Vasantha Rammohan

Profile of Vasantha Rammohan

இன்றைய தெய்வ பக்திப் பாடல்கள் பாடும் இசைக் கலைஞர்களில் திருமதி வசந்தா ராமமோகன் அவர்கள் குறிப்பிடத்தக்கவராக விளங்கி வருகிறார். 26-08-1940 அன்று ஆர். விஸ்வநாதன், அம்ர்தலட்சுமி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். பூர்விகம் சென்னையை அடுத்துள்ள திண்ணனூராகும். இவரது கணவர் பெயர் வி.என். ராமமோகன் ஆகும். சென்னையிலுள்ள பிராட்வே ஆண்டர்ஸன் பெண்கள் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தார்.
கர்நாடக இசைமேல் உள்ள ஆர்வத்தினால் மேற்கொண்டு கல்லூரிப் படிப்பை இவர் தொடரவில்லை. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகள் இவருக்குத் தெரியும். தெய்வீக மணம் கமழும் பாடல்களை இவர் தம் சிறு வயது முதற்கொண்டே கற்றுத் தேர்ந்தார். இவரது குரு தாய் அமிர்தலட்சுமியும், யமுனாபாயும் ஆவர். வீணை நன்றாக வாசிக்கத் தெரிந்த இவர் தமிழில் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கற்கும் ஆர்வத்தில் “கலைமாமணி“ சைதை டி. நடராஜன் அவர்களிடம் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருவெம்பாவை, திருப்புகழ் போன்ற திருப்பதிகங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
கர்நாடக இசை, மற்றும் தமிழிசையில் பன்னிரு திருமுறைப் பாடல்களைனைத்தையும் கற்ற இவர் “வசந்தகான மண்டலி“ என்னும் அமைப்பைத் தோற்றுவித்து மாணவ மாணவியர்களுக்கு கர்நாடக இசை மற்றும் தமிழ் இசையைப் போதித்து வருகிறார். அன்னமாச்சார்யாவின் தெலுங்கு கீர்த்தனைகளையும் கற்றுத் தேர்ந்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் நிகழும் அன்னமாச்சார்யா திருவிழாவில் பாடும் பாக்கியமும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. முதன் முதலாக இவர் தமிழ் இசைச் சங்கத்தின் ஆதரவில் நடைபெற்ற இசைவிழாவில் பாடும் வாய்ப்பைப் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் ஏகோ பித்த பாராட்டுதல்களைப் பெற்றார். நாளடைவில் தன் இசை நிகழ்ச்சி மூலம் புதுப் புதுப் பாடல்களைக் கற்றுத் தேர்ந்து இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ தனது இசை நிகழ்ச்சியைக் கேட்டாலோ கண்டாலோ தாம் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் மறந்து புத்துணர்ச்சி கிடைக்கும் உணர்வைப் பெறுவதாக கூறுகிறார். இசைக்காக உழைத்த உழைப்பு வீண்போகாமல் அவை தனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல் மனோபலத்தையும் உற்சாகத்தையும் அளித்தது என்று பெருமை படக் கூறினார்.
தனது முதல் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த சன்மானத் தொகை 2000/-ஐ தெய்வத்திருப்பணிக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார். வசந்தா அவர்கள் தம் இளவயதில் தாம் பூப்பெய்த சமயம், தன் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் செல்வந்தர்களாதலால் இசையின் மீது பற்றுக்கொண்ட காரணத்தினால் ஒவ்வொரு நாளிலும் புகழ் மிக்க கலைஞர்களான எம்.எல். வசந்தகுமாரி, விகடகவிகள் சந்தானம்–சந்துரு, நடராஜ்-சகுந்தலாவின் நடனம் டி.பி. சுப்ரமண்ய பிள்ளை மற்றும் டி.என். ராஜரத்னம் பிள்ளை ஆகியோரின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன என்று வசந்தா அவர்கள் பெருமைபடத் தெரிவித்தார்.
திருமதி வசந்தா அவர்களின் தகப்பனார் இந்திய தேசிய தலைவர்களுடன் சர்வ சாதாரணமாகக் பழகும் வாய்ப்பைப் பெற்றவராவார். கர்நாடக இசை ஜாம்பவான்கள் இவர் இல்லத்திற்கு சகஜமாக வருவதும், பலமணி நேரம் இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவதும் தினசரி வழக்கம். ஒரு சமயம் டாக்டர் தர்மாம்பாள் என்ற பிரபல முக்யஸ்தர் இசைக்கலைஞரான எம்.எம். தண்டபாணி தேசிகர் அவர்களை இவரது இல்லத்துக்கு அழைத்து வந்தார். அக்காலத்தில் வானொலி நிலையம் மாதமிருமுறை நிகழ்ச்சி நிரல் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு வந்ததில், அப்புத்தகத்தில் எம்.எம். தண்டபாணி தேசிகர் பாடிய மோகன ராகத்தில் அமைந்த “கலை இன்பமே நிலை இன்பமே“ என்ற பாடல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. வசந்தா அவர்கள் எதேச்சையாக அப்பாடலை தன் குரு யமுனாபாயிடம் கற்றுக் கொண்டு தண்டபாணி தேசிகர் அவர்கள் முன் பாடிக்காண்பித்த்து மட்டுமின்றி, வீணயிலும் வாசித்துக் காட்டியதைக் கேட்டு ரசித்த தேசிகர் வசந்தா அவர்களின் இசைத் திறமையைக் கண்டு வியந்து மிகவும் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.
இதுவரை தாம் அளித்து வந்த எல்லா பக்தி இசை நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களின் கூர்ந்து கேட்கும் திறனை எண்ணி வியப்பதாகக் கூறினார். தமிழ், தெலுங்கு மொழிகள் தவிர பிறமொழிகளான கன்னடம், ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் அமைந்த பக்திப் பாடல்களைப் பாடி தனக்கென்று ஓர் இடத்தை இவர் பிடித்துக் கொண்டிருக்கிறார். 2004-ல் தொடங்கிய “வசந்த கான மண்டலி“ என்ற அமைப்பின் மூலம் பல புதிய இளங்கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் திருமதி வசந்தா அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் வயலின் கலைஞர்களாக பார்த்தசாரதி, ரமேஷ், பரூர் வெங்கட்ராமய்யரும், டோல்கி வாசிப்பதில் லட்சுமிநாராயணனும், தபேலா மற்றும் டைமிங் வாசிப்பதற்கு ஹரி என்கிற ராஜா மணியும், மிருதங்கத்திற்கு யுவராஜ், எஸ்.ஆர். எத்திராஜ் மற்றும் சூர்யாநாராயணனும், கீபோர்டு வாசிக்க சங்கர் மற்றும் குமரேசன் ஆகியோர் இன்றுவரை பக்கபலமாக விளங்கி வருகின்றனர்.
சமீபகாலமாக இவர் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாபநாசம் சிவன், முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர் போன்றோரின் அரிய பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதுவரை தாம் பாடிய பாடல்களிலேயே கடினமாக உழைத்துப் பாடிய பாடலாக “விகடபரிமள“ என்ற திருப்புகழ் பாடலும் மாதர்மடப்பிடி, சிறையாரும் மடக்கிளி போன்ற தேவாரப் பாடல்க்ளைக் குறிப்பிட்டார். சிறையாரும் என்ற பாடல் சுமார் 7 பக்திகளைக் கொண்டதாகும். முதல் நான்கு பத்திகள் மோகனராகத்திலும் அடுத்து வரக்கூடிய மூன்று பத்திகள் பந்துவராளி ராகத்திலும் அமைந்துள்ளதாகும்.
இசை மேதைகள் பற்றிக் குறிப்பிடும்போது வாக்கேயக்காரர்களான சங்கீத மூம்மூர்த்திகள் ஸ்ரீத்யாகபிரம்மம், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரியையும் பாடகர்களில் எம்.எம். தண்டபாணி தேசிகர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்யநாத பாகவதர் மற்றும் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகியோரின் இசைப்புலமையை வானளாவப் புகழ்வதாகத் தெரிவித்தார். இன்று கொடிகட்டிப் பறக்கும் ஆண் இசைக் கலைஞர்களான ஓ.எஸ். அருண், விஜய் சிவா, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணாவையும் பெண் இசை கலைஞர்களில் அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ மகாதேவன், சுகுணா வரதாச்சாரி, சுகுணா புருஷோத்தமன், காயத்ரிவெங்கட்ராகவன் ஆகியோரின் இசைப்புலமையை வெகுவாக பாராட்டுகிறார். தனது குரல் வளத்திற்காக மருத்துவ ஆலோசனையை மோகன் காமேஸ்வரன் என்ற விசேஷ மருத்துவ நிபுணரிடம் பெற்று வருகிறார். குளிர், மழைக் காலங்களில் குரல் வளம் பாதிக்காத வகையில் வெதுவெதுப்பான காய்ச்சிய நீரையும், கம்பளிப் போர்வையை தனது உடம்பிற்குப் போர்த்திக் கொள்வதாகவும் கூறினார்.
இவர் பெற்ற பட்டங்கள் “இசை ஞான வாணி“ என்ற பட்டம் இவருக்கு கும்பகோணத்தில் CITY UNION BANK–ன் 75-ம் ஆண்டு விழாவில் ராசா சர் முத்தைய்யா செட்டியார் முன்னிலையில் அளிக்கப்பட்டது. “சங்கீதப்ரவீணா“ என்ற பட்டம் இவருக்கு சென்னை பிராமணர்கள் சங்கத்தால் அளிக்கப்பட்டது. சென்னையில் உள்ள மயிலை சிவசக்தி அம்மையார் “பாமாலை திலகம்“ என்ற பட்டம் வழங்கிக் கெளரவித்திருக்கிறார். “பண் அரசி“ என்ற பட்டம் இவருக்கு சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள முத்தாலம்மன் கோயிலில் நடந்த ஆண்டு விழாவில் அளிக்கப்பட்டது.
விருப்பங்கள் திருமதி வசந்தாராமமோகன் தனக்கு மிகவும் பிடித்தமான ராகமாக மோஹனத்தைக் குறிப்பிட்டார். கல்யாணிராகத்தில் அமைந்த “வனஜட்சி“ என்ற வர்ணத்தை மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். இவர் தாம் விரும்பும் கலையரங்களில் கோயில்களில் உள்ள மண்டபங்களே தமக்கு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார். இவர் சென்னையிலுள்ள சபாக்களில் தமக்குப் பிடித்ததாக தமிழிசைக் சங்கம், மியூஸிக் அகாடெமி, நாரதகான சபா ஆகியவற்றைக் குறிப்பிட்டார். இவர் தன் மாணாக்கர்களில் சிறியவர்களில் வினயா, ஸ்வேதாவும், பெரியவர்களில் லலிதாசங்கரன், வத்ஸலாஸ்ரீதரன் ஆகியோர் நன்கு பரிமளித்திருக்கிறார்கள் என்றார். இவர் தமிழ்த் திரைப்படங்களும், நகைச்சுவை கலந்த ஆங்கிலப் படங்களைப் பார்ப்பதில் விருப்பம் உண்டு என்று தெரிவித்தார். தமிழ்ப் பாடலாசிரியர்களில் பாபநாசம் சிவன், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் பாடல்கள் தமக்குப் பிடித்தமானவை என்று தெரிவித்தார்.
திரைப்படப் பின்னணிப் பாடகர்களில் டி.எம். சவுந்தரராஜன், பி.பி. சீனிவாஸ், கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் மற்றம் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குரல் வளம் தமக்குப் பிடிக்கும் என்றார். பாடகியர் வரிசையில் திருமதி. பி. சுசிலா, யு. ஆர். ஜீவரத்தினம், என்.சி. வசந்த கோகிலம், கே.எஸ் சித்ரா ஆகியோர் தம்மைக் கவர்ந்தவர்களாவர் என்றார். திரைப்பட நடிகர்களில் சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகியோரும் நடிகைகளில் கே.ஆர். விஜயாவும் தனக்குப் பிடித்தமானவர்கள் என்றார். சிறந்த ஹாஸ்ய நடிகராக நாகேஷ் அவர்களைக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குநர்களில் கே.எஸ். ரவிகுமார், கே. பாலசந்தர் ஆகியோர் தம்மைக் கவர்ந்தவர்கள் என்கிறார். உறவினரில் தனது மூத்த மகளின் மாமியார் ருக்மணி ராமச்சந்திரன் அவர்களை மிகவும் பிடிக்கும் என்றார். உணவு வகைகளில் ரசம், புட்டு, வாழைப்பழம், எண்ணெயில் பொறித்த பலகாரங்கள் தமக்கு மிகவும் விருப்பமான ஒன்று என்று தெரிவித்தார். நிறங்களில் நீலவர்ணத்தையும், மஜந்தாவையும் பச்சை நிறத்தையும் விரும்புவதாகத் தெரிவித்தார். உடை விஷயங்களில் பட்டுப்புடவை அணிவதையே தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார். தனக்கு என்றும் பிடித்தமான இடமாக சென்னையைக் குறிப்பிட்டார். நாடுகள் என்று குறிப்பிடும் போது இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றை விரும்புவதாகத் தெரிவித்தார்.
விளையாட்டுககளில் கிரிக்கெட் ஆட்டத்தை நேரில் காண தனக்கு மிகவும் ஆர்வம் உண்டு என்றார். தமக்கு மிகவும் பிடித்த புத்தகமாக சமையற்கலைப் புத்தகங்களையும் தேவாரம் திருவாசகம், திருப்புகழ் சம்பந்தப்பட்ட புத்தகங்களை விரும்பிப் படிப்பதாகத் தெரிவித்தார். சிறந்த தலைவராக மஹாத்மா காந்தியடிகளைக் குறிப்பிட்டார். வாகனங்களில் பென்ஸ் கார் தனக்குப் பிடிக்கும் என்றார். தனக்கு எல்லா வகையிலும் உதவும் நண்பராகத் தன் கணவர் ராமமோகன் அவர்களைக் குறிப்பிட்டார்.
பொது சமையல் செய்தல், மாணவ, மாணவிகளுக்கு இசைக் கற்றுத் தருதல், தனது தினசரி பழக்கவழக்கங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்தார். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் தாம் நல்லவர் என்று பேசப்படும் வகையில் நடந்து கொள்ள பிரயத்தனப்படுகிறார். தாம் எதிர்பார்த்து இதுவரை கிடைக்காமல் இருக்கும் விருதாகிய தமிழக அரசின் கௌரவப்பட்டமான “கலைமாமணி“ என்றார். வெளிநாடுகளிலுள்ள இசை ஆர்வமிக்கவர்களுக்கு “ஆன் லைன்“ மூலம் கற்றுத்தருவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இசைத்துறைக்கு வந்திருக்காவிட்டால் சமையற்கலைக்கோ, மேக்கப் கலையிலோ தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் வகையில் இருந்திருப்பார். தான் விரும்பியே ஏற்றுக் கொண்ட தொழிலாக இசைத்துறைத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்வுடன் இருப்பதாகத் தெரிவித்தார். தான் பழகிய பழைய நண்பர்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷம் மிக அதிகம் அடைவதாகக் குறிப்பிட்டார். தனக்கு மிகவும் விருப்பமான உறவினர்களாக மகன், மகள் வயிற்றுப் பேரன்கள், பேத்திகளைக் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய வெளிநாடுகளில் தான் நடத்திய இசை நிகழ்ச்சிகளை தன்னால் முடிந்த அளவு தொண்டு மனப்பான்மையுடன் செய்ததைக் குறிப்பிட்டார். சமூகத்திற்குத்தான் செய்த தொண்டாக இசையை பலருக்கு இலவசமாகவும் போதிப்பதன் மூலம் திருப்தியடைவதாகக் குறிப்பிட்டார். தனது குடும்பம் யாவரும் பெருமைப்படும வகையில் அமைந்ததற்கு கடவுளிடம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். இவர் வருங்காலத்தில் தன் இசையனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது என்று தெரிவித்தார். தனது ரசிகர்களையும் தன் வழித் தோன்றல்களையும் கணவர் ராம்மோகன் அவர்களையும் வெகுவாகப் புகழ்கிறார். அவர்கள் ஆதரவு இல்லையென்றால் தன்னை இந்த அளவுக்கு உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது என்று தெரிவித்தார்.
வானொலி தொலைக்காட்சி சென்னை திருச்சி வானொலி நிலையங்கள் இவரைப் பேட்டி கண்டதுடன் இவரது இசை நிகழ்ச்சியை அவ்வப்பொழுது ஒலிபரப்பி வந்திருக்கிறது. 1980-லும், 1994-லும் இருமுறை சன் தொலைக்காட்சியில் இவரது பேட்டியும் இசை நிகழ்ச்சிகளும் ஒளி பரப்பப்பட்டுள்ளன. தன் மனதில் அடிக்கடி தோன்றிக் கொண்டிருப்பவராக தனது அம்மா வழிப் கண்ணம்மாவைப் பற்றிக் குறிப்பிட்டார். அவ்வப்போது தன் இளமைக்காலங்களில் நடந்த சந்தோஷமான நிகழ்வுகள் தன்னை என்றும் இளமை மாறாமல் இருக்கச்செய்து வருவதைப் பற்றிக் குறிப்பிட்டார். எல்லாச் செயல்களிலும் தாம் மேற்கொண்டு வரும் கண்டிப்பு மற்றும் பரிபூரணத்துவம் பெறும் செயல்களைக் செய்வதில் ஆர்வம் காட்டுபவராக இதுவரை இருந்திருக்கிறார்.
திருமதி வசந்தா அவர்கள் LIONS CLUB-ல் அங்கத்தினராக இருந்து கொண்டு தன் இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் ஓசைப்படாமல் பல தர்ம காரியங்களைத் தம் கணவர் ராமமோகன் துணையுடன் இன்று வரை தொடர்ந்து செய்து வருகிறார். அமெரிக்காவில் வசிக்கும் இவரது இளைய மகன் மாதவன் தன்னுடைய தாயாருக்கு அவருடைய குரு சைதை டி. நடராஜன் அவர்கள் கற்றுக் கொடுப்பதை தற்செயலாகக் கேட்டு விடடு 90 வயது மதிக்கத் தக்க அந்தப் பெரியவரின் இசைப்புலமையை வியந்து சன்மானமாக மாதா மாதம் ரூபாய் ஆயிரம் அளிக்கப் போவதாக உறுதியளித்த்துடன் தொடர்ந்து அன்னையின் குருவிற்கு இதுவரை அனுப்பி வருகிறார் என்பது போற்றத்தக்க விஷயம் ஆகும்.
விலாசம் : எண் – 27/14 ஆற்காடு ரோடு, பிளாட் ‘III A’ ,தி. நகர், சென்னை – 600 017. கைபேசி – 93 82 17 94 14 தொலைபேசி: 044 24 34 70 73 E-mail: vasantham2000@yahoo.com

More Profiles