Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

பாலுவைப் பொறுத்தவரை அவர் பாடும் பாடலின் அழகு அதன் உச்சரிப்பில்தான் இருக்கிறது. பாலு பல திரைப்படப் பாடல்கள் பாடியிருந்த போதிலும், தனிப் பாடல்களும் பாடியிருக்கிறார். அவருடைய சில பாடல் காஸெட்களுக்கு பாடல்கள் எழுதிய கல்பனாதாசன் என்ற கவிஞரைச் சந்தித்தபோது பாலுவைப் பற்றி மிக உயர்வாகப் பேசினார்.

கல்பனாதாசன் :

"எஸ்.பி.பி. தான் பாடும் பாடலை சரியாகப் பாடவேண்டும் என்ற கவலை ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அவருக்கு இருப்பதைப் பார்த்து நான் பலமுறை வியந்திருக்கிறேன். என்னுடைய பாடல்களைப் பாடும்போது, தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பில் ஏதாவது ஒரு சிறு சந்தேகம் இருந்தால்கூட என்னிடம் கேட்டுக்கொண்டு உச்சரிப்பைத் திருத்திக்கொள்ளும் பண்பு பாலுவிற்கு என்றும் உண்டு. அது மட்டுமன்றி எந்தப்புதிய இசையமைப்பாளரின் பாடலைப் பாட வந்தாலும், அந்த இசையமைப்பாளர் கூறும் வண்ணம் பாடுவதில் பாலுவிற்கு இணையாக இன்னொரு பாடகரை காண்பது மிகமிக அரிது. பாலுவைப் பொறுத்தவரை வயதைவிட ஒருவரின் வித்தைக்குதான் அதிக மரியாதை. பாலுவின் மிகப்பெரிய வெற்றிக்கு இதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்."

இசையமைப்பாளர் இராமானுஜம் :

பாலுவின் ஆரம்ப காலத்திலிருந்து அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு உடையவர்களுள் இசையமைப்பாளர் இராமானுஜம் ஒருவர். இவர் 'எக்கோ' கம்பெனியின் உரிமையாளர் திரு. பார்த்தசாரதியின் சகோதரர். அவர் பாலுவைப் பற்றி சில அற்புதமான விஷயங்களைக் கூறினார்.

பாலுவை வைத்து Alphabet என்று மொழிகளின் எழுத்துகளை வைத்து ஓர் அற்புதமான காஸெட்டை பார்த்தசாரதியின் இசையில் பாலு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பாடியிருக்கிறார். இந்தக் காஸெட் தயாரிப்பின்போது, மிக நுணுக்கமாகப் பாடி ஒத்துழைப்புக் கொடுத்தார் பாலு. சாதாரணமாக ஒரு டேக்கில் எல்லா பாடல்களையும் பாடும் பாலு, இந்தக் காஸெட்டின் உச்சரிப்பில் மிகச் சரியாக வரவேண்டும் என்று அந்தந்த மொழி வல்லுநர்களைக் கேட்டுப் பாடினார். இந்தக் காஸெட் வெளியிடும்போது விழாவில் கலந்து கொண்ட செம்மங்குடி சீனிவாசய்யர் பாடலை கேட்டுவிட்டு, தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பாலு, இவ்வளவு அற்புதமாகப் பாடியிருப்பதை மனதாரப் பாராட்டினார். அந்தக் காஸெட் தயாரிப்பின்போது பார்த்தசாரதிக்கு உறுதுணையாக இருந்தவர் இராமானுஜம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு 'அன்னப்பறவை' என்ற படத்திற்கு இசையமைப்பாளராக இராமானுஜம் பணியாற்றினார். பஞ்சு அருணாசலம் பாடலுக்கு, இராமானுஜம் இசையமைத்தார். பூஜை அன்று, பாலுவின் பாடலுடன் படத்தொடக்க விழாவை வைத்துக்கொள்ள விரும்பினார்கள். பாலு அப்பொழுது தெலுங்கில் மிகவும் பிஸி. அவரிடம் பாடுவதற்குத் தேதி கேட்கக்கூடிய நிலையில் யாரும் இல்ல. பூஜையன்று பாலு பாடினால் நன்றாக இருக்கும் என்ற தயாரிப்பாளரின் விருப்பத்தை அறிந்த இசையமைப்பாளர் இராமானுஜம், பாலுவைச் சந்திக்க வாகினிக்குச் சென்றபோது பிரபல இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இசையில் தெலுங்கில் பாடத் தயாராகிக்கொண்டிருந்தார் பாலு. பாலுவிடம் ராமானுஜம் தனக்குக் கிடைத்த மியூசிக் டைரக்ஷன் வாய்ப்பைப் பற்றிக் கூறி, பாலு வந்து பாடித்தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்க, பாலுவும் புதிய இசையமைப்பாளரை ஊக்குவிக்கும் ஆர்வத்துடன் சக்கரவர்த்தியிடம் சொல்லிவிட்டு இராமானுஜம் வந்திருந்த ஸ்கூட்டரிலேயே அமர்ந்து, இராமானுஜம் பாடல் ரிக்கார்ட் செய்யும் ரிக்கார்டிங் தியேட்டருக்குச் சென்று அந்தப் பாடலை ஒரு மணி நேரத்தில் மிக அற்புதமாகப் பாடிக் கொடுத்துவிட்டு இனிமையாக இசையமைத்த இராமானுஜத்தையும் பாராட்டினார். மீண்டும் இராமானுஜம் பாலுவை வாகினியில் சக்ரவர்த்தியின் இசையில் பாடுவதற்காக கொண்டு விட்டபோது, பாலு கூறிய வார்த்தைகள் தான் இன்றளவும் இராமானுஜம் மனதில் நிலைத்து நிற்கின்றன.

"இராமானுஜம்! இந்தக் கம்பெனி ரொம்ப சின்னக் கம்பெனி. உனக்கு எவ்வளவு பணம் கொடுப்பாங்கன்னு தெரியாது. உன்னோட இசை எனக்கு ரொம்பப் பிடிச்சுது. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இதை அற்புதமாக டியூன் போட்ட நீ, உன்னோட பசங்களுக்கு சாக்லேட் வாங்கிக் கொண்டுபோய் கொடு" என்று இராமானுஜத்தின் பாக்கெட்டிலே மூன்று நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு இறங்கிக் கொண்டார் பாலு.

"சினிமா உலக சரித்திரத்தில் நல்ல டியூன் போட்டதற்காக பணம் கொடுத்த தயாரிப்பாளர்கள் உண்டு; பாடலாசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஏன் டியூன் நன்றாக இருந்தால் சந்தோஷப்பட்டு பாராட்டிய நடிகர்கள் பலர் எனக்குத் தெரியும். ஆனால் தான் பாடிய பாடலுக்கு வாங்கிய பணத்தில் ஒரு பகுதியை, இசையமைப்பாளருக்குக் கொடுத்த பாடகர் திரைப்பட சரித்திரத்தில் பாலு ஒருவராகத்தான் இருக்கமுடியும்" என்று மனம் நெகிழக் கூறினார் இசையமைப்பாளர் இராமானுஜம்.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles