Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

SPBதமிழ்ப் படங்களில் பாடும் வாய்ப்பு ஓராண்டு இடைவெளிக்குப் பிறகுதான் வந்தது. அதுவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை ஒரு ஸ்டூடியோவில் சந்திக்க நேர்ந்தபொழுது எம்.எஸ்.வி., பாலுவிடம் 'என்ன பாலு, ரொம்ப நாளா பாடலையே?' என்று கேட்க, 'ஆமாம் சார். பாடி ஒரு வருஷம் ஆச்சு' என்று பாலு பதிலளிக்க, 'நிஜமாகவா?' என்று ஆச்சரியத்தோடு மெல்லிசை மன்னர் கேட்க, அதே வாரத்தில் மீண்டும் தமிழ்ப் பாடலைப் பாடும் வாய்ப்பு பாலுவிற்குக் கிடைத்தது. பாலு எனும் இசைப் புயல் அன்றுமுதல் தமிழ்ப் படஉலகை ஆக்ரமித்துக் கொண்டது.

பாலுவின் வாழ்வில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்கள் எண்ணற்றவை, அவை அத்தனையும் எண்ண எண்ண இதமானவை இனிமையானவை.

பாலு சென்னைக்கு வந்து பாட ஆரம்பித்து ஓரளவு பிரபலமான பிறகு, அவர் வாங்கிய சொந்த வாகனம் எது தெரியுமா? அது ஒரு லேம்பிரட்டா ஸ்கூட்டர்தான். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான அந்த ஸ்கூட்டரை 2300 ரூபாய்க்கு ஆர்ட் டைரக்டர் பரணியிடமிருந்து வாங்கி, தவணை முறையில்தான் பணத்தைக் கொடுத்தார். அந்த ஸ்கூட்டர் மீது பாலுவிற்குக் காதல் வர ஒரு விபத்துதான் காரணம்.

பாலுவும், ஆர்ட் டைரக்டர் பரணியும் ஒருநாள் பிற்பகல் கோடம்பாக்கத்திலிருந்து பாரிமுனைக்குச் சென்றார்கள். போகும்போது புதிதாக வண்டி ஓட்டக் கற்றுக் கொண்ட பாலு பத்திரமாக ஓட்டிச் சென்றார். திரும்பும்போது நெரிசல் நிறைய இருக்கும் என்று கூறி, பரணி வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். பாரிமுனையில் திரும்பும்போது ஒரு சைக்கிள் ஸ்கூட்டரில் மோதி, இருவரும் ரோட்டில் விழ, அதே நேரத்தில் ஒரு பஸ் வர, ஒரு பெரிய விபத்து நடக்கவிருந்தது. அந்த பஸ்ஸின் டிரைவர் திறமையாகச் செயல்பட்டதால் அந்த விபத்து தடுக்கப்பட்டது. அந்த விபத்து மட்டும் நடந்திருந்தால் திரையுலகம் இரண்டு கலைஞர்களை அன்றே இழந்திருக்கும்.

அடி பலமாகப் படவில்லை என்றாலும் பாலுவிற்கு வலக்கையில் வலி அதிகமாயிருந்தது. ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு, டாக்ஸியில் ஸ்டான்லி மருத்துவ மனைக்குச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. பெரிய மாவுக் கட்டுடன் வீட்டிற்குத் திரும்பினார். இரவு முழுவதும் கை வலி குறையவில்லை. மறுநாள் காலையில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று மறுபடியும் ஒர் எக்ஸ்ரே எடுக்க வேண்டியதாகிவிட்டது. கை மணிக்கட்டிலும் எலும்பு முறிவு இருப்பது தெரிய வந்தது. மீண்டும் ஒரு மாவுக்கட்டோ டு வீட்டிற்கு வந்தார் பாலு. இப்படி இருமுறை கட்டுப்போட வைத்த அந்த ஸ்கூட்டர் மீது பாலுவிற்குக் காதல் ஏற்பட்டு, அதையே வாங்கினார். வாழ்க்கையில் தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய முதல் வாகனம் அதுதான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாலுவிடமிருந்து அந்த ஸ்கூட்டரை 'சரஸ்வதி ஸ்டோ ர்ஸ்' கண்ணன் தன் தம்பிக்கு வாங்கிக் கொடுத்தார். இப்பொழுதுகூட அந்த வண்டியை எங்காவது பார்க்க நேர்ந்தால், பாலு கடந்த கால நினைவுகளில் மூழ்கிவிடுவதுண்டு.

இதுபோல் மறக்க முடியாத இன்னொரு விபத்தும் உண்டு. பாலுவிற்கு பொள்ளாச்சியில் ஒரு கச்சேரி. அந்தக் கச்சேரிக்கு மறுநாள், இளையராஜா இசை சம்பந்தமான ஒரு தேர்வுக்கு லண்டன் செல்லவிருந்தார். எனவே தன் காரை டிரைவர் மூலமாக பொள்ளாச்சிக்கு எடுத்துவரச் சொன்னார். சக்சேரி முடிந்து இரவு சென்னைக்குக் கிளம்பினார்கள். காரில் பாலு, ராஜா, கங்கை அமரன் மற்றம் இரண்டு இசைக்குழுவைச் சேர்ந்தவர்களுடன் பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்குக் கிளம்பினார்கள்.

பாலு வண்டியை ஓட்டினார். காலை சுமார் ஐந்து மணிக்கு வேலூருக்கு வந்து சேர்ந்தார்கள். டிபன் சாப்பிட்டுவிட்டு, புறப்படும் போது வண்டியை டிரைவரிடம் கொடுத்துவிட்டு, பாலு சற்று ஓய்வெடுத்துக் கொண்டார். வேலூருக்கு வெளியே ஓர் ஆறு இருக்கிறது. அதை நெருங்கும்போது ஒரு சிறுவன் குறுக்கே ஓட, அவன் மீது கார் மோதிவிடாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் காரைத் திருப்ப, தந்திக் கம்பத்தில் மோதி... வண்டி ஆற்றில் இறங்கி நாலைந்து முறை உருண்டு நின்றது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles