Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

கலையுலகைச் சேர்ந்த பலரைச் சந்தித்தபோது, பாலுவுடன் தங்களுக்கு ஏற்பட்ட சுகமான அனுபவங்களை, பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டார்கள். பாலுவின் அனுபவங்களோடு கலையுலகப் பிரமுகர்களின் அனுபவங்களும் சேர்ந்தால் அது வாசகர்களுக்கு ஓர் இனிய விருந்தாக அமையும். அந்த வரிசையில் இசையமைப்பாளர், கவிஞர், கதாசிரியர், இயக்குநர் கங்கை அமரன் அவர்கள் எஸ்.பி.பி. யைப் பற்றிக் கூறுகிறார்:

கங்கை அமரன் :

"நான் முதலில் பாலுவைச் சந்தித்தபோது "ஆயிரம் நிலவே வா" பாடலைப் பாடிய புதிது. நானும் என் அண்ணன் இளையராஜாவும், பாரதிராஜா மூலம் எஸ்.பி.பி. யைச் சந்தித்தோம். அப்பொழுது பாலு, பிரபல தெலுங்குப்பட இசையமைப்பாளர் 'அணில் ருத்ரா' வின் குழுவில் பாடிவந்த நேரம் அது. எங்களின் திறமையை அறிந்த பாலு, முதலில் அண்ணன் ராஜாவைச் சேர்த்துக் கொண்டார். நாங்கள் இசையுலகில் சந்தித்த முதல் சினிமா பிரமுகர் பாலுதான். அண்ணன் ராஜாவைத் தொடர்ந்து சில காலத்துக்குப் பிறகு, பாலுவின் இசைக்குழு முழுவதும் எங்களின் 'பாவலர் பிரதர்ஸ்' கீழ் வந்தது. பாவலர் பிரதர்ஸ் ஆர்கெஸ்ட்ராவில், பாலு தொடர்ந்து கச்சேரி செய்ய ஆரம்பித்தார்.

பாலுவிடம் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், அன்று எப்படி பழகினாரோ அதேபோல், சில நேரங்களில் அதைவிட எளிமையாக இன்றும் பழகி வருகிறார். நான் சந்தித்த மிகப் பெரிய மனிதாபிமானம் கொண்டவர் எஸ்.பி.பி.

பாலுவின் இசைக்குழுவில் நான் கிதார் வாசித்துக் கொண்டிருந்தபோதுதான், என் மனைவி கலாவுடன் எனக்குக் காதல் ஏற்பட்டது. பாலுவின் பரம ரசிகை என் மனைவி. எங்கு பாலு கச்சேரி நடந்தாலும், அதைக் கேட்க வரும் வழக்கம் உள்ளவர் கலா. அவருக்காக கச்சேரியில் பாலுவிடம் அடிக்கடி பங்கேற்கத் தொந்தரவு செய்வது என் வழக்கம். கச்சேரிக்கு அடிக்கடி கலா வந்து அமர்வதை மேடையிலிருந்து கண்டுபிடித்த பாலு, ஒருநாள் என் சார்பில் மணிமேகலை (என் மனைவி கலாவின் பெயர்) வீட்டிற்குத் தூது சென்று எங்கள் திருமணம் நடைபெறக் காரணமாக இருந்தவர் பாலு. அன்றிலிருந்து இன்று வரை என் குடும்ப நண்பர், உடன் பிறவாச் சகோதரன் எஸ்.பி.பி.தான்.

சினிமா உலகில் பாலு நாளும் உயர்ந்து பறக்கும் காலக்கட்டத்தில், நாங்களும் அடியெடுத்து வைத்துவிட்டோ ம். எங்களை அரவணைத்து பாலு கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாத ஒன்று.

எனக்கும் என் அண்ணன் இளையராஜாவுக்கும் இடையில் சில கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு, நான் அவரிடமிருந்து ஒதுங்கியிருக்க நேர்ந்தபோது, எனக்காகப் பல மேடைக் கச்சேரிகள் பாடிக்கொடுத்து, எனக்குப் பெரும் உதவியாக இருந்தார் என்பதோடு இல்லாமல், பொதுமக்கள் மத்தியில் கங்கை அமரன் என்ற பெயர் கொடிகட்டிப் பறக்க காரணமாகவும் இருந்து வருகிறார் எஸ்.பி.பி.

என்னால் மறக்க முடியாத ஒரு விஷயம், என் மகன் பிரபு லண்டனுக்குப் படிக்கச் சென்றபோது, ஏர்போர்ட் வந்த எஸ்.பி.பி. என் மகனுக்குச் சொன்ன அறிவுரைதான்.

"தம்பி! நாங்க இதுமாதிரி எல்லாம் இருக்கணும்னு ஆசைப்பட்டபோது எங்களைப் படிக்க வைக்க எங்க பெற்றோர்களால் முடியலை. உங்களுக்கு அதிர்ஷ்டமிருக்கு. நீங்க நினைச்சமாதிரி எங்களால படிக்க வைக்க முடியுது. மேல்நாட்டில் போய் படிக்கறதால நம்ப கலாச்சாரத்தை மறக்கக்கூடாது. திரும்பி வந்தபிறகு ஆங்கிலத்தில்தான் பேசுவேன்ங்கற பழக்கத்தை வச்சுக்கக் கூடாது. நம் நாட்டிற்கு வந்து உபயோகமா ஏதாவது பண்ணணும், இதுதான் உன் தந்தை ஸ்தானத்தில் இருந்து நான் சொல்லக்கூடிய புத்திமதி" என்று பாசம் பொங்கக் கூறியதை, இன்றும்கூட என்னால் மறக்க முடியவில்லை" என்றார் கங்கை அமரன்.

தமது மகன் இன்றளவும் பாலுவின் உபதேசங்களைக் கடைப்பிடிப்பதாகப் பெருமையுடன் கூறுகிறார் கங்கை அமரன்.

பாலுவுக்கு வாசு என்று ஒரு நண்பர். இந்த வாசு அந்தக் காலத்தில் டி.எம்.எஸ். குரலில் பாலுவிடம் பல கச்சேரிகளில் பாடியவர். இவர் தன் இனிமையான நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

வாசு முதலில் ஜோஸ்வா ராஜன் குழுவில் பாடிக்கொண்டிருந்தார். ஜோஸ்வா குழுவில் பாட வந்த பாலு, வாசுவின் குரல் வளமும், அவர் பாடும் தன்மையும் பிடித்துப்போய்த் தான் சொந்தக்குழு ஆரம்பித்தபோது வாசுவை தன்னுடன் அழைத்துக் கொண்டார்.

வாசு பழைய மாம்பலத்தில் வசித்த காலகட்டத்தில், நாள் முழுவதும் பாலுவுக்கு ரிக்கார்டிங் இருந்தாலும், பாலு வாசுவை தன்னுடன் உடன் அழைத்துச் சென்று பல இசையமைப்பாளர்களுக்கு அறிமுகப் படுத்திய நல்ல மனதை இன்னும் போற்றுகிறார் வாசு.

"பாலு அந்தக் காலத்திலிருந்தே இப்படித்தான். இன்னும் மாறவில்லை. நானும் பாலுவின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணம்" என வாசு கூறுகிறார்.

வாசுவின் திருமணத்திற்கு பாலு பாடியதை வாசு மனநிறையுடன் கூறுகிறார்.

பாலுவுடனேயே புகழேணியின் உச்சியிலிருந்த வாசுவும், ஒரு நல்ல வாழ்க்கைக்காக காத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், வாசுவிற்கு ஒரு துரதிர்ஷ்டமான விபத்து ஏற்பட்டது. ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது ரோட்டில் நின்றுகொண்டிருந்த ஒரு பைத்தியம் ஒரு பெரிய கருங்கல்லை எடுத்து வாசுவின் தலையை நோக்கிவீச, பலத்த அடிபட்டு ஒரு வருஷம் ஆஸ்பத்திரியில் இருந்தார் வாசு. அத்துடன் அவருடைய பாட்டுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. தன்னுடன் பாடிய ஒரு சகபாடகன்தானே என்று நினைக்காமல், அடிக்கடி ஆஸ்பத்திரிக்குச் சென்று வாசுவின் நலனை விசாரித்ததோடு இல்லாமல், தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார் எஸ்.பி.பி.

இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றும் வாசுவின் குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அவர் விட்டு விசேஷங்கள் அனைத்திலும் பங்கேற்கும் எஸ்.பி.பி.யை சினிமா உலகிலேயே ஒரு வித்தியாசமானவர்" என்கிறார் வாசு. இப்படிப்பட்ட பல நல்லிதயங்கள் பாலுவின் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles