Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

பாலு இப்பொழுது குடியிருக்கும் வீட்டை ஒரு சீட்டுக் கம்பெனியிடமிருந்து வாங்கினார். வீடு வாங்கிய 15 நாட்களில், அந்த சீட்டுக் கம்பெனி நஷ்டத்தில் இயங்கியதால், மூடிவிட்டார்கள். அந்தச் சீட்டுக் கம்பெனியின் உரிமையாளரிடமிருந்துதான் பாலு அந்த வீட்டை வாங்கியிருந்தார். கம்பெனி மூழ்கிவிட்டதால் இன்சால்வென்சி பெட்டிஷன் கொடுத்துவிட்டார். அதனால்தான் பாலுவின் வீட்டிற்கு அமீனா வந்துவிட்டார். பாலுவிற்கு கையும் காலும் ஓடவில்லை. உடனடியாக அமினாகூட வந்த கோர்ட் அதிகாரியிடம் விவரங்களைக் கேட்டுக் கொண்டு சில நாட்கள் அவகாசம் வாங்கினார். பிறகு தனக்காக ஒரு வக்கீல் வைத்துக் கோர்டில் வாதாடினார். இதனால் சில மாதங்கள் நீடிப்பு கிடைத்தது. ஆனால் கோர்ட்டால் பாலுவிற்கு பெரிய உதவி செய்ய முடியவில்லை.

பாலு தான் வாங்கிய வீட்டிற்கு மீண்டும் ஒருமுறை பணம் கொடுக்க நேர்ந்தது. இதுபற்றி பாலு இன்று என்ன நினைக்கிறார் தெரியுமா? "எனக்கு சொத்து சேர்வதில் எப்பொழுதும் பெரிய அதிர்ஷ்டம் இருந்ததில்லை. முதலில் ஒரு வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் திரும்ப வாங்க நேர்ந்தது. இப்பொழுது குடியிருக்கும் வீட்டிற்கு இரண்டு முறை பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை விலைமதிப்புள்ள வீடு இதுதான். சின்ன வயசிலே ஸ்கூலுக்கு போட்டுக்கொண்டு போக ஒரு வெள்ளைச் சட்டை லாண்டரிக்கு கொடுத்தனுப்புவேன். ஆனால் ஸ்கூலுக்கு போவதற்குள் சட்டை வராது. நான் அழுவேன். எங்க அப்பா என்னிடம் என்ன சொல்வார் தெரியுமா? பாலு வெள்ளைச்சட்டை வரலைன்னா இருக்கறதுல வெள்ளையா இருக்கிற சட்டையைப் போட்டுக்கொண்டு போ. ஒருவேளை நீ வெள்ளைச் சட்டைபோட்டுக் கொண்டு போகும்போது வழியிலே ஒரு வேளை சேறு அடித்துவிட்டால் என்ன செய்ய முடியும்?' என்றுச் சொல்லி இருக்கிற ஒரு நல்ல சட்டையை போட்டு ஸ்கூலுக்கு அனுப்பி வைப்பார். அவர் அப்படி புத்தமதி சொல்லிச் சொல்லி எனக்குக் கிடைப்பதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது."

தன்னுடைய வெற்றிக்கு, தன் தந்தை இப்படிச் செய்த போதனைகள் தான் காரணம் எனக்கூறுகிறார் பாலு. பாலுவிற்கு இன்னும் ஒரு விசித்திரமான பிரச்சனை வருவதுண்டு.

பாலுவின் சகோதரி எஸ்.பி. சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது ஒரு குழந்தை நட்சத்திரத்திற்காகப் பின்னணி பாடியிருக்கிறார். அதன் பிறகு, தெலுங்கில் பாட ஆரம்பித்து, தமிழில் நுழைந்து, ஒரு நல்ல பாடகி என்று பெயர் எடுத்தவர் சைலஜா. பாலு பல படங்களில் பாடிக் கொண்டிருக்கும்போது சுலபமாக சைலஜாவிற்கு சிபாரிசு செய்து படத்திற்கு இரண்டு பாடல்கள் வாங்கியிருக்க முடியும். ஆனால் பாலுவிற்கு அப்படிச் செய்ய மனம் இடம் தரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, தான் தங்கைக்காக சிபாரிசு செய்வதால் இன்னொரு பாடகிக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு பறிபோய்விடும் என்பது. இரண்டாவது காரணம், தான் சிபாரிசு செய்தால் அது இசையமைப்பாளரை இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என்பது. இதனாலேயே சிபாரிசு செய்யாமல் இருந்தார்.

பாலுவே இசையமைத்த படங்களில் கூட, சைலஜாவிற்குப் பாடல்கள் தருவதற்கு யோசிப்பார் பாலு. தயாரிப்பாளர் முன் வந்து சொன்னால் தான் தங்கைக்குப் பாட்டு கொடுப்பார். இதைக்கூட பாலு, சைலஜா தன்னுடைய தங்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான பாடல்கள் பாடியிருக்கக்கூடிய திறமையான பாடகி என்று கூறுகிறார். பாடும் விதத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சிறுபிரச்சனை சைலஜாவிற்கு தான் சந்தர்ப்பம் வாங்கிக் கொடுக்காததுதான் என்கிறார் எஸ்.பி.பி.

தினசரி ஒரு புரளி, கிசுகிசு என இயங்கும் சினிமா உலகில் பாலு பல ஆண்டுகள் எந்தவிதச் சிக்கலிலும் சிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் விதி வலியது ஆயிற்றே. பாலுவும் ஒரு சிக்கலில் மாட்டினார்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles