Prema Rangarajan

Profile of Prema Rangarajan

கர்நாடக இச்கச்சேரிகள் செய்வதில் மிகவும் பிரபலமான பெயர் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் திருமதி பிரேமா ரங்கராஜன் அவர்கள் நம் நினைவுக்கு உடனே வருகிறார்.
இவர் 21.10.1950 அன்று திரு பி.சி சடகோபன், ஹேமலதா தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். தனது ஆறாவது வயதிலேயே கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டு தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இதற்குத் தகுந்தாற்போல இவரது அம்மா வழிப் பாட்டியும், தந்தைவழிப் பாட்டியும் இசைஞானம் கொண்டவர்களாக இருந்தார்கள். இவரது அப்பாவின் அம்மா (பாட்டி) திருமதி ருக்மணி அவர்கள் பிரபல சங்கித மேதை காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை அவர்களிடம் சீடராக இருந்தார். ஒருநாள் திருமதி ருக்மணியாரின் கனவில் பிரேமா என்னும் பெண்மணி வீட்டுக் கதவைத்தட்டியது மட்டுமின்றி “விரிபோணி”என்ற வர்ணத்தை பாடிக் காண்பித்தாராம். மறுநாள் ருக்மணியம்மாள் மகளான ஹேமலதாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பொதுவாக பாட்டியின் பெயரை பேத்திக்கு வைப்பது இந்து சம்பிரதாயப்படி வழக்கம். ஆனால் கனவில் வந்த பெண்ணின் பெயரான பிரேமா என்ற பெயரையே எனக்கு வைத்தார்கள் என்ற சுவையான செய்தியை பிரேமா ரங்கராஜன் கூறினார்.
இவருக்கு கர்நாடக இசையைப் போதித்தவர்களில் குறிப்பாக திரு ராமபத்ரன், கடையம் கிருஷ்ண மூர்த்தி, டி.எஸ். ராகவன் ஆகியோரைச் சொல்லலாம். இவருக்கு திருமணமானபின் தான் உதவிமேலாளராக வேலை பார்த்துவந்த சிண்டிகேட் வங்கியில் டெல்லியிலிருந்து மாற்றலாகி சென்னைக்கு வந்த பிறகு இசைப் பேராசிரியர் பி. பாலகிருஷ்ணன் அவர்களிடம் சங்கீத சிட்சை பெற்றார். இவரது கணவரும் திரு ரங்கராஜன் ஒரு வங்கி மேலதிகாரியாவார் (Bank of India) . திரு பி. பாலகிருஷ்ணன் அவர்கள் 1987 நவம்பரில் காலமான பிறகு பிரேமா ரங்கராஜன் எஸ். ராஜம் அவர்களிடமும் திருமதி சுலோச்சனா பட்டாபிராமன் அவர்களிடமும் இசையறிவை வளர்த்துக் கொண்டார்.
டாக்டர் வி.வி. ஸ்ரீவத்ஸா என்ற இசை மேதையிடம், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் அவர்களின் பிரபல கீர்த்தனைகளையும் பல அரிய கிருதிகளையும் கற்றுத் தேர்ந்தார். கர்நாடக இசை மேல் கொண்டிருந்த அளவிடற்கரிய அவாவினால் தான் வேலை பார்த்து வந்த வங்கி அதிகாரிப் பணியிலிருந்து தன்னைவிடுவித்துக் கொண்டு மேலும் இசையறிவை வளர்த்துக் கொள்ள முன்வந்தார். இவர் வங்கிப் பணியிலிருந்து தன்னை விடுவித்து 13ஆண்டுகள் ஆகின்றன. கர்நாடக இசைத் துறையில் “பிஹெச்டி” என்ற டாக்டர் பட்டத்தைப் பெற்றார்.
இவர் இப்பட்டத்தைப் பெறுவதற்காக எடுத்துக்கொண்ட தலைப்பு “Inter Disciplindry Sankrit Compositions In Karnatic music - A Study" (From Anna Macharya to Late M.D.Ramanathan) ஆகும். வங்கி மேலதிகாரியாக இருந்த இவரது கணவர் முதலில் Bank of India பிறகு பாரத் ஓவர்சீஸ் வங்கி மற்றம் ABN Amro ஆகிய வங்கிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நிறைய பணி மாற்றங்கள் காரணமாக பல ஊர்களில் இவர் கணவர் பணிபுரிந்திருந்தாலும் திருமதி பிரேமா ரங்கராஜன் அவர்கள் சென்னையிலேயே சிண்டிகேட் வங்கியில் தொடர்ந்து பணிபுரிந்து வந்திருக்கிறார். அகில இந்திய வானொலியின் "A" Grade Artirst என்ற உயரிய இசைக் கலைஞராக பிரேமா ரங்கராஜன் திகழ்ந்து வருகிறார்.
மேடைக் கச்சேரிகளில் நிறைய கர்நாடக இசையில் இன்றளவும் பாடிவரும் பிரேமா ரங்கராஜன் அவர்கள் எவ்வளவு கச்சேரிகள் செய்திருக்கிறார் என்பதைக் கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. "மதுராம்பா விபக்தி க்ருதிகள்" என்ற விசேஷ தலைப்பில் ரங்கநாதஸ்வாமியைப் பற்றி பாடல்கள் பாடியிருக்கிறார். இப்பாடல்கள் குறிப்பாக வைகுண்ட ஏகாதசி சமயம் பாடப்படுவதாகும்.
திருமதி சுலோச்சனா பட்டாபிராமன் என்ற புகழ்வாய்ந்த இசை மேதையின் சீடர் குழுவினருடன் சேர்ந்து 72 மேளகர்த்தா ராகங்களைப் பற்றியும் தில்லானா மற்றும் ராகமாலிகைகளில் அமைந்த பாடல்களை பிரேமா ரங்கராஜன் இசை நிகழ்ச்சிகளில் பாடி வந்திருக்கின்றார்.
இசை ஒலி நாடாக்களில் இவர் பாடிய பாடல்கள் ஏராளம். குறுந்தகடுகள் பெரும்பாலும் தெய்வீக சம்பந்தப்பட்ட பாடல்களாக வெளிவந்துள்ளன. குறிப்பாக சரஸ்வதி சகஸ்ர நாமம், நாராயணீயம், மகாவிஷ்ணு சகஸ்ர நாமம் ஆகிய தலைப்புகளில் குறுந்தகடுகள் வெளிவந்துள்ளன.
இவரது கர்நாடக இசை நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட பாடல்கள் 2 குறுந்தகடுகளில் வெளிவந்துள்ளன.
இவருக்கு 2 ஆண் மகன்கள். மூத்த மகன் பிரஸன்னா இவர் மென்பொருள் பொறியாளராக டாட்டா கன்ஸல்டன்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளையவர் சீனிவாஸ் எம்.பி.ஏ படிப்பில் தேர்ச்சி பெற்று ஸ்காட்லேண்ட் ராயல் வங்கி, பணிபுரிகிறார்.
முகவரி : P.R. பிரேமா ரங்கராஜன்,
பிளாட் எண் 6, இராமலஷ்மி அப்பார்ட்மென்ட்ஸ்,
நியூ எண். 26இ 4வது தெரு,
அபிராமபுரம்,
சென்னை-118.

Email : premarangarajan@gmail.com

More Profiles