Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBமெல்லிசை மன்னரைச் சந்தித்த ஒரு வருடத்திற்குப் பின் அவரை மீண்டும் பாலு எங்கே சந்தித்தார் தெரியுமா? அது ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் நடந்த சந்திப்பு. ஒரு தெலுங்கு பாடலை பாடிவிட்டு பாலு வெளியே வர, அதே ரொக்கார்டிங் தியோட்டரில் ஒரு பாடல் பதிவிற்காக மெல்லிசை மன்னர் உள்ளே நுழைந்தார். பாலு அவரைப் பார்த்து 'விஷ்' செய்ய தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டார் எம்.எஸ்.வி.

தன்னை எம்.எஸ்.வி. மறந்து விட்டார் என்று பாலு நினைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டு விட்டார். உள்ளே சென்ற மெல்லிசை மன்னர் திரும்பி வந்து பாலுவை கூப்பிட்டார். "தம்பி, நீதானே அன்னிக்கு ஸ்ரீதர் ஆபிசிலே என்னைப் பார்த்தே" என்றார்.

"ஆமாங்க" என்றார் பாலு.

"அதுக்கு அப்புறம் ஏன் என்னை வந்து பார்க்கலே" என்றார் எம்.எஸ்.வி.

"நீங்கதான் என் தமிழை இம்ப்ரூவ் பண்ணச் சொன்னீங்களே, அதுதான் உங்களை வந்து பார்க்கலை".

"இப்ப உங்க தமிழ் நல்லாத்தானே இருக்கு? நீங்க நாளைக்கே என்னை வந்து பாருங்க" என்று கூறிய எம்.எஸ்.வி. தன் உதவியாளர் நாராயணனைக் கூப்பிட்டார்.

"நாராயணா, இந்தப் பையனை நாளைக்கு கம்போசிங் வரச்சொல்லு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

மறுநாள் 'ஹோட்டல் ரம்பா' என்ற படத்திற்காக கம்போஸிங் நடந்தது. பாலுவும் எல்.ஆர். ஈஸ்வரியும் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு நாட்கள் கம்போஸிங் நடந்தது. அடுத்த நாள் ரெக்கார்டிங். அது ஒரு ஜாலி டைப் பாடல். பாடல் நன்றாக வந்திருப்பதாக எல்லாரும் கூறினார்கள். ஆனால் பாலு முதலில் பாடிய படம் இதுவரை வெளியாகவில்லை. இதுபற்றி பாலுவிடம் கேட்டால், "என்னுடைய முதல் தமிழ் பாடல் இதுவரை ஏனோ வெளியாகவில்லை என்பது வருத்தம்தான். ஆனால் முதல் கோணல் முற்றும் கோணல் என்ற பழமொழி பொய்யானது குறித்து மகிழ்ச்சி. இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் கூட தன்னுடைய முதல் ரெக்கார்டிங் போது பவர்கட் ஆனது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார். பவர்கட் ஆனது கெட்ட சகுனமாக அவருக்கு அமையவில்லை. அதே மாதிரி, என் முதல் பாடலும் வெளியாகாமல் போனது எனக்கும் கெட்ட சகுனமாக அமையவில்லை" என்கிறார். வாழ்க்கையில் எல்லாவற்றையும் லைட்டாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பாலுவிற்கு என்றுமே உண்டு.

அடுத்து பாலு, மெல்லிசை மன்னரின் இசையில் 'சாந்தி நிலையம்' படத்திற்காக 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற பாடலை திருமதி பி. சுசிலாவுடன் இணைந்து பாடினார். இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன்னரே 'ஆயிரம் நிலவே வா' பாடல் வெளியாகி எஸ்.பி.பி என்ற பெயர் 'பாப்புலர்' ஆகிவிட்டது. இதற்கிடையில் 15 படங்களில் எல்லா முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடிவிட்டார் பாலு.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகிவிட்ட பாலு சொந்தமாக ஓர் இசைக்குழு நடத்த ஆரம்பித்தார். அவரது இசைக் குழுவில் ஆர்மோனியம் வாசித்தது இன்றைய இசைஞானி இளையராஜா அவர்கள் அன்று அவருடைய பெயர் 'ராஜா' தான். கங்கை அமரன் கிட்டார் வாசிக்க, அவரது சகோதரர் பாஸ்கர்.... என்று அவரது குடும்பமே எஸ்.பி.பி.யுடன் இணைந்து பணியாற்றி வந்தது. சினிமா உலகில் பாப்புலர் ஆன பின்பு எஸ்.பி.பி. க்கு நிறையக் கச்சேரிகள் கிடைத்தன. அவர் பாடிய பாடல்கள் மட்டும் இல்லாமல் மற்ற பின்னணி பாடகர்களின் பாடல்களையும் எஸ்.பி.பி. மேடையிலே பாடிவந்தார். டி.எம்.எஸ். குரலுக்கு மட்டும் பாலுவின் நண்பர் 'பாபு வாசு' என்பவர் பாடினார். அசல் டி.எம்.எஸ். மாதிரியே பாடக்கூடிய குரல்வளம் பெற்றவர் வாசு. பாலு புகழேணியின் உச்சிக்குச் சென்ற காலகட்டத்தில் ஒரு சமயம், ஒரு கார் விபத்தினால் வாசு பாடுவதை விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. மேலும் பாலுவின் நல்ல நண்பர்களில் ஒருவராக வாசு திகழ்ந்தார்.

தமிழ்ப்பட உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட பாலுவிற்கு ஒரு சோதனைக் காலமும் வந்தது, மற்றொரு திறமையான பாடகராலேயே. ஆனால், பாலுவின் கண்ணோட்டத்தில் அந்தப் பாடகர்தான் பாலுவுக்கு மிகவும் பிடித்த பாடகர். பாலுவிற்கு தமிழில் பாடல்கள் குறையக் காரணமாக இருந்த பாடகர் யார் தெரியுமா? எந்தப் பாடல் மூலம் இந்த நிலை உருவாயிற்று தெரியுமா? பாடலைச் சொன்னால் பாடகர் யார் என்று உங்களுக்கே தெரிந்துவிடும். பாலுவிற்கு ஒரு சவாலாக அமைந்த அந்தப்பாடல் எது என்கிறீர்களா?

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles