Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

மயூரி தெலுங்கு படத்தின் டைட்டில் பாடலை எஸ்.பி.பி அமைக்க அதே மெட்டில் ஹிந்தியிலும் பாலு ரிகார்ட் செய்ய, அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது. வட இந்தியாவில் அமைக்கப்படும் மிகச்சிறந்த பாடலுக்கு சுருகிங்கர் சந்சத் அவார்ட்ஸ் என்ற விருதை வழங்குவது வழக்கம். அந்தப் பாடலை இசை அமைத்தவருக்கும், பாடியவருக்கும் பாராட்டிப் பரிசு வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மயூரியின் டைட்டிலில் டைட்டில் பாடல் இசை எஸ்.பி.பி. என்று போடவில்லை. அந்த வருடம் எஸ்.பி.பி. இசையமைத்த மயூரியின் டைட்டில் பாடலுக்கு சுருசிங்கர் சந்சத் அவார்ட்ஸ் வழங்கும் சங்கம் சிறந்த சினிமாப்பாடலாக மயூரி படத்தின் இரு இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் - பியாரிலாலுக்கு வழங்க முடிவு செய்தது. அந்தப் பாடலை ஹிந்தியில் பாடிய திருமதி ஜானகிக்கும் பரிசளிக்க முடிவு செய்தது. ஜானகிக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். பின்னணிப் பாடகி ஜானகிக்கு எஸ்.பி.பி இசையமைத்த பாடலுக்கு வேறு யாருக்கோ பரிசு வழங்குகிறார்கள் என்ற செய்தியே பிடிக்கவில்லை. எஸ்.பி.பி.யிடம் தான் பரிசு வாங்கப் போகப் போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டார். அப்படியே சென்றாலும் மேடையில் உண்மையைக் கூறிவிடுவேன் என்று பயம் வேறு காட்டினார்கள். எஸ்.பி.பி. அவர்களுக்கு, தான் இசையமைத்த பாடலுக்கு பரிசு கிடைக்கிறது என்ற விவரமே பெரும் மகிழ்ச்சியளித்தது. ஜானகி பரிசு வாங்கச் செல்லாமல் ஏதாவது பிரச்சனை வரக்கூடாது என்பதில் பாலு தீவிரமாக இருந்தார்.

ஜானகியைச் சந்தித்து, பரிசளிப்பு விழாவிற்கு அவசியம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திக்கூறி விழாவிற்கு அனுப்பி வைத்தார். அதற்குப்பிறகு பல முறை லக்ஷ்மிகாந்த் - பியாரிலாலைச் சந்தித்தார் பாலு. இதுவரையிலும் இதுபற்றி அவர்களிடம் எதுவும் பேசியதில்லை.

(மயூரிக்கு விருது வழங்கத் தவறிய அதே சங்கம், பின்னர் பாலுவுக்கு வேறொரு நிகழ்ச்சியின்பொழுது விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது, என்பதே பாலுவின் ரசிகர்களுக்கு ஆறுதலான செய்தி)

பல படங்களில் பல பாடல்களைப் பாடியவர் பாலு. ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாலு பாடிய முதல் பாடல் எது தெரியுமா? 'சுமதி என் சுந்தரி' என்ற படத்தில் பாடிய 'பொட்டு வைத்த முகமோ?' என்ற பாடலே ஆகும். அந்தப் பாடலுக்கு முதலில் வேறு ஒருவர் பாடுவதாக இருந்தது. ஆனால் மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யைத்தான் தேர்ந்தெடுத்தார். சிவாஜிக்குப் பாடப்போகும் முதல்பாடல் என்ற பயத்தோடு ஒத்திகைக்குச் சென்றார். எஸ்.பி.பி. அவரிடம் தான் பெயரெடுக்கவேண்டும் என்று மனத்திற்குள் ஒரு முடிவு செய்து கொண்டார். பாடல் பதிவு நாள் வந்தது. ரிக்கார்டிங் தியேட்டரினுள் பாலு சென்றார். அங்கே நடிகர் திலகம் காத்திருந்தார். பாலுவிற்கு நடிகர் திலகத்தைப் பார்த்தவுடன் எதற்காக வந்திருக்கிறார் எனப்புரியவில்லை. பாலுவைத் தனியாக அழைத்துச் சென்றார் சிவாஜி.

ரிக்கார்டிங் தியேட்டரில் உள்ளவர்களுக்கு ஒரே சஸ்பென்ஸ். சாதாரணமாக பாடல் பதிவுகளுக்கு சிவாஜி வருவது வழக்கம் இல்லையே, இன்று மட்டும் ஏன் வந்திருக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.

பாலு 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பாடிய காலத்தில் சிவாஜிக்கு அதிகமாக பின்னணி பாடிவந்தவர் டி.எம்.எஸ். அவர்கள்தான். டி.எம்.எஸ். பாடல் பதிவுக்குக்கூட வராத நடிகர் திலகம், எஸ்.பி.பி. பாடல் பதிவுக்கு வந்தது மெல்லிசை மன்னரைக்கூட வியப்பில் ஆழ்த்தியது.

பாலுவும் சிவாஜியும், ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்த ரூமிற்குள் சென்றார்கள். கண்ணாடி பதிக்கப்பட்ட அந்த அறையில் சிவாஜி பாலுவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. பத்து நிமிடத்திற்குப் பிறகு சிவாஜியும் எஸ்.பி.பி.யும் வெளியே வந்தார்கள். சிவாஜி நேரே மெல்லிசை மன்னரிடம் வந்து ஏதோ சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

நடிகர் திலகம் சிவாஜி, எஸ்.பி.பியிடம் என்ன சொல்லியிருப்பார் என்பது எல்லாருக்கும் சஸ்பென்ஸாக இருந்தது. மெல்லிசை மன்னர் எஸ்.பி.பி.யிடம் எதுவும் கேட்கவில்லை. 'பொட்டு வைத்த முகமோ' பாடல் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டது. பாடல் மிக நன்றாக வந்திருப்பதாக ரிக்கார்டிங் தியேட்டரில் பேசிக் கொண்டார்கள். 'சுமதி என் சுந்தரி' படம் முடிந்தவுடன் 'பிரிவியூ'க்கு வழக்கம்போல் எல்லாத் தொழில் நுட்ப கலைஞர்களும் அழைக்கப்பட்டனர். சாதாரணமாக பாலு இது போன்ற காட்சிகளுக்குப் போகும் வழக்கமில்லை. ஆனால் 'சுமதி என் சுந்தரி' படத்திற்கு குடும்பத்தோடு சென்றார். இவர் சென்ற அதே காட்சிக்குத்தான் மெல்லிசை மன்னரும் வந்திருந்தார். படத்தில் 'பொட்டு வைத்த முகமோ' பாடலுக்கு பாலுவின் குரலுக்கு ஏற்ப தன் நடிப்பு ஸ்டைலை மாற்றிக் கொண்டு நடிகர் திலகம் நடித்திருப்பதைப் பார்த்து வியந்தார் பாலு. படம் முடிந்து வெளியே வந்தபோது, எம்.எஸ்.வி. பாலுவிடம் "உங்க பாட்டு ஓஹோன்னு வந்திருக்கிறது" எனக்கூறி பாராட்டினார். அதற்குப் பிறகு நடிகர் திலகத்திற்கு பல பாடல்களைப் பாடக்கூடிய வாய்ப்புகள் எஸ்.பி.பி.க்குக் கிட்டியது. நடிகர் திலகம் முதல் ரிகார்டிங்கில் பாலுவைச் சந்தித்து என்ன கூறினார் தெரியுமா?

"பாலு! எனக்குப் பாடப்போறேன்னு நினைச்சு உன்னுடைய ஸ்டைலை மாத்திப் பாட முயற்சி பண்ணாதே. உன்னுடைய ரிக்கார்டிங் கேட்கணும்னு நான் இங்க வரலை. இங்கே சில பேர் உன்கிட்ட வேற ஒரு பாடகர் ஸ்டையிலில் பாடினாத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லி உன்னை கன்ஃப்யூஸ் பண்ணக்கூடாது என்பதால்தான், நானே நேரா வந்தேன். உன்னோட ஒரிஜினல் ஸ்டைல்ல பாடு அதுக்கு ஏத்தமாதிரி நான் நடிக்க முயற்சி செய்றேன்" என்பதுதான்.

உண்மையில் நடிகர் திலகத்தின் அறிவுரைகள் எஸ்.பி.பிக்கு தைரியத்தைக் கொடுத்தது. சிவாஜி கொடுத்த டானிக் பாலுவை அந்தப் பாடலை அற்புதமாகப் பாட வைத்தது. அவருடைய ஸ்டைலுக்காக தன் ஆக்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்ட அந்த நடிப்புச் செல்வத்தை, மனதார பாராட்டிக் கொண்டும் அதே நேரத்தில் அவரின் திறமையைக் கண்டு பிரமித்துக் கொண்டும் இருக்கிறார் எஸ்.பி.பி. இன்றளவும் எஸ்.பி.பி. வியக்கும் ஒரு விஷயம் இது.

எஸ்.பி.பி. பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் சிங்கப்பூர் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது அனைவரும் அறிந்ததே. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து பாலு என்ன சொல்லுகிறார் தெரியமா?

"இதுவரையில் பாலு கலந்த கொண்ட அயல்நாட்டு நிகழ்ச்சிகளில் மிகவும் சிரமமாக அமைந்தது கமலின் நிகழ்ச்சிதான்" என்கிறார். பர்ஃபக்ஷனுக்காக எதுவும் செய்யத் தயாராக உள்ள கமல், கிட்டத்தட்ட ஒரு படத்தின் கால்ஷீட்டுகளைத் தியாகம் செய்து இந்தச் சிங்கப்பூர் நிகழ்ச்சிகளை அமைத்தாராம். பல அயல்நாட்டு நிகழ்ச்சிகளோடு ஒப்பிடும் விதத்தில் இக்கலை நிகழ்ச்சி அமைந்தது என்றாலும், பாலுவிற்கு இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிடித்தமான விஷயமும் ஒன்று இருந்தது.

கமலுடன் சிங்கப்பூருக்குப் போகிற கலைக்குழுவில் சென்ற பல கலைஞர்கள் கமலைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். சென்னையில் ஒத்திகை பார்த்த காலத்திலிருந்து கலை நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும் காலம் வரை, கமல் அனைத்துக் கலைஞர்களையும், ஒரே விதமாக நடத்தினார். எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் கமல் கலைஞர்களிடையே காட்டிய சரிசமமான மரியாதையும் பரிவும் எல்லாக் கலைஞர்களிடையும் அவருக்கு சொந்தமாகவும், பல கலைக்குழுக்களுடனும் சென்று வந்துள்ள எஸ்.பி.பி.யும் "மறக்க முடியாத பயணம் கமலுடன் சென்ற சிங்கப்பூர்ப் பயணம் தான்" என்று மனப்பூர்வமாக நினைவு கூர்கிறார்.

கமல் நடித்து சுரேஷ் கிருஷ்யா இயக்கத்தில் தெலுங்கில் தயாரான படம் 'இந்திரடு சந்திரடு' இதுவே பின்பு 'இந்திரன் சந்திரன்' என்ற பெயரில் தமிழில் வெளியாகி வெற்றியும் பெற்றது. இந்த படத்தில் கமல் இரட்டை வேடம் தாங்கி நடித்திருந்தார்.

மூத்த அரசியல்வாதியாக வயதான ஒரு வேடத்திலும், இளம் கதாநாயகனாகவும் கமல் நடித்த படம் இது. இந்தப் படத்தின் பாடல்கள் முழுவதும் எஸ்.பி.பி. தான் பாடினார். இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் பதிவுக்கு முன்பு எஸ்.பி.பியைச் சந்தித்திருந்த கமல், சாதாரணமாக விதவித யோசனைகள் சொல்லும் வழக்கங்களிடையே முதன் முறையாக பாடலை மாற்றி, கமல் செய்தது பாலுவுக்கு வியப்பைத் தந்தது. கமல் பாலுவிடம் 'இந்திரடு சந்திரடு' படத்தில் இரட்டை வேடம் தாங்கி வருவதால், ஒரு வேடத்திற்கு ஒரு மாதிரி குரலில் பேசியிருப்பதாகக் கூறி, எப்படி குரலை மாற்றி பேசியிருக்கிறார் என்பதைப் பேசிக் காட்டினார். இருமாறுபட்ட குரலில் பேசி, பெரியவர் வேடத்திற்கான பாடலை பாலு பாடும்பொழுது, வித்தியாசமாகப் பாடினால் நன்றாக இருக்கும் என்று வேண்டுகோளையும் விடுத்தார்.

கமலிடம் பாலு, அவர் படத்தில் பேசிய விதத்தில் வசனம் பேச வைத்து பதிவு செய்து கொண்டு வித்தியாசமாக பாடுவதாக வாக்களித்து அனுப்பினார்.

உண்மையில் பாலுவிற்கு அந்த சமயம் தொண்டையில் ஒரு சிறு பிரச்சனை இருந்து வந்தது. டாக்டர்கள் அதிகமாகப் பாடாமல் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள். இருந்தபோதிலும் தொழிலுக்கு என்றுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாலு, கமல் குரலில் பதிவு செய்த காஸெட்டை மீண்டும், மீண்டும் போட்டுக்கேட்டார்.

பாடல் பதிவும் நடந்தது, கமல் படத்தில் எந்தக் குரலில் பேசியிருக்கிறாரோ, அதே குரலில் பாலு பாடினார். பாடல் பதிவுக்குப் பிறகு அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்த சமயத்தில் திருமதி. சரிகா கமல் அங்கு சென்றிருக்கிறார். அவரிடம் அந்தப் பாடலைப் போட்டுக்காட்ட அவர் மிகவும் ரசித்துவிட்டு, கமலிடம் சென்று கைகுலுக்கி, தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திருமதி. கமல் அவர்கள் அந்தப் பாடலை கமல் பாடியதாகவே நினைத்து கமலைப் பாராட்டினார். கமல் அந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடியதாகக் கூறிய போதும் திருமதி. கமல் நம்பவேயில்லை. அந்த அளவிற்கு முயற்சி எடுத்து கமல் குரல் மாதிரியே எஸ்.பி.பி. பாடியிருந்ததுதான் விஷயம். அந்தப்படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திலிருந்து நேரடியாக எஸ்.பி.பி.யை ஒரு பெரிய ஆச்சர்யத்துடன் சந்திக்க வந்தார். திருமதி. சரிகா கமல். நேரடியாக பாலுவைச் சந்தித்து தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, திருமதி சரிகா என்ன கூறினார் தெரியுமா?

"பாலு, உங்கள் தொண்டையில் வலி இருப்பதாகவும், நீங்கள் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாகவும் என் கணவர் கமல் கூறினார். இவ்வளவு அற்புதமாகப் பாடும் திறமை படைத்த உங்கள் தொண்டையில் எந்தவிதக் குறையும் வராது. என் போன்ற உங்கள் ரசிகர்கள் ஆண்டவனிடம் உங்களுக்கும் உங்கள் குரலுக்கும் ஒருவித நோயும் வராமல் பாதுகாக்கும்படி பிரார்த்தனை செய்வோம். எங்கள் பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும் என்று பரிவு கலந்த குரலில் கூறினார் சரிகா கமல்.

பாலுவைப்பற்றி பல விவரங்கள், பலர் மூலமாக அறியும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. ஒருநாள் (கிறிஸ்மஸ் அன்று) பாலு பங்குபெறும் கங்கை அமரன் இசை நிகழ்ச்சி இருந்தது. வழக்கம்போல் பாலு பாடலுக்கு அமோக வரவேற்பு.

அன்று நிகழ்ச்சிக்கு அயல் நாட்டிலிருந்து பல ரசிகர்கள் வந்திருந்தார்கள். அதில் தமாம் நகரிலிருந்து வந்திருந்த ஒரு ரசிகர் பாலுவிடம் வந்து, பாலு பாடிய தமிழ்ப் பாடல்கள் அனைத்தையும் லிஸ்ட் போட்டுக் கொண்டு வந்திருந்தார். அந்த ரசிகரிமிருந்த அந்த லிஸ்டைப் பெற்றுக் கொள்ளாமல் அவரை வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்திருந்தார் பாலு. பாலுவின் அழைப்பை ஏற்று அந்த ரசிகரும் வீட்டிற்கு வந்திருந்தார்.

"இதைப் போன்ற ரசிகர்கள் ஆதரவுதான் என் குரலை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறது. இவருக்கு நான் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த லிஸ்ட் தயார செய்திருக்க வேண்டும்" என்று மகிழ்ச்சியோடு கூறினார். ரசிகர்களை மதிக்காத பல கலைஞர்கள் மத்தியில், ரசிகர்களுக்காக மனம் உருகிய பாலு, தான் ஒரு வித்தியாசமான கலைஞர் என்பதை உணர்த்தினார்.

அந்த நாளின் இடைவேளையின்போது, எண்ணற்ற சிறுவர்கள் பட்டாளம், பாலுவின் ஆட்டோ கிராப்பிற்காக அவரை முற்றுகையிட்டனர். பாலுவும் முகம் சுளிக்காமல் தன் கையெழுத்தைக் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். ரசிகர்களை பலர் விரட்டி அடிக்க முயன்றபோதுகூட, பாலு அவர்களைத் தடுத்து விட்டு எல்லாருக்கும் ஆட்டோ கிராப் போட்டுக் கொடுத்தார். கையெழுத்துக் கேட்ட பலபேர் பாலுவிடம் தங்களுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்க, தம்மால் பாட முடிந்த பாடலாக இருந்தால் அவசியம் பாடுவதாகக் கூறி அவர்களை சந்தோஷப்படுத்தினார், பாலு. அதுமட்டுமன்றி, கங்கை அமரனை அழைத்து ரசிகர்கள் வேண்டுகோளுக்குச் சம்மதிக்க வைத்தார். இப்படிப்பட்ட குணநலன்களை பாலுவிடம் இருப்பதால்தான் தன்னிகரில்லாப் பின்னணிப் பாடகராக ஜொலித்து வருகிறார்.

கேளடி கண்மணி :

ராதிகாவும், எஸ்.பி.பி.யும் பேசிய முதல் சீன் முதல் டேக்கிலேயே ஓ.கே. ஆனது. ராதிகாவிடம் ஏகமான பாராட்டு. இந்த வார்த்தைகள் படம் முழுக்க பாலுவுக்குக் கிடைக்க, இதுவே ஒரு டானிக்காக மாறி, பாலுவுக்கு உற்சாகத்தைத் தந்தது.

அந்தப்படத்தின் 80-ஆம் நாள் நிகழ்ச்சியில் மேடையில் தோன்றிய ராதிகா, எஸ்.பி.பி.யைப் பற்றி பேசும்போது "இந்த பிரபல பாடகர் பின்னணி பாடச் செல்லாமல், அன்றே நடிக்க வந்திருந்தால் இன்று முன்னணி நட்சத்திரமாக இருந்திருப்பார். எம்.கே.டி., பாகவதர், பி.யூ. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கத்திற்குப் பிறகு பாடத் தெரிந்த நட்சத்திரமாக ஜொலித்திருப்பார்" என்றார். இந்தப் பாராட்டுகளை இன்னும் மனத்தில் வைத்து ராதிகாவின் அன்பை எண்ணிப் போற்றி வருகிறார்.

'அடுத்த வீட்டுப்பெண்' தெலுங்குப் படம் உருவான பொழுது, அதில் பாலு பாடி நடித்தார். ஒரு காட்சியில் ஜன்னல் முன்பு நின்று பாலு பாட வேண்டும். எதிர்த்த வீட்டு ஜன்னல் திறந்து கதாநாயகி வரும்போடு, பாலு ஜன்னலிலிருந்து நகர, அந்த இடத்தில் கதாநாயகன் வந்து நிற்பது போன்ற காட்சியமைப்பு. டேக்கின்போது, பாலு பாடிவிட்டு நகர, ஜன்னலுக்கு அருகில் இருந்த ஸ்டூல் தட்டிவிட, பாலு ஷாட் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக சத்தம் போடாமல் கீழே விழுந்து அடிபடாமலிருக்க தரையில் கையை ஊன்றினார். விளைவு, பாலுவின் மூன்று விரல்களின் எலும்புகளில் முரிவு ஏற்பட்டது. ஷூட்டிங்கைக் கான்சல் செய்துவிட்டு, பாலுவை, டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். எப்படி அடிபட்டது என்று கேட்க, ஷீட்டிங்கில் அடிபட்டது என்று சொன்னார். போலீஸ் கேஸ் வரும் என்பதால் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். வலியோடு பாலு "ஷூட்டிங் என்றால் சினிமா ஷீட்டிங்" என்று விளக்கிக் கூற பாலு கையில் எலும்பு முரிவிக்கான கட்டு போடப்பட்டது. மூன்று வாரம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் சொல்ல, படப்பிடிப்பு மூன்று வாரம் தள்ளி வைக்கப்பட்டது.

இதுபோன்ற பல அனுபவங்கள் பாலுவிற்கு உண்டு.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles