாமங்கேஷ்கர், எஸ். ஜானகி, பி.சுசிலா ஆகிய மூவரைக் குறிப்பிட்டார்.
நடிகர்களில் தனக்கு விருப்பமானவராக என்.டி. ராமராவ், எம்.ஜி. ராமச்சந்திரன் , ரஜினிகாந்த் ஆகியோரைத் தெரிவித்தார். பெண் நடிகைகளில் தனக்கு விருப்பமானவராக சாவித்திரியைக் குறிப்பிட்டார். நகைச்சுவை நடிப்பில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களை விரும்புவதாகத் தெரிவித்தார். இயக்குநர்களில் தனக்கு மிகவும் விருப்பமானவராக கே. பாலச்சந்தரைக் குறிப்பிட்டார். தனக்கு மிகவும் பிடித்த உறவினராக மகன், மகள், மனைவி ஆகியோரைத் தெரிவித்தார். நண்பராகதான் விரும்பும் விஜயேந்திரன் மற்றும் சிவக்குமார் ஆகியோரைத் தெரிவித்தார்.
தனக்கு எல்லா வகை சைவ உணவுகளும் பிடிக்கும் என்றார். (Vegetarian Food) வண்ணங்களில் கறுப்பு, சிவப்பு, பச்சை, நீலம் ஆகியவை தனக்கு பிடிக்கும் என்றார். உடைகளில் கச்சேரியில் அணிந்து கொள்ளும் உடையை (Traditional Dress) விரும்புவதாகக் கூறினார். தனக்குச் சென்னை மிகவும் பிடித்தமான இடமென்றும் இந்திய நாட்டை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். விளையாட்டில் கேரம் ஆடுவதை விரும்புவதாகத் தெரிவித்தார்.ஆன்மீக சம்பந்தமான புத்தகங்களையும் குறிப்பாக ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிக்கடி விரும்பி படிப்பதாகக் கூறினார். சிறந்த தலைவராக இவர் விரும்புவது அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவை மற்ற துறைகளில் இவர் விரும்பும் நபர்கள் இம்ரான்கான், சையது கிர்மானி (கிரிக்கெட் ஜாம்பவான்கள்) கார் தாம் மிகவும் விரும்பும் வாகனமாகும் என்றார்.
இசை: இசையின் மீது ஆசைவந்ததற்கு இவர் தந்தை வி.எல். வேகிரியும் சகோதரர் வி.எல்.குமார் அவர்களும் கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவர்களாதலால் சூழ்நிலை இவருக்குச் சாதகமாகும் வகையில் அமைந்ததாகும். முதல் மேடைக்கச்சேரியை சுதர்ஸனம் அவர்கள் தமது 16வது வயதில் திருவல்லிக்கேணி கண்ணபிரான் சமாஜம் சார்பில் கலைவாணர் அரங்கத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து வயலின் வாசித்தார். 1989ல் முதல் சம்பளமாக தனக்கு கிடைத்த ரூ.500/- ஐ வயோலா இசைக்கருவி ஒன்றை ஞாபகார்த்தமாக வாங்கிக் கொண்டார். சென்னை ராயப்பேட்டையில் ஆதர்ஷ் பள்ளியில் இசையாசிரியராகப் பணிபுரிந்தற்குச் சம்பளமாக சங்கித வித்வான் பி. ராமச்சந்திரய்யா (Music Academy) அவர்கள் மூலம் ரூ.500/- கிடைத்ததை நன்றியுடன் தெரிவித்தார்.
முதன் முதலாகதான் நிகழ்த்திய கச்சேரியில் மிகவும் ஜாக்கிரதை உணர்வுடன் நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர்தான் மிகவும் ஒரு விதமான சகஜ நிலைக்கு வந்ததாகத் தெரிவித்தார். ஒலிப்பதிவான தன்னுடைய இசை நிகழ்ச்சி ஒலிப்பதிவாகிக் கொண்டிருக்கும்போது, பரபரப்பான சூழ்நிலையில் என்ன நடக்குமோ எப்படி இருக்குமோ என்ற ஒரு கலவரம் தனக்குள் இருந்ததாக தெரிவித்தார். தனது இசைத் தொகுப்பு வெளிவந்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ குறுந்தகட்டிலோ தனது இசைகேட்கும் பொழுது, அல்லது காணும்போது தனக்கு மிகவும் திருப்தி கிடைத்ததாக தெரிவித்தார்.
ஒருமுறை கேரளாவில் ஸ்வரலயா என்ற அமைப்பில் நடந்த இசை நிகழ்ச்சியில் தவில் மேதை ஹரித்வார மங்களம் ஏ.கே. பழனிவேல் அவர்களுடன் பங்கு கொண்ட நிகழ்ச்சி தனக்கு வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும் என்றார். எதிர்பாராமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பாக தவில் மேதை ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் அவர்களுடன் வருடா வருடம் நடக்கும் சங்கீத் சம்மேளன் (A.I.R) நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரத்தில் நடந்த கச்சேரியைக் குறிப்பிட்டார். இதுவரை தான் எதிர்பார்த்து ஆனால் நடக்காத இசை நிகழ்வாக சென்னை மியூஸிக் அகாடெமியில் வயோலா வாசிக்க வேண்டும் என்ற ஆதங்கம் இன்றுவரை இவரின் உள்மனதில் தேங்கிக் கிடக்கிறது.
தான் நிகழ்த்திய கச்சேரிகளிலேயே தனக்கு மிகவும் திருப்தி ஏற்படும் வகையில் திருவையாற்றில் வருடா வருடம் நடந்து வரும் தியாகராஜ உற்சவத்தில் தொடர்ந்து பங்கு கொண்டு வருவதைத் தெரிவித்தார். 2011-ல் திருவையாற்றில் நடந்த தியாகராஜ உற்சவத்தில் ஷிவானி வெங்கட் அவர்களின் ஷெனாய், தானும் செய்த வயலின் கச்சேரி நிகழ்ச்சி திருப்திகரமாய் இருந்தது என்றார். கர்நாடக இசையல்லாது தான் விரும்பும் இசையாக ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசையைக் குறிப்பிட்டார். ப்ரணவநாதம் என்ற அமைப்புடன் சேர்ந்து பெரும்பாலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் கலந்து கொள்வதைப் பெருமையுடன் தெரிவித்தார். இதுவரைதான் நடத்திய இசைநிகழ்ச்சிகளில் பெரும்பாலும் எந்த முத்தோ என்ற பிந்து மாலினி ராகப் பாடலை வாசிக்க இவர் தவறுவதில்லை.
கடினமான பாடலுக்கு உதாரணமாக தியாகராஜர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனகளில் ஒன்றான வராளி ராகத்தில் அமைந்த கன கன ருசிரா என்ற பாடலைத் தெரிவித்தார். இந்தப் பாடலுக்கு மிகச்சிரமம் எடுத்து சாதகம் செய்ததையும் தெரிவித்தார். கர்நாடக இசை மேதைகளைப் பற்றி குறிப்பிடும்போது, அவர்களைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. தனக்கு அந்தத் தகுதியுமில்லை என்பதோடு. அவர்களின் உன்னத விஷயங்கள் யாவற்றையும் இசைக்கலைஞர்கள் யாவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார். உதாரணத்திற்கு புல்லாங்குழல் வித்வான்கள் டி.சங்கரன், டாக்டர் என் ரமணி, டாக்டர் மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர் மதுரை சோமசுந்தரம் (இவர்தன் 18ஆவது வயதிலேயே ஒவ்வொரு கச்சேரியும் சுமார் 7மணி நேரத்திற்கும் மேலாக கச்சேரிகள் செய்திருக்கிறார்) ஆகியோரைக் குறிப்பிட்டார். வயலின் இசைப்பதற்கு தன் கைகள் மற்றம் விரல்களை பத்திரமாக பாதுகாக்கும் வகையில் மிகவும் ஜாக்கிரதையுடன் இருக்கிறார். மழை மற்றும் குளிர் காலங்களில் முகத்திற்கு Scarf அணிந்து கொள்கிறார். கம்பளி ஆடைகள் மற்றும் கம்பளிப் போர்வைகளை உபயோகிக்கிறார். உடல்நலத்திற்கென தாம் டாக்டர் வி. பவானி அவர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி நடந்துகொள்கிறார்.
தான் விரும்பிச் செய்த நிகழ்ச்சிகளிலேயே மிருதங்க மேதை உமையாள்புரம் சிவராமன் அவர்கள் தனக்கு பக்க வாத்யம் வாசித்ததைப் பெரும்பூரிப்புடன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பாரத் கலாச்சார் அமைப்பில் இவ்வைபவம் நிகழ்ந்தது என்றும் தெரிவித்தார். வெளிநாடுகளில் தான் விரும்பி வாசித்த கச்சேரிகளில் SIFAS SANHOUSE என்ற இடத்தில் பிரபல சங்கீத வித்வான் ஆர்.கே. ஸ்ரீகண்டன் அவர்களுடன் பங்கு கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். தன் மனதை மிகவும் பாதித்த பாடலாக சுதர்ஸன் பின்வருமாறு தெரிவிக்கிறார். மகான் ராகவேந்திரர் தான் ஜீவசமாதியடையும் முன்னர் பைரவி ராகத்தில் அமைந்த ஒரு பாடலை இயற்றினார். அப்பாடல் இந்து எனகே கோவிந்தா என்ற வரியில் ஆரம்பிக்கும் இப்பாடலை எப்படியாவது கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏனோ ஏதோ ஒரு விதத்தில் 1990முதல் தடைப்பட்டுக் கொண்டே வந்தது. 1999ல் தான் இவரது கனவு நிறைவேறியது என்று தாம் கண்ட கனவினைப்பற்றிய தகவலைத் தெரிவித்தார்.
சுதர்ஸனின் நண்பர் விஜயேந்திரர் ஒருமுறை சிதம்பத்திற்கு அருகேயுள்ள குஞ்சமேடு என்ற இடத்திற்கு இவரது கச்சேரிக்காக அழைத்துச் சென்றிருக்கிறார். கச்சேரி நிகழும் இடம் ராகவேந்திரர் கோயிலாகும். தான் நிகழ்த்தும் அக்கச்சேரியில் அதுவும் ராகவேந்திரர் சன்னதியில் ராகவேந்திரர் இயற்றிய பைரவிராகப் பாடலை தன்னால் இதுவரை இசைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் கச்சேரியையும் நிகழ்த்திவிட்டு தமது இல்லத்திற்கு திரும்பிவிட்டார். மனைவி, தன் இரு குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த இவருக்கு கனவில் திடீரென்று ராகவேந்திரர் வந்திருக்கிறார் என்ற பரபரப்பான சூழ்நிலையில் பயமும் பக்தியுமாய் உட்கார்ந்து கொண்டார்.
ராகவேந்திரர் இவரிடம் என்ன தேவை என்று வினவ பைரவி ராகப்பாடலை தான் கற்றுக் கொள்ள மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகக் கூற ராகவேந்திரஸ்வாமிகளும் அப்பாடலை ஸ்வர, தாளக் குறிப்புக்களுடன் பாடிக்காண்பித்து மறைந்துவிட்டார். நடந்த நிகழ்வு தாம் கண்ட கனவு என்பதையுணர்ந்த சுதர்ஸன் உடனே எழுந்து காகிதத்தில் ராகவேந்திரர் பாடிக் காண்பித்ததை உள்மனதிலிருந்து வெளிப்படும் வகையாக அப்பாடலுக்குரிய ஸ்வரதாளக் குறிப்புகளுடன் சாகித்யத்தையும் எழுதி உடனே வயலினில் சாதகம் செய்து முடித்து திருப்தியடைந்தது மட்டுமில்லாமல் தான் நிகழ்த்தும் ஒவ்வொரு கச்சேரியிலும் தொடர்ந்து அப்பாடலை இசைத்து வருகிறார். தன்னை மிகவும் பாதித்த பாடலாகவும் கடினமாக முயற்சி செய்து எடுத்துக் கச்சேரிகளில் வாசித்து வரும் பாடலாக பைரவிராகத்தில் அமைந்த இந்து எனகே கோவிந்தா பாடலைக் குறிப்பிடுகிறார். தான் வயலின் சாதகம் செய்யும்போது மிகவும் தன்னம்பிக்கையுடனும், திடமனதுடன் அதிக சிரத்தையுடன் பயிற்சி செய்து வருவதாகக் கூறினார்.
மறக்க முடியாதவை: மறக்கமுடியாத இசைநிகழ்ச்சியாக ஹரித்வார மங்கலம் டாக்டர் ஏ.கே.பழனிவேல் அவர்களுடன் கேரளாவில் திருவனந்தபுரம் என்ற இடத்தில் பங்கு கொண்டதை தெரிவித்தார். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களுடன் முதன் முதலாக துபாயில் கலந்து கொண்டு வயலின் வாசித்ததையும் மறக்க முடியாது என்றார். மறக்கமுடியாதவர்களாக தன் வாழ்க்கையில் தமது தந்தை வி.எல். வேதகிரி அவர்களையும் சகோதரர் வி.எல் குமார் அவர்களையும் தெரிவித்தார். தனக்கு ரசிகர்களும் வழித்தோன்றல்களும் நிறைய உள்ளனர் என்றார். குறிப்பாக கேசவா கோவிந்தா ராகவா, ஷிவானி போன்ற மாணவர்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவ்ரகள் என்றார். இசைமேதை டி.வி. சங்கர நாராயணன் (வாய்பாட்டுக் கலைஞர்) அவர்கள் தன்னுடைய வயலின் வாசிப்பை மிகவும் பாராட்டியது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும் தெரிவித்தார்.
இன்பகரமான பொழுதுபோக்கு என்று குறிப்பிடும்போது தமது குடும்பத்தினருடன் இருக்கும்போதும் விழா சம்பந்தமான சமயங்களில் அனைவரையும் ஒன்று கூடிப்பார்க்கும் தருணங்களின்போது கிடைக்கும் சந்தோஷமே அலாதியானது என்கிறார். நகைச்சுவை என்று சொன்னால் தான் ப்ரணவநாதம் என்ற தலைப்பில் தான் தயாரித்து வெளியிடும் இசைத் தொகுப்புகளுக்கு இசையமைக்கும்போது பங்கு கொள்ளும் கலைஞர்களுடன் உறவாடிக்கொண்டிருக்கும் பொழுது ஏற்படும் சம்பவங்கள் நகைச்சுவையை உண்டுபண்ணுவதாக இருக்கும் என்றார். தனக்கு ஏற்பட்ட கவலைகளாக தாய், தந்தையர் மறைவு மிகவும் பாதித்தது மட்டுமல்லாமல் அவர்களை மறக்கவே இயலாத வகையில் தன்னை உயர்ந்த அளவுக்கு ஆளாக்கியதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். .
இவருக்கு பிடித்த கிழமை வியாழன் ஆகும். தனது மகள் லாவண்யா பிறந்தநாள் 24.06.1995 தனது மகன் சஞ்சய் பிறந்த நாள் 7.011.2000 இவ்விரு நாட்களை தன்னால் மறக்க முடியாது என்றார் தனக்குப் பிடித்த இடமாக சென்னையையும், விரும்பும் நாடாக இந்தியாவையும் தெரிவித்தார். விருப்பநேரமாக காலைக் கதிரவன் உதிக்கும் நேரம் முதல் அது அஸ்தமனமாகும் வரை என்று தெரிவித்தார்.
பொது: தினசரி கடவுளுக்குப் பூஜை செய்தல், கச்சேரி நிகழ்ச்சிகளுக்குண்டான பாடல்களை பயிற்சி செய்தல், மாணவர்களுக்கு இசைகற்பிப்பது, நேரம் கிடைக்கும்போது மனைவிக்கு வேண்டிய உதவிகள் செய்தல், இவற்றை மேற்கொள்கிறார். நல்லவன் என்ற பெயருக்கு உதாரணமாக திகழவேண்டும் என்ற எண்ணம் சிறுவயதுமுதலே இருந்திருக்கிறது என்று தெரிவிக்கிறார். இன்னும் தாம் புகழ் அடையவில்லை என்ற எண்ணம், தாக்கம், ஆதங்கம் இவருக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது.
இசையைத் தவிர வேறு எதையும் தன் வாழ்வில் தேர்ந்தெடுத்திருக்கவே முடியாது என்று அடித்துக் கூறுகிறார். ஒருவேளை அப்படி இருந்திருக்காவிட்டால் எலக்ட்ரானிக்ஸ் துறைக்குச் சென்றிருக்கலாம் என்றார். தான் விரும்பி ஏற்றுக் கொண்ட துறையாக இசையைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகவும் பெருமைப்படுவதாகத் தெரிவித்தார். பள்ளியில் தாம் படித்துக் கொண்டிருந்தபோது விமானப் பணி சம்பந்தப்பட்ட துறையில் சேரவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிவித்தார். தான் இளமைக்காலத்தில் பழகிய நண்பர்களைக் காணும்போது அளவில்லா ஆனந்தம் அடைவதாகத் தெரிவித்தார். வெளிநாடுகளில் தாம் நிகழ்த்திய கச்சேரிகள் தனக்கு மகிழ்ச்சியையும் மிகதிருப்தியையும் அளித்தது என்கிறார்.
சமூகத் தொண்டாக இவர் நினைப்பது தன்னால் முடிந்தவரை இசையார்வலர்களுக்குக் கற்றுக் கொடுப்பது. மேன்மேலும் இளைய தலைமுறையானரை ஊக்கப்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் தாம் நிகழ்த்திய இரு கச்சேரிகளில் கிடைத்த சன்மானத் தொகையை அங்குள்ள சமூகத் தொண்டு நிறுவனத்திற்குத் தானமாக வழங்கினார். அத்தகைய தொண்டினை செய்வதற்கு மேன்மேலும் தொடர்ந்து செய்யும் எண்ணம் தனக்குள் இருந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.தனது குடும்பம் மகிழ்ச்சிகரமான குடும்பமாக அமைந்ததில் இறைவனுக்கு என்றும் கடமைப்பட்டவராகக் கூறினார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இசை அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் எண்ணம் தனக்கு உள்ளது என்றும் கூறினார்.
தன்னுடைய ரசிகர்கள், வழித்தோன்றல்கள் மிகவும் நல்லவர்கள் என்று புகழாரம் சூட்டுகிறார். சென்னை வானொலி, ரேடியோ எஃப்.எம், ரெயின்போ எஃப்.எம் ஆகியவற்றில் இவரது பேட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நேரடியாக இதுவரை தனது இசைநிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் இல்லாமற்போனாலும் திருவையாற்றில் நடக்கும் ஸ்ரீ தியாகராஜ ஆராதனையில் இசைக்கப்படும் பஞ்ச ரத்தின கீர்த்தனைகளில் இவரது பங்களிப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
தன் மனதில் அவ்வப்பொழுது தோன்றிக் கொண்டே இருப்பவராக முதலில் தன் தாயாரையும் மகான் ராகவேந்திரரையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அடிக்கடி தன் மனதில் தோன்றும் சம்பவமாக தாம் கனவில் கண்ட மகான் ராகவேந்திரர் தனக்கு கற்றுக் கொடுத்த பைரவி ராகப்பாடல் நிகழ்வைக்குறிப்பிட்டார். ஒரு நல்ல உள்ளங்கொண்ட மனிதனாகப் பிறர் போற்றும் வகையில் உயிருள்ளவரை கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கையுடையவனாகத் தன்னைப்பற்றிக் கூறினார்.
முகவரி : V.L.V சுதர்ஸன், 5 பிரதான தெரு, திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம், சென்னை-600 034 தொலைபேசி எண்: 044-28258591 ,04144-239098, கைபேசி : 9486516817 – 9894171637 Email ID: vlvsudharsan@yahoo.com. Website: www.violin vlvsudharsan.com

More Profiles