Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPB'அவள் ஒரு தொடர்கதை' தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். அதில் 'தெய்வம் தந்த வீடு' என்ற அற்புதமான ஒரு பாடலை பாடியிருந்தார் திரு. கே.ஜே. ஜேசுதாஸ். பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த அப் பாடலின் இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

ஜேசுதாஸின் குரலில் தமிழ்நாடு மயங்கியது. அதுவரை தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என்று எல்லாருக்கும் பின்னணி பாடி வந்த எஸ்.பி.பி. திடீரென்று மறக்கப்பட்டார். அந்த இடத்தை ஜேசுதாஸ் பிடித்துக் கொண்டார். சினிமா உலகில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், இதுபோன்ற மோசமான நிலை உருவாகும் என்று பாலு எதிர்பார்க்கவில்லை.

அந்த நிலையிலும் பாலுவின் மனத்தில் ஒரு பெரிய திருப்தி. தன்னைவிட எல்லா விதத்திலும் சிறந்த பாடகர் ஒருவர்தான் தன் இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பதுதான் அது. அன்றும் சரி, இன்றும் சரி, மேடையிலும் தனிப்பட்ட முறையிலும் தனக்கு மிகவும் பிடித்த பாடகர் ஜேசுதாஸ் என்பதை, தாமே ஒப்புக் கொண்டிருக்கிறார் எஸ்.பி.பி.

தமிழ் கைவிட்டபோது பாலுவிற்கு, தாய்மொழியான தெலுங்கு கைகொடுத்தது. தெலுங்கில் பல கதாநாயகர்களுக்கும் பாட ஆரம்பித்தார். முக்கியமாக பாலுவின் குரல் நடிகர் கிருஷ்ணாவுக்கு ஒத்துப்போக, அவருக்கு முழுக்க முழுக்க பாலுதான் பாடுவார் என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால் பாலுவின் குரல் ஆந்திராவின் அன்றைய முன்னணி கதாநாயகர்களான என்.டி.ராமாராவ், ஏ. நாகேஸ்வரராவிற்கு அவ்வளவாக ஒத்துவரவில்லை. எனவே, அங்கும் பாலுவிற்கு சோதனைக் காலம் வந்தது. பாலுவிற்கு முன்பு 30 ஆண்டுகள் கண்டசாலா என்ற ஒரு புயல் ஆந்திராவில் வீசிக் கொண்டிருந்தது. கண்டசாலா இல்லாமல், தெலுங்குப் படத்தின் இசையைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட ரசிகர்களால் முடியாத நிலை. குறிப்பாக தமிழில் எப்படி சிவாஜி, எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் அழகாகப் பொருந்தியதோ அதைப் போல, கண்டசாலாவின் குரல் என்.டி.ஆர். ஏ. நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு மிக அற்புதமாகப் பொருந்தி வந்தது. இதனால்தான் ஏதாவது ஒரு பாடலை பாலு அவர்கள் யாருக்காவது பாடினால், அது பொதுவாக வரவேற்கப்படாமல் இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் கண்டசாலா பாடுவதைக் குறைத்துக் கொண்டார். அப்போது பாலுவிற்கு அங்கு ஒரு புதிய பிரச்சனை உருவாயிற்று. ராமகிருஷ்ணன் என்ற ஓர் இளைஞன், திருமதி பி.சுசிலாவின் சொந்தக்காரர். கண்டசாலா மாதிரியே பாடக்கூடிய திறமை படைத்த அந்த இளைஞன் தெலுங்குப் படஉலகில் நுழைந்தான். அவன் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் ஏறத்தாழ கண்டசாலா பாடுவது போலவே இருக்கும். கண்டசாலாவின் குரலை மறக்க முடியாத ஆந்திரப் பட உலக ரசிகர்கள், இராமகிருஷ்ணனின் கண்டசாலாவின் குரலைக் கேட்டு ஆனந்தம் அடைந்தனர். என்.டி.ஆர். போன்ற முன்னணி கதாநாயகர்கள் சிபாரிசு செய்ய, இராமகிருஷ்ணனின் கொடி உயரப் பறக்க ஆரம்பித்தது.

ஆனால் எஸ்.பி.பி.க்கு என்று சில பாடல்கள் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. என்.டி.ஆர்., ஏ. நாகேஸ்வரராவ் போன்றவர்கள் நடிக்கும் படத்தில் எஸ்.பி.பி. காமெடி நடிகர்களுக்கு, மற்ற பாடல்களையும் பாடி வந்தார். அதே நேரத்தில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணாவிற்கு எல்லா முக்கிய பாடல்களையும் பாடி வந்தார்.

ஒருநாள் கிருஷ்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. பாலு அவரைச் சந்தித்தார். "உங்க குரல் எனக்கு மிக அழகாக பொருந்துகிறது. நான் நடிக்கும் படங்களில் என் பாடல்களை நீங்கள்தான் பாடப் போகிறீர்கள். அதே நேரத்தில் உங்கள் பாடல்கள் மற்றவர்கள் படத்தில் ஒலிக்கக் கூடாது என்று நான் கூறமுடியாது. ஆனால் என்னைப் போல ஒரு ஹீரோவுக்கு எல்லாப் பாடல்களையும் பாடும் நீங்கள்... மற்ற படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்குப் பாடினால் அது என் இமேஜை பாதிக்கக் கூடும்.

ஏனென்றால் நகைச்சுவை நடிகர்களுக்குப் பாடும் பாடல்கள் கேலியானவை. சிரிக்க வைக்கக் கூடியவை. அவர்களுக்குப் பாடிவிட்டு அதே குரலில் எனக்கு ஒரு தத்துவப் பாடலைப் பாடினால் அதற்குக் கிடைக்கக்கூடிய வரவேற்பு ஒரு மாற்றுக் குறைவாகவே அமையலாம். ஆகையால் எனக்குச் சாதகமாக, அதே சமயத்தில் உங்களைப் பாதிக்காத ஒரு முடிவை எடுங்கள்" என்றார் கிருஷ்ணா.

இந்த வார்த்தைகள் இன்றளவும் பாலுவின் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. அன்று என்.டி.ஆர்., ஏ. நாகேஸ்வரராவ் ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருந்து கொண்டிருந்த நாயகர்களில் ஒருவர் கிருஷ்ணா. அவர் நினைத்திருந்தால், பாலுவிடம் பேசாமல் வேறு ஒரு குரலைச் சிபாரிசு செய்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் செய்யாமல், பாலுவின் நிலைமையைப் புரிந்து கொண்டு, அவர் மனத்தையும் நோகடிக்காமல், பாலுவிற்குத் தேவையான உற்சாகத்தையூட்டி ஒரு புதிய தெம்பைக் கொடுத்தார்.

கிருஷ்ணா கொடுத்த டானிக் பாலுவிற்கு ஒரு புதிய தெம்பை அளித்தது. தானும் என்.டி.ஆர். ஏ.என்.ஆர். போன்ற முன்னணிணக் கதாநாயகர்களுக்கு மட்டுமே இனி பாட வேண்டும் என்று ஒரு சபதம் செய்து கொண்டார். தான் செய்த சபதத்தை நிறைவேற்ற பாலு என்ன செய்தார் தெரியுமா?

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles