Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

பாலுவிற்கு சினிமா உலகில் நெருக்கடி எப்படி வந்தது தெரியுமா? தெலுங்கில் பிரபலமான நடிகர் கிருஷ்ணாவிற்கு பாலுவின் குரல் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதையும், ஒரு சமயம் பாலுவிற்குத் தெலுங்கில் வாய்ப்புகள் குறைந்தபோது, பாலுவை அழைத்து தனக்காக நிரந்தரமாக பாடும் வாய்ப்பை கிருஷ்ணா தந்தார் என்பதையும் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் கிருஷ்ணாவிற்கும், பாலுவிற்கும் இடையில் பிணக்கு ஏற்படக் காரணம் என்ன? கிருஷ்ணாவின் நண்பர் ஒருவர், அவரிடம் "பாலு பாடுவதால் தான் உங்கள் படங்கள் ஓடுவதாகக் கூறுகிறார்" என்ற தவறான தகவலைக் கூற அதைக் கேட்டு கோபத்துடன் கிருஷ்ணா, "இனி நான் நடிக்கும் படங்களில் பாலு பாட வேண்டாம்" என்று தயாரிப்பாளர்களிடம் கிருஷ்ணா கூற, செய்யாத ஒரு தவறுக்கு பாலு பலியானார்.

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் பொது விழாக்களிலும், சினிமா உலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும்போது கிருஷ்ணாவும் பாலுவும் பழைய அபிமானத்துடன் பேசிக் கொண்டார்கள். இந்தப் பிரச்சனையில் கூட பாலு சந்தோஷப்படும் விஷயம் ஒன்று இருந்தது. தான் கிருஷ்ணாவிற்குப் பாடாவிட்டாலும், தான் பாடமுடியாமல் போன இடத்தில் புதிதாக ஒரு குரலுக்கு சான்ஸ் கிடைக்கிறதே என்பதே பாலுவிற்கு மகிழ்ச்சியான விஷயமாயிற்று. இதை நான் எழுதும்போது ஏதோ பாலுவைப் புகழ்வதாக வாசகர்கள் எண்ணிக் கொள்ளக்கூடாது. உண்மையிலேயே பாலு அப்பாவி மனம் கொண்டவர் தான். தான் ரெகுலராகப் பாடும் படக் கம்பெனியிலிருந்து தனக்கு ஒரு படத்திற்கு அழைப்பு வராவிட்டாலும், அதைத் தவறாக நினைக்கும் பழக்கம் பாலுவிற்கு இல்லை. கவிதாலயாவின் ஆஸ்தான பாடகராக இருந்து வருபவர் பாலு. இயக்குனர் கே. பாலசந்தரின் சிந்துபைரவி படத்திற்குப் பாட பாலுவிற்கு அழைப்பு வரவில்லை. அப்பொழுது தமிழ் பட உலகத்தைச் சேர்ந்த சிலர் பாலுவிடம் வந்து 'உங்களை சிந்துபைரவி' யில் பாட கூப்பிடவில்லையே" என்று கேட்டார்கள். அதற்கு பாலு அமைதியாக 'நான் பாடக்கூடிய பாட்டு அந்த படத்தில் இல்லை என்பதுதான் காரணம்' என்று பதில் கூறி அனுப்பினார். அந்தப் படத்திற்கு இசைக்காக தேசியவிருது கிடைத்தபோது முதலில் பாராட்டுத் தெரிவித்தவர் எஸ்.பி.பி. தான்.

மீண்டும் கிருஷ்ணா விஷயத்திற்கு வருவோம். பாலு அவருக்குப் பாடாமல் இருந்த 3 ஆண்டு காலத்தில், பல இசையமைப்பாளர்கள், கிருஷ்ணாவிற்காக பாலுவைப் பாட அழைத்தனர். அவர்களிடம் பாலு "முதலில் கிருஷ்ணாவிடம் சம்மதம் கேட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இசையமைப்பாளர் ஒருவர் 'கிருஷ்ணா' படத்திற்கு இசையமைக்க வந்தபோது, பாலு பாட வேண்டும் என்று வற்புறுத்தி கிருஷ்ணாவையும் பாலுவையும் சந்திக்க வைத்தார்.

கிருஷ்ணாவும் பாலுவும் சந்தித்தனர். மனம் விட்டுப் பேசிக் கொண்டார்கள். பாலு மீது தவறில்லை என்று அறிந்த கிருஷ்ணா, பாலுவை ஏற்றுக் கொண்டார். பாலு, மறுபடியும் கிருஷ்ணாவிற்குப் பாடத் தொடங்கினார்.

எஸ்.பி.பி. க்கு இரண்டாவது தேசிய விருது 'ஏக் துஜே கேலியே' படத்தில் பாடியதற்காகக் கிடைத்தது. இந்த முறை ஜனாதிபதியிடம் பரிசு வாங்கும்போது, தன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்லவேண்டும் என்று பாலு ஆசைப்பட்டார். அவர்களையும் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு கிளம்பினார்.

தேசியவிருது பரிசளிப்பு விழாவிற்கு டெல்லிக்கு தன் பெற்றோரை அழைத்துச் சென்றிருந்த பாலு, தன் பெற்றோரை எல்லாவித செளகரியமும் அமையும் மாதிரி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு டெல்லியில் மிக உயர்ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு ஒரு பெரிய 'சூட்' அறையை ஏற்பாடு செய்தார். விழாவிற்குப் போய்வர விமானத்தில் டிக்கட் ஏற்பாடு செய்தார். விமானப் பயணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது, விரைவாகச் செல்ல விமானப் பயணம் அவசியம் எனக்கூறி சம்மதிக்க வைத்தார் பாலு. குறிப்பிட்ட நாளன்று பாலு தன் பெற்றோர், மனவை஢யுடன் டெல்லிக்குச் சென்றார். அந்த விமானப் பயணம் பாலுவின் பெற்றோருக்குப் புதுமையாக இருந்தது. டெல்லியில் தங்க, பாலு மிகப் பெரிய அறைகளை ஏற்பாடு செய்திருந்தார். அவர்கள் டெல்லியில் மாருதி காரில் ஹோட்டலுக்குச் செல்லும்போது இரவாகிவிட்டது. தன் தந்தை சாப்பிட வேண்டும் என்று விதவிதமாக உணவுப் பொருட்களை வரவழைத்தார் பாலு. ஆனால் அவர் தந்தை, பாலுவிடம் 'இங்கே ரஸம்' கூட்டு எல்லாம் கிடைக்காதான்னு?' என்று கேட்டு பாலுவைச் சிரிக்க வைத்தார்.

தனித்தனி அறைகளில் தூங்கச் சென்றார்கள். நடுநசியில் பாலுவின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறிக்கொண்டு எழுந்து கதவைத் திறந்தார் பாலு. அங்கே அவருடைய தகப்பனார் நின்றிருந்தார். "பாலு! கொஞ்சம் என் அறைக்குள் வாயேன்" என்றுக் கூறி பாலுவை அழைத்துச் சென்று "பாலு இதில் எதைத் திறந்தால் தண்ணீர் வரும்" என்று குழந்தை போல கேட்டார். பாலுவும் அந்தக் குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று தனது தந்தைக்கு விளக்கினார்.

தன் தந்தை மிகச் செளகரியமாக இருக்கவேண்டும், இது வரையிலும் அவர் அனுபவிக்காத சுகங்களைத் தரவேண்டும் என்ற ஆசையில்தான் அந்த ஆடம்பர ஹோட்டலை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நடுநிசியில் பாலுவின் தந்தை பாலுவிடம் "இந்த அறைக்கு என்ன வாடகை" என்று கேட்டார். "ஆறாயிரம் ரூபாய்" என்றார் பாலு.

"ஏம்பா ஆறாயிரம் ரூபாய் கொடுத்து என்னை எதுக்கு தங்க வைத்துள்ளாய்? படுத்துக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு பாத்ரூம், இதற்கா ஆறாயிரம் ரூபாய்? பாலு! காசு வரும் போது அதை கவனமாச் செலவழிக்கணும். விமானப் பயணத்தால் நேரம் மிச்சமாகும்னு சொன்னே. நான் ஒத்துகிட்டேன். ஆனால், எனக்காக இவ்வளவு பெரிய அறை தேவையா? என்று கேட்டுவிட்டு பாலுவின் தந்தை தரையில் படுத்தார்.

"ஏம்பா தரையிலே படுக்கிறீங்க?" என்றார் பாலு. "எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கல. தூக்கமே வரலை. எனக்கு இதுதான் செளகரியம்" எனச்சொல்லிக் கட்டிலில் படுக்காமல் தரையில் படுத்து தூங்கிவிட்டார்.

டெல்லியில் பரிசளிப்பு விழாவில் பாலு, தன் பெற்றோர், மனைவியுடன் கலந்து கொண்டார். பாலுவின் தந்தைக்கு தன் மகன் பரிசு வாங்குவதைப் பார்த்ததில் பரம திருப்தி. விழாவில் பரிசளிப்போடு, ரூபாய் பத்தாயிரத்திற்கான காசோலையும் பாலுவிற்கு வழங்கப்பட்டது. பாலு தன் பெற்றோருடன் ஹோட்டலுக்கு திரும்பிய பின்பு, உடனே கிளம்பி ஜனாதிபதி விருந்திற்குச் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்கள். பாலுவின் மனைவி அவசர அவசரமாக 'பேக்' செய்து கொண்டு கிளம்பினார்கள். விமானம் பாதி வழியில் வரும்போது பாலு தன் மனைவியிடம், பரிசளிப்புவிழாவில் கொடுக்கப்பட்ட செக்கைக் கேட்க, அப்பொழுதுதான் பாலுவின் மனைவிக்கு அந்த செக் மற்றும் சில பேப்பர்கள் அனைத்தையும் அங்கு விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. பணம் பெரிதில்லை என்றாலும், தேசிய விருதோடு கிடைத்த பணமாயிற்றே, திரும்ப செக் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்திலே பாக்கி பயணத்தைத் தொடர்ந்தார். சென்னை வந்து சேர்ந்ததும், உடனே டெல்லியில் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு போன் செய்து, தன் செக்கைப் பற்றிய தகவலைத் தெரிவித்தார் பாலு.

நல்லவேளையாக ஹோட்டல் அறையிலிருந்த குப்பையில் பாலுவின் பத்தாயிரம் ரூபாய் டிராப்ட் கிடைத்தது. அதை, அவர்கள் பாலுவிற்கு தபாலில் அனுப்பினார்கள்.

பாலு பாட ஆரம்பித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு இசையமைக்கத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போடு ஆந்திர கிளப் மெல்லிசைப் பேட்டிக்கு "ராகமும் அதன் நாதமும்" என்று தொடங்கும் ஒரு பாடலுக்கு இசையமைத்துப் பரிசும் பெற்றார். அதே பாடலை, பாலு தன் இசைக்குழுவை ஆரம்பிக்கும் போது முதல் பாடலாக வைத்துக் கொண்டார். அந்தப் பாடல் தெலுங்கில் இருந்த போதிலும் தமிழ் நிகழ்ச்சிகளில் முதலில் அந்தப் பாடலைத்தான் பாடி வந்தார். இளையராஜாவும், கங்கை அமரன் அவர்களும் எஸ்.பி.பி. யின் குழுவிற்கு இசைக்கருவிகள் வாசிக்க வந்த பிறகு, அந்த தெலுங்குப் பாடலை கங்கை அமரன் தமிழில் எழுத, அது முதல் அது இறைவணக்கப் பாடலாக மாறியது.

எஸ்.பி.பி. யைத் தொடர்ந்து மலேசியா வாசுதேவன் போன்ற வேறு சில குழுக்கள்கூட இன்று வரை அந்த "ராகமும் அதன் நாதமும்" என்ற பாடலை முதல் பாடலாக வைத்துக் கொண்டிருப்பதில் எஸ்.பி.பி.க்கு ஏகப்பெருமை.

பாட வந்த சில வருடங்களுக்கு நடிகர் தியாகராஜனின் மாமனார், 'பிரசாந்தின் தாத்தா' தெலுங்கு தேசத்தைப் பற்றித் தயாரித்த 'தெலுமுங்கு' என்ற 35 எம்.எம் டாகுமெண்டரிக்கு பாலு இசையமைத்தார். இதுதான் பாலு இசையமைத்த முதல் 35 எம்.எம். படம். அதற்குப் பிறகு தாசரி நாராயணராவ் தயாரித்தபடத்தில் 'கன்னியாகுமரி' என்ற படத்தில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்தார் பாலு.

தமிழில் பாலுவிற்கு கிடைத்த முதல் படம் ரஜினிகாந்த் நடித்து இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி கே.ஆர்.ஜி. தயாரித்த 'துடிக்கும் கரங்கள்' ஆகும். இதுவரை 55 படங்களுக்க இசையமைத்திருக்கிறார் பாலு.

'மயூரி' என்ற வெற்றிப் படம் வந்தது தெரிந்திருக்கும். அந்தப்படத்திற்கு இசையமைப்பு எஸ்.பி.பி. அவர்கள்தான். நாட்டியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த அந்தப் படத்தில் இசைக்கு நிறைய வாய்ப்பு இருந்தது. பாலுவும் மிகவும் சிரத்தையுடன் அந்தப் படத்திற்கு இசையமைத்தார். படமும் பெரும் வெற்றியடைந்தது. பாலுவுக்கு மாநில விருதைப் பெற்றுத் தந்தது. அதே படம் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டது. அப்பொழுது அதன் இசையமைப்பாளராக எஸ்.பி.பி. பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் பாலு இசையமைக்கவில்லை. லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் இசையமைத்தார்கள்.

படம் முடிந்த பின், அதன் பின்னணி இசை சென்னையில்தான் சேர்க்கப்பட்டது. அதைச் செய்தது பாலுதான். 'மயூரி' தெலுங்கு படத்தில் ஒரு டைட்டில் பாட்டு உண்டு. அந்தப் பாட்டை இறுதியில் லக்ஷ்மிகாந்த் - பியாரிலால் எடுக்கவில்லை. தெலுங்கில் பாடிய ஜானகியை வைத்து, சென்னையில் தெலுங்கு பாட்டின் இசையையே வைத்து 'டிராக்' முறையில் ரிக்கார்டிங் செய்யப்பட்டது. ஹிந்தியில் படம் வெளியானது. வெற்றியும் பெற்றது.

சாதாரணமாக, இம்மாதிரி நடக்கும்போது 'டைட்டில் கார்டில்' பின்னணி இசைசேர்ப்பும், டைட்டில் பாட்டும், இசையமைப்பு எஸ்.பி.பி என்று போட்டிருக்க வேண்டும். அப்படி போடவில்லை. அதனால் பின்னால் ஒரு பிரச்சனை எழுந்தது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles