Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

நண்பர்களால் நஷ்டம் ஏற்பட்டதுபோல நண்பர்களால் பல லாபமும் அடைந்திருக்கிறார் பாலு. தங்கையின் கல்யாண ஜானவாசத்துக்குக்கூட போக முடியாமல் செய்த நண்பர்கள் சிலருண்டு. அதேபோல, தன்னலம் கருதாமல் உதவி செய்தவர்களும் உண்டு. அப்படி மறக்க முடியாத இரண்டு பேரை நினைவு கூர்கிறார் பாலு.

ரிக்கார்டிங் தியேட்டர் கட்டக் காரணமாயிருந்தவர், நண்பர் இராதாகிருஷ்ணன். அதேபோல ரிக்கார்டிங் தியோட்டர் வேலைகள் முடியும் காலகட்டத்தில் ரிகார்டிங் தியேட்டருக்குத் தேவையான ரிகார்டிங் பொருள்கள் அயல் நாட்டிலிருந்து வந்து சேர்ந்தன. ஆனால் இடைப்பட்ட காலகட்டத்தில், அயல்நாட்டு வரிகள் அதிகமாகிவிட்டதால் 20 லட்ச ரூபாய் அதிகப் பணம் தேவையானது. தேவையான சாமான்கள் வந்து விட்டதால் ஒவ்வொரு நாளும் துறைமுகத்தில் 13 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கட்ட வேண்டிய சூழ்நிலையிலிருந்தார் பாலு. 20 லட்ச ரூபாய் எப்படி புரட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். தன் கஷ்டங்களைக் கங்கை அமரனிடம் கூற அதற்கு அவர் ஒரு வழி சொன்னார்.

அவர் பாலுவை அழைத்துக் கொண்டு இராமசாமி உடையாரைச் சந்திக்கச் சென்றார். ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதற்கு முன்பு பாலு உடையாரைச் சந்தித்ததே இல்லை. பாலு அவரிடம் தன் தேவையைக் கூறினார்.

உடையார் இரண்டு நாட்களில் பாலுவிற்குத் தேவையான பணத்தைத் தருவதாகக் கூறி வழியனுப்பினார். அவர் கூறிய மாதிரியே பாலுவும் அவருடைய உதவியாளர் விட்டலும், இரண்டு நாள் கழித்து உடையார் வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களை வரவேற்று உட்கார வைத்துவிட்டு, உடையார் வெளியே சென்றார். சென்றவர் ஒருமணி நேரம் ஆகியும் வரவேயில்லை. பாலுவிற்கு ஒருவேளை உடையாரை, தாம் சிக்கலில் மாட்டவைத்துவிட்டோ மோ என்ற கவலை. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு இராமசாமி உடையார் கையில் 10 லட்ச ரூபாய் டிராப்ட்டுடன் வந்தார். லேட்டான காரணத்தைக் கூறினார். உடையாரின் செக் புத்தகங்களை வைத்திருந்த உடையாரின் மானேஜரின் தாயார் காலமானதால் திடீரென்று ஆபீசுக்கு வரவில்லை. பாலுவிற்கு வாக்கு கொடுத்ததைக் காப்பாற்ற உடையார் நேரே பாங்கிற்குச் சென்று விவரங்களைக் கூறி, பாலுவிற்காக பணத்தை வாங்கி வந்தார். இன்றுகூட முன்பின் தெரியாத ஒருவருக்காக உடையார் செய்த உதவியை மறக்காமல் நினைவு கூர்கிறார் பாலு.

பத்து லட்ச ரூபாய் இப்படி வந்தது. ஆனால் பாலுவிற்குத் தேவையான மற்றொரு பத்து லட்சம் எப்படி கிடைத்தது தெரியுமா? பாலுவின் நண்பர் ஒருவர் பெங்களூரில் வியாபாரியாக இருந்தார். அவர் பெயர் இராகவேந்திரன். பாலு அவரிடம் தன் பிரச்சனையைக் கூறி உதவி கேட்டார். ஒரு வாரத்தில் அவர் பாலு கேட்ட உதவியோடு வந்து சேர்ந்தார். ஸ்டுடியோ திறப்பு விழா முடிந்த பிறகுதான், பாலுவிற்கு தன் பொருட்டு பெங்களூர் நண்பர் தன் சொத்தை அடமானம் வைத்து, பணத்தைக் கொண்டு வந்தார் என்ற உண்மை தெரிந்தது. மனம் நெகிழ்ந்து போனார் பாலு. இந்த மாதிரி நண்பர்களுக்கு தான் என்ன கைம்மாறு செய்யப்போகிறோம் என்று இன்றும் வியந்து நிற்கிறார் பாலு.

எல்லாருக்கும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பாலுவிற்கு வீடு வாங்கியபோது ஒரு புதுமையான அனுபவம் கிடைத்தது. முதல் முதலில் ஒரு வீடு வாங்க ஆசைப்பட்டு, சென்னை சி.ஐ.டி. காலனியில் ஒரு வீட்டிற்காக அட்வான்ஸ் கொடுத்தார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்குப் பணம் புரட்ட முடியாததால், அந்த வீட்டை நஷ்டத்திற்கு விற்றார் பாலு. இந்த வீட்டை வாங்கி கஷ்டப்பட்டு, பணத்தை ஏற்பாடு செய்து ரிஜிஸ்டர் செய்தார் பாலு. வாழ்க்கையில் தான் ஒரு பெரிய காரியத்தைச் செய்து விட்டதாக நிம்மதியோடு சந்தோஷத்துடன் இருந்தார் பாலு. வீடுவாங்கிய 13 நாட்களில், ஒரு கோர்ட் அமீனா வீட்டு வாசலில் வந்து சேர்ந்தார். பாலுவிடம் வீட்டை விட்டுக் காலி செய்யும் கோர்ட் உத்தரவைக் காட்டினார். பாலு திகைத்து நின்றார்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles