Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBஒரு சமயம் திருப்பதியில் படிக்கும் போது, ஒரு பள்ளி நாடகத்தில் பெண் வேடம் ஏற்று நாயகியாக அற்புதமாக நடித்துப் பரிசும் வாங்கினார். அந்த நாடகம் மிகவும் சிறப்பாக இருந்தது. அதை வானொலியில் பதிவு செய்யலாம் என்று, நடித்த நண்பர்களுடனும் வாத்தியாருடனும் சென்னைக்கு வந்தார் பாலு. சென்னை மாநகர விஜயம் என்பது ஒரு பெரிய கனவாக இருந்த காலம் அது. நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆல் இந்தியா ரேடியோவிற்கு வந்து சேர்ந்த நாடகக்குழு ஆல் இந்தியா ரேடியோவிற்குள் நுழைவது அதுதான் முதல் தடவை. குளிர்சாதனம் செய்யப்பட்ட அந்தக் கட்டடம் ஏதோ தேவலோகத்தில் நுழைந்த உணர்வையே பாலுவிற்குக் கொடுத்தது.

காலை முழுவதும் ஒத்திகை. ரேடியோவிற்கு சரியில்லாத வார்த்தைகள் மாற்றப்பட்டு ஒத்திகை மீண்டும் மீண்டும் நடந்தது. சோர்வுற்றுப்போன நடிகர்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ அலுவலக காண்டீனில் உணவு வழங்கப்பட்டது நாடகத்தைப் பதிவு செய்யும் அதிகாரி வரும் வரை ஜாலியாக இருந்தது. பிரச்சனை அதிகாரி ரூபத்தில் உள்ளே நுழைந்தது. அங்கே அந்த அதிகாரி வந்ததும் நாடகத்தை ஒரு முறை ஒத்திகை பார்த்தார்கள். நாடகம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவருக்கு நாடகத்தில் பிடிக்காத அம்சம் ஒன்று இருந்தது அதுதான் பாலு. பாலு, பள்ளியில் நடித்த அதே பெண் வேடத்தில்தான் நடித்தார். அங்குதான் பிரச்சனை உருவாயிற்று. ரேடியோ நிலைய விதிகள் பிரகாரம், ஆண் ஓர் பெண் வேடத்தைத் தாங்கி நடிக்க இயலாது. அந்த அதிகாரி நாடகத்தை பதிவு செய்ய வேண்டுமானால் பாலு நடிக்கக்கூடாது என்று கூற, நாடகம் போட வந்த குழவிற்கும், அந்த அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது. ஆல்இந்தியா ரேடியோவின் இயக்குநர் அங்கு வந்து சேர்ந்தார். ஆல் இந்தியா ரேடியோவில் நடித்த நாடகத்தைப் பற்றி S.P.B. கூறுகிறார்.

"ரேடியோ ஸ்டேஷன் இயக்குநர் கேட்பதற்காக எங்கள் நாடகத்தை ஒருமுறை நடித்துக் காட்டினோம். நாடகத்தை ரிக்கார்டிங்கில் அமர்ந்து கவனமாகக் கேட்டார். அவருக்கு என்னுடைய பெண் குரல் மிகவும் நன்றாக இருப்பதாகத் தோன்றியது. எனக்காக முதன்முதலாக ஆல்இந்தியா ரேடியோவின் விதிகள் மாற்றப்பட்டு அதில் நாடகம் ஒலிப்பதிவாயிற்று." இதை பாலு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஆல் இந்தியா ரேடியோ நாடக வெற்றியும் ஒன்றே என்று கருதுகிறார்.

நெல்லூரில் வாழ்ந்து கொண்டிருந்தபோது A.I.R. லைட்மியூஸிக் போட்டியில் கலந்து கொள்ள, நண்பர்களின் வற்புறுத்தலால் பெயரைக் கொடுத்தார் பாலு. அவரைப் பாட விஜயவாடா வானொலி நிலையத்தினர் அழைத்தார்கள். அதுவரை மற்றவர்கள் பாடிய சினிமாப் பாடல்களை மட்டுமே பாடி வந்த பாலு புதிதாக தானே ஒரு பாடல் எழுதி அந்தப் பாடலுக்கு டியூன் போட்டு இசையமைத்து பாடிக் கொடுத்து விட்டு வந்தார். ஆல் இந்தியா வானொலி நிலையங்கள் நடத்திய அந்தப் போட்டியில் இரண்டாவதாக வந்தார். ஆல் இந்தியா ரேடியோ பரிசு வாங்க டெல்லிக்கு போகலாம் என்று ஆசைப்பட்ட போதுதான், இந்திய சீன யுத்தம் தொடங்கியது. நாடெங்கும், எமர்ஜென்ஸி கொண்டு வரப்பட்டது. அதனால், அந்தப் பரிசை ஆல் இந்தியா ரேடியோ இயக்குநரிடமிருந்து பாலு பெற்றார்.

டெல்லியை பார்க்க முடியாது போனதால் கொஞ்சம் வருத்தம். பிற்காலத்தில் பலமுறை டெல்லி சென்று பல தேசிய விருதுகளும் பெற்றிருக்கிறார் பாலு. ஒரு வேளை பிற்காலத்தில் டெல்லி சென்று தேசிய விருதுகளை வாங்கப் போகிறார் என்பதால்தான் அந்த முறை டெல்லிக்குப் போக முடியாமல் போயிற்றோ என்னவோ?

நகரி - சென்னைக்கும், திருப்பதிக்கும் இடையில் உள்ள ஒரு பெரிய கிராமம். பள்ளி நாட்களில் அங்குதான் வசித்து வந்தார். பாலுவின் குடும்பத்தினர் நகரியில் இருந்தபோது தான் பாலுவிற்கு ஒரு தங்கை பிறந்தார். ராதாபதி என்ற டீச்சர் ஒருவரிடம் பாலு டியூசன் படித்து வந்தார். பாலு 'ஃபோர்த்' பாரம் படிக்கும்போது அந்த டீச்சர் ராதாபதி, நகரியிலிருந்து, மாற்றலாகி காளஹஸ்திக்குச் சென்றுவிட்டார். பாலுவிற்கு அவருடைய பிரிவு மிகவும் வருத்தத்தைத் தந்தது. பாலுவின் தந்தை, பாலுவிற்காக தன் குடியிருப்பை நகரியிலிருந்து காளஹஸ்திக்கு மாற்றிக் கொண்டார். பாலுவின் டியூஷன் ராதாபதி வாத்தியாரிடமே தொடர்ந்தது. எஸ்.எஸ்.எல்.சி. வரை பாலு காளஹஸ்தியில் படித்தார். திருப்பதியிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ள காளஹஸ்தி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட ஊர். ஒரு மலையில் அம்மன் கோயிலும் மற்றொரு மலையில் சுப்பிரமணிய கோயிலும், ஊர் நடுவே சிவன் கோயிலும் உண்டு. பாலு சிறுவயதிலே மிகவும் ஒல்லியாகவும், குள்ளமாகவும் இருந்தார். பள்ளிப் படிப்பில் முதலாவது வருவதாலும், தன்னுடைய சங்கீத திறமையாலும் பாலு அப்போதே மாணவர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர். எப்போது நேரம் கிடைத்தாலும் சரி, உடனே கூச்சமில்லாமல் பாடக் கூடிய வழக்கத்தைக் கொண்டவர் பாலு. பள்ளியில் நடக்கும் பாட்டு, பேச்சுப்போட்டிகள் பாலு இல்லாமல் நடக்காது.

பாலுவின் தந்தை ஒரு கதாகாலட்சேப கலைஞர் என்று கூறியிருந்தோம் அல்லவா? காளஹஸ்திக்கு சுற்றி உள்ள ஊர்களில் கதாகாலட்சேபம் செய்யும் போதெல்லாம் அவருக்கு பின்னணியாக கடம் வாசிப்பது பாலுவின் வழக்கம்.

இப்படியே நடக்கக்கூடிய காரியங்களைச் செய்து வந்த போதிலும், சிறுவயதினருக்கேயுரிய விஷமங்கள் பாலுவிடம் நிறைய இருந்தன. முக்கியமானது பிடிவாதக் குணம். பாலு படித்து வந்த பள்ளியின் மாணவர்கள் பம்பாய்க்கு பிக்னிக் போக இருந்தார்கள். பாலு தானும் கலந்து கொள்வதாக பெயரைக் கொடுத்து விட்டார். பம்பாய் சென்று வர அப்போது எவ்வளவு பணம் தெரியுமா? முப்பது ரூபாய். அப்போதிருந்த நிலைமையில் முப்பது ரூபாய் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. பாலுவின் தாயார் பாலுவைக் கடிந்து கொண்டார்கள். பாலு பம்பாய்க்கு போக பிடிவாதமாக இருந்தார். பாலு சாப்பிட மறுத்தார். பாலுவின் தந்தைகோ தன் மகனின் ஆசையை நிறைவேற்ற ஆசை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles