என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்
ரோஷிணி, இசையும் நடனமுமாய் இன்னொரு பக்கம்
வெளிப்படுகிறார். சமீபத்தில் திரைப்பட பின்னணிப் பாடகி
என்ற தகுதியும் இவரை சேர்ந்து கொண்டிருக்கிறது. ஓடிக்
கெண்டிருக்கும் தாமிரபரணி படத்தில் இடம் பெற்ற 'கறுப்பான
கையாலே என்னப் புடிச்சான்' என்ற பாடலை பாடியது இவர்
தான். 'குத்து' படத்தில் இவர் பாடிய 'போட்டுத் தாக்கு'
குத்துப்பாடல் தான் இவரை சினிமாவிற்குள் அதிரடிப்
பாடகியாக நிலைநிறுத்தியது.
இப்போது படிப்புடன் பாடலும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
படிப்பும் பாட்டும் தொடர வலம் வரும்
ரோஷிணி, இசை வயப்பட்டது எப்படி?
ரோஷிணியை அவரது சென்னை அரும்பாக்கம் இல்லத்தில்
சந்தித்தபோது நம் முதல் கேள்வி இது தான்.
ரோஷிணி சொன்னார்:
"பெற்றோருக்கு அக்காவும் நானும் இரு பெண்கள் மட்டுமே.
அக்காவுக்கு பாடும் ஆற்றல் இருந்தது. அதனால் அப்பா
அக்காவுக்க இசை கற்க ஏற்பாடு செய்தார்.
அப்பா டாக்டர் ஜோசப் பலிய பெருமாள் திருச்சியில்
உள்ள செயின்ட் ஜோசப் கல்லீரியில் தமிழ்ப்பேராசிரியராக
இருந்தார். அம்மா லூசி ஜோசப் குடும்பத்தலைவி.
திறமைகளால் தங்களை வளர்த்துக் கொள்ளும்போது தான்
ஒவ்வொருவரும் தனித்துவம் பெற முடியும் என்பார் அப்பா.
இந்த வகையில் எங்கள் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி
வைக்கக்கூடய பெற்றோர் எங்களுக்குக் கிடைத்தார்கள்.
வீட்டில் அக்கா பாடும்போது நானும் பாடிப் பார்ப்பேன்.
இப்படித்தான் அப்பாவின் கல்லூரி ஆண்டு விழாவின் போது
அக்காவை பாட அழைத்திருந்தார் அப்பா. அப்போது எனக்கு
மூன்று வயது. நானும் பாடித்தான் ஆட வேண்டும் என்று அடம்
பிடித்திருக்கிறேன். அப்பாவும் என் அடத்துக்காக 'சரி
பாடட்டும்' என்று அனுமதித்திருக்கிறார். நான் எந்தவித
மேடைக்கூச்சமுமின்றி பாடியிருக்கிறேன். ஐந்து வயதில்
மைதிலி ஜெகநாதன் தான் என் முதல் குரு.
அப்பாவின் பணியின் பொருட்டு எங்கள் குடும்பமும்
திருச்சியில் இருக்க நேர்ந்தது. இந்த கால கட்டத்தில்
பரதநாட்டியமும் கற்றுக் கொண்டேன். அந்த வயதில் நடனம்,
பாட்டு என்பது எனக்கு அத்தனை பிரியமாய்
இருந்திருக்கிறது. அதனால் ஆர்வம் என்னை அதில்
சீக்கிரமாய் ஈடுபாடு கொள்ளவைத்தது.
நான் நாலாவது படித்த நேரத்தில்தான் திருப்புமுனை.
அப்போது நான் மாலையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு நடனமாடுவதும் பாடுவதும் நடந்து
கொண்டிருந்தது. இப்படித்தான் ஒரு நாள் பாடவிருந்த
விழாவில் சிறப்பு விருந்தினராக இசையமைப்ளர் வித்யா
சாகர் அங்கிள் வந்திருக்கிறார். நான் இந்த விழாவில்
சங்கராபரணம் படத்தில் வரும் 'மானச சஞ்சரரே', 'ராகம்
தானம் பல்லவி' என்ற இரண்டு பாடல்களைப் பாடினேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் அம்மாவையும் என்னையும் அழைத்துப்
பேசிய வித்யாசாகர் அங்கிள். "பாட்டு நன்றாக வருகிறது.
சென்னை வரும்போது, 'வாய்ஸ் டெஸ்ட்' எடுத்துக்
கொள்ளுங்கள்" என்றார்.
சென்னையில் சித்தி வீடு (அம்மாவின் தங்கை)
இருக்கிறது. சித்தி ஜெயந்தி பிரபாகரும் சித்தப்பா
ஜே.சி.டி. பிரபாகரனும் என் இசையார்வத்துக்கு ரொம்பவே
பக்கபலமாக இருந்தார்கள். பள்ளி விடுமுறை சமயங்களில்
சித்தி வீட்டில்தான் இருப்பேன். இப்படி சென்னை வந்த
நாட்களில்தான் ஏவி. ரமணன் சன் டிவியில் நடத்திய
சப்தஸ்வரங்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இதில் 'கிட்ஸ் ரவுண்டில்' முதல் பரிசு சிடைத்தது.
இப்படி சென்னை என் இசை ஆர்வத்தை அதிகப்படுத்திக்
கொண்டிருந்த நேரத்தில் வித்யா சாகரின் அழைப்பு என்னை
மேலும் உற்சாகப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
இம்முறை சென்னை வந்த போது வித்யாசாகரை அவர் இருந்த
ஸ்டூடியோவில் அம்மாவுடன் சென்று சந்தித்தேன். அப்போது
அவர் 'ஆஹா என்ன பொருத்தம்' என்ற படத்துக்கான பாடல்
பதிவில் இருந்தார். கானாங்குருவி என்ற பாடலை பாடகி
அனுராதா ஸ்ரீராம் பாடிக் கொண்டிருந்தார். என்னப்
பார்த்ததும், "திருச்சியில் பார்த்தோமே" என்று
ஆச்சரியம் காட்டிய வித்யாசாகர், அந்தக்கணமே
அந்தப்பாட்டின் இடையே என்னையும் சில வரிகள் பாடவைத்தார்.
திருச்சியில் ஐந்தாவது படித்தபோது இதே மாதிரி என்
பாட்டைக் கேட்ட டைரக்டர் கே.பாக்யராஜ் அங்கிள் "சென்னைக்கு
வரும்போது என்னைப் பாருங்கள்" என்றார்.
அந்த வருட விடுமுறையில் சென்னை வந்தபோது அவரையும்
போய் பார்த்தோம். அவரும் சொன்னதை செய்தார். அப்போது
அவர் இயக்கி நடித்துக் கொண்டிருந்த 'வேட்டிய
மடிச்சுக்கட்டு' படத்திற்காக 'கிச்சு கிச்சு தாம்பாளம்'
பாடலை பாடவைத்தார்.
இப்படி பாட்டில் வளர்ந்த நேரத்தில இனி சென்னை தான்
நம் இசைப்பயணத்திற்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.
என் பெற்றோருக்கும் இது தோன்ற, பத்தாவது படிக்க சென்னை
வந்தேன். அப்பா திருச்சியில் இருந்தாக
வேண்டியிருந்ததால் நானும் அம்மாவும் வந்தோம்.
இப்படியாக திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவியாக
இருந்த நான் சென்னை குட் ஷெப்பர்டு பள்ளியில் பத்தாம்
வகுப்பு மாணவியானேன்.
அதோடு ஜெயா டிவி நடத்திய ராகமாலிகா நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு செமிபைனல் வரை வந்தேன். இந்த சமயத்தில்
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இந்த நிகழ்ச்சியில்
பாடிய சில புதிய குரல்களை கேட்டிருக்கிறார். அதில் எனது
குரலும் போக, அப்படி தேடி வந்த வாய்ப்புதான் குத்து
படத்தில் நான் பாடிய 'போட்டுத்தாக்கு' பாடல் வாய்ப்பு.
இந்தப்பாடலை சிம்புவுடன் சேர்ந்து பாடினேன். படத்தில்
சிம்புவுடன் ரம்யாகிருஷ்ணன் ஆடினார். இந்தப்பாடல் வந்த
பிறகு தான் நான் பாடகி என்றளவில் முழுமையாகத் தெரிய
ஆரம்பித்தேன். ஜாம்பவான் படத்தில் அல்வாப்பொண்ணு என்ற
பாடலை திப்புவுடன் சேர்ந்து பாடவைத்தார் இசையமைப்பாளர்,
பரத்வாஜ்.
இதைத் தொடர்ந்து யுவன் சங்கர்ராஜா இசையமைத்த
பட்டியல் என்ற படத்தில் 'நம்ம காட்டுல' என்ற
பாடலைப்பாடி வைத்தார். இந்தப்பாடலில் இன்னொரு பாடகரும்
பாடுவதாக இருந்தது. நான் என் போர்ஷன் பாடியபோது கூட,
யார் பாடப்போகிறார் என்பது தெரியாது. ஆனால் பாடல் வெளி
வந்தபோது பாடகர் குரல் யாருடையது என்று பார்த்தால்
இன்ப அதிர்ச்சி, இசைஞானி பாடியிருந்தார். வார்த்தைகளில்
விவரிக்க முடியாத பரவசம் எனக்கு. இதே யுவன் மூலம்
எனக்குக் கிடைத்த அடுத்த வாய்ப்பு தான் தாமிரபரணி
படப்பாட்டு. இந்தப்படத்தில் நான் பாடிய "கறுப்பான
கையால என்னப்புடிச்சான்" பாடல் என்னை எல்லா இசை
ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்து விட்டது. இதற்கிடையே
ஸ்ரீகாந்த்தேவாவுடன் நான் பாடிய ஆழ்வார் படப்பாடலான 'மயிலே
மயிலே இறகுபோடு' என்ற பாடலும் சூப்பர் ஹிட்.
இப்போது திருரங்கா, பரட்டை என்ற அழகுசுந்தரம்,
பெரியார் என்று படங்கள் தொடர்கிறது.
"உங்கள் அக்கா பாட்டில்
ஈர்க்கப்பட்டுத்தான் நீங்கள் பாட வந்தீர்கள். அக்கா
பாடகி ஆனாரா இல்லையா?"
அக்கா அனிதா சாலினி இப்போது திருமணமாகி கணவருடன்
அமெரிக்காவில் இருக்கிறார். அங்குள்ள சிகாகோ
பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் முடித்த அக்காவுக்கு
திருமணமும் நிச்சயமானது. அக்காவின் கணவர் லியோ சாலமன்
அங்கு மெடிக்கல் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கிறார்.
அக்காவுக்கு தம் பாடல் ஆற்றல் முழுமையாக வெளிப்பட
வாய்ப்பில்லாமல் அமைந்த அமெரிக்கப்படிப்பு அவள் மொத்த
நேரத்தையும் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த வகையில்
அக்காவிற்கு இப்போதும் வருத்தம் உண்டு. ஆனால் நான்
பாடகியானதில் அக்காவின் மனக்குறை தீர்ந்து விட்டது.
நான் என்ஜினீயரிங் படிப்பை தேர்வு செய்ததற்குப்
பின்னணியில் கூட என் பாட்டு ஆர்வம் தான். படிப்பை
முடித்து என் பணிக்கான வாய்ப்பு அமைந்தாலும் பாடல்
தொடரவே செய்யும்.
நன்றி: தினத்தந்தி,
4-3-2007 |