|
"மன்மதராசா... மன்மதராசா" என்று தனது சொந்த குரலால்
குழந்தைகள் முதல் முதியோர் வரைக்கும் ஆட்டம் போட
வைத்துக் கொண்டிருப்பவர் இசை இளவரசி மாலதி லஷ்மன்! 15
ஆண்டுகளாக இசை மேடைகளில் 40 வகையான குரல்களில் கலக்கி
வந்த மாலதி லஷ்மனை 'மன்மதராசா' வானது புகழின் உச்சிக்கே
கொண்டு போய்விட்டிருக்கிறது. பட்டி தொட்டி மட்டுமல்ல
திருப்புகிற டி.வி. சேனல் அனைத்திலும் 'மன்மதராசா'
சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
டப்பாங்குத்து, மெலோடி... என்று எப்படிப்பட்ட
பாடலாக இருந்தாலும் மாலதி லஷ்மன் வெளுத்துக்கட்டி
வருகிறார். பச்சிளம் குழந்தைகளைக் கூட துள்ள வைத்திடும்
வித்தை தெரிந்த மாலதி லஷ்மனிடம் நமது எடக்க மடக்குகளை
அவிழ்த்து விட்டோ ம். புன்னகை மிளிர பதில்களை
பக்குவமாய் (தீபாவளி ஸ்வீட் போல!) அள்ளித் தந்தார்!
நகைச்சுவை உணர்வு கொண்ட மாலதியின் கலக்கல் பேட்டி
இதோ...
நீங்கள் மேடையில் பாடும்போது எப்போது
நல்ல மூடு வரும்? எப்போது மூடு அவுட் ஆகும்?
நான் மேடையில் ஏறிபாடிக் கொண்டிருக்கும்போது
ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தால் நல்ல மூடு வரும்.
சில சமயங்களில் நான் பாட்டைரசிச்சு பாடறபோது ரசிகர்கள்
'உம்' முன்னு இருந்தால் மூடு அவுட் ஆயிடும். ஒரு
கலைஞருக்கு பாராட்டுவது தானே உற்சாக டானிக்!
உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு?
எனக்கு தினமும் நிறைய கனவு வருது. அதுல நான் பயணம்
செய்ற விமானம் திடீர் என கீழே பாய்ந்து
விபத்துக்குள்ளாவது மாதிரி வரும். கனவு கண்டதும்
திடுக்கிட்டு எழுந்திடுவேன். அப்ப ரொம்ப திரில்லிங்கா
இருக்கும்.
நீங்க முன்னுரிமை கொடுப்பது
செலவழிப்பதற்கா? சேமிப்பதற்கா?
இதுவரைக்கும் நான் நகை, பட்டுச் சேலை, சுடிதார்...
என்று வாங்கி செலவு தான் பண்ணி இருக்கேனே தவிர சேமிச்சு
வச்சதில்லை இனியாவது சேமிக்கனும்னு ஆசை!
காலையில் எழும்போது நீங்க கேட்க
விரும்பாத மோசமான பாடல்?
காலையில் அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய எந்த பாடலை
கேட்டாலும் எரிச்சலாகத்தான் இருக்கும்!
'ரிஸ்க்' என்று தெரிந்தும் நீங்கள்
செய்து முடித்த வெற்றிகரமான செயல்?
எங்களோட "லஷ்மன் ஸ்ருதி" சார்பில் முழுக்க
முழுக்க பெண்களால் நடத்தப்பட்ட "லேடீஸ் ஸ்பெஷல்"
என்ற நிகழ்ச்சிதான்! இதனை நடத்துவதற்கு முன்பு
'ரிக்ஸ்' இருந்ததென்னவோ உண்மைதான். ஆனாலும்
கணவர் லஷ்மனின் துணையோடு வெற்றிகரமாக
நிகழ்ச்சியை நடத்தினோம்.
உங்களிடம் உள்ள ஒரு உணர்ச்சியை நீக்க
முடியும் என்றால் எதை நீக்குவீங்க?
முன்கோபத்தை! சில நேரங்கள்ல என்னையே அறியாமல் கோபம்
பொத்துக்கிட்டு வந்துடும்!
உங்களுக்கு நெருக்கமானவர்களில் அதிகம்
ஏமாறக் கூடியவர்கள் யாராக இருக்கும்?
பொதுவாக சொல்லணும்னா எனக்கு ஏமாத்துறது பிடிக்காத
ஒண்ணு. நான் எந்த விஷயமா இருந்தாலும் வெளிப்படையா
பேசிடுவேன். ஒளிவு - மறைவு இருந்தால் பிரச்சனைதான்!
'மன்மதராசா' பாடலில் உங்களை கவர்ந்த
பாட்டு வரிகள்?
ராசா...ராசா...ராசா... மன்மதராசா... லேசா...லேசா...
ஆகுது லேசா...
'மன்மதராசா' பாடல் சூப்பர்ஹிட்
ஆவதற்கு முன்! ஹிட் ஆன பின்! உங்கள் மனநிலை எப்படி?
15 வருசமா மேடையில் பாடிட்டு இருக்கேன். கமலின் "அன்பேசிவம்,
சாதிசனம், கார்மேகம், பார்த்திபன் கனவு..." போன்ற
படங்களில் பாடி இருக்கேன். அப்பொதெல்லாம் இல்லாத ஒரு
பயம் 'மன்மதராசா' வுக்கு பிறகு என் மனதை ஆக்கிரமித்து
இருக்கிறது.
இந்த ஒரே ஒரு பாடல் என்னை சிகரத்திற்கே கொண்டு
சென்றுவிட்டதாக உணருகிறேன். புகழ் அடைவதை விட அதனை
தக்க வைத்துக் கொள்ளுவதுதான் கடினம்! அதனால் முன்பைவிட
கடினமாக உழைக்க தொடங்கி இருக்கிறேன். ஜெயித்து விட
முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் கடந்தகால வாழ்க்கையில்
ஒருவரிடம் நல்ல முறையில் நடந்திருக்கலாம் என்றால் அது
யார்?
என்னோட அம்மாவிடம் தான்! சின்ன வயசுல இருந்தே
கர்நாடக சங்கீதம் கத்துக்கவா என்று எவ்வளவோ
வற்புறுத்தினாங்க. அவங்க சொல்றதை நான் கேட்கவே இல்லை!
உங்களோட வாழ்க்கையில் அதிகமான
சுதந்திரத்தை அனுபவித்த நேரம்?
அம்மாவும் சரி! கணவரும் சரி! எனக்கு
நிறைய சுதந்திரம் கொடுத்திருக்காங்க! அதனால் எந்த
காலகட்டம்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது.
உங்க வீட்டுக்கு தினமும் இலவசமாக
ஒன்று கிடைக்கும் என்றால் எதை கேட்பீங்க?
சந்தோஷத்தை கேட்பேன்! இதைத் தவிர வேறு என்னங்க
வேணும்!
ஒரு தாயின் முக்கியான கடமை என்று
எதைச் சொல்வீங்க?
தனது குழந்தைக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தி
தர்றதுதான் அம்மாவோட முக்கிய கடமைன்னு நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்த வரைக்கும் என் மகள் ஸ்ருதியுடன்
தினமும் 2 மணிநேரம் இருப்பதே ஜாஸ்தி! அவளோட திறமையை
வளர்க்க என்னால் என்னென்ன உதவி செய்ய முடியுமோ அதைச்
செய்துட்டு இருக்கேன்.
யாருமே இல்லாத ஒரு தீவில் நீங்கள்
மட்டும் இருக்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரே ஒரு
பாடலை மட்டுமே பாட அங்கு அனுமதிக்கப்படுகிறது என்று
வைத்துக்கொள்ளுவோம். அப்படி என்றால் எந்த பாடலை
பாடுவீங்க?
பாடகர் ஜேசுதாஸ் பாடிய "பூவே செம்பூவே" என்ற
பாடலைத்தான் பாடுவேன். திரும்பத் திரும்ப எத்தனை முறை
பாடினாலும் இதுசலிக்கவே சலிக்காது.
முதுமை அடையும்போது உங்களை திகிலடையச்
செய்யும் விஷயம்?
நான் எப்போதுமே வயதைப்பற்றி கவலைப்படுவதே இல்லை.
காரணம் வயதான பிறகும் பாடகியால் நன்றாக பாட முடியும்.
அதற்கு லதா மங்கேஸ்ஷ்கர். ஜானகி, சுசீலா போன்றோரே நல்ல
உதாரணம்!
உங்களை பொறாமைப்பட வைத்த பாடகி?
சித்ரா! அவங்களோட நல்ல குரல்வளம், எல்லோரிடமும்
சகஜமாகப் பழகும் விதம் எளிமை... என்று அடுக்கிக்கிட்டே
போகலாம்.
வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய
திருப்புமுனை?
முதல் திருப்புமுனை 40 குரல்களில் பாடக் கூடிய
திறமையை பெற்றது. சமீபத்தைய திருப்புமுனை மன்மத ராசா
பாடலை பாடியது!
நீங்க சந்தோசமா இருக்கிறப்ப செய்ய
விரும்பும் செயல் என்னவாக இருக்கும்?
நானும் மகளும் சேர்ந்து வீட்ல டான்ஸ் ஆடுவோம்!
அதுவும் கணவர் வீட்ல இல்லைன்னாத்தான்
உங்கள் கணவரிடம் பிடிக்காத விஷயம்?
சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது.
குறிப்பிட்ட அளவு ஓய்வு எடுக்காமல் (உறங்காமல்)
இருப்பது.
நீங்கள் பாடும் 40 குரல்களில்,
அதிகமாய் கைதட்டலைப் பெறும் குரல் எது?
அந்த காலத்து சூப்பர் பாடகி கே.பி. சுந்தராம்பாள்
குரல்ல பாடினால், உடனே ரசிகர்கள் குஷியாக கைதட்ட
தொடங்கிடுவாங்க! அதனால்தான் நான் எங்கு போனாலும் இந்த
குரல்ல பாடிடுவேன்.
மன்மதராசாவின் வெற்றி ரகசியம்?
இசையமைப்பாளர் 'தினா' மற்றம் படத்தின் டைரக்டர்,
ஒளிப்பதிவாளர்.. என்று ஒட்டுமொத்த டெக்னிசியன்களின்
கடின உழைப்பால்தான் பாடல் சூப்பரா வந்திருக்கு! இந்த
வெற்றி ஒரு குழுவுக்கு கிடைத்த வெற்றின்னுதான்
சொல்லனும் என்றார் மாலதி தனக்கே உரித்தான கணீர் குரலில்!
- மாலை மலர், மகளிர் மலர்,
17/10/2003 |