Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களின் பின்னணயில் பல நல்ல இதயங்கள் இருக்கும். பாலுவின் வாழ்க்கையில் கூட இப்படி பலர் உண்டு. பல காதல் டூயட்கள் பாடியுள்ள பாலுவின் வாழ்க்கையிலும் காதலுக்கு இடம் உண்டு. பாலுவின் மனைவியின் பெயர் சாவித்திரி. சாவித்திரி பாலுவிற்கு தூரத்துச் சொந்தம். அவர் வசித்த வீட்டிற்குப் பக்கத்தில் பாலுவும் தங்கியிருந்தார். இருவரும் கண்டனர். காதல் கொண்டனர். உறவுமுறையாக இருந்தபோதிலும் இவர்கள் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு. எதிர்ப்பு வர வர காதலுக்கு உறுதியான வேகம் உண்டானது.

திருமணத்திற்குத் தடையாக இருந்தது அந்தஸ்தன்று. மிகவும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பாலு. அவருடைய கோத்திரமும், அவர் காதலித்த சாவித்திரியின் கோத்திரமும் ஒன்றாக இருந்ததுதான் திருமணத்திற்குத் தடையாக இருந்தது. பிள்ளையின் கோத்திரமும் பெண்ணின் கோத்திரமும் ஒன்றாக இருந்தால் அதை சகோத்திரம் என்பர். அதாவது, மூதாதையரின் உறவு முறைகளை ஆராய்ந்து பார்த்தால், யாராவது இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், சகோதரர்களாக இருக்கக் கூடும். மிகவும் ஆசாரமான இரண்டு குடும்பத்தினரும் இவர்கள் காதலை ஏற்கவில்லை. பாலுவின் மனத்தைத் தெரிந்து கொண்டவுடன் சாவித்திரியின் பெற்றோர், அவரை பெங்களூரில் உள்ள சாவித்திரியின் மூத்த சகோதரரின் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டார்கள்.

பாலு சென்னையில் தேவதாஸானார். தாடி வைத்துக் கொண்டு சோகமான பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார். ஆனால் குடிக்க மட்டும் ஆரம்பிக்கவில்லை. பாலுவிற்குத் துணையாக அவரின் நண்பர்கள் இயக்குநர் யோகி, இப்போதைய செகரட்டரி விட்டல், நண்பர் முரளி ஆகியோர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். திடீரென பாலு 'மணந்தால் சாவித்திரி, இல்லையென்றால் மரணதேவி' என்ற கடுமையான முடிவிற்கு வந்து, நெல்லூரிலிருந்து ஒரு நண்பரின் காரைத் தருவித்து (முன் ஜாக்கிரதையான ஏற்பாடு) அடைத்து வைத்திருக்கும் சாவித்திரியை எப்படியும் மீட்க வேண்டும் என்ற முடிவோடு பெங்களூருக்குக் கிளம்பினார்.

பெங்களூருக்குச் சென்று ஒரு ஹோட்டலில் தங்கிவிட்டு, ஒரு நண்பரின் உதவியால் சாவித்திரிக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பினார் பாலு. அதை படித்துவிட்டு சாவித்திரி பாலுவின் ஹோட்டலுக்கு போன் செய்ய, ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி சாவித்திரி, அவர் வீட்டு வாசலில் காத்திருக்க, பாலுவின் கார் அவரை ஏற்றிக் கொள்ள, சம்யுக்தையைக் கடத்திய பிருதிவிராஜனைப் போல் சாவித்திரியைக் கடத்திக்கொண்டு சென்னையை நோக்கிக் கிளம்பினார் பாலு.

சென்னையை நெருங்க நெருங்க மனத்திற்குள் எல்லாருக்கும் ஒரு பயம் தோன்றியது. ஒருவேளை சாவித்திரியின் பெற்றோர் போலீசோடு காத்திருந்து கல்யாணத்திற்குத் தடை விதித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் ஏற்பட்டது. சென்னையில் தங்குவது ஆபத்தானது என முடிவெடுத்தனர். சென்னைக்கு வந்த காரை, சென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் செலுத்தி அங்கிருந்து ஒரு ரயிலில் ஏறி விசாகப்பட்டினத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சென்னையில் சாவித்திரியின் பெற்றோர் பாலுவையும், சாவித்திரியையும் தேடித் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் பாலுவும், அவருடைய நண்பர்களும் விசாகப்பட்டினத்திற்குச் சென்று அங்குள்ள சிம்மாசலம் என்ற மலைக்கோயிலாகிய நரசிம்மசாமியின் சந்நிதியை அடைந்தனர். பாலுவுக்கும், சாவித்திரிக்கும் திருமணம் நடைபெற்றது. பாலுவின் நெருங்கிய நண்பர்களின் தலைமையில் இந்தக் கல்யாணம் நடந்தது. பெங்களூருக்குச் சென்ற நண்பர்களைத் தவிர, கோபி என்ற தெலுங்குப் பாடலாசிரியர் ஒருவரும் உடன் இருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பினார்கள்.

பாலுவின் வீட்டிற்குச் சென்றால் பிரச்சனைகள் உருவாகும் என்பதால், ஹோட்டலில் ரூம் எடுத்து பாலுவும் சாவித்திரியும் தங்கினார்கள். யாருக்கும் தெரியாமல் பாலு டாக்சியில் சென்று ஒரு பாடலைப் பாடிவிட்டு வந்தார். மேலே என்ன செய்வது என்று பாலுவும், சாவித்திரியும் ஹோட்டலில் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது ஹோட்டல் ரூமின் கதவு பலமாகத் தட்டப்பட்டது. பாலு சென்று கதவைத் திறந்தார். வாசலில் சாவித்திரியின் பெற்றோரும், பாலுவின் தகப்பனாரும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னே, அவர்களை அங்கு அழைத்துக்கொண்டு வந்தவரும் நின்று கொண்டிருந்தார். அவர் யார் தெரியுமா?

கதவைத் திறந்த பாலுவிற்கு ஒரே ஷாக். முதலில் ரூமிற்குள் வந்தவர் கோதண்டபாணிதான். பாலு அன்று காலை ஒரு படப்பிடிப்பிலே பாடியதை அறிந்து கொண்டு, பாலு இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டு சாவித்திரியின் பெற்றோரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தவர் கோதண்டபாணிதான். சாவித்திரியின் பெற்றோர் கோபமாக உள்ளே வந்தாலும், தங்கள் பெண்ணைக் கண்டதும் அழுதுவிட்டார்கள் நடந்ததையெல்லாம் பாலு விவரமாகக் கூற, ஒரு நல்ல நாள் பார்த்து சாவித்திரியைக் கொண்டுவிட ஒப்புக்கொண்டு அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.

பாலுவின் சினிமா வாழ்விற்கு உறுதுணையாக நின்ற கோதண்டபாணிதான், பாலுவின் வாழ்வு நல்லபடியாக அமையவும் காரணமாயிருந்தார். இருதரப்பிலும் பேசி, பாலுவையும் சாவித்திரியையும் இணைத்தவர் அவர்தான்.

இரு குடும்பத்தினரும் மனம் வந்து இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் தனிக்குடித்தனம் அமைத்த பாலுவிற்கும், சாவித்திரிக்கும் பெரியவர்கள் துணையாக இருக்கவில்லை.

முதன் முதலாக சாவித்திரி கர்ப்பமாக இருந்தபோது பெரியவர்கள் துணையில்லாமல் கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் மட்டுமே ஆதரவாக இருந்தார்கள்.

முதல் குழந்தை, பெண் குழந்தை பிறந்தது. இசை சம்பந்தமான 'பல்லவி' எனப் பெயர் சூட்டப்பட்டது. பல்லவி குழந்தையாக இருந்தபோது திடீரென அழுதாள். காரணம் தெரியாமல் பாலுவும் அவர் மனைவியும் தவித்தார்கள்.

எத்தனையோ நாள் இரவில் காரை எடுத்துக்கொண்டு காற்றோட்டாகமாக பீச் வரை சென்று குழந்தை தூங்கியதும் வீட்டிற்குத் திரும்பிய இரவுகள் பல உண்டு. ஆனால் எந்த பிரச்சினைகள் வந்தாலும், கணவன் மனைவியிடையே அது பிரதிபலித்ததில்லை. உண்மையான காதல், பாசம் ஆகிய இரண்டும் பிரச்சனைகளைச் சுருக்குவதற்கு பெரிதும் உதவின. பாலுவிற்கு எந்தக் காலத்திலும் நண்பர்கள் பட்டாளம் அதிகம். அதனால் உறவினர்கள் ஆதரவில்லை என்பது ஒரு குறையாகவே தெரியவில்லை பாலுவிற்கும், சாவித்திரிக்கும்.

பல்லவி பிறந்தவுடனேயே, பாலுவின் குடும்பத்தினரும், சாவித்திரியின் குடும்பத்தினரும் மனம் மாறி குழந்தையின் காரணமாக, பாலு வீட்டிற்கு வந்து போனார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பாலு மிகவும் பிஸியாகி, தனது சினிமா மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள முழுமூச்சுடன் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

பாலுவின் துணைவியார் இரண்டாவது முறையாகக் கருத்தரித்தார். முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்குமிடையே இடைவெளி ஒரு வயதைவிடக் குறைவாகவேயிருந்தது. கைக் குழந்தையை வைத்துக்கொண்டு கணவன், மனைவி இருவரும் சிரமப்பட்டனர். இருந்தாலும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியம் வெறியாக மாறியிருந்த காலம் அது. சோதனைகளைச் சிரித்த முகத்துடன் தாங்கிக் கொண்டார்கள். சாவித்திரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, சாவித்திரியின் தாயார், பிறந்த வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தார். பாலுவிற்கு, சாவித்திரியை அந்த நிலையில் அனுப்ப மனமில்லை. அந்த நேரத்தில், புதிதாகப் பிறக்கப் போகும் இந்தக் குழந்தை உறவை ஒட்டவைக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்பதை மறுக்கவும் மனமில்லை.

எனவே, அன்றிருந்த ரிக்கார்டிங்கை அவசர அவசரமாக முடித்துவிட்டு, சாவித்திரியை வழியனுப்ப ஸ்டேஷனுக்குப் போனார் பாலு. சாவித்திரியும் தன் தாயுடன் கிளம்பினார். கணவரைவிட்டுப் பிரியாத சாவித்திரிக்கு அந்தப் பிரிவு மிகுந்த கஷ்டத்தைத் தந்தது. பாலு அவரைத் தேற்றி வழியனுப்பி வைத்தார். பச்சை விளக்கு எரிந்தது. அந்தப் பச்சை விளக்கு எரிவது பாலுவிற்குத் தன் வாழ்வு 'பசுமை'யாக இருக்கப் போவதற்காக எரிவதாகத் தோன்றியது. வண்டி கிளம்பியது. பாலுவைத் தனிமை வாட்டியது. யாருமில்லா வீட்டில் நுழைய பாலுவிற்குப் பிடிக்கவில்லை. படுக்கையில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தார் பாலு.

டெலிபோன் மணியடித்தது. பாலு அதை அட்டண்ட் செய்தார். அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டர் பேசினார். பாலுவிற்கு ஒரு மகன், அரக்கோணம் ரயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்திருப்பதாகக் கூறி பாலுவை வாழ்த்தினார்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles