Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

பாலு சினிமாவில் பாட ஆரம்பித்த காலத்தில்தான் பாரதிராஜாவைச் சந்தித்தார். இளையராஜாவை பாலுவிற்கு தெரியும். அந்தக் காலக்கட்டத்தில் பாரதிராஜாவின் அறிமுகம் பாலுவிற்குக் கிடைத்தது. பாலு வெளியூர் கச்சேரிகளுக்குப் போகும்போது பாரதிராஜா ஓய்வாக இருந்தால், அவருடன் செல்வது வழக்கம். காரில் பாலு சென்றால், முன் சீட்டில் அவர் பக்கத்தில் அமர்ந்து, பாலுவிடம் தனது எதிர்கால சினிமா உலகக் கனவுகளைக் கூறுவது பாரதிராஜாவின் வழக்கம். தான் சினிமா உலகில் சாதனை புரிய வேண்டும் என்ற வெறி அந்தக் காலத்திலேயே பாரதிராஜாவின் உள்ளத்தில் ஒரு தீயாக எரிந்து கொண்டிருந்தது.

ஒரு சமயம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாலுவின் கச்சேரி நடைபெற்றது. பாலுவுடன் பாரதிராஜாவும் சென்றிருந்தார். பாரதிராஜா பாலுவின் அறையில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போது, ஒரு ஜடத்தைக் கூட தன்னால் நடிக்க வைக்க முடியும் என்று பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தபோதுதான், அந்த விபரீத யோசனை பாலுவுக்குத் தோன்றியது. பாரதிராஜாவிடம் "உனக்கு நடிக்கச் சொல்லித்தரமுடியும் என்ற நம்பிக்கை இருக்கு. அதையும் 'டெஸ்ட்' பண்ணிப் பார்த்து விடுவோம். நானும் நீயும் இப்பொழுது ஒரு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அந்தச் சண்டை உண்மையானதாக மற்றவர்களுக்கு தோற்றமளிக்க வேண்டும். அபபடி நம் குழுவில் இருப்பவர்கள் நமது சண்டையை நம்பினால் உண்மையிலேயே, உனக்கு நடிக்கிற திறமையிருக்கு உன்னாலும் நடிப்புச் சொல்லித்தர முடியும் என்று ஏத்துக்கிறேன்" என பாலு கூற, உற்சாகமாக பாலுவின் சவாலை ஏற்றார் பாரதிராஜா. உடனே பாரதிராஜா பாலுவைப் பார்த்து "நீ என்ன? உன் மனசுக்குள்ள பெரிய முகமது ரபின்னு நினைப்போ? நாலு சினிமாவில் பாடினதுக்கே இவ்வளவு கொழுப்பா?" என்று கேட்க, அதற்கு பாலு "நானாவது நாலு படத்தில் பாடியிருக்கேன். சினிமாவுக்குள்ள நுழையாமலே உனக்கு பெரிய சாந்தாராம் என்று நினைப்பா?" என்று கேட்க, வார்த்தைகள் பின்னி, சிறிய வாக்குவாதம் பெரிய சண்டையாக உருவெடுத்தது.

இவர்கள் சண்டை போட்டுக்கொண்டு ரூமை விட்டு வெளியே வர, இவர்களின் குரலைக்கேட்டு இளையராஜாவின் சகோதரர் பாஸ்கர், கங்கை அமரன் மற்றும் இசைக்குழுவினர் வெளியேவர, பாரதிராஜாவும், பாலுவும் சண்டை போடுவது ஒரு பெரிய குழப்பத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பாலுவும், பாரதிராஜாவும் கை கலக்கும் அளவிற்குப் போய்விட்டவுடன், பாஸ்கரும், அமரனும் இருவரையும் பிரித்துவிட்டார்கள். தங்கள் ஊரைச் சேர்ந்த பாரதிராஜாவுடன் பாலு சண்டை போட்டது பாஸ்கருக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் சாதுவான பாலுவிற்குப் கோபம் வரும்படி பாரதிராஜா நடந்து கொண்டது அமரனுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் ஒற்றுமையான குழுவின் இடையே இப்படியொரு பிளவு ஏற்பட்டதை யாராலும் தாங்க முடியவில்லை. ஒரு மாதிரியாக சண்டை ஓய்ந்து, பாலுவும் பாரதிராஜாவும் நடித்ததாக் கூற, இவர்கள் சண்டையைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த பாஸ்கரும், கங்கை அமரனம் கோபம் தாங்காமல், பாலுவையும், பாரதிராஜாவையும் அடிக்கவே வந்து விட்டனர்.

சந்திரகாந்தா நாடகக் குழுவின் மிகப் பிரம்மாண்டமான நாடகம் மணியன் எழுதிய 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. இந்த நாடகத்திற்கு இசையமைக்கும் பொறுப்பு பாவலர் பிரதர்ஸ். குழுவைச் சேர்ந்தது. சந்திரகாந்தாவின் நெருங்கிய உறவினர் மணிமேகலை என்கிற கலா என்ற பெண், தவறாமல் நாடகத்திற்கு வருவாள். அந்தப் பெண்ணுக்கு இசை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அந்தப் பெண்ணுக்கு கிதார் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

கிதார் வாத்தியத்தின் தந்திகளை மீட்டச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த கங்கை அமரன் அந்தப் பெண்ணின் மனத்தை நேசிக்க, இருவரிடையே காதல் பிறந்தது. இலைமறைவு, காய் மறைவாக இருந்த காதல் மெதுவாக வளர்ந்தது. அமரனின் இந்தக் காதலைப் பற்றி அறிந்து பாலு, அவரது காதல் நிறைவேற, வள்ளி கல்யாணத்துக்கு உதவி செய்த விநாயகப் பெருமான் மாதிரி, இருவரிடையே தூது போனார். இறுதியில் கங்கை அமரன் கல்யாணத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் பாலு. இன்றும் மேடையில் கங்கை அமரன் பாலுவைப் பார்த்து "எனக்குக் கல்யாணம் பண்ணிவச்ச பிள்ளையார் (உடம்பு சைஸைப் பார்த்து) இவர்தான்" என்று கூறி ரசிகர்களைச் சிரிக்கவைப்பது வழக்கம்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles