Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

டெலிபோனில் கேட்ட செய்தி உண்மையா பொய்யா என்றே பாலுவிற்குப் புரியவில்லை. தனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், அந்தப் பிரசவம் அரக்கோணத்தில் உதவிக்கு யாருமில்லாத நிலையில் நடந்து தன் மனவை஢ குழந்தையைப் பெற்றெடுத்தது மனத்திற்கு சற்றுக் கவலையைத் தந்தது. எப்பொழுது விடியும் என்று காத்திருந்துவிட்டு, மியூசிக் டைரக்டர் குமார் அவர்களின் காரை வாங்கிக் கொண்டு அரக்கோணத்திற்கு விரைந்தார் பாலு.

தன்மகனைப் பார்த்து மனமகிழ்ந்துவிட்டு, மறக்காமல், அரக்கோணம் ஸ்டேஷன் மாஸ்டரைச் சந்தித்து நன்றியைக் கூறிவிட்டு, தாயையும் குழந்தையையும் தன் காரிலேயே அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார் பாலு. பிறந்த மகனுக்கு சரண் என்று பெயர் சூட்டினார். சரண் பிறந்தவேளையோ என்னவோ, பாலுவின் திருமணத்தால் பிரிந்த உறவினர்கள் மீண்டும் பாலுவிடமே சரணடைந்தார்கள். குடும்பம் ஒன்றாக இணையக் காரணமான தன் மகன் மீது பாலுவுக்கு அன்றிலிருந்து இன்றுவரை பாசம் உண்டு. அரக்கோணம் ரயில் நிலையத்தைக் கடக்கும்போதெல்லாம் பழைய நினைவுகள் இன்றும் அவர் மனத்தில் அலைமோதும்.

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க அவசியமாக மூன்று விஷயங்கள் தேவை. நிம்மதியான மணவாழ்க்கை, இரண்டு வேளை உணவுக்கு ஒரு வழி, இருக்க ஓர் இடம் இருந்துவிட்டால் வாழ்க்கை சுகமானதுதான். உழைத்தால் உணவிற்கு வழிபிறக்கும். வாழ்க்கைத் துணைவி அமைவதும், வீடு அமைவதும், ஒரு மனிதனின் விதிப்படிதான் நடக்கும். பாலுவிற்கு இந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டு.

பாலுவிற்கு இராதாகிருஷ்ணன் என்ற ஒரு நண்பர் கோகுல் சிட் பண்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பாலுவிடம் சீட்டு சம்பந்தமாகப் பேச வந்து காலப் போக்கில் பாலுவின் குடும்ப நண்பராக மாறியவர். காம்தார் நகரில் பாலு தற்பொழுது குடியிருக்கும் வீடு கோகுல் சீட் கம்பெனிக்குச் சொந்தமாக இருந்து வந்தது. கோகுல் சிட் கம்பெனி, அதை விற்க முடிவு செய்த போது பாலுவின் நண்பர் இராதாகிருஷ்ணன் தனது கம்பெனி நிர்வாகிகளுடன் பேசி அதை பாலுவிற்கே விற்கும்படி கேட்டுக் கொண்டார். பாலுவிடம் இந்த யோசனையை கூறும் போது, பாலு அவர்கள் வீடு வாங்குவதைப் பற்றி நினைக்காமல் இருந்த காலகட்டம் அது. அதனால் இராதாகிருஷ்ணனிடம் முதலில் மறுப்புத் தெரிவித்தார். ஆனால் இராதாகிருஷ்ணன் விடாப்பிடியாக பாலுவிடம் வாதாடி சம்மதம் தெரிவிக்கச் செய்தார். பாலுவிடம் வீடு வாங்கக்கூடிய அளவிற்கு பணம் அப்பொழுது இல்லை. கோகுல் சிட் கம்பெனியிடம் பேசி அவர்களிடமே பாலுவிற்குத் தேவையான பணத்திற்கு கடனாக ஏற்பாடு செய்து கொடுத்தார். பாலு தற்பொழுது குடியிருக்கும் காம்தார் நகர் வீட்டைப் பாலு வாங்கினார். இப்பொழுது கூட பாலு தனக்கு இந்த வீடு சொந்தமாக இருக்கக் காரணமே இராதாகிருஷ்ணன் என்று கூறுவது வழக்கம்.

இராதாகிருஷ்ணனுடன் பழக்கம் பாலுவிற்குத் தொடர்ந்தது. கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பென் ஸ்டுடியோவைத் தாண்டி விருகம்பாக்கம் செல்லும் வழியில் ஒரு பெரிய மனையொன்றில், தேவர் தனக்குப் பிடித்தமான மிருகங்களை வளர்த்து வந்தார். தேவரின் படங்களில் நடிக்க பல மிருகங்கள் அங்கு பழக்கப்பட்டு வந்தன. அந்த இடத்தை ஒரு சயத்தில் விற்றுவிடத் தேவர் முடிவு செய்தார். பாலுவின் நண்பர் இராதாகிருஷ்ணனுக்கு இந்த விவரம் தெரிந்தவுடன் பாலுவிடம் அந்த நிலத்தை வாங்குவதைப் பற்றிப் பேசினார். பாலுவிற்கும் அந்த நிலத்தை வாங்கி ஒரு தியேட்டர் கட்ட வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் முன்பணம் கொடுப்பதற்குக்கூட கையில் பணமில்லை. இராதாகிருஷ்ணன் பாலுவிடம் வந்து "தேவருக்குச் சொந்தமான நிலத்தை உங்களுக்காக பேசிவிட்டேன். அட்வான்சாக 30,000 கொடுத்துவிட்டேன். இந்தாருங்கள் அதற்குரிய பத்திரங்கள்" எனக் கூறி பாலுவை அந்த இடத்தை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிட்டார் இராதாகிருஷ்ணன் மதுரைக்கு மாற்றலாகிப் போய்விட்டார். தியேட்டர் கட்ட கிடைத்த பிளான் எதுவும் பாலுவின் மனத்திற்கு திருப்தியாக அமையவில்லை. இதற்கிடையில் பாலுவிற்கு தியேட்டர் கட்டும் ஆசை குறைந்து, அந்த இடத்தில் ஒரு ரிக்கார்டிங் தியோட்டர் கட்ட ஆசை பிறந்தது. உடனே மதுரையிலிருந்த இராதாகிருஷ்ணனுக்குக் கடிதம் எழுதி, அவரைச் சென்னைக்கு வரவழைத்து, அவரிடம் ரிக்கார்டிங் தியேட்டர் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தார் பாலு. இராதாகிருஷ்ணன் முழுமூச்சுடன் கட்டட வேலையில் இறங்கினார். ஆறு மாதத்தில் முடிக்க வேண்டிய கட்டடத்தை நாலு மாதங்களில் முடித்துக் தரும் நிலைக்கு இராதாகிருஷ்ணன் கொண்டு வந்து விட்டார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது.

ஆறுமாத காலம் 'கோதண்டபாணி ரிக்கார்டிங் தியேட்டர்' கட்டும் இடத்திலேயே இரவும் பகலுமாக குடியிருந்தார் பாலுவின் நண்பர் இராதாகிருஷ்ணன். 'எங்கிருந்தோ வந்தான்' பாடலில் வரும் கண்ணனைப் போல இந்த இராதாகிருஷ்ணன் பாலுவிற்காக வந்து சேர்ந்தார். பாலுவின் மேல் உள்ள அபிமானம், அவர் குரல்மீது இருந்த காதல் ஆகியவையே இராதாகிருஷ்ணன் உழைப்பதற்குக் காரணம்.

பாலு ஒரு ரிகார்டிங் தியேட்டருக்கச் சொந்தக்காரராக ஆக வேண்டும் என்பதில் பாலுவைவிட அதிக விருப்பம் கொண்டவராகத் திகழ்ந்தார் இராதாகிருஷ்ணன். அசுர வேகத்தில் 'கோதண்டபாணி ரிகார்டிங் தியேட்டர்' வளர்ந்தது. திறப்பதற்கு நாள்கூட குறித்தாகிவிட்டது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. ஒரு வாரம் உடல் நலம் சரியில்லாமல் இருந்த இராதாகிருஷ்ணன் திடீரென்று அமரராகி விட்டார். இராதா கிருஷ்ணன் இறந்தார் என்ற செய்தியை பாலுவால் நம்பவே முடியவில்லை. தனக்காக உழைத்த இராதாகிருஷ்ணன் இல்லாமல் 'கோதண்டபாணி ரிகார்டிங் தியேட்டர்' திறப்பு விழா நடந்தது. அந்த தியேட்டரின் மாடியில் இராதாகிருஷ்ணன் நினைவாக ஒரு டப்பிங் தியேட்டர் கட்டி அதற்கு இராதாகிருஷ்ணன் பெயரை சூட்டினார். இப்படி பாலுவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபரானார் இராதாகிருஷ்ணன்.

பாலுவிற்காக உழைத்த நண்பர்கள் சிலர் இருந்த போதிலும், வாழ்க்கையில் நண்பர்களுக்காக உதவி செய்யப்போய் அவர் மாட்டிக்கொண்ட சம்பவமும் உண்டு. ஒரு சமயம், பாலுவின் நண்பர்கள் சிலர் வந்து பாலுவிடம் ஒரு படம் தயாரிக்க விருப்பம் தெரிவித்தார்கள். அவர்கள் கையில் கொஞ்சம் பணம் கொண்டு வந்திருந்தார்கள். அவர்களின் விருப்பத்தைத் தட்ட முடியாமல், பாலு அவர்களை பூர்ணசந்திரராவ் என்ற விநியோகஸ்தரிடம் அழைத்துச் சென்று அவர்களுக்காக தான் உத்தரவாதம் தருவதாகக் கூறினார்.

அதற்கு பூர்ணசந்திர ராவ் அவர்கள் பாலுவிடம், "இவ்வளவு பிஸியாக இருக்கும் பாலுவால் ஒரு படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்வது கடினமாக இருக்கும்" என்று உபதேசம் செய்தார். இருந்த போதிலும் பாலுவிற்கு தன் நண்பர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையில், உத்தரவாதத்தில் கையெழுத்துப் போட்டார். படம் வளர்ந்தது.

ஆனால் பூர்ணசந்திர ராவ் கூறிய மாதிரியே அந்தப் படம் சரியாகப் போகவில்லை. உடனே அதில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அடுத்த படத்தை ஆரம்பித்தார்கள். தெலுங்குப்பட உலகின் அன்றைய சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா நடிக்க 'கேப்டன் கிருஷ்ணா' என்ற பெயரில் படம் தயாரானது. ஆனால் அந்தப் படம் கூட எதிர்பார்த்த அளவில் ஓடவில்லை. அந்தக் காலத்திலேயே நட்பிற்காக, தான்போட்ட கையெழுத்துக்காக பாலு கொடுத்த நஷ்டஈடு 7 லட்ச ரூபாய். . அந்த ஏழு லட்ச ரூபாய் கடனை அடைக்க பாலு மூன்று வருடத்திற்கு மேல் உழைக்க வேண்டியிருந்தது.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பாலுவின் அடுத்த தங்கையான கிரிஜாவின் கல்யாணத்தில், ஜானவாசத்தில் கலந்து கொள்ள முடியாமல் வாங்கிய கடனை அடைக்க பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார் பாலு. இன்றளவும் அவரது தங்கை பாலுவிடம் இதைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் பாலு இதை எப்படி எடுத்துக் கொண்டார் தெரியுமா?

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles