பி.யூ.சின்னப்பா அவர்களின் வாழ்க்கை குறிப்பு

சின்னப்பாவின் பூர்வீகம் புதுக்கோட்டை ஆகும். உலக நாதப்பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதியின் மூத்த மகனாக சின்னப்பா வெள்ளிக்கிழமை அன்று பிறந்தார். உடன் பிறந்தவர்கள்  இரண்டு தங்கைகள். சின்னப்பா பிறந்த தேதி 05.05.1916 ஆகும்.

சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பா முயற்சி எதுவுமின்றியே 5-ம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

சிறு வயதிலேயே பல வேடங்களில் நடித்து ரசிகர்களை அசர வைப்பாராம். சதாரம் நாடகத்தில் அவர் குட்டித் திருடனாகத் தோன்றி பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

தம் தந்தை நாடகத்தில் பாடி வந்த பாட்டுகளையெல்லாம் சின்னப்பா பாடிக்கொண்டிருப்பாராம். அத்துடன் புதுக்கோட்டையில் நடந்த பஜனைகளில் அவர் அடிக்கடி கலந்துக் கொண்டு பாடுவது வழக்கமாம். இவரது கம்பீரமான இனிய குரல் கண்டு பஜனை குழுவினர் இவரை அடிக்கடி பாட அழைப்பார்களாம்.

பள்ளிக் கூடத்தில் சின்னப்பா நான்காவது வகுப்பு வரையில் படித்திருக்கிறார். ஆனால் அவருக்கு படிப்பில் அதிக ஈடுபாடு இல்லாததால் அதை நிறுத்தி விட்டு நாடகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டார்.

சின்னப்பாவின் ஆசை நாடகத்தின் மீதும் இசையின் மீதும் தான் என்று நினைக்க வேண்டாம். அவருக்கு ஐந்தாவது வயதான போதிலிருந்தே குஸ்தி, குத்துச்சண்டை, கம்பு சுற்றுதல் ஆகியவைகளிலும் அதிக விருப்பம் உண்டு. இப்படியாக அவரது எதிர்கால வாழ்க்கைக்கான முடிவு ஒன்றும் ஏற்படாமல், பல எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரது குடும்பம் ஏழ்மை நிலையிலிருந்தது. வருமானமோ போதவில்லை.

சின்னப்பா குஸ்தி போட்டுக் கொண்டிருந்தால் வயிறு நிரம்பிவிடுமா என்ன? அதனால் ஏதாவது ஒரு சிறு தொகையையாவது அவர் சம்பாதித்தாக வேண்டியதாயிருந்தது. அதனால் அவர் கயிறு திரிக்கும் கடையொன்றில் 5 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். நல்ல வேளையாக அவர் சில மாதங்களுக்கு மேல் இந்த வேலையில் நிலைக்கவில்லை.

கடைசியில் சின்னப்பா நாடகத் தொழிலிலேயே ஈடுபடவேண்டும் என்று அவரது தந்தை தீர்மானித்தார். அதன் படி சின்னப்பா தம் 8வது வயதில் தத்துவ மீனலோசனி வித்வபால சபாவில் சேர்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரில் இக்கம்பெனி பழனியாப்பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது இந்தக் கம்பெனியில் டி.கே.எஸ். சகோதரர்கள் முக்கிய நடிகர்களாய் நல்ல புகழுடன் செல்வாக்குடனும் விளங்கி வந்தனர்.

கம்பெனியில் சேர்ந்த சின்னப்பாவை கவனிப்பாரில்லை. அவருக்குக் சில்லரை வேடங்களே கொடுக்கப்பட்டன. இந்த நிலையில் இருந்தால் தாம் முன்னுக்கு வர முடியாது என்பதை சின்னப்பா உணர்ந்து கொண்டு அந்த கம்பெனியிலிலுந்து ஆறு மாதத்தில் விலகி விட்டார். அந்த சமயத்தில் தான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெளி புதுக்கோட்டையில் நாடகம் நடத்தி வந்தது. ஸ்ரீ நாராயணன் செட்டியார் என்வரின் சிபாரிசின் பேரில் சின்னப்பா அந்தக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 15 ரூபாய் மாத சம்பளத்தில் சின்னப்பா 3 வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டார்.

சின்னப்பாவுக்கு நடிக்க வேண்டும் பாட வேண்டும் என்ற பேராவல் அதிகம் இருந்தது வந்தது. ஆனால் அவருக்கு ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் முதலில் சாதாரண வேடங்கள் கொடுக்கப்பட்டு வந்த போதிலும், அவர் மற்ற வேடங்கள் சம்பந்தப்பட்ட வசனங்களைப் பேசுவது, பாட்டுகளைப் பாடுவது போன்றவைச் செய்து வந்தார்.

அவர் ஒரு நாள் கம்பெனி வீட்டில் சதி அனுசூயா நாடகப் பாட்டுகளை மிகவும் ரசித்து பாடிக் கொண்டிருந்தாராம். இவர் பாடியது மேல் மாடியிலிருந்த கம்பெனி முதலாளியான ஸ்ரீ சச்சினதாந்த பிள்ளையின் காதுக்கும் எட்டியதாம். இவ்வளவு நன்றாகப் பாடியவர் யார் என்று விசாரித்தாராம். அது சின்னப்பா என்ற தெரிந்ததும், அவரை மேல் மாடிக்கு வர வழைத்தார். அந்த பாடல்களை மீண்டும் பாடச்சொல்லி கேட்டார். அவருக்கு மிகுந்த சந்தோசம் ஏற்பட்டு விட்டதாம். அந்த நிமிடமே அவர் சின்னப்பாவின் சம்பளத்தை 15 ரூபாயிலிருந்து 75 ரூபாய்க்கு உயர்த்தினார். சாதாரண நடிகராயிருந்த சின்னப்பாவை கதாநாயகனாக உயர்த்தப்பட்டார்.

அந்த கம்பெனியில் சின்னப்பா கதாநாயகன் நடிகனாக விளங்கியபோது, திரு.எம்.ஜி.ஆர். , பி.ஜி.வெங்கடேசன் , பொன்னுசாமி , அழகேசன் போன்றவர்கள் சின்னப்பாவின் ஜோடியாக
பெண் வேடத்தில் நடித்து வந்தானர். மற்றும் காளி என்.ரத்தினம் , எம்.ஜி.சக்ரபாணி போன்றவர்கள் சக நடிகர்களாய் விளங்கி வந்தனர்.

ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகங்களிலேயே அப்பொழுது அதிகமான வசூலை அளித்தவகையில் ஒன்று பாதுகா பட்டாபிஷேகம் ஆகும். இந்த நாடகத்தை அவர்கள் சென்னையில் தொடர்ந்தால்ப் போல் ஒரு வருட காலம் நடத்தினார்கள். பரதன் வேடத்தில் தோன்றி வந்த சின்னப்பா பிரமாதமாக பொது மக்கள் ஆதரவைப் பெற்றார். புராண நாடகங்களில் மட்டுமல்லாமல் சந்திர காந்தா ராஜேந்திரன் போன்ற சமூக நாடகங்களிலும் சின்னப்பா தனிப் புகழ் பெற்றார்.

1 | 2 | 3 |

More Profiles