Home  >  Profiles - Music Artists  > Cine Playback SingersSPB
பாடும் நிலா பாலு

ராது

ஏ.வி.எம். சரவணன்:

பாலுவைப் பற்றித் திரு ஏ.வி.எம். சரவணன், தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்:

"எங்கள் படத்திற்கு ரிக்கார்டிங் நடந்து கொண்டிருந்தது. பாடிக்கொண்டிருந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். பாலு பல தடவை பாடிப் பார்த்து அவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் சரியாக இருந்தது. ஆனாலும் இன்னும்கூட நன்றாக இருக்கவேண்டுமென்று டைரக்டர் சொல்ல, 'நான் எத்தனை தடவை வேண்டுமானாலும் உங்களுக்கு திருப்தி ஏற்படுகிறவரை பாடத்தயார். நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று மீண்டும் பாடினார்.

கடைசியாக டைரக்டர் ஓ.கே. என்ற சொல்ல, "இன்னும் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூற, சரியாக இருக்கிறது என்று அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது நான் மறக்க முடியாத சம்பவம். அந்த இடத்தில் வேறு பாடகர்காளக இருந்தால் அன்று ரிக்கார்டிங் நடந்திருக்காது. அந்த அளவுக்கு அவருக்கு ஈடுபாடு. தயாரிப்பாளர் டைரக்டர்களுக்கு படத்தில் எப்படி பாடல் அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்புக்குக் குறைவில்லாமல் பாடவேண்டும் என்பதில் அக்கறையும், ஆர்வமும் உடையவர் திரு. பாலு.

பாடல்களின் நடுவே வரும் சிரிப்பு, சோகம் போன்றவற்றையும், உணர்ச்சியுடன் பேசவேண்டிய வார்த்தைகளோ, வசனமோ எதுவாயினும் சந்தர்ப்பத்திற்குத் தக்கபடி செய்து கொடுப்பதில் நிகரற்றவர்.

பாலுவைப் பற்றிக் கூறும்போது கண் மருத்துவ நிபுணர் டாக்டர் பத்ரிநாத் அவர்களது நினைவுதான் வரும். இருவருக்கும் உருவத்தில் மட்டுமல்லாது, சொல், செயல், அணுகுமுறை அனைத்திலும் ஒற்றுமை அதிகம். அவர்கள் பேசும்போது உபயோகப்படுத்தும் வார்த்தைகள் மனம் நிறைந்ததாகவே இருக்கும்.

ஒரு நல்ல மனிதர் பாலு அவர்கள். நல்ல மனிதர்களை நினைக்கும்போது முதலில் எங்கள் நினைவில் வரும் எஸ்.பி. முத்துராமன் அவர்களைப் போலவேதான் பாலுவும் ஒரு பெர்பெக்ட் ஜென்டில்மேன்.

பலநாட்களுக்கு முன், பேசாத சினிமா ஒன்றில், நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்திருந்தார் பாலு. அப்போதே அவரை எங்கள் படத்தில் டாக்டர் வேடத்தில் நடிக்க வைக்கவேண்டுமென்று எண்ணினேன். எங்கள் 'தியாகு' படத்தில்தான் அந்த எண்ணம் நிறைவேறியது. ஒரு நோயாளிக்குப் பக்கபலமாக இருந்து எப்படி அவரது நோயைக் குணப்படுத்த வேண்டும் என்று முன்மாதிரியாகத் திகழ்ந்த பாத்திரம் அது. கர்நாடக இசையை அதிகமாகப் பயிலாத பாலு, சங்கராபரணம் படத்தில் கர்நாடக இசையில் பாடல்களைப்பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இசையமைப்பாளர் திரு.கே.வி. மகாதேவன் அவர்கநயும், திரு. பாலுவையும் பாராட்டி ஒரு விழா நடந்தது. அந்த சிறப்பான விழாவில் அவ்விருவரையும் இசைத் துறையிலுள்ளவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

அவரது குருபக்தி, பெரியோர்களிடம் மரியாதை, மதிப்பு, அவர்களை வணங்கி அவர்களிடம் ஆசிபெறுவது ஆகியவற்றை, நினைக்கும்போது மெய் சிலிர்க்கிறது. வளரும் தலை முறையினருக்கு இவர் ஒரு வழிகாட்டி.

இசைமேதை கண்டசாலா அவர்கள் இவரது மானசீக குரு எஸ்.பி.பி.யின் 25 வருட திரைப்பட வாழ்க்கையைப் பாராட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் கண்டசாலாவிற்கு சிலை வைத்துள்ளார். ஒரு பின்னணிப் பாடகருக்கு சிலை வைத்திருப்பது இதுதான் முதல் தடவை.

இப்போது திரையுலகில் மிகவும் பிரபலமாக உள்ள இசையமைப்பாளகளுக்கு ஆரம்பகாலத்தில் உதவி செய்துள்ளார். இசையமைப்பாளர் மரகதமணி இன்று பிரபலமாக இருக்கக் காரணம் பாலுதான். இவையெல்லாம் நண்பர்களுக்குச் செய்யும் உதவியாகச் செய்தாரே தவிர, எந்தப் புகழுக்காகவும் செய்ததில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, பெங்காலி, இந்தி ஆகிய பன்மொழிப் பாடல்களைப் பாடியிருக்கிறார் பாலு.

இந்திப் பாடல்களைப் பாட பம்பாய் சென்றபோது அங்கேயே தங்கியிருக்கலாம், அங்கே நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னபோதிலும், சென்னையில் தங்கி பாடல்கள் பாடுவதையே விரும்பினார் பாலு. பெங்களூரில் தங்கி திரைப்படங்களுக்காக ஒரே நாளில் 17 பாடல்கள் பாடியது அவரது ரிக்கார்ட் ஆகும்.

திறமை, அடக்கம், பண்பு, ரசிகர்களைக் கவரும் சக்தி, அவர் அடைந்துள்ள பிரபலம், குரு பக்தி, பெரியோரிடம் மதிப்பு, அவர்களுக்கு மரியாதை கொடுப்பது போன்ற நற்குணங்கள் அமைந்த பாலுவுக்கு, பொதுவாக திரைப்படத்துறையில் பிரபலமாகும் கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு குணம் "தலைக்கனம்". இது மட்டும் இந்த நல்ல மனிதரான பாலுவுக்கு ஏற்பட்டதில்லை.

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15
 

16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24

More Articles