Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBஇசையமைப்பாளர் இராஜேஸ்வரராவ் ஏற்கெனவே பாலுவின் பாடலை நெல்லூரில் கேட்டு ரசித்தவர். ஆகையால் பாலுவிற்கு வரவேற்பு பலமாயிருந்தது. இராஜேஸ்வரராவ் பாலுவுக்கு ஊக்கம் தரும் பல வார்த்தைகளைக் கூறினார். அவரைப் போலவே மாஸ்டர் வேணு என்ற மற்றோர் இசையமைப்பாளரைச் சந்தித்தபோது, பாலு பாடிய இந்திப் பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்டார். சில பாடல்களை பாடும்போது ஏதாவது தவறுகள் இருந்தால் அதைத் திருத்தி பாலுவிற்கு வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்.

சென்ற இடங்களிலெல்லாம் இப்படி உற்சாகமான வரவேற்புக் கிடைத்ததே பாலுவிற்கு மிகவும் தெம்பைத் தந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கோதண்டபாணி என்ற இசையமைப்பாளரைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு பாலுவின் வாழ்க்கையில் கிடைத்தது. அவர்தான் பாலுவின் குரல் வளத்தின் மீது அசையாத நம்பிக்கை வைத்து பல இசையமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நல்லவர் கோதண்டபாணி பாலுவின் மூத்த சகோதரர் ஸ்தானத்திலிருந்து எஸ்.பி.பிக்கு உதவ வந்தார். சில நாட்களில் சற்று சாதாரண சட்டையோடு பாலுவைப் பார்த்தால், உடனே கடைக்கு அழைத்துச் சென்று புதிய சட்டைகள் வாங்கித் தருவது முதல், கோதண்டபாணி இசையமைக்கும் படங்களில் தமக்கு உதவியாளராக பாலுவைப் பணியாற்ற வைத்து அதற்கு சம்பளமும் வாங்கிக் கொடுத்து வந்தார் கோதண்டபாணி. பாலுவின் காட்ஃபாதராக கோதண்டபாணி திகழ்ந்து வந்தார் என்றே சொல்லலாம்.

சென்னையில் படிக்கும்போது தியாகராயர் கல்லூரியில் ஒரு மெல்லிசைப் போட்டிக்கு தான் படித்து வந்த கல்லூரியின் சார்பில் பாட பாலு சென்றார். அங்குதான் முதன் முதலில் பரணியைச் சந்தித்தார்.

பரணி என்ற இளைஞர் ஒரு திறமையான டிசைனர். பரணியின் கைவண்ணத்தில் அந்தக் காலத்தில் ஸ்ரீதரின் சித்ராலயாவின் படங்களுக்கு அற்புதமான பல விளம்பர டிசைன்களை வரைந்து வந்தவர். அவர் போஸ்டரைப் பார்த்தே படம் ஓடிய காலம் அது. அவருடைய கலைத்திறனை நன்கு அறிந்தவர் பாலு. பரணியே தன்னை வந்து பாராட்டியது பாலுவிற்குப் பெரிய மகிழ்ச்சியாயிருந்தது. பரணி, பாலுவை சித்ராலயா ஸ்ரீதரிடம் அறிமுகப்படுத்துவதாகக் கூறி விடைபெற்றார்.

மறுநாள் பரணி ஸ்டுடியோவில் நடைபெற்ற ஸ்ரீதரின் படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றார். இரவு மணி எட்டு இருக்கும். இவர்கள் சென்ற போதுதான் ஸ்ரீதர் ஷூட்டிங்கை முடித்திருந்தார். நடிகர்களும், டெக்னீஷியன்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர். வெளியே ஒரு புல்வெளியில் ஸ்ரீதர் பாலுவைப் பாடச் சொல்ல, பாலுவும் வழக்கம்போல ஒரு பிரபலமான படப்பாடலைப் பாடினார். அனைவரும் சுற்றி நின்று கேட்டு ரசித்தனர். பாடல் முடிந்ததும் பாலுவைப் பாராட்டும் விதத்தில் கைதட்டினார்கள். அந்தக் கூட்டத்தில் மேஜர் சுந்தர்ராஜன், திருமதி கே.ஆர். விஜயா ஆகியோர் இருந்தார்கள். ஸ்ரீதர், பாலுவை சித்ராலயா அலுவலகத்தில் வந்து எம்.எஸ்.வியைச் சந்திக்கச் சொன்னார். மேஜர், பாலுவின் கையைக் குலுக்கி, பாராட்டு தெரிவித்தார். திருமதி கே.ஆர். விஜயா, பாலுவின் பாடலை ரசித்தற்கு அடையாளமாகத் தன் புன்னகையால் பாராட்டு தெரிவித்தார்.

பரணி, ஸ்ரீதர் கூறிய மாதிரி பாலுவை அழைத்துக் கொண்டு ஸ்ரீதரின் அலுவலகத்துக்கு சென்றபோது அங்கு மெல்லிசை மன்னர் தன்னுடைய மிகப்பெரிய வாத்யக் குழுவுடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார். பாலுவுக்கு ஐம்பது பேர் கொண்ட வாத்திய குழவைப் பார்த்தவுடன் பெரும் பிரமிப்பு ஏற்பட்டது. அதற்கு முன்பே 10 தெலுங்குப் பாடல்கள் பாடியிருந்த போதிலும், ஒரு பாடலுக்கு இவ்வளவு பெரிய வாத்தியக் குழுவை பார்த்ததேயில்லை. அவர்கள் ஒத்திகை முடிந்ததும் இயக்குநர் ஸ்ரீதர், பாலுவை ஆர்மோனியப் பெட்டி முன்பு அமர்ந்து, பாலுவைப் பாடச் சொல்ல பாலுவும் ஓர் இந்திப் பாடலைப் பாடினார். எம்.எஸ்.வி. ஆர்மோனியம் வாசிக்க பக்கத்தில் இருந்தவர்கள், இசையை எழுப்ப, ஒரு ரெகுலர் கச்சேரிப் பாடல் மாதிரி பாடி முடித்தார் பாலு.

மெல்லிசை மன்னர் பாலுவிடம், "ஒரு தமிழ்ப் பாட்டு பாட முடியுமா?" என்று கேட்க, பாலு தன்னிடம் தமிழ்ப்பாட்டுப் புத்தகம் எதுவும் இல்லை என்றார். உடனே ஸ்ரீதர் சித்ராலயா ஆபிசிலிருந்து 'காதலிக்க நேரமில்லை' பாட்டுப் புத்தகத்தை எடுத்து வரச்சொல்லி அதில்வரும் 'நாளாம் நாளாம் திருநாளாம்' பாடலைப் பாலுவை தெலுங்கில் எழுதிக் கொண்டு பாடச் சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை, பாலு பாடல்களை எந்த மொழியில் பாடினாலும் தெலுங்கில் எழுதிக் கொண்டு பாடுவது வழக்கம். அதே போல அந்தப் பாடலை, தெலுங்கில் எழுதிக் கொண்டு பாட, மெல்லிசை மன்னரின் வாத்யக்குழு இசை எழுப்ப ஒரு மினி கச்சேரியே நடத்திவிட்டார் பாலு. மெல்லிசை மன்னருக்கு, பாலுவின் குரல்வளம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவரின் தமிழ் வளம் மட்டும் சற்று கவலை தந்தது. இருந்தபோதிலும் பாலுவை நன்கு தமிழை கற்றுக் கொண்டு தம்மை வந்து பார்க்கச் சொன்னார். மெல்லிசை மன்னர் தன் குரல்வளத்தை, பாராட்டியதே பாலுவிற்குப் பெருமையாக இருந்தது.

பாலு மீண்டும் எம்.எஸ்.வி.யைச் சந்திக்க இடையில் 365 நாட்கள் ஆனது. அந்தக் காலக் கட்டத்தில் பாலு தெலுங்குப் பாடல்கள் சில பாடினார். கோதண்டபாணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். மேடையில் அனில்ருத்ரா என்ற இசையமைப்பாளருக்காக தமிழ், இந்தி, தெலுங்குப் பாடல்களை மெல்லிசைக் குழுக்களுடன் பாடிக் கொண்டிருந்தார். ஒரு வருஷத்திற்குப் பிறகு மெல்லிசை மன்னரைச் சந்தித்ததுதான், ஒரு தமிழ்ப் பட வாய்ப்பை வாங்கித் தந்தது. அந்த சந்திப்பு எப்படி நடந்தது என்பதே ஒரு சுவாரசியமான விஷயம்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles