Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBSPB அவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். எம்.ஜி.ஆரின் பெயர் இன்னும் கொடி கட்டிப் பறப்பதற்குக் காரணம், பலரின் வாழ்வில் இப்படிப்பட்ட சமயங்களில் அவர் பழக முடிந்ததும் ஒரு காரணமாகும்.

பாட்டுப் பாடுவது பாலுவின் ரத்தத்திலே ஊறியது. சிறுவயதில் ஸ்கூலில் ப்ரேயர் பாடும்போது, பாலு உடன்பாடுவது வழக்கம். தனியாக வகுப்புகளில் பாலுவைப் பாடச்சொல்லிக் கேட்பதும் உண்டு. இவ்வளவு கம்பீரமாக இருக்கும் பாலுவின் குரல், மிகவும் மென்மையாயிருந்த காலம் அது. பெண்ணின் சாயல் உள்ள குரலில் பாலுபாடுவது வழக்கம். அந்தக் காலத்தில் P. சுசிலா, S. ஜானகி பாடல்களை பாலு அப்படியே பாடி, எல்லாரையும் மகிழவைப்பார். அதுமட்டுமன்றி, படிப்பிலும் வெகுசுட்டி. தன் பாட்டை மற்றவர்கள் ரசிக்கிறார்கள். அதைப்போல, தான் தன் குரலைக் கேட்க முடியவில்லையே என்ற ஏக்கம், பாலுவின் மனத்தில் நிறைய இருந்தது. இப்பொழுதுபோல டேப் ரிக்கார்டர்கள் அதிகப் பிரபலமாகாத காலம் அது. பெரிய டேப்ரிக்கார்டர்கள் மட்டுமே உண்டு. அதுவும் மிகவும் காஸ்ட்லியான டேப் ரிக்காடர்கள். சாதாரணமானவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தவை.

பாலு படித்த பள்ளியில், ஒரு டேப்ரிக்கார்டர் வாங்கினார்கள். அந்தப் பள்ளியில் பிஸிக்ஸ் வாத்தியாராக இருந்த GRS என்பவர் பாலுவின் குரல் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். ஒரு நாள் பாலுவை அழைத்து, பாலுவைப்பாடச் சொல்லி அதை டேப் செய்யப் போவதாகச் சொன்னவுடன், பாலுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பள்ளிக்கூடம் முடிந்தவுடன் பாலு பயபக்தியோடு டேப் ரிக்கார்டர் முன்பு அமர்ந்து 'அன்னலக்ஷ்மி' என்ற தெலுங்குப் படத்தில் P. சுசிலா, பிரஹலாதன் கதாபாத்திரத்திற்குப் பாடிய பாடலைப் பாடினார். பாலு பாடியதைப் பதிவு செய்து மீண்டும் அவருக்குப் போட்டுக் காட்டினார் GRS. முதன் முதலாக தான் பாடிய பாடலைத் தன் குரலில் டேப்ரிக்கார்டரில் கேட்டபோது, பாலு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்றளவும் அந்தப் பாட்டு பாலுவின் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு எவ்வளவோ முறை பாலு தான் பாடிய பாடலை, பல இடங்களில் கேட்டிருந்தபோதும் இன்றளவும் பாலுவின் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நேரம், டேப்ரிக்கார்டரில் தன் குரலைக் கேட்டதுதான் என்று நினைவு கூர்கிறார். டேப்பில் பாடிய பாடலால் பாலு ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டார். அந்தப் பாடலைப் போட்டுக் கேட்டுவிட்டு பள்ளிக்கு ஒரு பிரமுகர் விஜயத்தின்போது தனியாக 'மைக்' முன்னால் நின்று ப்ரேயர் பாடும் பொறுப்பை பாலுவிடம் ஒப்படைத்தார், பள்ளி ஆசிரியர். பள்ளியில் பாடப்படும் ப்ரேயர் மொத்தம் 25 ஸ்லோகங்கள் கொண்டது. அதில் நான்கு அல்லது ஆறு ஸ்லோகங்களை மாற்றி மாற்றிப் பாடுவது வழக்கம். ஒவ்வொரு செட் ஸ்லோகமும், ஒவ்வொரு ராகத்தில் அமைந்தவை. பாலுவிற்கு தன்னை பாடச் சொன்னதில் மிகவும் சந்தோஷம். இரண்டு நாட்கள் விடாமல் வீட்டில் பயிற்சி செய்துவிட்டுப் பள்ளிக்கு வந்தார்.

பள்ளியில் பிரமுகரை வரவேற்க ஏக ஏற்பாடுகள் மேடை ஏறிப் பாடப்போகும் பாலுவிற்கு தனி உபசாரம் பிரமுகரும் வந்தார். மேடையில் அவரும், பள்ளி ஹெட்மாஸ்டாரும் மேடைக்குச் சென்று அமர்ந்தனர். பாலுவுக்கு திடீரென்று ஒரு பயம் வந்தது. தன்னால் சரியாகப் பாட முடியுமோ என்ற அவநம்பிக்கை ஒரே ஒரு கணம்தான் இருந்தது மைக்கில் ப்ரேயர் பாடுபவர் S.P. பாலசுப்பிரமணியன் என்று கூறப்பட்டது, காதில் விழுந்தது இயந்திரத்தனமாக மேடை ஏறி மைக்முன்பு நின்றார் பாலு. தான் பாடப்போகும் பாடல்களில் வரும் கடவுள்கள் அனைவரையும் தன் கண் முன்பு கொண்டு நிறுத்திப் பாட ஆரம்பித்தார். ப்ரேயர் என்பதால் எல்லோரும் நின்றுக் கொண்டிருந்தார்கள் கண்களை மூடியவாறு பாடிக் கொண்டிருந்த பாலுவிற்கு, தன் நண்பர்களும், ஆசிரியர்களும், விழாவிற்கு வருகை தந்த பிரமுகர்களும் நின்று கொண்டிருந்தது தெரியவில்லை. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ராகம் பேட்டுப் பாடிக் கொண்டேயிருந்தார் பாலு. எல்லாரும் நின்று கொண்டிருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது, விடாமல் பாலுவும் பாடிக் கொண்டிருந்தார்.

அந்த இறைவணக்க நிகழ்ச்சியையே 35 நிமிடம் அற்புதமாகப் பாடி ஸ்தம்பிக்க வைத்து விட்டார் SPB. ஆம், உலக சாதனைப் புத்தங்களில் இடம் பெறும் அளவிற்கு 35 நிமிடங்கள் இறைவணக்கம் பாடிய ஒரே நபர் பாலுவாகத்தான் இருக்க முடியும். இறைவணக்கம் முடிந்ததும் ஒரு பெரிய கரகோஷம் தன் பாடலுக்குத்தான் கிடைத்தது என்று நினைத்து பெருமிதத்தோடு, தன்னிருக்கைக்குத் திரும்பிய பாலுவிற்கு எல்லாரிடமிருந்தும் திட்டுக் கிடைக்க ஆரம்பித்து விடவே அப்பொழுதுதான், தான் செய்த தவறு புரிந்தது. இன்று யாராவது பாலுவை ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு இறைவணக்கம் பாடச் சொன்னால் அவர் எடுத்துக் கொள்ளும் மொத்த நேரம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவேயிருக்கும்.

இந்தக் கட்டுரை நூலுக்காக, பாலுவைச் சந்திக்கச் சென்று பேசும்போது, அவர்மனத்தில் தன்னுடைய இளம் பிராய நினைவுகள் அலைமோதின. பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப விற்பன்னர் அவருடைய இசைஞானம் தான் பாலுவின் உடலில் ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தப் பாட்டைக் கேட்டாலும் உடனே பாடக் கூடிய ஓர் அரிய திறமை பாலுவிற்கு சிறுவயது முதல் இருந்து வருகிறது. பாலுவின் வீட்டில் ரேடியோ இல்லை. ரேடியோ வைத்துக் கொள்ளும் அளவிற்கு வசதியும் இல்லை. பக்கத்து வீட்டு ரேடியோ பெட்டிகள் ஒலிபரப்பிடும் பாடல்கள்தான் பாலுவின் வேட்கைக்கு வடிகாலாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு, பாலுவின் மூத்த சகோதரர் திருமணத்திற்குப் பிறகுதான் முதன்முதலில் ரேடியோ வாங்கியதாக பாலு நினைவு கூர்கிறார்.

சிறுவயதில் அவர் நினைவிற்குத் தெரிந்து பார்த்த முதல் படம் 'லைலாமஜ்னு'. ஆனால் சினிமா பார்ப்பதைப் பற்றி பாலு மறக்காமல் இருக்க இன்னொரு சம்பவம் உண்டு. நெல்லூரில் ஏ. நாகேஸ்வர ராவ் நடித்த 'ஸ்வர்ண சுந்தரி' என்ற படத்திற்கு, பாலு சிறுவனாக இருந்த போது வீட்டோ டு சென்றபோது அந்த படத்தில் ஏ. நாகேஸ்வரராவை வில்லன்கள் அடிக்கும், சீனைக் கண்டு மிரண்டு போய் அழுதிருக்கிறார். அதுமட்டுமன்றி, அந்தத் தியேட்டர் ஏ. நாகேஸ்வரராவை அடிப்பதற்காகவே கட்டப்பட்ட தியேட்டராக நினைத்து அதற்குப் பிறகு பல ஆண்டுகள் அந்தத் தியேட்டருக்கு போவதற்கே தயங்கியிருக்கிறார் பாலு. பாலு சிறுவனாக இருந்து பார்த்து மகிழ்ந்த ஏ. நாகேஸ்வரராவிற்கே பிற்காலத்தில் பல படங்களில் பாலு பாட நேர்ந்ததை, தன் வாழ்வில் மறக்க முடியாத சம்பவமாகக் கருதுகிறார் பாலு. ஏ. நாகேஸ்வரராவிற்கு பல பிரபலமான பாடல்கள் பாடிய பின்னணியில் ஒரு சுவையான கதையிருக்கிறது. அதை பின்னர் பார்ப்போம்.

சின்ன வயசிலிருந்தே பாலுவிற்கு கூச்சசுபாவம் அதிகம் இருந்ததில்லை. எப்போதும், யார் பாடச் சொன்னாலும், தயங்காமல் பாடத் தொடங்குவது வழக்கம். இது சிறு வயது முதலே அவருக்கு நிறைய நண்பர்களைத் தேடித் தந்தது. அவர் பள்ளியில் நடக்கும் எல்லாப் பாடல் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசு பெறுவது என்பது சாதாரணமான ஒன்று. பள்ளி நாடகங்களையும் விட்டு வைக்கவில்லை பாலு.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles