Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPB

பாலுவின் ஆரம்ப கால வாழ்க்கை, நெல்லூர், நகரி.... என்று கிராமங்களைச் சுற்றியே பின்னியிருந்தது. நகரியில் மாமா வீட்டில் இருக்கும்போது மாமா மின்சார வாரியத்தில் வேலை பார்த்து வந்ததால், சினிமாத் தியேட்டரில் படம் பார்ப்பது இலவசம். ஆகையால் படங்களைத் தவணை முறையில் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருந்தது. படங்கள் பார்க்கும் வாய்ப்பு இருந்ததே தவிர, படத்தில் நடித்த நட்சத்திரங்களைக் காண வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போனது பாலுவிற்குக் குறையாக இருந்தது.

இந்தக் குறை விரைவில் நீங்கியது. மிஸ்ஸியம்மா என்ற தெலுங்குப் படத்தின் 100-ஆவது நாள் கொண்டாட்டம் நடைபெற்ற போது என்.டி.ஆர். மற்றும் ஏ.நாகேஸ்வரராவ் முதலியோர் கலந்து கொள்ளும் விழாவிற்கு பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மிஸ்ஸியம்மா ஓடிய தியேட்டர் உரிமையாளரின் வீடு பாலு குடியிருந்த தெருவில் இருந்ததால், விழாவிற்குச் செல்ல சுலபமாக அழைப்புக் கிடைத்தது. அங்கு என்.டி.ஆரிடம் ஆட்டோ கிராப் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே தியேட்டர் உரிமையாளர் வீட்டில் சென்று காத்திருக்க மிஸ்ஸியம்மாவில் நடித்த நட்சத்திரங்களைத் தாங்கிய கார்கள் அங்கே வந்தன.

அவருடைய அபிமான நட்சத்திரங்களை அருகில் பார்த்துத் திகைத்துப்போய் நின்றார். அவர் ஆசையும் நிறைவேறியது. வீட்டு வாசலில் நடிகர்களைப் பார்க்க ஏகக் கும்பல். அதைப் பார்த்தபோது கலைஞர்கள் மீது பொது மக்கள் வைத்திருந்த மதிப்பைக் கண்டு வியந்து போனார்.

ஒருவேளை இந்த நிகழ்ச்சியின் பாதிப்புதான் இவரை கலைத்துறைக்கு வரத்தூண்டியதோ என்னவோ?

ஒரு விஷயம் இன்றுகூட விழாக்களில் யாராவது ஆட்டோ கிராப் கேட்டால் மறுக்காமல் கையெழுத்து போடுவார் பாலு. அதுவும் சிறுவர்கள் வந்து கேட்டால்! நிச்சயம் மறுக்கவே மாட்டார்.

வெற்றி தோல்விகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சாதாரணமானவை. இவற்றைச் சந்திக்காத மனிதனே இருக்க முடியாது. ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் வெற்றி, தோல்வி வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பு ஏற்படுவதில்லை. பாலு படிப்பிற்காக காளஹஸ்திக்குக் குடிபெயர்ந்த பாலுவின் குடும்பத்தினர், பாலு பள்ளியிறுதி பரீட்சையை எழுதி முடித்தவுடன் மீண்டும் நெல்லூருக்கு குடிப்பெயர்ந்தனர்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் மறக்க முடியாத விடுமுறை என்பது பள்ளியிறுதி பரீட்சைக்குப் பின் கிடைக்கும் விடுமுறைதான் என்று கருதுகிறார் பாலு. காரணம், பள்ளியில் படிக்கும் மாணவன் அந்த விடுமுறை முடிந்தவுடன் கல்லூரி என்ற புதுவுலகிற்கு நுழையப் போகிறான். அதற்கு அடுத்தது வேலை, வாழ்க்கை என்கிற பிரமோஷன்தான்.

சாதாரணமாக பள்ளியிறுதிக்குப் பிறகு வரும் விடுமுறை மிகவும் நீண்டதாக அமையும். பெரும்பாலும் சாதாரணமாக பள்ளியிறுதி முடிக்கும் மாணவர்களின் மதிப்பு வீட்டிலும் உயர்வடையும். இந்த அனுபவங்கள் எல்லாம் பாலுவிற்கும் கிடைத்தன. பரீட்சை முடிவு நெருங்கும் நாட்களில் சாதாரணமாக மாணவர்களுக்கு வரும் பயம்கூட, பாலுவிற்கு வரவில்லை. பரீட்சை முடிவுகள் வந்தன. பாலுவின் நம்பர் பேப்பரில் வரவில்லை. இது பெரிய அதிர்ச்சியாயிருந்தது. குடும்பத்தினர் அனைவரும் இடிந்துபோய் விட்டார்கள். பாலுவிற்கு தான் பெயிலாகி இருப்போம் என்பதை நம்பவே முடியவில்லை. பாலு தன் மாமாவுடன் நேரே காளஹஸ்திக்குப் போனார். ஸ்கூலுக்குள் நுழையவே பாலுவிற்கு வெட்கமாயிருந்தது. தனக்குத் தெரிந்தவர்கள் தன்னைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஒரு பிரமை.

பயத்தோடு ஹெட்மாஸ்டர் ரூமிற்குள் நுழைந்தார் பாலு. ஹெட்மாஸ்டர் மலர்ந்த முகத்தோடு பாலுவை வரவேற்று பாலுவின் கைகளில் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தைக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த பாலு பரீட்சையில் பாஸ் செய்திருந்தார். பாலுவிற்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. ஹெட்மாஸ்டரிடம் "ஏன் சார் என் நம்பரே பேப்பரில் வரலே?" என்று கேட்க அதற்கு ஹெட்மாஸ்டர், "பாலு, உனக்கு எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதும்போது 15 வயது முடியலை. அதனால்தான் உன் நம்பர் பேப்பரில் வரலை. அது மட்டுமில்லை ஸ்கூல்லே பாலுதான் செகண்ட்" என்று கூறி வாழ்த்தினார்.

பி.யூ.சி. படிக்க திருப்பதி ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்த பாலுவிற்கு ஹாஸ்டல் வாழ்க்கை பிடிக்கவில்லை. அதனால் பாலுவின் தந்தை இரண்டு மூன்று நண்பர்களுடன் தங்கும் வகையில் ஒரு வீட்டை எடுத்துக் கொடுத்தார். இருந்தாலும் வீட்டு ஞாபகம் அடிக்கடி வரும். இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால்கூட உடனே பாலு நெல்லூருக்கு ஓடி விடுவார். தனியாக நண்பர்களுடன் வசித்த அனுபவம்தான், பிற்காலத்தில் பாலு சினிமாவில் நுழைந்து பிரபலமாகும் வரை தனியாகத் தங்க உபயோகமாக இருந்தது. வெங்கடேஸ்வரா யூனிவர்சிட்டியில் நிறைய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

எஸ்.எஸ்.எல்.சியில் கைகொடுத்த அதிர்ஷ்டம், பி.யூ.சியில் பாலுவிற்கு கைகொடுக்கவில்லை. ஒரு சாதாரண பாடமான ஹியூமன் அச்சீவ்மெண்ட்டில் ஃபெயிலாகிவிட்டார். மற்ற எல்லா பாடங்களிலும், நல்ல மார்க்குகள் வாங்கியிருந்தார் பாலு. ஃபெயிலான பி.யூ.சி. யைப் பாஸ் பண்ண மெட்ராஸ் மண்ணில் காலெடுத்து வைத்தார் பாலு. ஜெயந்தி டுடோ ரியல் காலேஜில் சேர்ந்து சென்னையில் தங்கிப் படித்து நல்ல மார்க்குகளைப் பெற்று பாஸ் செய்தார் பாலு.

பாலுவிற்கு தான் ஓர் இன்ஜினியராக வேண்டும் என்பது வாழ்க்கையின் இலட்சியம். பி.யூ.சியில் இரண்டாவது முறை பரீட்சை எழுதி பாஸ் செய்த மாணவனுக்கு சீட் கிடைப்பது அவ்வளவு சுலபமில்லை. கடைசியில் அனந்தபூர் கல்லூரியில் இடம் கிடைத்தது. நெல்லூரிலிருந்து பெருந்தொலைவில் இருந்தது அனந்தபூர். வீட்டைவிட்டு இவ்வளவு தூரம் செல்லுவது இதுதான் முதல் தடவை என்றாலும் தன் குடும்பத்தினரைப் பிரிந்து செல்ல சிறிதும் மனமில்லாமல் அனந்தபூருக்குக் கிளம்பினார் பாலு.

அனந்தபூர் கல்லூரியில் 'ராக்கிங்' உண்டு என்பது பாலுவிற்குத் தெரியும். ஆனால் பாலு மட்டுமே ராக்கிங்கிலிருந்து, தன்னுடைய பாடும் திறமையை வைத்துக் கொண்டு சீனியர் மாணவர்களிடமிருந்து தப்பினார்.

இரண்டு ஆண்டுகள் சுமாராகப் படித்து காலத்தைத் தள்ளினார் பாலு. அனந்தபூர் தாலூக்கா மிகவும் வறட்சியான பகுதி. தண்ணீர்ப் பஞ்சம் என்பது வருடம் முழுவதும் இருக்கும். பாலுவிற்கு அனந்தபூர் வாழ்க்கை பிடிக்காததால் அடிக்கடி உடல்நலம் கெடும். பாலு தன்னுடைய இரண்டாவது வருடப் பரீட்சை எழுத வேண்டிய காலம் வந்தது. தன்னால் பரீட்சை எழுத முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே, ஊருக்கு திரும்ப முடிவு செய்தார் பாலு.

தனியாகத் திரும்பிச் சென்றால் வரவேற்பு நன்றாக இருக்காது என்பது பாலுவிற்குத் தெரியும். தன்னுடன் சூரியநாராயணன் என்ற நண்பரை அழைத்துக் கொண்டு திரும்ப நெல்லூருக்கு வந்துவிட்டார் பாலு. பாலுவின் தாயார் மட்டும் பாலு திரும்பி வந்ததை விரும்பவில்லை. உடன் வந்த சூரிநாராயணன் பாலுவின் உடல்நிலையைப் பற்றி மிகைப்படுத்திக் கூறி, பாலுவின் பெற்றோரைப் பயமுறுத்தி விட்டு திரும்பச் சென்றுவிட்டான்.

பாலுவின் தந்தை, வாழ்க்கையில் ஒருவர் சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்பவர். பாலுவை டாக்டரிடம் அழைத்துச் சென்று உடலைத் தேற்றினார். கல்லூரி திறக்கும் காலம் வந்தபோது பாலு மீண்டும் அனந்தபூர் செல்ல மறுத்துவிட்டார். இரண்டு வருடப் படிப்பு வீணானது. தன்னுடைய படிப்பை மேற்கொண்டு சென்னையில் தொடர முடிவு செய்து நெல்லூரிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்.

சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. ஏ.எம்.ஐ.ஈ என்ற கோர்ஸில் சேர்ந்தார். சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆசை அலை மட்டும் உள்ளத்தில் இருந்தது.

சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய ரூம்மேட்டாக இருந்த முரளியை அழைத்துக்கொண்டு சைக்கிளில் இசையமைப்பாளர் வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தார். முதலில் இசையமைப்பாளர் கலைமாமணி இராஜேஸ்வர ராவ் வீட்டிற்குச் சென்றார்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles