Music Directors
Cine Playback Singers
Classical Singers
Lyricists
Classical Musicians
Classical Dancers
Music Teachers
Quiz Contest
Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersMalathy Lakshman
தென்னிந்தியாவை கலக்கும் மாலதி!
இப்போதெல்லாம் சினிமா பாடல்களில் வரும் ஆபாச வரிகளுக்கு மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தவிர 'சென்சார்' போர்டும் பாடல் வரிகளில் ஆபாசம் நிறைந்துள்ளதா என்பதை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கி உள்ளன.

இதனால் வெகு சீக்கிரத்திலேயே ஆபாச பாடல்கள் அழிஞ்சு போய்டும் என்கிறார் பிரபல பாடகி மாலதி லக்ஷ்மண்!

'மன்மதராசா' பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான இசை இளவரசி மாலதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பாடி தூள் கிளப்பி வருகிறார்.

மிகவும் குறுகிய கால கட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி யாவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

இளமை துள்ளும் 'கணீர்' குரலால் குழந்தைகள் முதல் முதியோர் வரை தன் பக்கம் ஈர்த்துள்ள மாலதிக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் ஏராளம்!

ஒவ்வொரு சினிமாவிலும் புதுப்புது பாடகிகள் வந்து கொண்டே இருந்தாலும் மாலதியின் "ஹை-பிச்" குரலுக்கு யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை தான்!

ஒவ்வொரு பாடலிலும் தனது குரலை கம்பீரமாக... இஷ்டத்திற்கு விர்ரரென எகிற வைத்து... தனித் தன்மையை அசராமல் நிரூபித்து வருகிறார் அதிரடியாக!

ஆந்திர மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த "சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்." படத்தில் பாடிய பாடலுக்காக மாநில சிறந்த பாடகிக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை மாலதிக்கு நடிகர் சிரஞ்சீவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவின் பிஸியான முன்னணி பாடகிகளுள் ஒருவராகத் திகழம் மாலதி தற்போது புதுப்பேட்டை, பேரரசு, துள்ளல்... என்று டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் பாடி வருகிறார்.

மனதில் உள்ளதை தயங்காமல் வெளிப்படுத்தும் இசை இளவரசி மாலதியுடன் ஒரு சந்திப்பு:-

ஆபாச பாடல்களுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதே?

திரைப்பட பாடல்களில் ஆபாசம் இருப்பது வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான்! முன்பெல்லாம் ஒரு சில பாடல்களில் இரட்டை அர்த்த வரிகள் இருக்கும். யாரும் கண்டு கொள்வதில்லை.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. எப்.எம்.ரோடியோக்கள் டி.வி. சேனல்கள் பெருகி விட்டன. இவை அனைத்திலும் சினிமா பாடல்கள் ஒலி பரப்பப்படுகின்றன.

பெரும்பாலான பேர் இதனை குடும்பத்தோடு பார்ப்பதால் ஆபாச பாடல்களை கண்டு முகம் சுளிக்கிறார்கள். அதிலும் பெண்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்கள் இன்று ஆபாச படங்கள், பாடல்களுக்கு எதிராக கோர்ட்டு வரை சென்று வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

ஆபாசத்திற்கு எதிராக ஒட்டு மொத்த பெண்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் விரைவிலேயே இத்தகைய பாடல்கள் குறைந்து விடும். இப்படிப்பட்ட பாடல்கள் பெண்களின் மனதில் ரசனையை வளர்ப்பதற்கு பதில் வெறுப்பைத் தான் சம்பாதிக்கின்றன.

வித்தியாசமான முறையில் பாட வேண்டும் என்று ஏதாவது முயற்சி செய்து வருகிறீர்களா?

ஆமாம். நான் 14 ஆண்டுகளாக மேடையில் பாடிய அனுபவம் இருப்பதால் என்னால் 40க்கும் மேற்பட்ட குரல்களில் பாட முடியும். இந்த திறமையை ஏதாவது ஒரு பாடலில் வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன்.

ஒரே பாடலில் 40 வகையான குரல்களை வெளிப்படுத்தினால் வித்தியாசமாக இருக்கும். இதே போல ஒரே பாடலில் தாய், குழந்தை, பாட்டி ஆகியோர் பாடுவது போலவும் என்னால் பாட முடியும். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் பாடுவேன்.

கர்நாடக சங்கீதம் கற்று வரும் நீங்கள் எதிர்காலத்தில் கர்நாடக இசை கச்சேரியில் பாடுவீர்களா?

அது மாதிரி எந்த திட்டமும் இல்லை. சிறு வயதில் கர்நாடக இசை கற்றேன். ஆனால் அதை பாதியில் நிறுத்தி விட்டேன். இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறேன்.

நீங்கள் எப்போது தனியாக ஆல்பம் வெளியிடப் போகிறீர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறதே?

என்னிடம் கூட நிறைய பேர் தனியாக இசை ஆல்பம் வெளியிட வேண்டியதுதானே என்று கேட்ட வண்ணம் உள்ளனர். நானும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறேன்.

முதலில் 10 வகையான குரல்களில் ஆன்மீக பாடல் ஆல்பம் ஒன்று வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளேன். அதனை நீங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

"இசைத்துறையில் நாமும் சாதித்து விட்டோ ம்" என்று எப்பவாவது நினைச்சதுண்டா?

ஊஹூம். அப்படி நான் எப்பமே நினைச்சுப் பார்த்ததில்லை. இசைத்துறையில் நாமும் இருக்கோம் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இசை என்பது கடல் மாதிரி! அதில் சாதிப்பது இயலாத ஒன்று!

ஆனால் சினிமா இசைத் துறையில் வேண்டுமானால் கொஞ்சம் பெருமைப்பட்டுக்கு கொள்ளலாம். "மன்மதராசா" பாடல் குழந்தை முதல் பெரியோர் வரை ஏற்படுத்திய தாக்கம்தான் அது! ஒரே ஒரு பாடலால் அனைத்தும் தரப்பினரையும் ஈர்க்க முடிந்தது சாதாரண விஷயம் இல்லை தானே!

எதிர்காலத் திட்டம்?

நான் எப்போதுமே முன் கூட்டியே திட்டமிடுவதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் திட்டமிட்ட அனைத்துமே வெற்றி பெற்றதில்லை. இப்போதைய போட்டி நிறைந்த உலகில் எதிர்காலத்திற்கு திட்டமிடுவதைவிட அந்தந்த நிமிஷமே திட்டமிட்டு செயல்படுவது தான் நல்லது! இதுதான் நமக்கு உடனுக்குடன் வெற்றியைத் தேடித்தரும்.

நான் திட்டமிடுவதற்கு நேரத்தை செலவழிப்பதை விட ஒவ்வொரு நாளும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்பேன். அந்த முயற்சிதான் எனக்கு வெற்றியை தேடித்தருகிறது.

நாம் ஒன்றை எதிர்பார்த்து, அது குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்காவிட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும்! அதனால் எனது வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளே இருக்காது.

எந்த மொழியில் நீங்கள் அதிக 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளீர்கள்?

தற்போது எனது அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகி வருவது தெலுங்கு மொழியில்தான்! அங்கு ஒவ்வொரு படத்திலும் எனது பாடல் இடம் பெற்று விடுகிறது.

ஆனாலும் தமிழில்தான் மன்மதராசா, கும்பிட போனதெய்வம், உம்மா உம்ம உம்ம உம்மா போன்ற பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உள்ளன. கன்னடத்திலும் எனது பாடல்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருகின்றன. அதில் நான் மிகக் குறுகிய காலத்தில் 30க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிவிட்டேன். இது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்கிறார் மாலதி சரவெடி பட்டாசாய் வார்த்தைகளை வெடித்து தள்ளியபடியே!

நன்றி : மாலை மலர், 26-08-2005

More Articles